ஒண்டர் உமனும் அலியா பட்டும்...

Heart of stone
Heart of stone
Published on

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது Heart of stone. கேல்கொடாட் தயாரித்து நாயகியாக நடிக்க, டாம் ஹார்ப்பர் இயக்கி இருக்கிறார்.

மூன்று ஆண்டுகளாக வெளியே வராத ஓர் ஆயுத தரகன்  வெளியே வருகிறான். அவனைத் தூக்குவதற்காக இத்தாலி ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஒரு பிரிட்டிஷ் உளவு நிறுவனமான எம் ஐ 6 குழு காத்திருக்கிறது. அவனைப் பிடிக்க ஒரு பெண் உளவாளியும் ஆண் உளவாளியும் வாகனத்தில் இருந்து வெளியே செல்ல, வாகனத்திலேயே இருக்கிறார் அவர்களுக்கு உதவும் பெண் தொழில்நுட்ப உதவியாளர். நீ வெளியே வராதே, உனக்கு சண்டை ஏதும் தெரியாது. நீ ஒரு தொழில்நுட்ப உதவியாளர் மட்டுமே என்று அவளைப் பாதுக்காப்பாக இருக்கச் சொல்கிறார்கள்.

அடேய் எம் ஐ 6 பசங்களா.. அது கேல் கோடாட்… எங்க ஒண்டர் வுமன்… அவரை உள்ளே உட்காரச் சொல்லிவிட்டு நீங்க எங்கடா போறீங்க என நினைத்தால்.. அவர் சற்று நேரம் கழித்து வெளியே வருகிறார். எதிரிகளை பனிமலையில் பொளந்துகட்டிவிட்டு, அமைதியாக உள்ளே போய் உட்கார்ந்துகொள்கிறார். அவர் சார்ட்டர் என்ற இன்னொரு சர்வதேச அமைதிகாப்பு உளவு நிறுவன ஏஜெண்ட். எம்.ஐ 6 -இல் ஓராண்டாக ஊடுருவி இருக்கிறாராம்!

சார்டர் அமைப்பின்வசம் இருக்கும் ஹார்ட் என்கிற சக்திவாய்ந்த கணினியைத் திருடி உலகை அடிமைப்படுத்த நினைக்கும் குழுவில் இருக்கிறார் கேயா தவான். யார் இந்தியப் பெயராக இருக்கிறதே..ஆமாங்க இந்திய ஆங்கில உச்சரிப்பில் கலக்கும் அந்தப் பெண் நம்ம அலியா பட்!

கேல் கோடட்டுக்கு சமமாக படம் முழுக்க வருகிறார். ஆனால்  ஆக்‌ஷன் மட்டும் கொஞ்சம் குறைவு. அடி தடி இல்லை.. ஆனால் எதிர்மறை பாத்திரம். ஹாலிவுட் படத்தில் இந்திய நடிகைக்கு முக்கியத்துவம் அளிப்பதைப் பார்த்தால் சந்தோஷம். தனுஷ் கூட ‘ த க்ரேமேன்’ படத்தில் சின்ன ரோலில் தான் வந்தார்.

செனகலில் பாலைவனம், லிஸ்பனில் கார் துரத்தல், ஐஸ்லாந்தில் பைக்கில் பறத்தல் என உலகம் முழுக்க பாய்ந்து பாய்ந்து கேல்கோடட் சண்டை போடுகிறார். பெண் உளவாளிகள் எதிரிகளைப் பொளந்து கட்டி உலகைக் காக்கும் ஜேம்ஸ்பாண்ட் படம்தான்.

வழக்கம் போல் மெல்லிய செண்டிமெண்ட் காட்சிகள், திணிக்கப்பட்ட பரப்புக் காட்சிகள் எல்லாம் உண்டு. மிஷன் இம்பாசிபிள், ஜேம்ஸ் பாண்ட் படங்களை ஞாபகப் படுத்தினாலும் கேல் கோடட் ரசிகர்களை மகிழ்விக்கும். அலியா பட் நம்மைக் கவர்கிறார்!

வழக்கம்போல் உலகை மேலும் மேலும் கண்காணிப்புக்கு உள்ளாக்குவதை ஆதரிக்கும் மேலை நாட்டு புத்தியில்லாத படம்தான்! பெண் நாயகிகளை உருவாக்கி உலவவிடும் உத்தியைப் பயன்படுத்தி வந்திருக்கிறது. படத்துக்கு உலகளாவிய அளவில் எதிர்மறை விமர்சனங்களே இருந்தாலும் கேல் கோடாட், அலியா பட்டுக்காக எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com