மூடநம்பிக்கைக்கு எதிராக இருந்தவர்: மாரிமுத்துவுக்கு முதலமைச்சர் இரங்கல்! #RIPMarimuthu

மாரிமுத்துவுக்கு பெரியார் விருது கொடுக்க இருந்தோம்! -கி.வீரமணி
மு.க.ஸ்டாலின் - மாரிமுத்து
மு.க.ஸ்டாலின் - மாரிமுத்து
Published on

‘நடிகர் மாரித்து மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழுப்புணர்வை ஏற்படுத்தியவர்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கண்ணும் கண்ணும். புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர்.

தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, மாரிமுத்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும். திரைத்துறை நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல இயக்குநரும், சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத்தறிவாளருமான நண்பர் தேனி மாரிமுத்து (வயது 56) அவர்கள் மறைந்தார் (8.9.2023) என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது!

அண்மையில் பிரபலமான ‘சன்’ டி.வி. ‘எதிர்நீச்சல்’ தொடரில் அவரது நடிப்பு சிறப்பானது.

தனது பேட்டிகளில் அவர் ‘கடவுள்’ நம்பிக்கை, ஜோதிட நம்பிக்கையை மிகவும் அம்பலப் படுத்தி வெளிப்படையாகப் பேசியவர். அதன் மூலம் பெரியார் கொள்கையாளர் என்பதை அறிந்தோம்.

அவருக்குப் ‘பெரியார் விருது’ அளிப்பதாக நாங்கள் முடிவு செய்து இருந்தோம்.

அவரது இழப்பு, அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, கலை உலகத்திற்கும், பகுத்தறிவு உலகத்திற்கும் மிகப் பெரிய இழப்பு ஆகும்!

பெரியார் கொள்கை உறவு ஒருவர் மறைந்தார் என்பது அதிர்ச்சி செய்தி!

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர் கவிப் பேரரசு வைரமுத்து மற்றும் கலை உலகப் பகுத்தறிவாளர்களுக்கும் எமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com