மானிட்டர் வந்ததில் இருந்தே ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்த மரியாதையில் பாதி போய்விட்டது!

மானிட்டர் வந்ததில் இருந்தே ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்த மரியாதையில் பாதி போய்விட்டது!
Published on

38வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக வலம் வரும், பன்னீர் செல்வம், தமிழ்த்திரையுலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். அரிதாக திரைப்படம் பார்ப்பவர்கள்கூட, இவரது ஏதேனும் ஒரு சில படங்களைப் பார்த்து ஒளிப்பதிவை ரசித்திருப்பார்கள்.

சென்ற தலைமுறையினர் கொண்டாடும், ‘செம்பருத்தி' உள்ளிட்ட படங்கள், அடுத்த காலகட்டத்தில், ‘மக்களாட்சி', ‘சுகமான சுமைகள்' உள்ளிட்டவை, அடுத்து ‘ஹவுஸ்புல்', ‘தேவதையை கண்டேன்'. இப்படி மூன்று தலைமுறையாக ஒளிப்பதிவில் கோலோச்சுபவர்.

தற்போது கொஞ்சம் டிராக் மாறி, ‘மிருகா' படத்தில் கதை, திரைக்கதை, வசனம், அடுத்து உருவாக இருக்கும் பிரபுதேவாவின் படத்தில் இயக்கம்... என தொடர்ந்துகொண்டே இருக்கிறது பன்னீர்செல்வத்தின் திரைப்பயணம்.

அவரிடம் பேசியதில் இருந்து:

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை அண்ணா நகர்தான். என் பள்ளிப் பருவத்தில் பார்த்த, ‘16 வயதினிலே' படம்தான் என் வாழ்க்கையை தீர்மானித்தது. அதுவரை செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமா, வெளியே வந்தது. 30 வருடங்கள் உதவி இயக்குநராக இருந்தால்தான், படத்தை இயக்கக் கற்றுக்கொள்ள முடியும் என்கிற மாயையை எல்லாம் அந்தப் படத்தில் உடைத்தார் பாரதிராஜா. யார் வேண்டுமானாலும் படத்தை இயக்கலாம் என்கிற மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இன்றளவும் அந்தப் படம், என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

அந்தப் படத்தைப் பார்த்தவுடன்தான், நமக்கு வாழ்க்கை சினிமாதான் என முடிவெடுத்தேன். அது இயக்கமா, ஒளிப்பதிவா, வேறு எதுவுமா என்பதை தீர்மானிக்கவில்லை. திரைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது.

பள்ளி இறுதி வகுப்பின்போதே இதை என் பெற்றோரிடம் சொன்னேன். அப்பா மோகன சுந்தரம், அம்மா வசந்தா இருவருமே பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் எனக்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை. ‘ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்த பிறகு, உன் விருப்பப்படி செல்!' என்று மட்டும் கூறினார்கள். அதன்படி, பச்சையப்பா கல்லூரியில் பி.எஸ்.சி. பிசிக்ஸ் படித்தேன். முடித்தவுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பாடத்தில் சேர்ந்தேன். மற்றபடி பள்ளி நாட்களிலோ, பி.எஸ்.சி படித்தபோதோ, ஸ்டில் கேமராவை வைத்து விதவிதமாக படம் எடுத்ததெல்லாம் கிடையாது.

இந்த காலகட்டத்தில், திரைத்துறையின் மீதான பற்றுதலை இன்னொரு நிகழ்வு அதிகப்படுத்தியது. புகழ் பெற்ற இரட்டை இயக்குனர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களான ராபர்ட்& ராஜசேகர் ஆகியோரை அனைவருக்கும் தெரியும். இவர்களில் ராஜசேகர் என் வீட்டுக்கு எதிரில்தான் குடியிருந்தார். அப்போது அவர் இல்லத்தில், தொலைபேசி கிடையாது. எங்கள் வீட்டுக்கு வந்துதான் பேசுவார். அவருக்கு வரும் அழைப்புகள் பற்றி நான்தான் அவரிடம் சொல்வேன். அவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் இயல்பான பழக்கம் இருந்தது.

