பல மடங்கு உயர்வதற்கான தகுதி உடையவர் விஜய்!

கோபிநாத்
கோபிநாத்
Published on

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் ஒளிப்பதிவாளராக தடம் பதித்தவர். தில், தூள், கில்லி என அசத்தியவர். விரைவில் யானை, ஓ மை டாக் படங்களின் மூலம் அசத்த இருக்கும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்தை சந்தித்து உரையாடினோம்.

‘திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் தான் என்னுடைய சொந்த ஊர். பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தாத்தா - பாட்டி அரவணைப்பில் வளர்ந்ததால், சிறிய வயதிலேயே வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. பாட்டி நிறையப் படிப்பார். எங்கள் வீட்டிற்கு விடுதலை, தினமணி, ஆங்கில இந்து, சோவியத் நாடு, ஆனந்த விகடன் என நிறையப் பத்திரிகைகள் வரும்.

பாட்டி தான் என்னை முதன் முதலாக சினிமாவிற்கு அழைத்து சென்றவர். அவர் இறந்த பிறகு தாத்தா தான் தியேட்டருக்கு அழைத்துச் செல்வார். நான் படத்திற்கு செல்வது அப்பாவிற்குப் பிடிக்காது. அவருக்குத் தெரியாமல்தான் படத்திற்குச் செல்வேன். இதை யாராவது அவரிடம் சொல்லிவிடுவார்கள். படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே வீட்டில் இருந்து ஆட்கள் வந்து என்னைக் கூட்டிப்போய்விடுவார்கள். போனதும் பெல்ட்டாலேயே பின்னி எடுப்பார்.

படம் வெளியான ஒருவருடம் கழித்துத்தான் எங்கள் ஊர் தியேட்டருக்கு அந்தப் படம் வரும். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் திரையிடுவார்கள். காவேரி, அம்சவள்ளி என்ற இரண்டு தியேட்டர்கள் இருந்தன.

சிவாஜி படங்களை விரும்பி பார்ப்பேன். ஸ்ரீதர் இயக்கத்தில், எம். எஸ். விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன் பாடல் வரியில், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த நெஞ்சிருக்கும் வரை என்னைக் கவர்ந்த படம். சிறிய வயதில் பார்த்த திருவிளையாடல் படம் இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.

இயக்குநர் ஸ்ரீதரின் படங்கள் பல்வேறு வகையான கதைக்களத்தைக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், அவை வெற்றிப்படங்களாகவும் இருந்தன. அவருடைய படங்களுக்குப் பிறகு பாரதிராஜா, பாக்கியராஜ் போன்றவர்களின் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போதே படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க ஆரம்பித்துவிட்டேன். வின்சென்ட், நிவாஸ், பாலுமகேந்திரா, அசோக்குமார் ஆகியோரின் ஒளிப்பதிவு பிடிக்கும். இவர்கள் அனைவரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். வாசிப்புப் பழக்கம் இருந்ததால் இதெல்லாம் சாத்தியப்பட்டது.

சென்னையில் வழக்கறிஞராக இருந்த சித்தப்பா, யாஷிகா கேமரா வைத்துக் கொண்டிருந்தார். ஊருக்கு வரும்போதெல்லாம் எடுத்து வருவார். அந்த கேமராவை எடுத்துப் பார்ப்பேன், அதைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்வேன். கேமராவைப் பற்றி முதலில் கற்றுக்கொடுத்தவர் சித்தப்பா தான்.

அதேபோல், ஊரில் இருந்த ராஜீவ் ஸ்டுடியோவிற்கும் அடிக்கடி போய் வருவேன். ஸ்டுடியோவில் இருந்த டார்க் ரூம், ரெட் லைட், இருட்டு, ஃபிலிம் ரோலை நேர்த்தியாகக் கழுவும் விதம் பெரிய பிரமிப்பாக இருந்தது.

பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, நான் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என வீட்டில் விரும்பினார்கள். அந்த சமயத்தில் சினிமா மீதான ஆர்வம் அதிகரித்துவிட்டது. அதிலும் ஒளிப்பதிவாளராக வேண்டும் எண்ணம் வலுவாகப் பதிந்துவிட்டதால், பன்னிரண்டாம் வகுப்பில் ஒழுங்காகப் படிக்கவில்லை. குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அதிக மதிப்பெண் எடுத்திருந்தால் இன்ஜினியரிங் சேர்த்துவிட்டிருப்பார்கள்.

