மாற்றான், தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் வியாபார ரீதியாக யாரையும் ஏமாற்றாதவன் என்கிறார் இயக்குநர் கே.வி. ஆனந்த். தேன்மாவின் கொம்பத்து படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கு தேசிய விருது வாங்கியதில் தொடங்கியது இவரது பயணம். கோ, அயன், மாற்றான் என்று பேர் சொல்லும் படங்களை இயக்கிய இவர் மாற்றான் பரபரப்பு ஓய்ந்து, இப்போது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் மும்முரமாக இருக்கிறார். இடையில் அந்திமழைக்காக மனம் திறந்தார்.
மாற்றான் எந்த அளவுக்கு வெற்றி?
கண்டிப்பாக இதுவும் வெற்றி படம் தான். அதே சமயத்தில் பலரும் எதிர்பார்த்த சூப்பர் பம்பர் ஹிட் இல்லை என்றாலும், வணிக ரீதியாக லாபம் சம்பாதிக்கிற படம் மாற்றான் என்று மிக தெளிவாகவும், புள்ளி விவரங்களுடன் உறுதியாக கூறமுடியும்.
அயன், கோ இரண்டும் மெகா ஹிட். இப்ப மாற்றானுக்குப் பிறகு?
என்னை நம்பி படம் தயாரித்தவருக்கு நல்ல லாபமும், திருப்தியும் கிடைத்தது. அதே சமயம் நான் சொல்ல நினைத்த கருத்தும் மக்களை சென்று அடைந்ததில் எனக்கும் திருப்தி.
மாற்றான் தந்த அனுபவம்?
நிறைய தா#மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் தினசரி ஊட்டச்சத்து பானங்கள் குறித்த சந்தேகங்களை என்னிடம் கேட்கும் போது, மாற்றான் படம் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதை உணர்ந்தேன்.
ஒரு ஹிட் மூவியின் ஃபார்முலா என்ன?
அனைத்து விதமான மக்களையும் ஈர்க்க கூடிய படமே என்றும் மாபெரும் வெற்றி பெறும். ஒரு படத்தில் படித்தவர் முதல் பாமரன் வரை, 5 வயது முதல் 80 வயது பெரியவர்களுக்கும் பிடித்தமான பல விஷயங்கள் இருக்கனும். ஆனால் இதை சமன் செய்து வெற்றி பெறுவது சவாலான காரியம்.
அடுத்தது ரஜினி படமா?
தற்போது ரஜினி படம் இல்லை. கதை விவாதத்தில் உள்ளோம். அதற்கான கலைஞர்கள் கதை முடிவானதும் தேர்வு செய்யப்படுவார்கள்.
கதாசிரியர் சுபாவுடன் அடுத்த கூட்டணி தொடருமா?
இப்போது கதை ஆரம்ப விவாதத்தில் இருப்பால் இது பற்றி தற்பொழுது உறுதியாக சொல்ல இயலாது.
உங்கள் படங்கள் என்றாலே லொக்கேஷன் மிகச் சிறப்பாக இருக்கும். எப்படி இடங்களைத் தேர்வு செய்கிறீர்கள்?
அடிப்படையில் நான் ஒரு புகைப்படக் கலைஞன். இயற்கை காட்சிகளின் பிரியன். மேலும் எனது இளமைப் பருவத்தில் நிறைய மலை ஏற்றங்களையும் பல விதமான இயற்கை காட்சிகளையும் ரசித்த அனுபவங்களும் உள்ளன. மற்றவர்கள் மரத்தை சுற்றி ஆடும் போது என் படத்தில் மலை மீது ஆடுவது வித்தியாசமாக இருக்கும்.
இன்றைய தமிழ் சினிமாவின் நிலை?
மிக பிரகாசமாக உள்ளது. ஷங்கர் மாதிரி மிக பிரம்மாண்ட இயக்குநர்கள் படமும், அதே சமயம் அறிமுக இயக்குநர்கள் எடுக்கும் படங்களும் வெற்றி பெறுவது, இந்தியாவிலே தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம். இப்படி பலதரப்பட்ட வித்தியாசமான கதைக்களன்கள் கொண்ட படங்கள் தமிழில் வருவதற்கு இயக்குநர்கள் பங்களிப்பை விட தமிழ் ரசிகர்களின்ரசனையே மிக முக்கியமானது. தமிழ் ரசிகர்களின் ரசனையே தமிழ் சினிமாவின் பலம்.
மீண்டும் உங்களை ஒளிப்பதிவாளராக பார்க்க முடியுமா?
இப்போதைக்கு இயக்குநர்தான். இடைவேளை கிடைத்தால் ஒளிப்பதிவும் செய்வேன்.
சாருலதா படத்துடன் இணைத்து மாற்றான் பேசப்பட்டதே?
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்பதை தவிர மாற்றானில் இருந்து அனைத்தும் வேறுபட்டவை. சட்டப்படி உரிமை பெற்று எடுக்கப்பட்ட படம் சாருலதா. இது மிகவும் வரவேற்கத்தக்க ஆரோக்கியமான விஷயம்.
உங்கள் படங்கள் கொஞ்சம் பெரிய, பிரம்மாண்டமான படங்களாக உள்ளன. சிறு பட்ஜெட் படம் இயக்குவீர்களா?
நான் என்றுமே ஒளிப்பதிவானாலும், இயக்கமானாலும், பட்ஜெட் பார்ப்பதில்லை. கதை தான் மிக முக்கியமானது. அதற்கு எது தேவையோ அதற்கு தகுந்த மாதிரி படங்களை ஒத்துக்கொள்கிறேன்.
மற்ற இயக்குநர்களைப் போல நீங்களும் தயாரிப்பாளர் ஆவீர்களா?
எனக்கு அவர்கள் அளவிற்கு வியாபார நுணுக்கங்கள் தெரியாது. அதனால் இயக்குநராகவே இருக்க விரும்புகிறேன். மேலும் எனக்கு தெரியாததை செய்வதை விட தெரிந்ததை சிறப்பாக செய்யவே என்றும் ஆசைப்படுகிறேன்.
டிசம்பர், 2012.