‘நடிகர்திலகம்’ என்ற பெயரில் மலையாளத் திரைப்படம் எடுப்பதற்கு சிவாஜி சமூக நலப்பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவாஜி சமூக நலப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“நடிகர் திலகம் - இது வெறும் பெயரல்ல.... எங்கள் உயிர் மூச்சு.. இது வெறும் பட்டம் அல்ல, தமிழ் சினிமாவின் உயிரெழுத்து. நடிகர் திலகம் என்ற பட்டம் தமிழ் சினிமாவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து மறைந்த கலை உலகின் தவப்புதல்வன் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரசிகர்கள் அளித்த அடைமொழி.
நடிகர் திலகம் என்ற இந்த பெயரை மலையாள திரைப்படத்திற்கு ஒரு டைட்டிலாக வைத்திருப்பது தமிழ்நாட்டில் உள்ள அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் அவரை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கும் வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
ஒரு நகைச்சுவைத் திரைப்படத்திற்கு இந்த டைட்டிலை வைத்திருப்பது வேண்டுமென்றே எங்களுடைய மனதில் வைத்து பூஜிக்கும் ஒரு ஆதர்ச நாயகனுடைய புகழைக் களங்கப்படுத்துவதாகவே நாங்கள் பார்க்கிறோம். தமிழ்த் திரையுலகிற்கும் மலையாளத் திரை உலகிற்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அந்த தொடர்பும், உறவும் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்புகிறோம்.
எனவே நடிகர் திலகம் என்ற இந்தப் பெயரை திரைப்பட டைட்டிலாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே இந்த பெயரைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்திருந்தால் அந்த அனுமதியை ரத்து செய்து வேறு பெயரை மாற்றி வைத்துக் கொள்ள அறிவுறுத்துமாறும் லட்சோப லட்சம் ரசிகர்கள் சார்பில் வேண்டுகிறோம்.
எங்களுடைய உணர்வுகளை மதித்து, நடிகர் திலகம் என்ற திரைப்படத் தலைப்பு மாற்றப்படும் என்று நம்புகிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.