தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை... பின்னணி என்ன?

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்
Published on

தன்னுடைய ஐம்பதாவது படமான ராயனுக்கு கிடைத்த வரவேற்பிலும் வசூலிலும் மகிழ்ந்து கொண்டிருந்த தனுஷுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கை சினிமா வட்டாரத்தில் பேசுபொருளானது.

“நடிகர் தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும்." என தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டனர். இதற்கு உடனே மறுப்பு தெரிவித்தனர் நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள்.

"தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்திருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கின்றது. இதுவரை தயாரிப்பாளர் சங்கத்தினர் தரப்பிலிருந்தோ, நடிகர் சங்கத்தினர் தரப்பிலிருந்தோ பிரச்னைகள் எழுந்தால், அதனை குழுக்கள் அமைத்து உரிய முறையில் தீர்த்து வைத்து வருகின்றோம். தனுஷ் குறித்த அவர்களின் புகாருக்கும் பதில் கேட்டுள்ளோம்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை

இனிவரும் காலங்களில் தனுஷை வைத்து படம் எடுப்பதற்கு முன்னதாக தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்தாலோசிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதனால் இப்படி முடிவெடுத்தார்கள் என்பது தெரியவில்லை." என நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

நடிகர் தனுஷ் விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர்கள் சங்கமும் முட்டி மோதிக் கொள்வதற்கு என்ன காரணம் என சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், “நடிகர் தனுஷ் 7 வருடத்திற்கு முன்னர் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘ருத்ரன்’ என்ற படத்தை இயக்கி, நடிப்பதற்கு முன் பணம் வாங்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்றிருக்கிறது. இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தின் வெளியீட்டில் நஷ்டம் அடைந்த தேனாண்டாள் பிலிம்ஸ் ’ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டது. இதனால் தனுஷ் வெவ்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மீண்டும் ’ருத்ரன்’ படப்பிடிப்பைத் தொடங்க தயாரிப்பு நிறுவனம் தனுஷை கேட்டபோது, அவர் நடிக்க மறுத்துவிட்டிருக்கிறார். கதை காலாவதியாகிவிட்டதாகவும், தன்னுடைய சம்பளமும் உயர்ந்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிய முரளி ராமநாதன் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் தனுஷுக்கு இப்படி நெருக்கடியை தற்போது கொடுத்துள்ளார்.

தனுஷுக்கு எதிரான நடவடிக்கையை அறிவித்த தயாரிப்பாளர் சங்கம் கமல்ஹாசன், சிம்பு போன்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?. வாய்ப்பே இல்லை.

பொதுவாக சினிமாவில் எழும் இப்படியான பிரச்னைகளை சட்டரீதியாக அணுகாமல், இவர்களே பஞ்சாயத்துப் பேசி முடித்துவிடுவார்கள்.” என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

தமிழ் சினிமாவில் சர்ச்சைகள் எழுவதும் பின்னர் அது காணாமல் போவதும் வாடிக்கைதான் என்றாலும், தனுஷுக்கு எதிராக நடவடிக்கை அறிவித்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com