வருத்தப்படாத வாலிபன்!

வருத்தப்படாத வாலிபன்!
Published on

சிவகார்த்திகேயனை சந்திக்க சென்றிருந்தபோது நெல்லைமாவட்டத்தில் இருந்து வாகனங்களை அமர்த்திக்கொண்டு அண்ணனுக்கு அன்புவணக்கம் என்று அவர்  படத்தைப் போட்டுக்கொண்டு வந்து அவரைப் பார்க்கக் காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டத்தைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. ஆனால் இந்த வெற்றி, ஆரவாரம் ஆகியவற்றின் சிறிய தாக்கம்கூட இல்லாமல், அடக்கமாகப் பேசுகிறார். சிவகார்த்திகேயனின் வெற்றிக் கதை சமீபகாலத்தில் தமிழ் சினிமாவில் நடந்திருக்கும் முக்கியமான சம்பவம். அத்துடன் சமகால தமிழ்ச்சமூகத்தின் போக்கையும் காண்பிக்கக்கூடிய ஒன்று.

தமிழில் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் அதற்கு ஏற்ற ஹீரோக்கள் வருவார்கள். விடுதலைக்குப் பின் தமிழகத்தில் திராவிட இயக்கம் சமூக விடுதலைக்குப் போராடிய காலகட்டத்தில் சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் பெரு நடிகர்களாக உருவெடுத்தார்கள். அக்கால மக்களின் கனவுகளைப் பிரதிபலிக்கும் படங்களில், வழி நடத்தும் படங்களில் சாகசக் காரர்களாக நடித்தார்கள். 70களுக்குப் பின்னரும் எண்பதுகளிலும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை இருந்த காலகட்டத்தில் கோபக்கார இளைஞனாக ரஜினிகாந்த் அறிமுகமானார். அலட்டிக்கொள்ளாமல் அவர் நடிக்கையில் சவாலான பாத்திரங்களில் கமலஹாசன் தோன்றிக் கொண்டிருந்தார். உலகமயக்கலின் சிக்கல்கள், சவால்கள், பலன்களை தமிழ்ச்சமூகம் அனுபவிக்கும் இச்சூழலில் இன்றைய இளைஞனின் பிரதிபலிப்பாக சிவகார்த்திகேயனின் பாத்திரங்கள் இருக்கிறன. நூறுபேரை ஒரே அடியில் சாய்க்கும் விஜய், அஜீத், விக்ரம் பாணி நடிகர்கள்  அல்ல சிவகார்த்திகேயன் அண்ட் கோ. சரக்கு அடித்துவிட்டு, சினிமா பார்த்துவிட்டு, பெண்கள் பின்னால் சுற்றிக்கொண்டு, என்ன நடந்தால் எனக்கென்ன என்று போகும் விட்டேத்தியான இளவட்டங்களின் பிரதிபலிப்புகள் இவரது பாத்திரங்கள்.

மெரினா, மரம்கொத்திப்பறவை, எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாதவாலிபர் சங்கம் என்று தொடர்ந்து ஐந்து படங்களும் வெற்றி என்பது மட்டுமில்லை. ஐந்தாவதாக வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசூல் நிலவரங்களைப் பார்த்துத் திரையுலகமே வியந்து நிற்கிறது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்கள் யாரும் பெரிதாக வெற்றி பெற்றதில்லை என்கிற செண்டிமெண்டை உடைத்திருக்கும் முதல் நடிகர் இவர்தான்.

ஆனாலும் இந்த வெற்றிகளுக்கு அடிப்படையே சின்னத்திரையில் போடப்பட்ட விதைதான் என்று சொல்வதில் அவருக்குத்  தயக்கமில்லை. ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் தேவை என்பதையும் மக்கள் தமக்கு அளித்திருக்கும் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு அடுத்தடுத்த இடத்தை நோக்கிப்போகவேண்டும் என்கிற எண்ணத்தோடும் இருக்கும் அவர்மீது அக்கறை கொள்ள நடிகர் தனுஷ் இருப்பது ஓர் ஆச்சர்யம்!

தன்னுடன் 3 படத்தில் நடிக்கவைத்தது மட்டுமின்றி எதிர்நீச்சல் என்றொரு படத்தைத் தயாரித்து அவரை தனிநாயகனாக நடிக்க  வைத்திருக்கிறார். அதோடு நிற்கவில்லை தனுஷ், சிவகார்த்திகேயனின் பட விவரங்களைக் கேட்டு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார். அடுத்தும் அவரை வைத்து இன்னொரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

தனக்குக் கிடைத்த வெற்றி தனக்கு மட்டுமே உரியது என்று நினைக்காமல் இது குழுவின் வெற்றி என்று யோசிக்கிற சிவகார்த்திகேயனுக்கு, ஒரு அடையாளம் கிடைத்தவுடன் நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற எண்ணம் தலைக்குள் புகுந்துகொள்ளவில்லை. எப்போதும் கதைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்று யோசிக்கக்கூடியவராக இருக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோவாக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், கதை ஒருவரை அடிக்கவேண்டும் என்று கேட்டால் அடிக்கவேண்டும், அதைவிட்டுவிட்டு நான் சொன்னால் கேட்பார்கள் என்பதற்காக நினைத்த இடத்தில் நினைத்தவர்களையெல்லாம் அடிக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லையென்று சொல்கிறார்.

