நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்: ஆவணப்படம் எப்படி உள்ளது?

Nayanthara: Beyond the fairy tale
நயன்தாரா
Published on

இந்தியாவில் புகழ்பெற்ற நடிகராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் பெண் நடிகர் என்றால், சொல்லவே வேண்டாம்! எல்லோரும் கருத்து சொல்லி கழுவில் ஏற்றுவார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக கையாள வேண்டிய துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் நயன்தாராவை பற்றி பேசுகிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கும் ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond the Fairytale) என்ற ஆவணப்படம்.

நயன் – விக்கி இருவரும் சிறுவயது உருவில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதோடு தொடங்கும் இந்த ஆவணப்படம், ‘மனசின்னகரே’ படத்தில் தொடங்கி ‘ஜவான்’ வரையிலான நயனின் வாழ்க்கையை மேலோட்டமாக தொட்டு செல்கிறது.

சினிமாவில் நடிக்க வந்தது முதலே நயனுக்கு ஏறுமுகம்தான். தன்னுடைய முதல் ஆறு படங்களில் ஜெயராம், சரத்குமார், மோகன்லால், மம்முட்டி, ரஜினிகாந்த் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கிறார். கஜினி படத்தின் மூலம் பாடி ஷேமிங்கிற்கு உள்ளானது, பில்லாவில் பிகினி உடையில் தோன்றியது போன்றவற்றை இந்த ஆவணப்படம் பேசுகிறது.

‘மனசின்னகரே’ என்ற மலையாள படத்தில் நயன்தாராவை அறிமுகப்படுத்திய சத்தியன் அந்திகாட், ஐயா திரைப்படத்தின் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, இயக்குநர்கள் விஷ்ணுவர்தன், அட்லி, நெல்சன், நடிகர்கள் நாகார்ஜுனா, ராணா டகுபதி, விஜய் சேதுபதி, உபேந்திரா, ஆடை வடிவமைப்பாளர் அனு வர்தன், நடிகைகள் பார்வதி, ராதிகா, தமன்னா போன்ற பிரபலங்கள் நயன்தாரா பற்றி இந்த ஆவணப் படத்தில் பேசியுள்ளனர்.

“ஆண் நடிகர்களுக்குத்தான் நட்சத்திர அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைத்தது. இதுதான் விதியாக இருந்தது. இதை மாற்றியவர் நயன்தாரா” என்று ராதிகா கூறுவது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. இந்த ஆவணப்படம் நயன்தாரா எதிர்கொண்ட சவால்களைப் பற்றிப் பேசினாலும், இவரின் தோல்வியுற்ற காதல் உறவுகளைப் பற்றி அதிகம் பேசவில்லை.

சர்ச்சைக்குரிய 3 வினாடி நானும் ரவுடிதான் பட வீடியோ துணுக்கு இடம்பெற்றிருந்தாலும், ’இதற்கா இவ்வளவு பெரிய பஞ்சாயத்து’ என நினைக்க தோன்றுகிறது. விக்கி – நயன் காதலை பற்றி படம் கொஞ்சம் விரிவாக பேசினாலும் அதில் சுவாரசியமான சம்பவங்கள் இல்லை. அல்லது ஆவணப்படத்தில் அவை இடம்பெறவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திருமண நிகழ்வு தொடர்பான காட்சிகள் அதிகம் இடம்பெறவில்லை. ரஜினிகாந்த், ஷாருக்கான், ஏ.ஆர். ரஹ்மான், சூர்யா - ஜோதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

திருமண காட்சிகள் பிரம்மாண்டமாக உள்ளதே தவிர உணர்வாக இல்லை. யார் யார் வந்தார்கள்? என்ன சொல்லி வாழ்த்தினார்கள்? என்ற எதுவும் இதில் இடம்பெறவில்லை.

ஆவணப்படத்துக்கு டெக்னிக்கல் டீம் பெரிய பலம் எனலாம். பெரும்பாலும் நேர்காணல்களால் நிரம்பியுள்ளது இந்த ஆவணப்படம். நயன் ரசிகர்களுக்கு இதில் உள்ளதைவிட அதிகமாகவே தகவல்கள் தெரியுமே எனத் தோன்றுகிறது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவர் எப்படி லேடி சூப்பர் ஸ்டார் ஆனார் என்பதை ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ மழுப்பலாகவே பதிவு செய்துள்ளது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசி இருக்கலாம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com