அம்மா மீன், குட்டி மீன்: கதை சொல்லும் ஜப்பான் படத்தின் டிரெய்லர்!
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது.
கார்த்தியின் திரைப் பயணத்தில் ‘ஜப்பான்’25-வது படம் என்பதால் அதைக் கொண்டாடும் விதமாக ‘கார்த்தி 25’ என்கிற பெயரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் சுசீந்திரன், சிறுத்தை சிவா, பா.ரஞ்சித், மித்ரன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, ஆர்யா, தமன்னா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதனிடையே, ஜப்பான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 2.19 நிமிடம் ஓடும் ட்ரெய்லரில், கார்த்தியே முழுக்க வசனங்களாகப் பேசுகிறார். அவரின் பேச்சு மொழியும், உடல்மொழியும் வித்தியாசமாக உள்ளது.
அம்மாவை காப்பாற்றத் திருட தொடங்கும் மகன் திருட்டில் வில்லாதிவில்லனாகி போலீஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவதுதான் ஜப்பான் படத்தின் கதையாக இருக்கலாம்.