பதினோராம் வகுப்பிலேயே சினிமாதான் என்று முடிவு பண்ணிட்டேன்!

பதினோராம் வகுப்பிலேயே சினிமாதான் என்று முடிவு பண்ணிட்டேன்!
Published on

சமீபத்தில் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்த  திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’. எளிமையான ஒருவரிதான்; அதை  உணர்வுபூர்வமான திரில்லர் ஆக்கி வரவேற்பைப் பிடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ். 27 வயதுதான் ஆகிறது. எளிமையான தோற்றம். ஆனால், நம்பிக்கையான பேச்சு. “எனக்கு சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துல உமையாள்புரம்னு ஒரு கிராமம்... பிழைப்புக்காக சென்னை வந்து ரொம்ப வருஷமாச்சு. ஸ்கூல் காலேஜ் எல்லாம் இங்கதான். மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியிலதான் பி.காம் முடிச்சேன். இப்போ, குரோம்பேட்டையில அம்மா, தம்பியோட வசிக்கிறேன். அம்மா ஒரு நிறுவனத்துல அக்கவுண்டன்டா இருக்காங்க. தம்பி பள்ளியில் படிக்கிறான்” என குட்டி அறிமுகம் கொடுத்து சிரிக்கிறார் ஸ்ரீகணேஷ்.

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே கதைகள் படிக்க ரொம்ப பிடிக்கும். எப்படி இந்த ஆர்வம் வந்ததுனு தெரியலை. வீட்டுலயும் யாருக்கும் வாசிப்பு ஆர்வம் கிடையாது. நான் பிறந்தப்பவே கால்ல ஒரு பிரச்னை. அறுவை சிகிச்சை பண்ணிதான் சரி பண்ணினாங்க. அப்போ, மற்ற குழந்தைங்க மாதிரி ஓடியாடி விளையாட முடியாத சூழல். அதனால இயல்பா டிவி பார்க்குறது காமிக்ஸ் படிக்கிறதுனு இருந்தேன். அப்போ, புதுசா புத்தகம் வாங்குறதுக்கூட வசதியில்ல. ஆனா, வீட்டுக்குப் பக்கத்துல காயிலான் கடை ஒண்ணு இருந்துச்சு. அங்கிருந்து எனக்கு பிடிச்ச புத்தகங்களை குறைஞ்ச விலைக்கு வாங்கி படிப்பேன். நிறைய படிக்கிறதை மட்டும் தொழிலா வச்சிருந்தேன். கலைத்துறைதான் நமக்கு கைகூடி வரும் தோணுச்சு. அதனால, பதினொண்ணாம் வகுப்பு படிக்கிறப்பவே சினிமாதான் நமக்கான ஏரியானு முடிவு பண்ணிட்டேன்” என்கிற ஸ்ரீகணேஷ் சினிமா விற்காக நிறைய உழைத்திருக்கிறார்.

“பி.காம் 2010ல் முடிச்சேன். காலேஜ் படிச்சிட்டு இருக்கும் போதே கிரேஸி மோகன் சார்கிட்ட வேலை பார்த்தேன். அவர் ஒருதடவை எங்கப் பகுதியில நாடகம் போட்டார். நாடகம் முடிஞ்சதும் ஒரு ஆர்வத்துல அவர்கிட்ட போய் உங்க ட்ரூப்ல  சேர்த்துகிறீங்களா?னு கேட்டேன். எனக்கு எதுவுமே தெரியாது. ஆனாலும் அவர் சேர்த்துகிட்டார். அங்கதான் முதன்முதலாக ஒரு ஸ்கிரிப்ட் எப்படி எழுதணும், எப்படி நடிக்க வைக்கணும்னு நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். இன்னைக்கு வரை அது எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு.

அப்புறம், சினிமாவைத் தேடிப் போனேன். நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. இதுக்கிடையில நாளைய இயக்குநர் குறும்பட போட்டியில கலந்துகிட்டேன். ‘சீசன் 3’ ஃபைனல்ல ஒரு ஆளா வந்தேன்” என்கிறவர் தன் குருநாதர் மிஷ்கினை போற்றுகிறார்.

“இந்தத் தலைமுறையில மிஷ்கினையும், வெற்றிமாறனையும்தான் நான் முக்கிய இயக்குரா நினைக்கிறேன். காரணம், இவங்க படங்கள் எதார்த்தமாகவும் வணிகரீதியாகவும் இருக்குறதுதான். இன்னும் சொல்லணும்ன்னா, மெயின் ஸ்ட்ரீம் ஆடியன்ஸசும் ரசிப்பாங்க. அதேசமயம் லைஃப்புல நடக்குற விஷயமாவும் இருக்கும். தவிர மிஷ்கின் சார் வாசிப்பை ஊக்குவிக்கிறவர். திரைக்கதை பத்தின புரிதல் இருக்கிற மனிதர். அதனால அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். 2012ல் அவர்கிட்ட சேர்ந்தேன். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். இன்னும் நிறைய அவர்கிட்ட வொர்க் பண்ணணும் ஆசை. ஆனா, அவர் ஒரு படம் முடிச்சதும் ‘உன்னுடைய படத்துக்கு ஸ்கிரிப்ட் பண்ணுடா’னு வாழ்த்தி அனுப்பிச்சார்” என நெகிழ்கிறார்.

“நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஆளு. நம்பிக்கையும் பெரிசா வைக்கலை. ரெண்டு கதைகள் ரெடி பண்ணி மறுபடியும் ரெண்டு வருஷம் அலைஞ்சேன். உதவி இயக்குநரா இருக்கும் போதே மெட்ராஸ் கலையரசன் பழக்கம். அவர், எனக்காக நிறைய பேசினார். அப்புறம், கயல் சந்திரனை வச்சு ஒரு படம் ஷூட்டிங் வரை போச்சு. ஆனா, சில பிரச்னைகளால அந்தப் படம் டிராப் ஆகிடுச்சு. ஓநாயும் ஆட்டிக்குட்டியும்ல நடிச்ச ஸ்ரீக்கு ஒரு கதை சொல்லி அவரும் நிறைய தயாரிப்பாளர்கள்கிட்ட பேசிப் பார்த்தார். எதுவும் நடக்கலை. கடைசியில இந்தக் கதைதான் கை கொடுத்தது” என்கிறவர், உற்சாகமாக தொடர்ந்தார்.

“இந்தக் கதையை ஒரு நண்பர்ட்ட ஒன் லைனா மட்டும் சொன்னேன். ஒரு போலீஸ் அதிகாரியோட துப்பாக்கி காணாமல் போன என்ன நடக்கும்? அதான் கதைன்னேன். அவர், அகிரா குரொசொவா எடுத்த ஸ்ட்ரே டாக்  படத்தைப் பாருங்க.

நீங்க சொல்ற கதையும், அதுவும் ஒண்ணா இருக்குனு சொன்னார். படம் பார்த்ததும் ஒரு விஷயம்தான் தோணுச்சு. எப்படி இந்தப் படத்தை எடுத்தாலும் அகிரா குரோசாவா படத்தோட தழுவல்தான் சொல்வாங்க. அதனால நாமே கிரெடிட் கொடுக்குறது நல்லதுனு நினைச்சு அப்படியே செஞ்சேன்.

அடுத்து, இந்த ஸ்கிரிப்டை எடுத்திட்டு கார்த்திகேயன் சாரை சந்திச்சேன். கார்த்திக் சார் கயல் சந்திரனை வச்சு படம் எடுத்தப்போ பழக்கம். அவர், வெள்ளப்பாண்டியன் சார்கிட்ட அழைச்சிட்டு போனார். வெள்ளப்பாண்டியன் சார் அவர் பையனை வச்சி தயாரிக்க காத்திட்டு இருந்தார். அவரோட பையன்தான் படத்தின் ஹீரோ வெற்றி. எனக்கும் படத்துக்கு புது இளைஞன் தேவைப்பட்டதால வெற்றி ரொம்ப பொருந்திப் போனார். அமைதியா படத்துல வந்திருப்பார். அந்தக் கேரக்டர் அப்படிதான் இருக்கணும் செதுக்கியிருந்தேன். ஆனா, உண்மையில வெற்றி ஜாலியான பையன். செமயா நடிக்க கூடியவர். சீக்கிரமே பெரிய நடிகரா வருவார். இந்தப் படத்துல நாசர் சாரும், எம்.எஸ்.பாஸ்கர் சாரும்தான் சீனியர்ஸ். அவங்க ரெண்டு பேரும் பின்னி எடுத்தாங்க. அடுத்து, கேமராமேன் தினேஷ் கே பாபு அதிகமா மெனக்கெட்டார். அவரால இந்தப் படத்துக்கு ஒரு கலர் கிடைச்சது. இதுல உழைச்ச அத்தனை பேரும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன். சந்தோஷமா இருக்கு” என்றவரிடம், வீட்டுல என்ன சொன்னாங்க? எனக் கேட்டோம்.

“என் குடும்பத்துல யாரும் சினிமாவுல கிடையாது. தியேட்டருக்குப் போனதும் இல்ல. அதனால, ரிலீஸ் ஆன அன்னக்கி குடும்பத்தை கூட்டிட்டு ஒரு மாஸ் தியேட்டருக்குப் போனேன். எல்லாரும் கைதட்டுறதைப் பார்த்து கண்கலங்கி நின்னுட்டாங்க அம்மா. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது,”  என்கிறார் ஸ்ரீகணேஷ்.

ஜூன், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com