இந்த நிலையில்தான் அவர் ஒளிப்பதிவு செய்த, ‘ஒருதலை ராகம்' படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்து, ‘பாலைவனச்சோலை' வெளியானது. தொடர்ந்து பாரதிராஜா படத்தில் நடிக்கிறார்..!

இரண்டே வருடங்களில் புகழின் உச்சிக்குச்

செல்கிறார். நம்முடன் பழகிய ஒருவரின் இந்த வளர்ச்சியை நேரடியாக பார்த்தது என் சினிமா

ஆசையை அதிகரித்தது.

படிப்பை முடித்தவுடன், யாரிடமும் உதவியாளராக சேரவில்லை. அப்போது ஆர்.கே. செல்வமணி இயக்கிய, ‘புலன் விசாரணை' படத்துக்கு என் நண்பர் ரவியாதவ்தான் ஒளிப்பதிவாளர். அவருடன் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றினேன். அதில் பாதி படம் நான் ஒளிப்பதிவு செய்தேன் என்றுகூட சொல்லலாம். பட டைட்டிலில் கூட எங்கள் இருவரின் பெயரை போட்டார்கள்.

அடுத்து ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. ஏனோ அது தடைபட்டுவிட்டது.

ஆனாலும் அடுத்தடுத்து அவர் இயக்கிய ‘செம்பருத்தி' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன்.

செம்பருத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடந்த விபத்தை மறக்கவே முடியாது. நீருக்கு அடியில் எடுப்பது போன்ற காட்சி அது. அப்போது பெரிய வசதிகள் கிடையாது. ஆகவே குளம் போல ஒரு தொட்டியை கட்டி, அதில் நீரை நிரப்பி, இந்தப் பக்கம் கண்ணாடி வைத்து ஷூட்டிங் செய்தோம். 11வது நாள், எதிர்பாராத விதமாக கண்ணாடி கிளாஸ் உடைந்துவிட்டது. நல்லவேளையாக, அங்கிருந்த அனைவரும் எந்தவித சேதமும் இன்றி தப்பினோம். மரணத்தை நெருக்கத்தில் காட்டிய சம்பவம் அது.

அதே போல, ‘அதிரடிப்படை' படத்துக்கு ஹைதராபாத்தில், குடிசைப்பகுதி போல செட் போட்டு படமாக்கினோம். அந்த பகுதியே தீயில் எரிவதைப் போன்ற காட்சி. அனைத்துவித பாதுகாப்புடன்தான் படமாக்கினோம். ஆனாலும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுவிட்டது. நல்லவேளையாக இதிலும் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் அப்போது விபத்து என்பது சாதாரணம்.

ஆர்.கே. செல்வமணியின் பெரும்பாலான படங்களுக்கு நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். அவர் ஓர் அற்புதமான இயக்குநர். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மிகவும் உழைப்பார். பிரமாண்டமாக காட்சிகளை அளிப்பார். ஒரு அரசியல் பொதுக்கூட்ட காட்சி என்றால், ஐநூறு, ஆயிரம் பேரை வைத்து படப்பிடிப்பு நடத்துவார்.  அப்போது மல்டி கேமரா கிடையாது. ஸ்டடி கேம் வைத்து எடுப்போம்.

ஓவியம், கதை போலத்தான் ஒளிப்பதிவும். இதற்கும் இலக்கணம் என்றெல்லாம் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித ஸ்டைலை வெளிப்படுத்துவார்கள்.

இன்னும் சொல்லப்போனால், குழந்தைகளை ஓவியம் வரையச்சொன்னால், மேலே கீழே இரண்டு கோடு போட்டு மலையை வரையும்... ஒரு வட்டம் போட்டு அதை சுத்தி ஸ்டார் மாதிரி போட்டு பூ வரையும்... இந்த அழகை குழந்தையின் கண்ணோடு பார்த்தால்தான் அழகு. அதுபோலத்தான் படைப்புகளும்.

அதே நேரம், இயக்கம் என்பதற்குள்தான், ஒளிப்பதிவை வெளிப்படுத்த முடியும். பி.சி.ஸ்ரீராமை எடுத்துக்கொண்டால், அவரது தேவர் மகன், நாயகன் இரண்டும் வேறுவேறு வித ஒளிப்பதிவாக இருக்கும். அதாவது கதைக்கு ஏற்படி ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்தும். .

