‘முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக்கும், என் அப்பாவுக்கும் ஒற்றுமை இருக்கு’ – கண்கலங்கிய எஸ்.கே.

Sivakarthikeyan
சிவகார்த்திகேயன்
Published on

“முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக்கும், என் அப்பாவுக்கும் ஒற்றுமை இருக்கு. அமரன் படத்தின் மூலமாக என்னுடைய அப்பாவை நான் பார்த்துட்டேன்.” என்று அமரன் படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் கண்கலங்க பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாது விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இந்த நிலையில், அமரன் திரைப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், “டீம் வொர்க் இஸ் ட்ரீம் வொர்க்னு சொல்வாங்க. அடுத்த விநாடிக்குள் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்னு அன்பே சிவம் வசனத்தைதான் இப்போது சொல்வேன். அமரன் படத்தைப் பற்றி நினைக்கும்போது இந்த வசனம்தான் நினைவுக்கு வரும். கமல் சார் ஊர்ல இருந்து வந்ததும் அவர கட்டிபுடிக்கிறதுக்குதான் நான் காத்திட்டு இருக்கேன். தயாரிப்பாளர்கள் எப்போதும் படத்தை வியாபாரமாக பார்ப்பாங்க. ஆனால், எங்க தயாரிப்பாளர் பேஷனாக எடுத்துட்டு வேலை பார்த்திருக்காங்க. ராஜ்குமார் பெரியசாமி கதை சொல்லும்போது இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும்னு நினச்சேன். படத்துக்காக பல ஆராய்ச்சிகள் செய்தார்.

என்கிட்ட நிறைய பேர் மணிரத்னம் சார் படம் பார்த்த மாதிரி இருக்குனு சொன்னாங்க. ராஜ்குமார் பேய் மாதிரி வேலை பார்ப்பாரு. 3 வருஷம்கிட்ட இந்த படத்துக்காக அவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கார். இந்தப் படம் பார்த்துட்டு ரஜினி சார் `எனக்கு எங்கேயும் எஸ்.கே தெரியவே இல்லை'னு சொன்னாரு. அதுமட்டுமில்லாம, `எப்படி வெவ்வேறு வகையான படங்கள் பண்றீங்க'னு கேட்டாரு. அது எல்லாமே என்னுடைய இயக்குநர்களாலதான்.

இந்தப் படத்தோட கடைசி பத்து நிமிடத்துக்கு நல்ல நடிகர் தேவை. சாய் பல்லவி ரொம்பவே நல்லா பண்ணியிருந்தாங்க. படத்துல கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்குனு சொன்னாங்க. கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்குனு வர்ற விமர்சனத்துக்கு காரணம் சாய் பல்லவிதான். மலர் டீச்சர் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லியிருக்கேன். இப்போ மலர் டீச்சர் கதாபாத்திரத்தைவிட எனக்கு கொஞ்சம் அதிகமாக இந்து கதாபாத்திரம் பிடிச்சுருக்கு. எனக்கு இந்தப் படத்துக்கு வந்த மாதிரி பாராட்டு எந்த வேற எந்த படத்துக்கு வந்தது இல்ல.

இந்த படம் 150 கோடி வசூல் பண்ணியிருக்கு, இன்னும் இவ்வளவு வசூல் பண்ணும்னு சொல்றாங்க. எனக்கு வசூல் முக்கியம்தான். அப்போதான் அடுத்தடுத்து பெரிய படங்கள் என்னால மக்களுக்கு கொடுக்க முடியும். சிறைத் துறையில அப்பாவை பற்றி கேட்டால் சொல்வாங்க. எங்க அப்பா லீவ் எடுத்து நான் பார்த்தது இல்ல. இந்த படத்தை சரியாக பண்ணிடணும்னு நினைச்சதுக்கு காரணம் என்னுடைய தந்தைதான். 21 வருடமாக அவருடைய நினைவுல இருக்கேன். முகுந்த் சாருக்கும் அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கு. அப்பா இந்த மாதிரி ஊருக்கு வரேன்னு சொன்னாரு.

அடுத்த நாள் நான் காலேஜ் போய்ட்டு வரும்போது வீட்டுல கூட்டமா இருந்துச்சு. அப்பா இறந்திட்டார்னு தெரிஞ்சது. சடங்கு முடிக்கும்போது என்னுடைய அப்பாவோட எலும்பை பார்த்தேன். அங்க உடைஞ்சது அப்பாவோட எலும்பு மட்டும் இல்ல 17 வயசு பையனான என்னுடைய மனசும்தான். இந்த படத்தோட க்ளைமேக்ஸ் மாதிரி ஜனாதிபதிகிட்ட எங்க அம்மா மெடல் வாங்கினாங்க. இந்த படத்தின் மூலமாக என்னுடைய அப்பாவை நான் பார்த்துட்டேன். முகுந்த் வரதராஜன் வாழ்க்கைக்கும், என் அப்பாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. அப்பா எங்கேயும் போகல, இங்கதான் அனைவருடைய கைதட்டல்கள்ல இருக்கார்." என்று எமோஷனலாகப் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com