இசையமைப்பாளர் கங்கை அமரனை சன் தொலைக்காட்சியின் படப்பிடிப்புத் தளமொன்றில் சந்தித்தோம். ஜூனியர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அது. சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் கிடைத்த இடைவேளையில் அந்திமழையிடம் பேசினார். பண்ணைபுரத்தில் பாவலர் வரதராஜனின் இளைய சகோதரராகத் தொடங்கி இன்று வெங்கட்பிரபு, பிரேம்ஜியின் தந்தையாக தான் திரும்பிவந்த பாதையை சீன் பை சீனாகச் சொல்லத் தொடங்குகிறார்:
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் பண்ணைபுரம்தான் எங்கள் ஊர். கொஞ்சம் வறண்ட பூமிதான். எங்கள் மலையிலிருந்து ஒற்றையடிப்பாதையில் கொஞ்சம் நடந்துபோனால் கேரளாவுக்குப் போய்விடலாம். எங்கள் பகுதிகளில் உள்ள ஏழைத்தொழிலாளர்கள் அங்குள்ள ஏலக்காய் தோட்டங்களில் வேலைசெய்வார்கள். எங்கள் அப்பா தெய்வ அருள்வாக்கு நிறைந்தவர். இன்று இளையராஜாவுக்கு என்ன நடக்கிறது என்பதை அன்றே அவர் அருள்வாக்கு கூறிவிட்டார். எனக்கு சின்னவயதாக இருந்தபோதே அப்பா தவறிவிட்டார். எங்க தாத்தாவும் பல நாடகக் கதைகளை சொல்பவராக இருந்திருக்கிறார். அப்பா ஒரு வெள்ளைக்காரத் துரை ஒருவரின் தோட்டத்தில் பணிபுரிந்தவர். என் அம்மாவும் அந்த தோட்டத்தில் பணிபுரிந்தவர். அப்போது அன்பால் ஈர்க்கப்பட்டு இருவரும் மணம் புரிந்துகொண்டவர். தனிப்பட்ட முறையில் கம்யூனிஸ்ட் கட்சிக்காகப் பிரச்சாரப்பாடல்களைப் பாடியவர் எங்கள் அண்ணன் பாவலர் வரதராஜன். நான் சொல்வது 60க்கு முன்பு. அவர் மிகவும் வீரியமான ஆள். அவருடன் நாங்கள் மேடை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோம். அவர் கைத் தட்டல் வாங்குவதைப் பார்த்து எங்களுக்கும் ஆசை. எங்களுக்கும் படிக்கறதுக்குப் புடிக்கல. உயர்நிலைப் பள்ளிக்கு போகவில்லை. சங்கீத ஞானத்தைப் படித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தோம்.
நான் என்னுடைய சின்ன வயதிலேயே பாடல்கள் எழுத முற்பட்டேன். வைகறையில் வைகைக் கறையில், அந்தப்புரத்தில் ஒரு மகாராணி போன்ற பல பாடல்கள் உருவாக அந்தகாலத்தில் எழுதியதுதான் அடித்தளமாக இருந்தது. எங்க அம்மா எங்கள் பாடல்களை ரசிப்பார். நல்லா பாடறீங்க என்று ஊக்குவிப்பார். அவர் மட்டும் இசையில் ஊக்குவிக்காமல் ஏதாவது ஒரு வேலைக்குப் போங்க என்று சொல்லியிருந்தால் நாங்கள் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். எங்கள் வாழ்க்கையை மாற்றியதே எங்க அம்மாதான்.
பாரதிராஜா எங்க ஊருக்கு மலேரியா ஆய்வாளராக இருந்தவர். அவர் நாடகம் போடுவார். எங்க ஊர் திருவிழாவில் அவர் நாடகம் போடுகையில் அந்த நாடகத்துக்காகவே நான் பாட்டு எழுதி, எங்க அண்ணன் இசை அமைத்தார். முதல்முதலாக அந்த நாடகத்தில் இசை ராசையா, பாடல்கள் அமர் என்று ஸ்லைடு போட்டார்கள்.
