வாழ்க்கையை மாற்றிய படம்!

வாழ்க்கையை மாற்றிய படம்!
Published on

எனக்கு  அப்ப  இரண்டு வயசு இருக்கும். ‘தொட்டா சிணுங்கி' படத்தில் என்னோட அம்மா, ஹீரோயினுக்கு டப்பிங் பேசியிருந்தாங்க. அந்த படத்தோட ரேடியோ விளம்பரத்துக்கு அம்மா பேசப் போயிருந்த போது, நான் அப்பாவுடன் சவுண்ட் எஞ்சினியர் ரூமில் உட்கார்ந்திருந்தேன்.

ரெக்கார்டிங் ரூம்ல அம்மா பேசறதைக் கேட்டு நானும் அவர் போல் திரும்ப பேசினேன். அதை கவனிச்ச இயக்குநர் என்னோட குரல் ரொம்ப இன்னோசென்டாக இருக்குன்னு சொல்லி, படத்தோட டைட்டிலை  மட்டும் என்னோட குரலில் பேச வைத்தார். ‘தொட்டாசிணுங்கி', அந்த ஒரு வார்த்தை மட்டும் தான் நான் பேசிய முதல் டப்பிங். மைக் முன்னாடி நின்ன அந்த ஃபர்ஸ்ட் மொமண்ட் பத்தி சத்தியமா எனக்கு ஞாபகம் கூட இல்ல.'' என்கிறார் ரவீனா. கிடாயின் கருணை மனு, தற்போது வெளியான காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களின் நாயகி. இவர் நடிப்பில் ‘ராக்கி' படமும் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது. அடுத்தடுத்து வாய்ப்புகளால் பிஸி ஆகிக்கொண்டிருக்கும் ரவீனா பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ஸ்ரீஜா ரவியின் மகள்.

விளம்பரங்கள் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என எல்லா மொழியிலும் இருக்கும். ஒரு குறிப்பிட்ட ப்ராண்ட் எடுத்துக்கிட்டா எல்லா மொழியிலேயும் டப் பண்ண வச்சிடுவாங்க. இந்தியா முழுக்க போகும். அந்த மாதிரி நேரத்தில அவங்க சொல்லுவாங்க, நான் அந்த வார்த்தைகளை ரிபீட் பண்ணுவேன். என்ன சொல்றேன்? எதுக்கு சொல்றேன்னு கூட தெரியாது.  ஆனா, ஹமாம், ஹார்லிக்ஸ், ஆரோக்யா மில்க், உட்வார்ட்ஸ் க்ரைப் வாட்டர் இந்த மாதிரி ப்ராஜெக்ட்ஸ்ல எல்லாம் நானும் ஒரு பகுதியா இருந்தேன்.

கல்லூரி முதல் ஆண்டு படிக்கும்போது சாட்டை படத்துக்கு முதன்முதலாக பேசினேன். சவுண்ட் இஞ்சினியர் ராஜசேகர் அண்ணா, நடிகை மகிமாவுக்கு இந்த பொண்ணு வாய்ஸ் செட் ஆகும்னு ரெஃபர் பண்ணியிருந்தார். அப்ப ஏற்கெனவே 25 பேர்கிட்ட வாய்ஸ் டெஸ்ட் எடுத்துட்டு எதுவுமே செட் ஆகாம இருந்துச்சு. சமுத்திரக்கனி சாரும், அன்பழகன் சாரும் தான் டெஸ்ட் எடுத்துட்டு இருந்தாங்க. நான் ஈவ்னிங் காலேஜ் முடிச்சிட்டு ஸ்டுடியோக்கு போனேன். ஒரு ஹீரோயினுக்காக பேசுறது அதுதான் முதல் தடவை. ஆன் ஸ்பாட் ஓகே சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் அடுத்த நாளிலிருந்து காலேஜ் முடிச்சிட்டு ஈவ்னிங் டைம்ல மட்டும் ரெண்டுலேர்ந்து மூணு மணி நேரம் பேசிட்டு வந்தேன்.

அம்மா ட்வெல்த் வரை படிச்சிருக்காங்க. கண்டிப்பா நான் டிகிரி முடிக்கணும். விஸ்காம் எடு. நம்ம ஃபீல்டுக்கு அது பயன்படும்னு அப்பா அம்மா சொன்னாங்க. ஆனா சினிமா இல்லன்னா பேக்கப் வேற எதாவது வேணும்றதால பேங்கிங் படிப்புதான் எடுத்தேன்.

