கூ ர்மன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி யிருப்பவர் இயக்குநர் பிரையன் பி.ஜார்ஜ். முதல் படத்தையே சைக்காலஜிக்கல் த்ரில்லராக எடுத்து அசத்தியிருக்கிறார்.
சென்னை அண்ணா நாகரில் பிறந்து வளர்ந்தவரான பிரையன் பி.ஜார்ஜை, அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
‘‘பதினோராம் வகுப்பு படிக்கும் போதுதான் எனக்கு சினிமா மீதான ஆர்வமே வந்தது. கோடம்பாக்கத்தில் படித்ததால் அந்த ஆசை உருவாகியிருக்கலாம். ஸ்கூல் படிக்கும்போதே டைரி எழுதும் பழக்கமும், வாசிப்புப் பழக்கமும் இருந்ததால் எழுதுவது மீதான ஆர்வம் அதிகரித்தது.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் சினிமாவிற்கு போகலாம் என்று முடிவெடுத்து வீட்டில் சொன்னேன். அவர்கள் எதாவது ஒரு டிகிரி படித்துவிட்டு சினிமாவிற்கு போ என்றார்கள். சினிமாவில் எழுத்தாளராக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.
ஆனால்,தமிழ் சினிமாவில் எழுத்தாளருக்கான இடமே இல்லை என்பதை தெரிந்து கொண்டதால் இயக்குநராகலாம் என முடிவெடுத்தேன்.'' என்றவர், தனது வாழ்க்கையின் அடுத்தடுத்த நகர்வுகளை அசைபோட ஆரம்பித்தார்.
‘‘பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடித்ததும். வேறு எந்த வேலையும் தேடவில்லை. இயக்குநர் வின்சென்ட் செல்வா ‘யூத்' படம் எடுப்பதற்கான வேலைகளில் இருந்தார். தெரிந்த ஒருவர் மூலம் அவரிடம் அறிமுகமானேன். அவரிடம் ஏற்கனவே பத்து உதவி இயக்குநர்கள் இருந்ததால், அவருடைய இணை இயக்குநர் சண்முகராஜாவை ஃபாலோ பண்ண சொன்னார்.
எங்கு படப்பிடிப்பு நடக்கிறது என்பதை சண்முகராஜா எனக்கு சொல்லிவிடுவார். நானும் அங்கு சென்று வேடிக்கை பார்ப்பேன்.
சண்முகராஜா இணை இயக்குநராக பணியாற்றிக் கொண்டே, தனியாக படம் இயக்குவதற்கான வேலைகளையும் செய்துகொண்டிருந்தார். சுமார் ஒன்றரை வருடம் அவரிடம் பணியாற்றினேன். சினிமாவை எனக்கு கற்றுக் கொடுத்தது அவர் தான். உள்ளூர் வாரப்பத்திரிகைகளையும்,
சொற்ப எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே வாசித்துக்கொண்டிருந்த என்னை நிறைய படிக்க சொல்லி ஊக்கப்படுத்தினார். உலக சினிமாவை அறிமுகப்படுத்தினார்.
அவருடைய வீடு தி.நகரில் இருந்தது. பஸ்ஸில் தான் அவரது வீட்டிற்கு செல்வேன், தினமும் காலையில். ஒவ்வொருநாளும் ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்குள் ஒரு கதையை சொல்ல வேண்டும். அது ஒரு உண்மை கதையாகவோ, கற்பனைக் கதையாகவோ இருக்கலாம். பஸ்ஸில் செல்லும் போதே கதை பற்றி யோசிப்பேன். இப்படி யோசிப்பது தினசரி வேலைகளில் ஒன்றாகிப்போனது,
‘பேருந்தில் கூட்ட நெரிசல். ஒருவன் என்னுடைய பணப் பையை திருட முயல்கிறான். நான் உடனே பணப் பையைப் பிடித்துக் கொள்கிறேன். எப்படியோ பணத்தைப் பாதுகாத்துவிட்டோம் என்று நினைத்தேன். இறங்கிய பின்தான் தெரிகிறது, பணம் பையில் இல்லை என்று. பணத்தை எடுத்துவிட்டு, திருப்பி வைக்கும் போதுதான், பணப் பையைப் பிடித்துள்ளேன்,' இந்த கற்பனை கலந்த கதையை சண்முகராஜாவிடம் சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. நீ பெரிய கமர்சியல் டைரக்டராக வருவாய் என்றார்.
ஒரு காட்சியை எப்படி யோசிக்க வேண்டும், ஒரு கதை எப்படித் தொடங்க வேண்டும், கதாபாத்திர வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும், நடிகர்கள் மட்டுமில்லை சினிமா, அவர்களை சுற்றியுள்ள எல்லாமும் நடிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தார். அதன் பிறகு, விளம்பரப் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று சிறிது நாட்கள் கழிந்தன.
இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடந்து, குழந்தைகளும் பிறந்தனர். என்னதான் கஷ்டப்பட்டாலும் சினிமா மீதான ஆசை மட்டும் இருந்து கொண்டே இருந்தது,' என்றவர், தனது அடுத்தடுத்த சினிமா முயற்சிகளை சொல்லத் தொடங்கினார்.