பன்னிரண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணை வைத்து சென்னை திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என முடிவெடுத்தேன். வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை புள்ளியியல் சேர்த்து விட்டனர். கல்லூரியில் நடன அமைப்பாளராகவும், ஸ்கிரிப்ட் எழுதவும் செய்தேன். கல்லூரி சேர்ந்த பிறகு மாதத்திற்கு பதினைந்து படங்கள் பார்ப்பேன்.

அந்த சமயத்தில், தாத்தா யாஷிகா fx3 கேமரா வாங்கி கொடுத்தார். அதன் பிறகு நிறையப் புகைப்படங்கள் எடுத்தேன். மூன்று வருடம் கல்லூரியை முடித்தாலும், அரியர் இருந்தது. மீண்டும் சென்னை திரைப்படக் கல்லூரியில் விண்ணப்பித்தேன். சீட்டும் கிடைத்தது. அந்த தகவலை வீட்டில் சொல்லியதற்கு, என்னை கிளம்பி ஊருக்கு வர சொல்லிவிட்டார்கள். அப்பாவுக்கு உடம்பு சரியிவில்லை என்று. மறுநாள் காலையில் கல்லூரிக்குப் போக வேண்டும். வேறு வழியில்லாமல் ஊருக்குச் சென்றுவிட்டேன்.

 ஐந்து வருடம் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டேன். வீட்டில் இருந்த எல்லா பிரச்சனைகளையும் சரிசெய்தேன். தம்பியும் வளர்ந்துவிட்டான், அண்ணனும் ஊரில் இருந்ததால், பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக சேரப்போகிறேன் என சொல்லிவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.

சினிமாவிற்கு போகிறேன் என சொல்லியிருந்தால் விட்டிருக்க மாட்டார்கள்.

ஊரில் இருக்கும் போதே, நிறைய இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்றதால், பத்திரிகையாளர்கள் சிலர் அறிமுகமாகியிருந்தனர். சென்னை வந்ததும் பகுதி நேர புகைப்படக் கலைஞராக கல்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் எடுத்த புகைப்படங்கள் அதில் அட்டைப்படங்களாக வந்தன. நிறையப் பத்திரிகைகளிருந்து வேலைக்கு அழைப்பு வந்தது. 1994ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ‘ விழாவிற்கு என்னுடைய புகைப்படம் தேர்வானது.

ஓவியர் கோபுலுவின் ஏஜென்சியில் வேலைபார்த்தேன். நிறைய விளம்பரப் படங்களுக்குப் புகைப்படம் எடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. 1992ஆம் ஆண்டிலேயே ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் சார்ஜ் பண்ணியிருக்கிறேன். என்னுடைய நோக்கம் எது என்பதில் தெளிவாக இருந்ததால், 1994 ஆம் ஆண்டு ராஜீவ் மேனனை சென்று சந்தித்தேன். என்னுடைய புகைப்படங்களைக் காண்பித்தேன். படங்களைப் பார்த்தவர், பம்பாய் திரைப்படம் முடிந்தவுடன் வந்து சேர்ந்து கொள் என்றார்.

‘சார்... உங்களுடைய விளம்பரப் படங்களை நேரில் வந்து பார்க்கட்டுமா?' என்று கேட்டேன். ‘சரி வந்து பாருங்க' என்றார்.

அவர் எடுத்த ஹமாம் விளம்பரத்திற்கான படப்பிடிப்பு ஈசிஆரில் நடந்து கொண்டிருந்தது. நேரில் சென்று படப்பிடிப்பைப் பார்த்தேன். அப்போதுதான் முதல் முறையாக படப்பிடிப்பை நேரில் பார்க்கிறேன். படபிடிப்பு முடிந்து மாலை கிளம்பினேன்.

‘கோபி நீங்க ஜாயின் பண்ணிக்குங்க. நாளையிலிருந்து ஆபீஸ் வந்துடுங்க' என்று சொல்லிவிட்டு காரில் கிளம்பிவிட்டார் ராஜீவ் மேனன்.

பம்பாய் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஐந்தாவது உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். படம் முடிந்ததும் நான் ஒருவன் தான் இருந்தேன். என்னுடைய சீனியர்கள், ரத்னவேலு, ஆர்.டி.ராஜசேகர் எல்லோரும் தனியாக பணியாற்ற சென்றுவிட்டனர்.

ராஜீவ் மேனனிடம், மின்சாரகனவு திரைப்படத்தில் இணை ஒளிப்பதிவாளராகிவிட்டேன். அந்த படம் முடிந்தவுடன் என்னைத் தனியாகச் சென்று பணியாற்ற சொன்னார். அவரிடம் வேலைபார்த்துக் கொண்டிருந்த போதே வேணு மற்றும் ரவிகே சந்திரனிடம் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன்.