அப்புறம் டப்பிங் செட் ஆகி அடுத்தடுத்து ஆஃபர் வரும் போது, இது கரெக்டா இருக்கும். அம்மாவும் இதுதான பண்ணிட்டு இருந்தாங்க, நமக்கும் ஓரளவு ஈஸியா வருதுங்கிறப்ப இதையே ப்ரொஃபஷ்னலா எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணேன்.  அதுக்கப்புறம் காலேஜ் பங் பண்ணிட்டு ரெகுலரா டப்பிங் பேச ஆரம்பிச்சிட்டேன்,'' என்கிறார், ரவீனா.

சங்கரின் இயக்கத்தில் வந்த ஐ தான் இவர் பேசிய பெரிய பட்ஜெட் படமாம்.

‘‘பெரிய ஹீரோயின், பெரிய படம்ன்னு ஃபர்ஸ்ட் டைம் பேசினது ‘ஐ'. அது எனக்கு தமிழில் நாலாவது படம். 2013ல் அந்த படத்துக்கு டப்பிங் பேசினேன். ஆனா படம் ரிலீஸாக கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. ‘ஐ' படத்துக்குப் பேச நான் தேர்வானது ஒரு சுவாரசியமான சம்பவம். என்னை பொறுத்தவரை என்ன ஸ்டுடியோ? எத்தனை மணிக்கு வரணும்னு மட்டும் கேட்டுப்பேன். என்ன படம்? யார் ஹீரோயின்னெல்லாம் கேட்கிறது கிடையாது. அங்க போய் நிக்கும் போது இந்த படம்னு ஒரு சப்ரைஸ் இருக்கும்.   

வழக்கம் போல காலேஜ் முடிச்சிட்டு ஏ.வி.எம் ஸ்டுடியோக்கு டப்பிங் பேச போயிட்டேன். டப்பிங் ஸ்கீரின்ல கார்டு வரும், இந்த படம், இந்த சீன் அப்படீன்னு. அதுல புரொடக்‌ஷன் கம்பெனி பெயரும்

‘ஐ' ன்னும் இருந்துச்சு. என்ன படம்ன்னு கேட்டேன்.' ‘ஐ' ம்மா... சங்கர் சார் எடுக்குற படம்னாங்க.

எனக்கு தூக்கிவாரி போட்டுருச்சு. நான் எதிர்பார்க்கவேயில்லை. யாருக்குன்னு கேட்டேன். எமி ஜாக்சன்னு சொன்னாங்க. எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லை. என்னோடா வாய்ஸ் எப்படி அந்த பொண்ணுக்கு செட் ஆகும். அது ஃபாரின் பொண்ணு. நான் ரொம்ப சின்னவ, இத என்னால ஹேண்டில் பண்ண முடியுமா தெரியலன்னு

சொன்னேன். சங்கர் சாரோட அசோஸியேட் டைரக்டர் முரளி மனோகர் அண்ணா, ட்ரை பண்ணி பாக்கலாம்னு சொன்னாங்க. கரெக்டா அந்த சென்னை ஸ்லாங் வர சீன் தான் முதலில் போட்டாங்க. எனக்கும் இன்னும் நம்பிக்கை குறைஞ்சிடுச்சு. அதுவரைக்கும் சென்னை ஸ்லாங் கேட்டுருக்கேன், ஆனா பேசினது இல்ல. அந்த வார்த்தைகள் எல்லாம் என் லைஃப்ல நான் கேட்டதே இல்லை. இந்த சீன் எடுக்கவே 2 மணி நேரம் ஆகிடுமேன்னு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா, முரளி அண்ணா ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க. உடனே இங்கிலீஷ்ல டயலாக் எழுதி கொடுத்தாங்க. பேசி முடிச்சாச்சு, அப்புறம் ஒரு எமோஷனல் சீன் எடுத்தோம். முரளி அண்ணா முகத்தில் அப்பவே ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சுச்சு. ஏன் இவ்வளோ ஹேப்பியா இருக்கீங்கன்னு கேக்குறப்போ, 'இல்லம்மா ஒரு 100 பேர வாய்ஸ் டெஸ்ட் எடுத்தாச்சு. யார் வாய்ஸும் செட் ஆகல. ஆனா, இது பொருத்தமா இருக்கும்னு தோணுது. சார்கிட்ட காமிச்சிட்டு சொல்றேன்னு சொன்னாங்க.'

