சூப்பர் ஸ்டாரும் சூப்பர் மேனும்

சூப்பர் ஸ்டாரும் சூப்பர் மேனும்
Published on

மிகச்சிறந்த க்ளாசிக் பாடல்களை ரீமிக்ஸ் போட்டு நாசம் பண்ணி முடித்தாகிவிட்டது. இப்போது புது டிரெண்ட் உருவாகியிருக்கிறது. க்ளாசிக் படங்களை ரீமேக் பண்ணி நாசம் பண்ண தொடங்கியிருக்கிறது கோடம்பாக்கம்.

நாட்டில் காமெடி பஞ்சம் வந்துவிட்டதா? அல்லது காமெடி கதைகள் எழுத ஆள் இல்லையா என்பது புரியவில்லை. ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற பெயரில் ஒரு படம் சில மாதங்களுக்கு முன்புவெளியானது. பாக்யராஜ் இயக்கிய இன்று போய் நாளைவா படத்தின் மிக மோசமான அல்லது மட்டமான ரீமேக்காக அது வெளியானது. காமெடி என்கிற பெயரில் அடுத்தவரின் உடலை, உடல்குறை-பாட்டினை, குரலை, மோசமாக பேசி கொடுமைப்-படுத்தியிருந்தனர். “இன்றுபோய்-நாளைவா” படத்தில் அதுபோல அடுத்தவரை கேவலமாக பேசுகிற ஒரே ஒரு காமெடி வசனத்தை கூட நம்மால் சுட்டிக்காட்ட முடியாது.

இதோ இப்போது அடுத்து. ரஜினிகாந்த் நடித்த முதல் முழுநீள காமெடி படமான தில்லுமுல்லுவை கொத்துகறி போட்டிருக்கிறார்கள். தில்லுமுல்லு படத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது டிவியில் ஒளிபரப்புகிறார்கள். எத்தனை முறை ஒளிபரப்பினாலும் அதை மீண்டும் மீண்டும் நம்மால் பார்க்க முடியும். கொஞ்சம் கூட சலிக்கவே சலிக்காது. ரஜினிகாந்த் ஒருபக்கம், தேங்காய்சீனிவாசன் ஒருபக்கம்,

சௌகார் ஜானகி இன்னொரு பக்கம், இரண்டு காட்சிகளே வந்தாலும் கமலஹாசனும் நாகேஷூம் கூட அசத்தியிருப்பார்கள்.

இவர்களுக்கெல்லாம் மாற்றாக இப்போதைய ரீமேக்கில் படத்தில் உள்ள உருப்படிகள் ஒன்று கூட கொஞ்சமும் கவரவில்லை. இடுப்பில் கைவைத்துக்கொண்டே முகத்தில் எந்தவித ரியாக்சனும் இல்லாமல் சுற்றுகிறார் நாயகன் சிவா.

காய்... காய் என்று காதுகிழிய கத்துகிறார் கோவை சரளா.. காமெடியாம். பிரகாஷ்ராஜ் நல்லவனாக நடிக்க ரொம்ப சிரமப்படுகிறார். இதில் கிளைமாக்ஸில் சந்தானம் வேறு தன் பங்குக்கு எல்லோரையும் அடா புடா அவனே இவனே என்று கேவலமாக திட்டுகிறார். மிகச்சில புத்திசாலித்தனமான வசனங்களையும், பழைய தில்லுமுல்லுவின் புகழையும் வைத்தே ஒப்பேத்திவிடலாம் என்று நினைத்திருப்பார் போல படத்தின் இயக்குனர் பத்ரி.

நம்மூரில் சூப்பர்ஸ்டார் படத்திற்கு நேர்ந்தது ஹாலிவுட்டில் சூப்பர்மேன் படத்துக்கு நேர்ந்திருக்கிறது. வாட் எ கோ இன்சிடன்ஸ்!

நம்மூரில் ரீமேக் போல ஹாலிவுட்டில் ரீபூட் காலம் போய்க்கொண்டிருக்கிறது. ரீபூட் என்பது ஏற்கனவே ஹிட்டான ஒரு க்ளாசிக் கதையை எடுத்துக்கொண்டு அதை முதலிலிருந்து ஆரம்பிப்பது. ஸ்பைடர் மேன், பேட்மேன் படங்கள் அதுபோல சமீபத்தில் ரீபூட் செய்யப்பட்டு சூப்பர் ஹிட்டானதை அடுத்து.. 70களில் சூப்பர் ஹிட் அடித்து பல பாகங்கள் வெளியான சூப்பர்மேன் படத்தை ரீபூட் செய்திருக்கிறார்கள். மேன் ஆஃப் ஸ்டீல் என்கிற பெயரில் வெளியாகியுள்ளது.

படம் முழுக்க சூப்பர்மேனும் வில்லன்களும் வெறித்தனமாக மோதிக்கொள்கிறார்கள். ஆனால் அதில் ஒரு அழகோ நேர்த்தியோ எதுவுமே இல்லை. மூர்க்கமாக மோதிக்கொள்கிற மல்யுத்த போட்டியைப்போலவே அவை காட்சிப்படுத்தபட்டிருந்தன.

இறுதியில் வில்லனை கொல்லவும் செய்கிறார் சூப்பர்மேன். இது அவருடைய இயல்புக்கு நேர் எதிரானது. அதோடு வில்லன்களை விட சூப்பர்மேன் ஊரில் இருக்கிற கட்டிடங்களுக்கு மிக அதிக பாதிப்புகளை உண்டாக்குகிறார்.  படம் பார்க்கிற நமக்கு சூப்பர்மேன் மேல் எந்த அன்பும் நெருக்கமும் உண்டாவதில்லை.  படம் முழுக்க வசனங்களாலும் காட்சிகளாலும் சில பூடகமான விஷயங்களாலும் சூப்பர்மேனை இயேசுநாதராக காட்ட முற்பட்டது கொடுமையின் உச்சக்கட்டசம்.

இதுவரை வெளியான சூப்பர்மேன் படங்களிலேயே மிகமோசமான படம் நிச்சயமாக இதுதான். ஹாலிவுட்டில் படம்பார்த்தவர்களெல்லாம் கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். இப்படத்தினால் ஒரே ஒரு நன்மைதான். பல ஆண்டுகளாக சூப்பர் மேன் அணிந்திருந்த பெல்ட் வைத்த ஜட்டியை பேண்டுக்கு உள்ளே மாற்றியிருக்கிறார்கள். அதற்காக இயக்குனர் ஜாக்ஸ்நைனடரை நிச்சயமாக பாராட்டலாம்.

நமக்குத் தெரிந்த , பிடித்த ஒரு கதாபாத்திரத்தை, படத்தை இப்படிக் கசக்கிப் பிழிவது என்ன விதத்தில் நியாயம் இயக்குநர்களே? 

ஜூலை, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com