நிறைமாத கர்ப்பிணி போல பரிதாபமாக நிற்கிறது நடிகர் சங்க கட்டடம்!

நிறைமாத கர்ப்பிணி போல பரிதாபமாக நிற்கிறது நடிகர் சங்க கட்டடம்!
Published on

‘அறிவாலயத்திற்கு நானும், நம்முடைய பொதுச் செயலாளர், பொருளாளர், நம்முடைய கழக முன்னோடிகள் எல்லாம் வருகிற நேரத்தில், தவறாமல் எங்களை வரவேற்கும் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது பூச்சிமுருகன் தான். நம்முடைய முருகன் அவர்கள் பெயருக்கு முன்னால் 'பூச்சி' என்ற ஒரு அடைமொழி ஒட்டிக்கொண்டிருக்கிறது. 'பூச்சி' என்றால் பூச்சி மாதிரி இருப்பார் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் விஷப் பூச்சிகளை, கொடுமையான பூச்சிகளை, அக்கிரமமான பூச்சிகளை ஒழிக்கிற அந்த நிலையிலிருந்து நம்முடைய பூச்சி முருகன் அவர்கள் தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்,'

இது கடந்த ஜனவரி 23 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பூச்சி முருகனின் மகள் திருமணத்தில் தமிழக முதல் அமைச்சர் பேசிய வரிகள்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை நிலைய செயலாளர், வீட்டு வசதி வாரியத்தின் தலைவர், இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் என மூன்று பொறுப்புகள் கொண்டிருப்பவரிடம் சற்று நேரம் பேசியதிலிருந்து..

‘‘என் தந்தை கலைமாமணி சிவசூரியன் ஒரு புகழ்பெற்ற திரைப்பட, நாடக நடிகர். கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர். அவர்களின் பேரன்புக்கு பாத்திரமானவர். திராவிட இயக்கத்தின் மீது பெரும்பற்று கொண்டவர். தமிழ்நாடு முழுக்க பல்வேறு நாடகங்கள் நடத்தி கழகக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அவரது திருமணம் 1950இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் கலைஞர், கே.ஆர்.ராமசாமி, கா.மு.ஷெரிப், கவிஞர் கண்ணதாசன் முன்னிலையில் நடைபெற்றதே அதற்கு சான்று. நூற்றுக்கு மேற்பட்ட படங்கள்(அவற்றில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் தான்... கலைஞர் கதை, வசனத்தில் மந்திரி குமாரி படத்தில் மன்னனாக அவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது), ஆயிரக்கணக்கில் நாடகங்கள் என்று தனது இறுதி மூச்சு வரை நடிப்புக்காகவே திராவிட நடிகராகவே அர்ப்பணித்தவர். அவரது வழியில் என் ரத்தத்திலேயே ஊறியது கலைத்துறை. குறிப்பாக நடிப்பின் மீதான ஆர்வம். பதின்ம வயதுகளில் தந்தையுடன் நாடகங்களுக்கு சென்றவனுக்கு எதிர்பாராத விதமாக அமைந்த ஒரு பெண் வேடம் நடிப்பு பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. பின்பு வீட்டுவசதி வாரியத்தில் அரசு ஊழியராக சேர்ந்து சுமார் 25 ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

என் தந்தை சிவசூரியன் எம்ஜிஆரிடம் நெருக்கமாக இருந்தாலும் முத்தமிழ் அறிஞர் கலைஞரிடமும் அளவில்லா பற்று கொண்டிருந்தார். அதேபோல் கலைஞரும் அவர் மீது தனி பாசம் கொண்டிருந்தவர் சமீபத்தில் நமது மாண்புமிகு முதல்வர் தன்னுடைய தன் வரலாற்று நூலாக வெளியிட்ட உங்களில் ஒருவன் புத்தகத்தில் என் தந்தையைப் பற்றி குறிப்பிட்டிருப்பது எங்கள் குடும்பத்திற்கு பெருமையான ஒரு விஷயம்.

கலைஞர் அறிமுகம் எப்படிக் கிடைத்தது?