“தொடர்ந்து ஐந்து வெற்றிகள்...    மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைவிடப் பயம் அதிகமாக இருக்கிறது. கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்கிற பயம்.” என்கிறார் இயல்பாக.

“தொலைக்காட்சியில் சுமார் ஐந்தாண்டுகள் பல்வேறு தரப்பினரோடு உரையாடிய அனுபவம்,  பல்வேறு பிரபலங்களைச் சந்தித்த அனுபவம் உட்பட நிறைய முன்னனுபவங்கள் எனக்கு உதவியாக இருக்கின்றன. தொலைக்காட்சியிலும் உடனே பிரபலமாகிவிடவில்லை. தொடக்கத்தில் இரண்டுவாரங்களுக்கு ஒரு நிகழ்ச்சி, அப்புறம் வாரம் ஒரு நிகழ்ச்சி, அதன்பின் வாரத்துக்கு மூன்று என்று படிப்படியாக முன்னேறினேன். முக்கியமான  நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க நிறைய நிகழ்ச்சிகளைக் கடந்து வர வேண்டியிருந்தது. இயக்குநர் பாண்டிராஜ் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினேன். அங்கு பார்த்துத்தான் என்னை அவர் தேர்வு செய்தார்.  நான் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த இந்த நான்கரை ஆண்டுகளை எல்லோரும் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.”

 டிவியில் தோன்றியபோதே இவருக்குத் திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது.  ஆனால் திரைப்படம் என்று போகும்போது நல்ல இயக்குநர் படத்தில் நடிக்கத் தொடங்கவேண்டும்  பெரிய நடிகர்களின் நண்பனாக நடிக்கவேண்டும் என்று முடிவு செய்து காத்திருந்திருக்கிறார்.

“இயக்குநர் பாண்டிராஜ் என்னை மெரினாவில் நடிக்க அழைத்தார். அவர் கூப்பிட்டுப் பேசி உறுதி செய்த அடுத்தநாள் படப்பிடிப்புக்குப் போய்விட்டோம். அந்தப்படம் தொடங்கிய நேரத்தில் 3 படத்தில் நடிக்க தனுஷ் சார் கூப்பிட்டார்.  நான் நினைத்த மாதிரியே நல்லஇயக்குநர், பெரியநடிகர் படங்கள் அமைந்தன.”

“மெரினா படத்தில்    தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நன்கு பெயர் வாங்கியிருந்த நேரத்தில் நடிக்கவந்தேன், முதல்படத்தைப் பார்த்துவிட்டு அங்கேதான் நல்லபடியா போய்கிட்டிருக்கில்ல அப்புறம் உனக்கு ஏன் இந்த வேலை?என்று யாரும் சொல்கிற மாதிரி இருந்துவிடக்கூடாது என்று அஞ்சினேன். கூடவே, பெரியதிரையில் நம்மைப் பார்க்கப் போகிறோம் என்கிற ஆர்வம். இதனால் அந்தப்படம் வெளியாவதற்கு முன்பு ஒருவாரம்வரை தூக்கமே வரவில்லை. இரண்டு மூன்று கிலோ எடைகூட குறைந்தது. உச்சக்கட்டப் படபடப்பில் இருந்தேன். படம் வெளியாகி அதில் நான் பரவாயில்லை என்று தெரிந்தபின்தான் நிம்மதியாக இருந்தது.” புன்னகைக்கிறார்.

மெரினா, 3 ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே இவருக்கு எழிலின் மனம்கொத்திப்பறவை படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.  அந்தப்படமும் அதன் பாடல்களும் இவரைக்  கிராமங்கள் வரை கொண்டுபோய்ச் சேர்த்தது.

இதற்குப் பின்னர் இவரது வளர்ச்சிக்கு தான் ஒரு குழுவாகச் செயல்பட்டதே காரணம் என்று சொல்கிறார்.

