“வெள்ளையா இருந்தால்தான் டிவியில் வரமுடியுமா?”

“வெள்ளையா இருந்தால்தான் டிவியில் வரமுடியுமா?”
Published on

சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் அறந்தாங்கி நிஷா  ஓர் அபூர்வம். அவரது உற்சாகமும் நம்பிக்கையும் ததும்பும் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குரலுக்குப் பின்னால் இருக்கும் நிஷாவின் வாழ்க்கைப் பயணத்தை அறிய, தொடர்புகொண்டோம். குடும்பத்துடன் அறந்தாங்கியில் வசித்து வரும் நிஷா நம்மிடம் பேசியதில் இருந்து:

''புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தான் சொந்த ஊர். அப்பா கறிக்கடை வியாபாரி. அம்மா ஹவுஸ் வொய்ஃப். ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை இங்குள்ள அரசுப் பள்ளியில் தான் படித்தேன்.

சிறிய வயதிலேயே பயங்கரமான அராத்து நான். கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு முதல் வரிசையில் உள்ளவர்களைக் கிண்டல் செய்வது, ஆண்கள் படிக்கும் பள்ளி வழியாக வேண்டும் என்றே செல்வது, பிடிக்காதவர்களின் சைக்கிளில் காற்றைப் பிடுங்கி விடுவது போன்ற எக்கச்சக்க சேட்டைகள் செய்திருக்கிறேன். இதனாலேயே என்னை உருப்படாதவள், அடங்காதவள் என்பார்கள். பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தபோது, என்னுடைய ரோல் நம்பரைக் கொடுக்காமல், எனக்கு முன்னாடி இருக்கின்ற நன்றாகப் படிக்கும் பெண்ணுடைய ரோல் நம்பரைக் கொடுத்துவிட்டேன். இதை எப்படியோ கண்டுபிடித்துவிட்ட அம்மா, பள்ளிக்கு நடந்தே சென்று, என்னுடைய ரிசல்ட் பார்த்தார். நான் தேர்ச்சி பெற்றதால் அம்மா எதுவும் பேசாமல் இருந்துவிட்டார். இல்லையென்றால், அடித்துத் தொங்கவிட்டிருப்பார். அதேபோல், பன்னிரண்டாம் வகுப்பில் நான் தேர்ச்சி பெற்றது எல்லாம் பெரிய விஷயம்,'' என்றவர், என்னைப் போல் யாரும் வேகமாக சைக்கிள் ஓட்ட முடியாது என்றார், சிரித்துக் கொண்டே.

‘‘பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, ராஜேந்திரபுரத்தில் உள்ள நைனா முஹம்மது கலை அறிவியல் கல்லூரியில் பிபிஏ படித்தேன். டவுன் பஸ் ஏறிப் போய் படிக்கிற தூரம் என்பதால், அந்தக் கல்லூரியிலேயே சேர்த்துவிட்டார்கள்.

ஒரு முறை கல்லூரியில் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு வந்திருந்த எல்லோரையும் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டு பயங்கரமாகக் கிண்டல் செய்து கொண்டிருந்தேன். என்னுடைய சேட்டையைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழ்ப் பேராசிரியர் பழனிதுரை ஐயா, நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னிடம் வந்து, ‘‘பின்னாடி உட்கார்ந்து கொண்டு இவ்வளோ அரட்டை அடிக்கிறியே, மேடையில் போய் கொஞ்சம் நேரம் பேசேன் பார்ப்போம்'' என்றார். உடனே நானும் வேகவேகமாகப் போய் மேடையில் பேச ஆரம்பித்துவிட்டேன். பேசும் போது எல்லோரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். என்ன பேசினேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால், பேசி முடித்த பிறகு எல்லோரும் கை தட்டினார்கள். ‘‘நீ பேசுனதுல உருப்படியா ஒரு நல்ல விஷயமும் இல்ல, ஆனா நல்லா பேசின'' என்றார். அதற்கடுத்து, பல்வேறு கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளுக்கு என்னை அனுப்பி வைத்தார். என்ன பேசவேண்டும் என்பது கூட அவர் எழுதிக் கொடுப்பார்.