அதுக்கப்புறம் ஒரு வாரம் கழிச்சு தகவல் வந்துச்சு. காலேஜ் முடிச்சிட்டு வர சொல்லுங்க பேசலாம்ன்னு. இது ரொம்ப பெரிய ப்ராஜெக்ட்னு எனக்கு பதட்டம் இருந்துச்சு. எனக்கு நாலு பட அனுபவம் தான் இருக்கு. எமி ஜாக்சனோட ‘தியா' கேரக்டர் ஒரு மாடல்.  ரொம்ப சாஃப்ட்டா ஹேண்டல் பண்ணனும். காம்பினேஷன் சீன்ஸ்ல விக்ரம் சாருக்கு இணையா கொண்டு போகணும். ஆனா ஐ படம் எனக்கு ரொம்ப பெரிய ப்ரேக் கொடுத்துச்சு. ‘ஐ' படத்துக்கு அப்புறம் என்னோட கேரியரே மாறிடுச்சு,'' என்கிறார் சந்தோஷமாக.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா 2017-இல் நடிகை ரவீனா ஆனது எப்படி என்று கேட்டோம்.

‘‘டப்பிங் பேசப் போகும் போது நிறைய பேர் நீ தமிழும் நல்ல பேசுற, பாக்குறதுக்கும் நல்லா இருக்க, ஏன் நீ நடிக்க கூடாதுன்னு கேப்பாங்க. நான் ரொம்ப கூச்ச சுபாவம். யாராச்சும் என்னை பாக்குறாங்க, சுத்தி இருக்குறாங்கன்னாலே எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கும். அதனாலேயே நான் எனக்கு வந்த நல்ல நடிப்பு ஆஃபர்ஸ்லாம் தவிர்த்து கிட்டே இருந்தேன்.  எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த இண்டஸ்ட்ரீல ஒரு வாய்ப்பு அமையுறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். அவங்களா வந்து கேட்கும் போது நாம அத தட்டி விடுறது தப்பா இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.

அதன் பிறகுதான் நான் மும்பைல ‘அனுபம் கேர்' சார் ஸ்கூல்ல ஒரு மூணு மாசம் கோர்ஸ் படிச்சேன், ஆக்டிங்ல. அங்க சில டெக்னிக்ஸ் கத்துக்கிட்டேன். ஸ்டேஜ் ஃபியர் போச்சு. இதெல்லாம் எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.

கிடாயின் கருணை மனு படத்தோட டைரக்டர் என்னோட டப்பிங் பத்தின இன்டர்வியூவ பேப்பர்ல பார்த்திருக்காங்க. அவங்களும் ஃப்ரெஷ் ஆன முகத்த தேடிட்டு இருந்தாங்க. நான் தமிழும் பேசுறதுனால என்னைத் தேர்வு செஞ்சாங்க. அப்படித்தான் நான் கிடாயின் கருணை மனு படத்துல நடிச்சேன்.

தமிழில் கதாநாயகியா அறிமுகமாகி 3 வருஷம் ஆச்சு. இடைப்பட்ட காலத்துல கூட தமிழில் மட்டும் 25 படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கேன். ஆனா படம் மட்டும் அந்த அளவுக்கு நடிக்கல.. ஏன்னா வாய்ப்புகள் வந்துட்டுதான் இருந்துச்சு, ஆனா ஸ்கிரிப்ட் எதுவும் எனக்கு பிடிக்கல. இடைப்பட்ட காலத்துல ராக்கின்னு ஒரு படம் பண்ணியிருக்கேன். படம் முழுக்க மொத்தமாவே 20 நிமிஷம் தான் என்னோட ஸ்கீரின்

ப்ரசென்ஸ் இருக்கும்.  தங்கச்சி கதாபாத்திரம் தான். பாரதிராஜா சார், ரோகிணி மேடம், வசந்த்விஜய் அப்புறம் நான் என படம் முழுக்கவே நாங்கள் 4 பேர் தான்.

அடுத்ததாக ராக்கி ரிலீஸாக போகுது. அடுத்தது ‘வட்டார வழக்கு' படத்துல நடிச்சிட்டு இருக்கேன். ‘டூலெட்' சந்தோஷ் தான் ஹீரோ.  இனிமேல் தான் நடிப்புல கவனம் செலுத்தனும். ஸ்கிர்ப்ட்ஸ் தொடர்ந்து வந்துட்டு இருக்கு.

மத்தபடி டப்பிங்ல ராங்கி (த்ரிஷா), கோப்ரா (ஸ்ரீ நிதி ஷெட்டி), ஐங்கரன் (மஹிமா நம்பியார்), களத்தில் சந்திப்போம் (மஞ்சிமா மோகன்), மாஸ்டர் (மாளவிகா மோகன்) படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கேன்.

அம்மா 5 மாநில விருது வாங்கியிருக்காங்க. எனக்கு கண்டிப்பா அந்த ஆசை இருக்கு. அட்லீஸ்ட் ஒரு மாநில விருதாச்சும் கண்டிப்பா வாங்கணும்'' என்கிறார்.

ஜனவரி, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com