‘என்னுடைய நண்பர் ரமேஷ் இயங்கிக்கொண்டிருந்த ‘தெகிடி' படத்தில் இணை இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் வெற்றி பெற்றது. படத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமாருக்கு என்னுடைய வேலை மிகவும் பிடித்துவிட்டது.
‘ஏதும் ஸ்கிரிப்ட் இருந்தா கொடுங்க‘ என்றார். ஒரு ஹாரர் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை கொடுத்தேன்.என்னுடைய கதையை ‘பீட்சா 3'-ஆக எடுக்கலாம் என்றார். பிறகு, ஹாரர் படம் எடுப்பதை சிறிது காலம் தள்ளிவைத்தார்.
பின்பு அவரே 'மாயவன்' என்ற படத்தை இயக்கினார். அதில் இணை இயக்குநராக பணியாற்றினேன். அது முடிந்தவுடன் ‘பீட்சா 3' தொடங்கினோம். அது கைகூடவில்லை. அவரே மீண்டும் ‘Gangs of Madras' என்ற படத்தை இயக்கினார். அதிலும் இணை இயக்குநராக பணியாற்றினேன். மீண்டும் ‘பீட்சா 3'-யை தொடங்கினோம். அந்தமுறையும் எங்கள் முயற்சி வெற்றியடையவில்லை. அச்சமயம், கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன். சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கான கதையை தயார் செய்யலாம் என முடிவெடுத்தேன். அந்த சமயத்தில் ஆனந்த விகடனில் இயக்குநர் வெற்றிமாறனின் நேர்காணல் ஒன்று வந்தது.
செங்கல்பட்டிற்கு அருகே இடம் ஒன்று வாங்கி, வீடு கட்டி, விவசாயம் செய்வதைப் பற்றி வெற்றிமாறன் பேசியிருப்பார். அது என்னை மிகவும் கவர்ந்தது. இது தான் ‘கூர்மன்' படத்திற்கான ஆரம்பப்புள்ளி.
அதேபோல், என்னுடைய நண்பர் ஒருவர் மனநல மருத்துவர். நாம் மனதில் என்ன நினைக்கிறோம் என்பதை சட்டென்று சொல்லக் கூடியவர்.
ஏற்கனவே யோசித்து வைத்திருந்த வெற்றிமாறன் கதாபாத்திரத்துடன், மனநல மருத்துவரின் கதாபாத்திரத்தை இணைத்து ஒரு கதை எழுதினேன். அது தான் ‘கூர்மன்'.
இந்தக் கதையில், கதாபாத்திரங்கள் மிகக்குறைவு. ஒரு நாயகன், ஒரு நாயகி, ஒரு நாய், ஒரு வேலைக்காரன் என மொத்தம் நான்கே பேர் தான். கதாநாயகன் அதிகம் பேசமாட்டார். கதாநாயகி ஒரு மாயை (Illusion). நாய் பேசாது. பேசக்கூடிய கதாபாத்திரம் வேலைக்காரர் மட்டுமே. அதனால் தான் படத்தில் ஒரு டிவி வைத்தேன். அது படம் முழுதும் ஓடிக்கொண்டே இருக்கும். எங்கெல்லாம் படம் அமைதியாகின்றதோ அப்போதெல்லாம் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும். கதாநாயகன் படுக்கும் இடத்தில் ஒரு பல்ப் வைத்தேன். அது இருபத்துநான்கு மணிநேரமும் எரிந்துகொண்டு இருக்கும். அதுவும் ஒரு கதாபாத்திரம்.
கூர்மன் கடைசி நாள் படப்பிடிப்பு. பிளாஷ்பேக் காட்சியில் ஆறு காட்சிகள் படம்பிடிக்க வேண்டி இருந்தது. படப்பிடிப்பு நடக்கும் வீட்டிற்கு ஒரு நாள் அனுமதி வாங்கியாகிவிட்டது. நடிகர்கள், படப்பிடிப்பு குழு என எல்லோரும் தயார். மறுநாள் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை படப்பிடிப்பு என திட்டமிட்டிருந்தோம்.
மறுநாள் கனமழை. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒரு நாள் படப்பிடிப்பு ரத்தானால், அது தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய இழப்பு. அன்று எடுக்க வேண்டியிருந்த ஆறு காட்சிகளையும் மழையில் நடப்பது போல் எடுத்துவிடலாம் என முடிவெடுத்தேன். உடனடியாக இரண்டு குடைகளை வாங்கினோம். காமிராவுக்கு ஒரு குடை, நடிகர்கள் இருவருக்கும் சேர்த்து ஒரே குடை. மற்ற அனைவரும் மழையில் நனைந்து கொண்டு படப்பிடிப்பை நடத்தினோம். எங்கள் அதிர்ஷ்டம், அன்றிரவு ஏழு மணி வரை மழை பெய்தது.
மழை, ரயில், விமானம் எல்லாம் சிறிய பட்ஜெட்டில் வராது. அன்று மழை தானாக வந்து உதவ, ‘கூர்மன்' பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மாதிரி இருந்தது.'' என்றவரின் முகம் பிரகாசித்தது.
மார்ச், 2022