எங்கு பேச்சுப் போட்டி நடைபெற்றாலும் கலந்து கொள்வேன். ஆனால் எங்கேயும் பரிசு வாங்கியது கிடையாது. போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் மட்டும் கொடுப்பார்கள், அதை மட்டும் தான் இதுவரை வாங்கியிருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டது. ஏனெனில், மற்ற கல்லூரிகளுக்குப் பேச்சுப் போட்டிக்குப் போவதற்குக் கல்லூரி முதல்வரிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அவரிடம் கையெழுத்து வாங்க செல்லும் போதெல்லாம், ‘‘இங்கிருந்து போய்... கலந்து கொண்டதற்கான சர்டிஃபிகேட் தானே வாங்கி வர போறீங்க..? அதுக்கு எதுக்கு இந்த கையெழுத்து!'' என்பார், கிண்டலாக. இப்படி ஒவ்வொரு முறையும்

அசிங்கப்பட வேண்டியிருக்கும். அதனால், பேச்சுப் போட்டிக்குப் போவதையே ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டேன். இளங்கலை அப்படியே முடிந்தது. அதற்குப் பிறகு முதுகலை. புதுக்கோட்டையில் உள்ள ஜேஜே கலை அறிவியல் கல்லூரியில் எம்பிஏ சேர்ந்தேன். அந்தக் கல்லூரியில் பேச்சுப் போட்டிக்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

எம்பிஏ படிப்பில் வாரம் ஒரு முறை செமினார் நடக்கும். நான் எடுக்கும் செமினார், எங்க பேராசிரியருக்கு ரொம்ப பிடிக்கும். பாதி ஆங்கிலத்திலும், பாதி தமிழிலும் என கலந்துகட்டுவேன். அந்த சமயத்தில் சன் டிவியில் டி. ராஜேந்தர் சார் நடத்திக் கொண்டிருந்த அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நல்லா பேசுவதாக அப்போது நிறையப் பேர்

சொன்னார்கள். அதன் பிறகு கேப்டன் டிவி, ராஜ் டிவி போன்றவற்றில் நடைபெற்ற நிறையப் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டேன்.

என் வாழ்க்கையில் முக்கியமான திருப்பம் என்றால், அறந்தாங்கியில் வருடா வருடம் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். அப்படி ஒரு வருடம் நடந்த பட்டிமன்றத்தில் பேசியபோது,  நடுவராக இருந்த தாமரைச்செல்வனுக்கு என்னுடைய பேச்சு பிடித்துப் போனது. இதனால் பட்டிமன்றம் முடிந்த உடன் வீட்டிற்கு வந்து, ''உங்க பொண்ணு நல்லா பேசுறாங்க. பட்டிமன்றங்களுக்கு பேசுவதற்கு அனுப்ப முடியுமா? எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வருவாங்க'' என்றார், அப்பாவிடம். உடனே ஒப்புக் கொண்ட அப்பா, வெளியூர்களில் நடைபெறும் நிகழ்வுக்கு செல்ல மட்டும் அனுமதிக்கவில்லை. ஏனெனில் பட்டிமன்றங்கள் பெரும்பாலும் இரவு நேரத்தில் நடைபெறும் என்பதால். ஊரில் இருப்பவர்கள், சொந்தக்காரர்கள் எதாவது சொல்வார்கள் என்று பயந்தார்.

இருந்தாலும், தாமரைச்செல்வன் அப்பாவிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அப்பா சம்மதித்துவிட்டார். அதன் பிறகு தொடர்ந்து ஏழு வருடங்கள் தாமரைச்செல்வனுடன் பட்டிமன்றங்களுக்குச் சென்றுள்ளேன். வெளியூர்களுக்குச் சென்று கலந்து கொள்ளும் பட்டிமன்றங்களில் நூறு, நூற்றைம்பது என்று பணம் தருவார்கள். அதை வைத்து தான் காலேஜ் ஃபீஸ் கட்டினேன், என்னுடைய செலவையும் நானே பார்த்துக் கொண்டேன். அப்போது, பெரிய லட்சியம் எல்லாம் ஒன்றும் இல்லை.

நான் பட்டிமன்றங்களில் கலந்து கொள்வது பெரும்பாலும் என்னுடைய உறவினர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அதேபோல், பட்டிமன்றங்களுக்குச் செல்கிற இடங்களிலும் நிறைய அவமானங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. என்னுடைய நிறத்தை வைத்து என்னைப் பேச்சாளராகவே மதிக்கமாட்டார்கள். நிறத்தால் நிறையக் கேலிகளையும், புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டுள்ளேன். ஒரு முறை கல்லூரி படிக்கும் போது, பட்டுக்கோட்டை அருகே பட்டிமன்றத்தில் பேசுவதற்காகச் சென்றேன். கல்லூரியில் இருந்து நேரடியாகச் சென்றதால், சுடிதாரிலேயே சென்றுவிட்டேன். மேடையில் சுடிதார் போட்டுக் கொண்டு பேசக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால், மேடைக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் துணி மாற்றிக் கொள்வதற்கும், கழிவறையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் இடம் கேட்டதற்கு, ''சீச்சி...சீச்சி அப்படிப் போ… இங்க வராத'' என்றார்கள். இதனால் துணி எப்படி மாற்றுவது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, என்னுடன் பேச வந்த மகாராஜா என்ற அண்ணன், நிகழ்ச்சி நடக்கும் கீற்றுக் கொட்டகைக்குப் பின்புறம் தன்னுடைய வேட்டியால் மறைப்பு ஏற்படுத்தினார். அந்த மறைப்பிலேயே துணியை மாற்றிக் கொண்டு. அங்கேயே, உடல் உபாதையையும் கழித்தேன்'' என்றவரின் குரல், தழுதழுக்க ஆரம்பித்தது.