இன்று மற்ற துறைகள் போலவே, ஒளிப்பதிவு துறையும் வளர்ந்துவிட்டது. செல்போனில் கூட ஒளிப்பதிவு செய்து படம் எடுக்க முடியும். தற்போதைய சினிமாவின் வரம், சாபம் இரண்டும் இதுதான். அதாவது யார் வேண்டுமானாலும் படம் எடுக்க முடிவது!

ஆனால் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்தா-விட்டால் அல்லது முடியாவிட்டால் ஒரே படைப்போடு காணாமல் போய்விடுவார்கள். மனதிற்குள் புதுப்புது எண்ணங்கள், கற்பனைகள் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்.

திரைப்படக் கல்லூரியில், ஒளிப்பதிவுக்கான பெஸ்ட் ஸ்டூடண்ட்& ஆக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்கு பாலுமகேந்திரா கையால்தான் விருது வாங்கினேன். நாம் மதிக்கும், வியக்கும் ஆளுமையின் கையால் விருது வாங்கியது மனநிறைவை அளித்தது.

அவரிடம் ஒருமுறை, ‘‘உங்களது ஒளிப்பதிவு மட்டும் வித்தியாசமாக, சிறப்பாக இருக்கிறதே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘நான் பயன்படுத்தும் அதே மாடல் கேமராவை பலரும் பயன்படுத்துகிறார்கள். விசயம் கேமராவில் இல்லை. எப்படி எடுக்கிறோம் என்பதில் இருக்கிறது!'' என்றார்.

அந்தக் காலத்தில், இயக்குநர்கள் இரு கைகளின் ஆட்காட்டி மற்றும் நடுவிரல்களை ஒரு சட்டம் போல் வைத்து, கோணம் பார்க்கும் புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். கேமராவின் பிரேமில் எந்த அளவுக்குக் காட்சி வரவேண்டும் என்பதை ஒளிப்பதிவாளருக்கு சொல்லும் முறை அது.

அதாவது ஒரு தெரு இருக்கிறது என்றால், அதில் குறிப்பிட்ட வீடு பக்கத்தில் நிற்கும் கார்.. இதுதான் வர வேண்டும் என இயக்குநர் சொல்வதை, ஒளிப்பதிவாளர் உள்வாங்குவதற்காக அப்படி விரல்களை வைத்துச் சொல்வார்கள்.

பிறகு மானிட்டர் வந்து அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தது. இந்த மானிட்டர் வந்ததில் இருந்தே, ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்த  மரியாதையில் பாதி போய்விட்டது. விரல்களை வைத்து இயக்குநர் சொல்லும்போது, ஒளிப்பதிவாளர் மட்டுமே பார்த்து, அதை முழுமையாக உணர்வார். இப்போது ஆளாளுக்கு மானிட்டர் பார்க்கிறார்கள், சுற்றி இருபத்தியைந்து பேர் நின்று கொண்டு ஐடியா சொல்கிறார்கள்.

அடுத்து, டி.ஐ. (டிஜிட்டல் இமேஜ்) வந்த பிறகு, ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்த மீதி மரியாதையும் போய்விட்டது. எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம்.. பிறகு சரி செய்து கொள்ளலாம் என்ற மனநிலை பலருக்கும் வர இந்த டி.ஐ.தான் காரணம். ஒருமுறை நான் விமானத்தில் செல்லும்போது பக்கத்தில் பயணித்தவர் பேச்சு கொடுத்தார். என்னைப் பற்றி கேட்டார். நான் சொல்லவும், ‘‘ஓ.. நான் ரசித்த அந்தப் படங்களுக்கு நீங்கதான் ஒளிப்பதிவா?'' என்று கேட்டு, ஆச்சரியப்பட்டார்.

அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கும் என்னைத் தெரியாதுதான். இதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை. அப்படி தெரிந்திருப்பதுதான் அங்கீகாரம் என நான் நினைக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை, அங்கீகாரம் என்பது, கால வெள்ளத்தில் அடித்து கரையில் ஒதுங்காமல் தொடர்ந்து பயணிப்பதுதான். தவிர, நமது துறையில் சீனியர்களோ, ஜூனியர்களோ நமது திறமையை உணர்ந்து நமக்கு அளிக்கும் மதிப்புதான் அங்கீகாரம். எனக்குக்கூட கடந்த 2006ல் கலைமாமணி விருது அளிக்கப்பட்டது. நண்பர்கள், இதை விழாவாக எடுத்து கொண்டாட வேண்டும் என்றார்கள். நான் மறுத்துவிட்டேன்.

1977 - 1990 தான் தமிழ் சினிமாவின் பொற்காலம். அதற்கு முன்னும் சிறந்த கலைஞர்கள் இருந்தார்கள். ஆனால்

இந்த காலட்டத்தில்தான் பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன், பாண்டியராஜன்,

ராஜசேகர், விசு, மணிவண்ணன், மனோபாலா.. இப்படி விதவிதமான,  வெவ்வேறு தளங்களில் படம் தரும் இயக்குனர்கள் இருந்தனர்.

அதேபோல பாபு, அசோக்குமார், பாலுமகேந்திரா என ஒளிப்பதிவிலும் பலர் கோலோச்சினார்கள்.

பாரதிராஜா, பாலுமகேந்திரா போலவோ, பாலுமகேந்திரா பாலசந்தர் போலவோ படமெடுக்க ஆசைப்பட்டதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள். ரசிகர்களுக்கு விதவிதமான கலை விருந்து கிடைத்தது.

கால ஓட்டத்தில், சினிமாவின் உள்ளும் புறமும் மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் படத்தின் அத்தனை விசயங்களையும் தயாரிப்பாளர்தான் தீர்மானிப்பார்கள். இதற்கு உதாரணமாக ஏவிஎம், விஜயவாஹினி, சத்யா ஸ்டூடியோ, சூப்பர் குட் பிலிம்ஸ்.. இப்படி நிறைய சொல்லலாம்.

அதன் பிறகு இயக்குனர்கள் தீர்மானித்தார்கள். தற்போது நடிகர்கள் முடிவு செய்கிறார்கள்.

அதே போல, வெளியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இன்று வெப் சீரிஸில் வந்து நிற்கிறது. இதற்காக பயப்படத் தேவையில்லை.

சினிமா வந்தவுடன் நாடகம் போய்விட்டது என பயந்தார்கள், டிவி வந்ததும் சினிமாவுக்கு எதிர்காலம் இல்லை என்றார்கள், அதன் பிறகு வெப் தொடர்கள் வந்த பிறகு சினிமா & டிவி இரண்டுக்குமே எதிர்காலம் கிடையாது என்கிறார்கள். அதெல்லாம் தவறு.

சினிமா என்பது ஒன்றுதான். அதன் வடிவங்கள் மாறும்... அவ்வளவுதான்.

சினிமா, விளையாட்டு.. இரண்டையும் மக்கள் எப்போதும் ரசிப்பார்கள். மகிழ்ச்சியாக இருக்க நினைப்பது மனித இயல்பு. இந்த இரண்டு துறைகளுமே அப்படியான மகிழ்ச்சியை அளிப்பவை. ஆகவே சினிமா அழியாது.

இடையில், படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன். வந்தது. சி.வி.ராஜா தயாரிப்பில், பிரபு தேவா நடிப்பதாக இருந்தது. அப்போது பிரபுதேவா, ‘தபாங்' இந்தி படத்துக்கு செல்ல வேண்டிய சூழல். அந்த இடைவேளையில்தான், ‘மிருகா' படத்துக்கு கதை, வசனம் எழுதினேன். படம் முடிந்துவிட்டது.

தொடர்ந்து 38 ஆண்டுகளாக இயங்கி வருகிறேன்; என் பணியில் உதவி செய்த 22 பேர் இன்று ஒளிப்பதிவாளாக இருக்கிறார்கள். இது மன நிறைவு அளிக்கிறது. திரைத்துறையில் மனதிற்கு பிடித்தமாதிரி... மற்றவர்களுக்கு பிடித்தமாதிரி இயங்க வேண்டும் என்பதுதான் என் ஆசை, லட்சியம் எல்லாம்.

ஜூலை, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com