சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம், தமிழிலும் ஏலியன் தொடர்பான கதைகளை ஹாலிவுட்டுக்கு இணையாக எடுக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறது.
‘இன்று நேற்று நாளை’ என்ற அறிவியல் புனைகதை திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவான ’அயலான்’, நீண்ட காத்திருப்புக்குப்பின் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இந்தக் காத்திருப்பை படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம்.
பூம்பாறை என்ற மலையடிவார கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் (சிவகார்த்திகேயன்). இயற்கை ஆர்வலரான இவர் அம்மாவின் வற்புறுத்தலால் சென்னைக்கு வருகிறார். இவரைப் போலவே வேற்று கிரகத்திலிருந்து ஏலியன் ஒன்றும் சென்னைக்கு வருகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் கலாட்டா சாகசம்தான் படத்தின் கதை.
இயற்கைக்கு எதிரான பெரும் நிறுவனங்களின் சுரண்டல் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை மிகவும் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். மிக எளிமையான கதையை தன் சாமர்த்தியமான திரைக்கதையால் படத்தின் கடைசிவரை விறுவிறுப்பாகக் கொண்டுசென்றிருக்கிறார்.
கெட்டப்பில் மாற்றம் இல்லாத தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். ஏலியனுடன் சேர்ந்து சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் தருணங்கள் ரசிக்க வைக்கிறது. ரகுல் பிரீத்தி சிங் அறிவியல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண்ணாக வந்துசெல்வதோடு சரி. யோகிபாபுவும் ஏலியனும் முதல் முறையாக சந்தித்துக்கொள்ளும் காட்சி சிரிப்புக்கு கேரண்டி. கருணாகரன், பாலா சரவணன், பானுப்ரியா ஆகியோர் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான பின்னணி இசை படத்துக்கு பலம் என்றாலும், ஒரு பாடலும் அசைபோடும் அளவுக்கு இல்லை.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
ஏலியன் தொடர்பான காட்சிகளை அப்படியே ஹாலிவுட் படத்தைப் பார்க்கும் உணர்வை தருகிறது
அயலான் படத்தை தொடக்கத்திலிருந்து இறுதிவரை கிராஃபிக்ஸ் குழு செதுக்கியிருக்கிறது. ஏலியனை தத்ரூபமாகத் திரையில் காட்டியுள்ளது, படக்குழு. ஏலியனின் உணர்ச்சிகளை யதார்த்தமாகக் கொண்டுவர மெனக்கெட்டிருக்கிறார்கள்.
‘விவசாயத்தைப் பத்திப் பேசினா வேடிக்கை பாக்கக்கூட ஆள் இல்லை’, ‘நல்லா விளைவிச்சு எடுத்தா மட்டும் போதாது, நல்லதா விளைவிச்சு எடுக்கணும்’, ’மனிதன் ஜெயிச்சிட்டான்னா யார் தோத்தா’ என்பன போன்ற வசனங்கள் கதைக்கு பலம் சேர்க்கின்றன.
படத்தின் முதல் பத்து நிமிடம் கருத்தூசி போடுவது மாதிரியும், இரண்டாம் பாதி இழுவையுடனும் இருப்பதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
சில இடங்களில் காட்சிகள் துண்டு துண்டாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல், சிவகார்த்திகேயனுக்கும் வில்லனுக்குமான மோதலை இன்னும் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம்.
இந்தப் பொங்கலுக்கு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அயலான் இருக்கலாம்!