‘‘பல ஊர்களில் கழிவறை பயன்படுத்த, துணி மாற்றிக் கொள்ள இடம் தருவதற்குக் கூட தயங்குவார்கள். இன்னும் ஒரு சிலர், வீட்டிற்கு உள்ளே இருக்கும் கழிவறையைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டார்கள். வீட்டிற்கு வெளியே, தோட்டத்தில் இருக்கும் கழிவறையைத்தான் பயன்படுத்த அனுமதிப்பார்கள். இதையெல்லாம் இப்போது நினைத்தால் கூட கண்ணீர் வரும். உறவினர்களின் தவறான பார்வை, நிகழ்ச்சிக்கு போகும் இடங்களில் எதிர்கொண்ட அவமானங்கள் என்னைச் சோர்வடைய வைத்தாலும் என்னுடைய அம்மா மட்டும் எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தினார்,'' என்றார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு எப்படித் தேர்வானேன் என்பதைக் கூற ஆரம்பித்த நிஷா, ‘‘ஒரு நாள் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா, அதில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விட்டு, ''கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆள் எடுக்கிறார்களாம், நீயும் கலந்து கொள்ளுடி!'' என்றார்.

‘‘டிவியில் வெள்ளையா இருந்தாத்தாம்மா எடுப்பாங்க. என்னைய எடுக்க வாய்ப்பே இல்லை'' என்றேன்.

‘‘இல்லமா, நீ முயற்சி பண்ணு...போகிற இடத்துல எல்லாம் நல்லாதான் பேசுறே, நீ செலக்ட் ஆகிடுவ'' என்றார்.

அம்மா சொல்லியதை அப்படியே விட்டுவிட்டேன். என் நண்பருடைய நண்பர், 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் இணை இயக்குநராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு என்னுடைய வீடியோவை அனுப்பி வைத்தார், நண்பர். அந்த வீடியோவை பார்த்துவிட்டு, அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் தாம்சன் சார், என்னை சென்னைக்கு வரச்சொல்லியிருந்தார். உடனேயே, அறந்தாங்கியிலிருந்து பேருந்து பிடித்து காலையில் சென்னை வந்து சேர்ந்தேன். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையிலேயே குளித்து முடித்து, துணிகளை மாற்றிக் கொண்டு, சாப்பிடாமல் கூட செய்யாமல், விஜய் டிவி அலுவலகத்து சென்றேன். என்னைப் பார்த்ததும் தாம்சன் சார், சாப்டீங்களா என்று தான் முதலில் கேட்டார். இல்லை என்று சொல்லியதும், ஜூஸ் வாங்கிக் கொடுத்தார். அதற்குப் பின், என்னைப் பேசிக்காண்பிக்க சொன்னார். நானும் எல்லாவற்றையும் படபடவென பேசிக்காட்டினேன். எல்லாம் முடிந்த பிறகு, ஷூட்டிங் எப்போது என்று சொல்கிறோம், நீங்க அப்போது வந்தால் போதும் என்றார். நிச்சயம் நம்மைத் தேர்வு செய்யமாட்டார்கள் என நினைத்த எனக்கு  மகிழ்ச்சி.

தேர்வு செய்யப்பட்டதை முதலில் அம்மாவிடம் தான் தெரிவித்தேன். அடுத்து, என் கணவர் ரியாஸ் அலியிடம் கூறினேன், அவர் அப்போது வெளிநாட்டிலிருந்தார்,'' என்றவர், தனது காதல் கதையை ஆர்வமாக கூற ஆரம்பித்தார்.

‘‘நான் இளங்கலை இரண்டாவது வருடம் படித்த போது, உறவினர் ஒருவருடைய திருமணத்தில் ரியாஸ் அலியைச் சந்தித்தேன். அதற்குப் பிறகு அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். அடிக்கடி வீட்டிலிருந்த லேண்ட்லைன் நம்பருக்குக் கால் பண்ணிப் பேசுவார். அப்படித்தான் எங்களுக்கிடையே காதல் வளர்ந்தது. இன்னும் சொல்லப் போனால், அவர் என்னுடைய அத்தை பையன். நாங்கள் இருவரும் காதலிப்பது இரண்டு வீட்டாருக்கும் திருமணத்தின் போது தான் தெரியும்.

