வித்தியாசமான திரைக்கதை படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது!

வித்தியாசமான திரைக்கதை படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது!
Published on

‘சின்னவயதில் நான்  கிராமத்தில் கேள்விப்பட்ட ஒரு வேட்டைக்காரர் தொடர்பான சம்பவம். அவர் கைதாகி பலமுறை சிறையிலிருந்து தப்பித்துவிடுவார். நான் சினிமாவுக்கு வந்தபிறகு அவர் பற்றிய செய்திகளை ஊருக்குப்போனபோது செய்தித்தாளில் படித்தேன். அந்த தகவல்களை வைத்துக்கொண்டு நிறைய கற்பனை சேர்த்து உருவான கதைதான் இது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை இதற்காக நான் செலவிட்டிருக்கிறேன்” என்று இயக்குநர் சந்திரா தன்னுடைய முதல் படமான கள்ளன் திரைப்படத்தின்  கதையைப் பற்றிச் சொல்கிறார். இப்போது அதன் படப்பிடிப்பை முடித்து வெளியீட்டு வேலைகளில்  இருக்கிறார்.

பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட சந்திரா திரைப்பட இயக்குநர் ஆனது எப்படி?

“சின்னவயதிலிருந்தே பிலிம் சுருள்களை வைத்து விளையாடி வளர்ந்தவள் நான். திரைப்படங்கள் நிறையப் பார்ப்பேன். ஆனால் சினிமாதுறைக்கு வருவேன் என்று எப்போதும் நினைத்தது இல்லை. திருமணமாகி சென்னைக்கு வருவதற்குமுன்பு, எனக்கு ரஷ்ய இலக்கியங்கள் அறிமுகம் ஆகியிருந்தன. தமிழ் நவீன இலக்கிய அறிமுகம் இல்லை. சென்னைக்கு வந்தபிறகுதான் தமிழில் இருக்கும் நவீன இலக்கியங்கள் அறிமுகம் ஆகி, வாசிக்க ஆரம்பித்தேன்.  ஒரு நண்பர் சொன்னதன்பேரில் சிறுகதை ஒன்று எழுதினேன். அது பத்திரிகையில் பிரசுரம் ஆனது. பின்னர் சில கட்டுரைகள் எழுதினேன். அதன் பேரில் எனக்கு பத்திரிகைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் நான் ஆனது இப்படித்தான். அப்போதும் சினிமாத்துறையில் நுழையவேண்டும் என்று எனக்குத் தோன்றியதில்லை. அப்போதுதான் இயக்குநர் பாலாவின் பிதாமகன் வெளியாகி இருந்தது. அப்படம் என்னை மிகவும் பாதித்தது. அதைப்போன்ற சினிமாவைத்தான் நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்தவுடனே எனக்குத் தோன்றியது, நாமும் ஏன் சினிமா துறைக்குள் நுழையக்கூடாது என்று. வீட்டில் சொல்லாமல் உடனே வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். ஒரு நாள் கழித்து பத்திரிகையாளரான என் கணவரிடம் இதைக் கூறி, சினிமா துறைக்குச் செல்லவேண்டும் என்ற என் முடிவைச் சொன்னேன். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக சேர விழைந்தேன். அவர் அப்போது படம் ஏதும் இயக்கவில்லை, தாமதம் ஆகும் என்பதால்  இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநர் ஆனேன். 2004-ல் இருந்து இன்றைக்கு 2016 வரை 12 ஆண்டுகள் திரைத்துறையில் கழித்துவிட்டேன். இப்போதுதான் என் முதல் படத்தை எடுக்க முடிந்திருக்கிறது.

