ஜெயிலர்: திரைவிமர்சனம்!

ரஜினி
ரஜினி
Published on

குற்றத்திற்கு மன்னிப்பு வழங்காமல் தண்டனை கொடுத்தால், அதுதான் ஜெயிலர் படத்தின் ஒன் லைன்.

ஓய்வுபெற்ற சிறை அதிகாரியான ரஜினி (முத்துவேல் பாண்டியன்), மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன் வசந்த் ரவி, மருமகள் மிர்ணா, பேரன் ரித்து என தன் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருடைய மகன் வசந்த் ரவி, நேர்மை தவறாத காவல்துறை அதிகாரியாக இருக்க, சிலைக் கடத்தல் கும்பல் அவரைக் கடத்தி, கொலை செய்துவிட்டதாக செய்தி வருகிறது. இதனால், குடும்பஸ்தனாக இருந்த முத்துவேல் பாண்டியன், டைகராக மாறுவதுதான் படத்தின் மீதிக் கதை.

இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால், ஜெயிலர் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. அதை படம் பூர்த்தி செய்ததா? என்று பார்த்தால் ரஜினி ரசிகர்களிடம் மகிழ்ச்சியையே பார்க்கமுடிகிறது.

இயக்குநர் நெல்சன், மிக எளிமையான கதையை மாஸ் ஹீரோவுக்கான திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். ஓய்வுபெற்ற அப்பாவியான குடும்பத்தலைவனாக வாழும் நாயகன் அதிரடி நாயகனாக மாற்றமடையும் பெரும் நாயகர்களுக்கான கதைதான். பல இடங்களில் சிலீரென உச்சித்தண்டைக் குளிர வைக்கும் மாஸ் காட்சிகள் இருக்கின்றன. ரஜினி ரசிகர்களை அசைத்துப் பார்க்கும் பிரமாதமான ப்ளாஷ்பேக்கும் உள்ளது.

கதையின் முதல் பாதி குடும்பத்தைச் சுற்றி நகர்ந்தாலும், அழுத்தமான செண்டிமெண்ட் காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதி ரஜினிக்கும் வில்லனுக்குமான சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கிறது. வழக்கமான ரஜினி படங்களிலிருந்து, நெல்சனுக்கே உரிய டார்க் காமெடி படத்தை வேறுபடுத்தி காட்டுகிறது.

படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் ரஜினிக்கு மௌனமான முகம்தான்! முந்தைய படங்களில் ரஜினியின் உடல்மொழியில் இருந்த துள்ளலை சற்றுக்குறைத்துக்கொண்டு நெல்சனின் போக்கில் நடித்துக்கொடுத்துள்ளார் ரஜினி.

சிலைக் கடத்தல் தலைவனாக வரும் வில்லன் விநாயகன் (வர்மா) நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.  ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறது. ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, மிர்ணா மேனன், மாரிமுத்து, சரவணன் உள்பட்ட எல்லா நடிகர்களுக்கும் கொஞ்ச நேரம் வந்துபோகிறார்கள், அவ்வளவுதான்!

பின்னணி இசையிலும் பாடலிலும் அனிருத் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கதையில் மாஸ் குறைகிறதே என யாரும் நினைத்தால் அதை அனிருத்தின் இசையில் பார்க்கலாம்! காவாலா, ரத்தமாரே, ஹுக்கும் பாடல்கள் அசைபோட வைக்கின்றன. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு அட்டகாசம்.

‘எப்பையும் நடுங்குவ…இப்ப நங்கூரம் மாதிரி நிக்குற’, ‘புள்ளைங்க கெட்டவங்களா மாறிட்டா, பெத்தவங்க வாழ்க்கை நரகமா மாறிடும்’ என சூழ்நிலைக்கு ஏற்ற வசனங்கள் கனகச்சிதம்.

நேர்மையான காவல் துறை இணை ஆணையராக இருக்கும் வசந்த் ரவியின் மரணத்தை, குடும்பமும் அரசும் கண்டுகொள்ளாமல் விடுவது. இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகளுடன் ரஜினி நட்பு பாராட்டுவது, உள்ளூர் ரவுடி இவரைப் பற்றி தெரியாமல் வாலாட்டுவதெல்லாம் தலைவர் படங்களுக்கே உரிய வழக்கமான லாஜிக் மீறல்கள்தான்.

ரஜினிகாந்த் என்ற மாபெரும் நாயகனை கையில் எடுத்துக்கொண்டு கலங்கிப்போய் நின்றுவிடாமல், அவரது வயதுக்கேற்ப காட்சிகளை அமைத்து, அவரது நாயக பிம்பமும் குன்றாமல் பார்த்துக்கொள்வதில் நெல்சன் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com