என்னுடைய அப்பா, உறவினர்களுக்கு என்னைத் திருமணம் செய்து கொடுக்க தயாராக இல்லை. ரியாஸ் உறவினர் என்பதால் அப்பா ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை. இருப்பினும், ரியாஸ் அலியின் அம்மா, ஒரு வழியாக  பேசி முடித்தார். 10&10&2010இல் என்னுடைய திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சன் டிவியில் நான் பேசிய அரட்டை அரங்கம் அன்று ஒளிபரப்பானது. திருமண மண்டபத்தில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு அப்பா ஏற்பாடு செய்திருந்தார். பதினொன்றரை மணிக்குத் திருமணத்தை வைத்துக் கொண்டு, பதினோரு மணி வரை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

என்னுடைய கணவர், மாமியார், மாமனார் கிடைத்தது எனக்கு வரம் என்பேன். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும், அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். எனக்குத் தூண்டுகோலாக இருப்பார்கள். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வீட்டிலேயே இருந்துவிட்டேன். மீண்டும் 2013ஆம் ஆண்டு தான் பட்டிமன்றங்களில் பேசுவதற்குத் தொடங்கினேன்,'' என்றார். நிஷாவின் கணவர் ரியாஸ் அலி தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டெக்னீஷியனாகப் பணியாற்றி வருகிறார்.

''கலக்கப்போவது யாரு சீசன் - 5இல் தேர்வாகி, முதல் நாள் ஷூட்டில் கலந்து கொண்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாது நிகழ்வு. மேக்கப் போட்ட பிறகும் வியர்த்துக் கொட்டிக் கொட்டிக் கொண்டே இருந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேடை முழுக்க லைட், கேமரா, ஐந்து நடுவர்கள் என பிரமாண்டமாக இருந்ததால், அன்று ஒழுங்காகவே பேசமுடியவில்லை, முகத்தில் அடிக்கடி கையை வைத்துக் கொண்டே பேசினேன். முதல் நாள் ஷூட் முடிந்த பிறகு அப்படி ஒரு சந்தோஷம். சேது சார், ஈரோடு மகேஷ், பாலாஜி சார் எல்லாம் பாராட்டி, ஊக்கப்படுத்தினார்கள். அன்று எனக்கு அது தலைப் பிரசவம் போல் இருந்தது. அந்த சீசனில் நான் ரன்னராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு 'மிஸ்டர் - மிஸஸ்', குக்கு வித் கோமாளி, பிக்பாஸ், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். அதேபோல், ஆண் தேவதை, மாரி-2, கோலமாவு கோகிலா, கலகலப்பு -2 போன்ற படங்களில்  சின்ன வேடங்களில் நடித்துள்ளேன். என்னுடைய ஆசை மனோரமா, கோவை சரளா போன்று நகைச்சுவை நடிகையாக வரவேண்டும் என்பதுதான்.

இந்த நிலைக்கு வருவதற்காக நான் இழந்தவை ஏராளம். கிடைத்த நிகழ்ச்சிகளை இழக்கக் கூடாது என்பதற்காக, கர்ப்பமாக இருந்தபோது கூட ஓய்வெடுக்கவில்லை. பிரசவத்திற்கு ஒருநாள் முன்பாகத்தான் ஷூட்டிங் போவதை நிறுத்திக் கொண்டேன். அதேபோல், குழந்தை பிறந்த பதினைந்து நாட்கள் கழித்து விஜய் டிவிக்கு ஷூட்டிங் போய்விட்டேன். விஜய் டிவியில் தான் என் பெண் குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்தார்கள். குழந்தை பிறந்து சரியாக 60 நாள் கழித்து அறந்தாங்கியிலிருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தேன். செங்கல்பட்டு வரும் போது கார் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் குழந்தையுடைய காது கிழிந்துவிட்டது. செங்கல்பட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தோம், அதற்கு பின்னர் சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். இப்போது நலமுடன் இருக்கிறாள்.

டிவி வெளிச்சம் பட்டபிறகு முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் வீட்டுக்கு விருந்துண்ண அழைக்கின்றனர். ஒருகாலத்தில் வீட்டின் உள்ளேயே சேர்க்காதவர்கள். இன்று அளவுக்கதிகமான மரியாதை கொடுக்கிறார்கள்,'' என்றவர், பொதுசமூகம், திரையில் தோன்றும் கலைஞர்களுக்குக் கொடுக்கக் கூடிய மரியாதையை வீதிகளில் ஆடும் கலைஞர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்கிறார், ஆவேசமாக.

தொடர்ந்து பேசியவர், ‘‘நீண்ட நாள் உழைப்பிற்குக் கடவுள் கொடுத்த வரமாகத்தான் நான் இப்போது வந்திருக்கிற இடத்தைப் பார்க்கிறேன். இதைத் தக்க வைப்பதற்காகத் தினந்தோறும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன். பெண் என்பதாலேயே என் மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார்கள், அவற்றை ஒருபோதும் நான் பொருட்படுத்தியதேயில்லை,'' என்றார் புன்னகையுடன்.

ஜூலைம் 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com