 அதன் பிறகு, அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கில் வேலைப்பார்ப்பதற்கு ராஜ்கமல் பிலிம்ஸில் இருந்து அழைத்தனர். அந்த படத்தில் இணை ஒளிப்பதிவாளர். அந்த படம் முடிந்ததும், நிறையப் படங்களுக்கு கிளாஸ் அவுட் (ஒளிப்பதிவாளருக்கு மாற்றாக இணை ஒளிப்பதிவாளர் வேலை பார்ப்பது)பண்ணினேன்.

 2001, ஜனவரி மாதம் ஒருநாள், நண்பர் பாலசுப்ரமணியம் அழைத்திருந்தார். அவரும் ஒளிப்பதிவாளர் தான். படம் ஒன்றில் பணியாற்றுவதற்கு இயக்குநர் தரணியை சென்று சந்திக்க சொன்னார். சந்தித்தேன். அவரை சந்தித்துவிட்டு வந்த மதியமே, தயாரிப்பாளர் அலுவலகத்திலிருந்து அழைத்தார்கள். லக்ஷ்மி புரொடக்ஷன்ஸின் பூரணசந்திர ராவை சென்று சந்தித்தேன். என்னைப் பார்த்த ஐந்து நிமிடத்தில், இவர் தான் படத்தின் ஒளிப்பதிவாளர். இவரிடம் கதையை சொல்லுங்கள் என தரணியிடம் கூறிவிட்டார். ‘தில்' படத்தின் கதையைக் கூறினார். படத்தில் ஒப்பந்தமாகி வேலை பார்த்தேன். மொத்தம் எழுபத்தைந்து நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. மே மாதத்தில் படம் வெளியானது, பயங்கர ஹிட்.

படம் வெளியானதும் அப்பா தஞ்சாவூரில் படம் பார்த்தார். ‘நினச்சதை சாதிச்சிட்டடா. ரொம்ப கஷ்டப்பட்டல்ல. நல்லா பண்ணிருக்கடா' என பாராட்டினார். சினிமாவிற்கு போக கூடாது என்றவர் சொன்ன வார்த்தைகள் இவை.

 தில் பட வெற்றிக்கு பிறகு தரணியுடனான பயணம் தொடர்ந்தது. அவர் எனக்கு உடன் பிறவா சகோதரர்.

 இரண்டாவது படம் இயக்குநர் வசந்தின் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' படத்தில் பணியாற்றினேன். ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டால், வேறு எந்த படத்திலும் பணியாற்ற ஒத்துக் கொள்ள மாட்டேன். இதனால், ஆட்டோகிராப், சொக்கத்தங்கம், அந்நியன் போன்ற பல படங்களில் பணியாற்ற முடியாமல் போய்விட்டது.

விஜய் நடித்த கில்லி, குருவி, வேட்டைக்காரன் ஆகிய மூன்று படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றார் போல் தன்னை மேம்படுத்திக் கொண்டார் விஜய். நடிப்பில் என்ன சொன்னாலும் செய்வார். கில்லி படத்தில் கபடி விளையாடும் போது, தானே மண்ணை அள்ளி உடம்பில் பூசிக்கொள்வார்.

எல்லோருக்கும் முன்பாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். அவரின் அர்ப்பணிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பு தளத்தில் தேவையில்லாமல் எதுவும் பேசமாட்டார். ஸ்பெஷலாக எதையும் எதிர்பார்க்க மாட்டார். நான் வேறு ஆள் கிடையாது; உங்களை மாதிரி தான் என்பதை உணர்த்திக் கொண்டே இருப்பார். இந்த குணம் அவரிடம் இயல்பாக இருக்கும்.

படபிடிப்புத் தளத்தில் மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்துகொள்வார். ஒருவரை எப்படி நடத்த வேண்டும். பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என அவரிடம் கற்றுக் கொள்ளலாம். அவரிடம் சிறிதும் ஆணவம் இருக்காது. அவ்வளவு எளிமையான மனிதர்.

பத்து நிமிடங்கள் ஓரே இடத்தில் நிற்கிறார் என்றால், அவரே குடையைப் பிடித்துக் கொள்வார். ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு, நாம் வேறு எதாவது பேசிக் கொண்டிருந்தாலும், எவ்வளவு நேரம் ஆனாலும், அங்கேயே நின்று கொண்டிருப்பார். ஏன்? நிற்கச் சொன்னீர்கள் என்று கூட கேட்க மாட்டார். பலமடங்கு உயர்வதற்கான தகுதி அவரிடம் இருக்கிறது. எனக்கு அவருக்கும் பரஸ்பர மரியாதை இருந்தாலும், வேட்டைக்காரன் படத்திற்கு பிறகு அவருடன் சேர்ந்து பணியாற்றுவதற்கான சூழல் அமையவில்லை.