இப்போதெல்லாம் இவ்வளவு காலம் உதவி இயக்குநராகவே யாரும் இருந்துவிடுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடையது ஒரு  போராட்ட அனுபவம்தான். இரட்டைச் சுழி படத்தில் பணியாற்றிய பின்னர், சொந்தமாக படம் எடுக்க விரும்பி, இந்த திரைக்கதையைத் தயார் செய்தேன். தயாரிப்பாளர்களை அணுகும்போது, பெண் இயக்குநரா என்று முதலில் யோசிப்பார்கள். பின்னர் யார் யாரிடம் பணியாற்றியிருக்கிறேன் என்று தெரிந்துகொண்டபின் கதை சொல்ல அனுமதிப்பார்கள். பின்னர் கதையைக் கேட்டபின், மிக நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள். ஆனால் இந்த கதையை என்னால் படமாக எடுக்க முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு வந்துவிடும். இப்படியே இழுத்துக்கொண்டே போனது. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நிறைய பணம் முதலீடு செய்கிறவர்கள் எச்சரிக்கையாக இருப்பது சகஜம்தானே?

ஆனால் ஒரு நல்லவிஷயம் என்னுடைய கதை எல்லாராலும் பாராட்டப்பட்டது. இது எனக்கு பெரும் ஊக்கத்தை தந்தது. இயக்குநர் வெற்றிமாறன் இதை ஒருகட்டத்தில் தயாரிக்க முன்வந்தார். நடிகர் சித்தார்த் நடிப்பில் இது வருவதாக இருந்தது. பின்னர் அதுவும் கைவிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதியிடம் கதை சொல்லியிருக்கிறேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் முன்னகர முடியவில்லை. பின்னர்  இதே கதையை குறைந்த பட்ஜெட்டில் எடுக்கும் விதத்தில் மாற்றி அமைத்து  ஒரு  மாறுபட்ட ஹீரோவாக  இயக்குநர் கரு.பழனியப்பனை அணுகி கள்ளன் படம் இப்போது முடிவடைந்திருக்கிறது. எங்கள் தயாரிப்பாளர் மதியழகன்  இந்தக் கதையை முழுதாக நம்பி எனக்கு வாய்ப்பு தந்தார் என்பதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்” என்கிறார் சந்திரா.

“ஒரு பெண் இயக்குநராக அதுவும் அறிமுக இயக்குநராக திரைத்துறையில் உடனே வாய்ப்புகளைப் பெறவேண்டும் என்றால் ஏற்கெனவே நிறைய பெண்கள் சாதித்த துறையாக இது மாறினால்தான் சாத்தியமாகும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். மிகச்சிறந்த கதையுடன் வந்தாலும்கூட அதை விட பெண் இயக்குநர் என்கிற சுமை இருக்கத்தான் செய்கிறது. அதையும் மீறித்தான் இயங்கவேண்டி உள்ளது. நான் ஒரு சாதாரண காதல் கதையுடன் வந்திருந்தால் எனக்கு இயக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போயிருக்கலாம். நல்ல ஆக்‌ஷன், அட்வெஞ்சர் கொண்ட திரைக்கதைதான் இந்த வாய்ப்பைப் பெற்றுத்தந்திருக்கிறது. இலக்கியத்துறையில் நாம் சுமாரான படைப்பைத் தந்தால்கூட நண்பர்கள் நம் மனம் கோணக்கூடாது; நம்மை ஊக்கப்படுத்தவேண்டும் என்பதற்காக படைப்பைப் பாராட்டுவார்கள். ஆனால் சினிமா நேர் எதிர். தரமாக, வெற்றிபெறும் படைப்பாக இருந்தால்தான் இங்கு அங்கீகாரம்!” என்கிற சந்திரா, தனக்கு சுவாரசியமான கதை சொல்லும் இயக்குநராக இருக்கவே விருப்பம் என்கிறார். “கள்ளன் ஒரு ஆக்‌ஷன், அட்வென்சர் படம். சுவாரசியமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாடல்கள் மூலமாக கதையை நகர்த்துவது என்கிற பாணி எனக்குப் பிடித்தமானது. கதைக்குத் தேவையில்லாமல் ஐட்டம் டான்ஸ் வைப்பது என்கிற தேவை இப்போது மாறிவிட்டது. கதையோடு இயல்பாகச் செல்லும் உற்சா கமான பாடல்களை வைப்பது என்பது இப்போது பல படங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நானும் அப்படியொரு பாடலை வைத்திருக்கிறேன்” என்கிறார் சந்திரா! கள்ளன் ‘ரசிகர்களின் உள்ளங்கவர் கள்வனாக’ வாழ்த்துவோம்!

டிசம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com