” பாண்டிராஜ் சார் குழு, தனுஷ் சார் குழு மதன்,ஜேம்ஸ், ராஜா உட்பட எஸ்கேப் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எல்லாம் சேர்ந்து எல்லாவற்றையும் பேசி முடிவுசெய்தோம். ஒவ்வொரு படத்தையும் இப்படிச் செய்யலாம் என்று கலந்துபேசி முடிவுசெய்வோம். நகைச்சுவை என்பது கத்திமேல் நடக்கிற மாதிரியான விசயம். கொஞ்சம் நழுவினால் அது கடியாகிவிடும். ஆகவே அதைத் தேர்வு செய்வதில் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன்.  ஒரு விசயத்தைக் கேட்கும்போது எனக்குச் சிரிப்பு வரவேண்டும். நானே சிரிக்கமுடியாத ஒன்றை மக்களிடம் கொண்டுபோக முடியாது. ஒரு நகைச்சுவையை நண்பர்களிடம் சொல்லிச் சிரிக்கவைப்பது வேறு, அதைத்திரையில் வெளிப்படுத்துவது வேறு. என்னுடைய தொலைக்காட்சிஅனுபவங்கள் இதற்குக் கைகொடுத்தன. எனவே நான் கேட்கும்போது நன்றாகச் சிரிப்புவருகிற மாதிரியானவற்றையே தேர்வு செய்வேன்” என்கிறார்.

எதிர்நீச்சல் படத்துக்குப் பின்னர் நகைச்சுவையுடன் கூடிய எதைப் பற்றியும் கவலைப்படாத பொறுப்பே இல்லாத வாலிபன் கதைகளாக இவருக்கு வந்துகொண்டிருக்கின்றன.    இப்போது மான்கராத்தே படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.  இந்தப்படத்தில் நகைச்சுவையோடு வேறு சில விசயங்களையும் கலந்து செய்திருப்பதாகச் சொல்கிறார்.

“ஒரு நாயகன் என்று ஆன பிறகு நகைச்சுவை மட்டும் செய்வது என்பது முடியாது. ஆனால் அதேசமயம் நகைச்சுவையை முற்றிலும் தவிர்த்துவிட்டு ஒரு கதையையும் தேர்வு செய்யமுடியாது. ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் எதாவது ஒரு மாற்றம் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம்.  பெரிய இயக்குநரோ புதிய இயக்குநரோ எல்லோருக்கும் போய்ச்சேருகிற கதை இருந்தால் போதும் என்று நான் நினைக்கிறேன். இப்போது நடிக்கும் மான்கராத்தே படத்தின் இயக்குநர் புதியவர், கதை முருகதாஸுடையது, ஹன்சிகா நாயகியாக இருக்கிறார், அனிருத் இசையமைக்கிறார் என்று எல்லாமே பெரிய அளவில் இருக்கிறது. ஆனால் அதற்குக் கதை மட்டுமே காரணம். எனவே கதைகளில் கவனமாக இருந்தால் எல்லாமே சரியாக அமையும் என்று நான் நினைக்கிறேன்.”

தனுஷ் பற்றிக் கேட்கும்போது பெருமையுடன் பதில் சொல்கிறார்.

“3 படத்தில் நடிக்க வைத்ததோடு இவன் தனி ஆளாக நின்று ஒரு கதையைத் தாங்குவான் என்று நம்பி என்னைக் கதாநாயகனாக வைத்து எதிர்நீச்சல் படத்தை எடுத்தார். என்னை நகைச்சுவையாளன் என்பதைத்தாண்டி நடிகராக அவர் பார்த்தார். அவர் அப்படிப் பார்த்ததால்தான் எனக்குப் பலவகையான வாய்ப்புகள் கிடைத்தன. இப்படி ஒரு பெரியநடிகர் என்மீது அக்கறை கொண்டிருப்பது மிகப்பெரிய விஷயம்.  மற்றபடி அவருடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் நான் இருக்கிறேன் என்று  சொல்வதில்  உண்மை இல்லை.”

வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்குப் பின்னர் அவரது சம்பளம் கிர்ர்ரென்று உயர்ந்துவிட்டதாகச் சொல்லப்படுவது பற்றிய கேள்வியைப் போட்டோம்.

“ பசங்க புரொடக்‌ஷன்ஸ், தனுஷ் சார் நிறுவனம், மதன் சார் நிறுவனம் என்று என்னை வைத்துப்படமெடுத்தவர்கள் மீண்டும் என்னை வைத்துப்படமெடுக்கிறார்கள். அவர்களே என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள். நான் சம்பளம் கேட்க வேண்டிய நிலையிலேயே இல்லை..” அழகாகச் சமாளிக்கிறார் சிவ கார்த்திகேயன்.

வருத்தப்படாத வாலிபர்கள் பாத்திரங்களிலேயே இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் அதற்குப் பின்னால் பெரும் உழைப்பைத் தந்துதான் இந்நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை இக்காலத்து இளைஞர்கள் மனதில் கொள்வது நலம்!

அக்டோபர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com