சிறு வயது முதலே திராவிடக் கொள்கைகள் மீது பிடிப்பு இருந்தது. அப்பா எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்தாலும் நான் தி.மு.க.வில் பயணிக்க தொடங்கினேன். கழக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆயிரம் விளக்கு உசேன் அவர்களுடன் சென்றபோது கலைஞர் காட்டிய பாசம் என்னை அவருடனேயே பயணிக்க வைத்தது. 1986 ஆம் ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் தளபதி இருவருக்கும் நெருக்கமானேன். கலைஞரது இறுதி மூச்சுவரை உறுதுணையாக இருந்தேன். அது இந்தப் பிறவி பெற்ற பெரும்பேறு.(கண் கலங்குகிறார்)

அரசுப்பணியில் இருந்தபோது கழகத்துக்காக சந்தித்த இன்னல்கள் ஏராளம். அப்போது ஆட்சி பீடத்தில் இருந்த ஜெயலலிதாவால் பல்வேறு சோதனைகளுக்கு ஆளானேன். சஸ்பெண்டு, சம்பள குறைப்பு என எனக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காகவும் தான் இருந்து வந்த வீட்டுவசதி வாரியத்தின்

வளர்ச்சிக்காகவும் தொழிலாளர் நலனுக்காகவும் சட்ட போராட்டங்கள் நடத்த தொடங்கினேன். அதுதான் இன்று வரை நீடிக்கிறது.

குடும்பம் பற்றி?

என் துணைவியார் மீனாட்சி. எங்களுடையது காதல் திருமணம்.மீனாட்சி முருகன் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். என் சட்ட போராட்டங்களுக்கு உறுதுணையாக விளங்குகிறார். தந்தை நினைவுநாளில் பிறந்ததால் மகனுக்கு சிவசூரியன் என தந்தையின் பெயரை சூட்டியுள்ளேன். அவர் வழக்கறிஞர் படிப்பை முடிக்க இருக்கிறார். மகள் அருணா பொறியியல் படித்துவிட்டு குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

நடிகர் சங்கத்தில் அடுத்த கட்ட திட்டம் என்ன?

நடிகர் சங்கத்தை பொருத்த வரை கட்டடம் கட்டுவதற்கு தனியாரிடம் ஒப்பந்தம் செய்ததில் இருந்தே எதிர்த்து வந்தேன். அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் இருந்தன. நடிகர்கள் நினைத்தால் நாமே நிதி திரட்டி கட்டடத்தை கட்ட, ஏன் தனியாரிடம் ஒப்பந்தம் போட்டு இத்தனை ஆண்டுகளுக்கு அவர்களிடம் தாரை வார்க்க வேண்டும் என்றுதான் எதிர்ப்பு தெரிவித்தேன். அத்துடன் அந்த ஒப்பந்தத்தில் இருந்த முறைகேடுகளை சட்டப் போராட்டம் மூலம் வெளியில் கொண்டு வந்தேன். பின்னர்தான் விஷால் கார்த்தி நாசர் உள்ளிட்ட நடிகர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து தேர்தலில் வெற்றி பெற்று கட்டடப் பணிகளைத் தொடங்கினோம். அந்தக் கட்டடம் இன்று நிறைமாத கர்ப்பிணி போல் பரிதாபமாக முக்கால்வாசி வேலை முடிந்த நிலையில் நிற்கிறது. இந்தத் தேர்தல் வழக்கில் சுமார் மூன்று ஆண்டுகள் அந்த பணிகள் பாதிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல நடிகர் சங்கம் என்பது முன்னணி நடிகர்கள் மட்டுமே அல்ல, வாழ்வாதாரத்திற்காக போராடும் நாடக நடிகர்களும் துணை நடிகர்களும் தான் எண்பது சதவீதம் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு சங்கம் சார்பில் வழங்கிவந்த மருத்துவ உதவி, கல்வி உதவி, ஈமச்சடங்கு உதவி முதலியவை இந்த மூன்று ஆண்டுகளாக தடைப்பட்டன. அவற்றை மீண்டும் தொடரவும் சங்க கட்டடத்தை கட்டி முடித்து முதல்வர் தலைமையில் திறப்பதும் தான் எங்களது முதல் நோக்கம். அதற்காக நிதி திரட்டுவதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளோம். விரைவில் கட்டடப் பணிகள் மீண்டும் தொடங்கும்.

ஏப்ரல், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com