கில்லி படத்தில் வரும் சேசிங் சீனை ஒரிசாவில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தோம். நான் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் கால் எலும்பு, மார்பு எலும்பு உடைந்துவிட்டது. உயிர் பிழைப்பேனா என்றே தெரியாத நிலை. மயங்கிய நிலையில் கிடக்கிறேன், யாரும் அருகில் வரவில்லை. இயக்குநர் தரணி வந்துதான் தூக்கினார். காரில் என்னை ஏற்றி கொண்டு, முப்பது கிலோ மீட்டருக்கு தூரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

காரில் செல்லும் போதே கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிகிறது. மனதில் பல்வேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கடைசியாக என்னுடைய மனைவி மேனகாவின் முகம் தான் கண் முன் நின்றது. நான் இறந்தால் அவள் தான் நேரிடையாக பாதிக்கப்படக் கூடியவள் என்பதால் அவளைப் பற்றிய நினைவுகளே மேலோங்கியிருந்தன.

மருத்துவமனையின் முன்பாக நான் வந்த கார் நின்றது. இயக்குநர் தரணி, த்ரிஷா, விஜய் என எல்லோரும் காரில் வந்துவிட்டார்கள். என்னை காரிலிருந்து இறக்குவதற்காக ஸ்ட்ரெச்சர் எடுத்து வருகிறார்கள். எனக்கு முழுவதுமாக மயக்கம் தெளிந்துவிட்டது. என்னை தூக்க வந்தவர்களை தள்ளிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டேன். இதைப் பார்த்த த்ரிஷா அழுதுகொண்டே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று கொண்டேன். அங்கிருந்த விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறலாம் என முடிவெடுத்தோம். இரவில் காடு வழியாகப் பயணம் செய்ய சிரமம் என்பதால், தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம், பெங்களூருக்கு தொடர்பு கொண்டு ஹெலிகாப்டருக்கு ஏற்பாடு செய்தார். பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் வரவில்லை. பிறகு சாலை வழியாகவே விசாகப்பட்டினம் சென்றோம். விஜய்யும் கூடவே வந்தார்.

நாளைக்கு திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கும், நீங்கள் உடனே கிளம்புங்கள் என விஜய்யிடம் சொல்லிவிட்டேன். என்னுடைய இணை ஒளிப்பதிவாளர்கள் பார்த்து கொள்வார்கள் என்றேன். நான் இல்லாமல் மூன்று நாள் படப்பிடிப்பு நடந்தது.

விபத்து நடந்தது தெரிந்தும் பத்திரிகையாளர்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். சென்னை பதிப்பில் மட்டும் தயவு செய்து இந்த செய்தியை வெளியிடாதீர்கள். என் மனைவி தாங்கமாட்டார் என்றேன். அந்த செய்தி சென்னை பதிப்பில் வெளிவரவில்லை. நான் வீட்டுக்கு வந்த பிறகு தான் எனக்கு ஏற்பட்ட விபத்து குறித்துச் சொன்னேன். விபத்து ஏற்பட்டபோது எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தது,'' என்றவர் எந்த சலனமும் இல்லாமல் பேச்சை தொடர்ந்தார்.

‘‘சிம்பு நடித்த ஒஸ்தி படத்தை முடித்துவிட்டு இந்தி படங்களில் வேலை பார்க்க சென்றுவிட்டேன். அதன் பிறகு 2014ஆம் ஆண்டு ஒரு பெரிய விபத்தில் சிக்கிக் கொண்டேன். அதிலிருந்து குணமடைந்து வருவதற்கே ஆறு வருடங்கள் ஆனது. அதற்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடம்' வெளியானது. உடனே கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை என்னுடைய ஒளிப்பதிவில் ஒரே ஒரு படம் தான் வெளியாகி இருக்கிறது. கடந்த மூன்று வருடத்தில் சினம், யானை, ஓ மை டாக், எக்கோ என நான்கு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இதில் யானை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

 நான் ஒளிப்பதிவாளராகி 21 வருடங்கள் ஆகிறது. மொத்தம் 18 படங்களில் பணியாற்றி உள்ளேன். எல்லாம் நிறைவான படங்கள் தான். நிறையக் கஷ்டங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறேன். மனைவி மேனகாவும், குழந்தைகள் வீரசோழனும் கரிகால்சோழனும் என்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்,'' என நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்தார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.

ஏப்ரல், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com