இந்தியன் – 2: தாத்தா கதறவிட்டாரா?- திரை விமர்சனம்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

மீண்டும் ஊழலை ஒழிக்க வந்த ‘இந்தியன் தாத்தா’ ஊழலை ஒழிக்காமலேயே கிளம்பியுள்ளார்… அடுத்த பார்ட்டுக்கு காத்திருப்போம்.

சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன் உட்பட நான்கு நண்பர்கள் ’பார்க்கிங் டாக்ஸ்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். சமூகத்தில் ஊழலால் நடக்கும் அநீதிகளைத் தட்டிக்கேட்டு வருபவர்கள், இதனால் எதையும் மாற்ற முடியாது என்று நினைக்கின்றனர். எனவே, ’கம்பேக் இந்தியன்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்கின்றனர். ஊழலுக்கு எதிரான இந்திய இளைஞர்களின் மனநிலையை அறிந்த கமல்ஹாசன் (இந்தியன் தாத்தா) இந்தியா திரும்புகிறார். அவரை விமான வாசலிலேயே கைது செய்ய காத்திருக்கிறது காவல் துறை. இவர்களின் கையில் அவர் சிக்கினாரா? ஊழல்வாதிகளை களையெடுத்தாரா? இல்லையா? என்பதுதான் இந்தியன் 2 படத்தின் கதை.

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இந்தியன் – 2 வெளியாகியிருக்கிறது. தன் முந்தைய படங்களை அப்படியே உருட்டி பரட்டி இந்தியன் – 2வாக ஷங்கர் எடுத்துவிட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது.

‘இந்தியன் தாத்தாவால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது. இளைஞர்கள் உங்கள் வீட்டில் உள்ள ஊழல்வாதிகளைக் களையெடுங்கள்’ என்ற ஐடியா ஈர்ப்பாக இருந்தாலும், அதை திரைக்கதையில் கொண்டு வர இயக்குநர் ஏனோ தவறியிருக்கிறார். இதுவரையிலான ஷங்கரின் திரைக்கதையில் இந்தியன் – 2 ரொம்பவும் வீக்கான திரைக்கதை.

கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகிய மூவரின் நடிப்பும் கனகச்சிதம். க்ளைமாக்ஸில் கமல்ஹாசனின் ஸ்டண்ட் பிரமிக்க வைக்கிறது. ’இந்த வயதிலும் மனுசன் இப்படி நடிக்கிறாரே’ என நினைக்க வைக்கிறார். ஏராளமான நடிகர்கள் படத்தில் நடித்திருந்தாலும் யாரின் பாத்திரமும் மனதில் பதியும்படி இல்லை.

அனிருத் இசையைப் பற்றி பேச எதுவும் இல்லை. சமீபத்தில் அவரின் இசை எதுவும் சோபிக்கவில்லை. ரவி வர்மாவின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்புமோ படத்தின் யானை பலம்.

“குடும்பம் சரியா இருந்தால் நாடு சரியா இருக்கும்’ என்பது போன்ற அரதப்பழசான வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். பெரும்பாலான வசனத்தின் முதல் பாதியை நடிகர் பேசும்போதே, இரண்டாம் பாதி வசனத்தைப் பக்கத்தில் இருப்பவர் சொல்லி சிரித்துவிடுகிறார். காலம் அவ்வளவு மாறிவிட்டது.

தன் சொந்த பெற்றோரையே காட்டிக் கொடுத்துவிட்டு சித்தார்த் தவிப்பது போன்ற காட்சிகள் உணர்வுபூர்வமாக நம்மைத் தொடவே இல்லை.

கம்பேக் இந்தியனில் தொடங்கி கோபேக் இந்தியனில் படம் முடிவடைவது போல, தியேட்டரிலிருந்து வெளிவரும்போது படத்தைப் பார்த்த உணர்வு மறைந்துவிடுகிறது.

மீண்டும் தப்பிச் செல்லும் தாத்தா, இந்தியன் 3- இல் வருவதற்காக ட்ரைலரை கடைசியில் போடுகிறார்கள்.

இந்தியன் - 2 கமல்ஹாசன்
இந்தியன் - 2 கமல்ஹாசன்

விக்ரம் என்கிற விறுவிறுப்பான ஆயிரக்கணக்கான தோட்டாக்களைச் சிதறடித்த படத்துக்குப் பிறகு வருகிற கமல் படம் இது. விக்ரம் படத்தில் மகனைக் கொன்றவர்களை பழிவாங்கும் கமல், சமூகத்துக்காக நடத்தும் போர் என்பார்.

இந்தியன் படத்தில் சேனாதிபதி தாத்தா, ஊழலை ஒழிப்பதற்காக சொந்த மகனையே கொன்றவர். இரண்டு பாத்திரங்களிலும் அச்சு அசலாகப் பொருந்திச் செல்லும் மாபெரும் நடிகர் கமல்.

இரு படங்களுமே சமூகத் தீமைகளை ஒழிப்பதற்கான தனி மனிதப் போராட்டங்களை முன் வைப்பவை. ஆனால் இந்தியன் 2 கொஞ்சம் முன்னால் வந்திருக்கலாம். தற்சமயம் நாம் வேகமான படங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது.

ஷங்கர் படங்களுக்கே உரிய பிரம்மாண்டம், திறன்மிகுந்த ஒளிப்பதிவு எல்லாம் இருக்கிறது. ஆனாலும் காட்சிகள் எழுதப்பட்ட விதத்தில் ஆழமில்லாமல் இருப்பதால் புதிய சேனாதிபதி நம் மனதில் நிற்காமல் காணாமல் போய்விடுகிறார்.

படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பதன் பிரச்னை இதுதான். விட்டதை மூன்றில் பிடிப்பாரா எனப் பார்க்கலாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com