இதன் பின்னர்தான் எங்கள் சினிமா ஆசை வளர ஆரம்பித்தது. பாரதிராஜாவுக்கு நடிப்பதில் ரொம்ப ஆசை. அவர்தான் முதலில் சென்னைக்கு வந்தவர். அவர் சென்னைக்கு வந்து ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து சில நண்பர்களுடன் ஓர் அறையில் தங்கியிருந்தார். எங்களுக்கும் ஊரில் இருப்பதைவிட சென்னைக்கு வந்து வாய்ப்புதேட வேண்டும் என்று ஆசை. எங்கள் வீட்டில் இருந்த ணீதூஞு ரேடியோவை கூடலூரில் கொண்டுபோய் விற்றுவிட்டு கிடைத்த 300 ரூபாயுடன் நன்றாக கோழி அடித்து குழம்பு வைத்து எங்க அம்மா முதலில் அண்ணன் பாஸ்கரையும் இளையராஜாவையும் சென்னைக்கு அனுப்பி வெச்சாங்க.
அவங்க போய் பாரதிராஜாவின் அறையில் நான்கு பேருடன் ஆறு பேராக சேர்ந்தார்கள். அங்கிருந்து பல நாடகங்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள். இந்த வாய்ப்புகளுக்குப் பின்னால்தான் எனக்கு அழைப்புவந்தது. நான் உண்மையில் வந்தது அவர்களின் வீட்டைக் கூட்டவும், துணிகளைத் துவைக்கவும்தான். அதற்குத்தான் என்று சொல்லாமல் கூப்பிட்டார்கள். நானும் வந்ததும் அந்த வேலையை எடுத்துக்கொண்டேன். இது நடந்தது 67-ல். நான் வந்தது ரவீந்திரன் என்ற பெயருள்ள லாரியில் ஏறிதான்.
சென்னைக்கு காய்கறி ஏற்றி வந்த லாரியில் இரவில் மேலே ஏறி நட்சத்திரங்களைப் பார்த்துகொண்டே சென்னைக்கு வந்தேன்.
அப்போ வாரத்துக்கு இரண்டு இட்லி சாம்பார் சாப்பிடுவதே சிரமாகவும் இருக்கும். கஷ்டப்பட்டு வாய்ப்புகளைப் பிடித்தார்கள். தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா கற்றுக்கொண்டார். நானும் முறைப்படி கிடார் வாசிக்க சென்னை வந்துதான் கற்றுக்கொண்டேன். எனக்கு ரிதம் கிடார் வாசிக்க மிகவும் பிடிக்கும். பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இசைக்குழுவாக இயங்க ஆரம்பித்தோம். எஸ்.பி.பி அறிமுகம் ஆனார். தன்ராஜ் மாஸ்டர் மூலமாக ஜி.கே.வெங்கடேஷ் அறிமுகம் கிடைத்தது. இசைக்கலைஞர்களாக எங்கள் வாழ்க்கை பிரவாகமெடுத்தது. மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி இசையமைப்பாளர்களிடம் இசைக் கலைஞர்களாக பணிபுரிந்துள்ளோம்.
மைலாப்பூரில் கச்சேரி சந்தில் எண் ஏழு இலக்கம் கொண்ட வீட்டில் குடியிருந்தோம். நான் வீட்டில் சமையல் செய்வேன். என்னுடைய சமையலை சாப்பிடாவிட்டால் இவர்கள் யாரும் பாரதிராஜா, இளையராஜாவாக உருவாகியிருக்கமாட்டார்கள். ஞானப்பழத்தைப் பிழிந்து ரசம் வைத்து இவர்களை உருவாக்கினேன் என்றுவேண்டுமானால் சொல்லலாம்!(சிரிக்கிறார்)
ஏ.எம்.ராஜா, டி.எம்.எஸ், வி.குமார் இவங்க அனைவரின் குழுவிலும் போய் கிடார் வாசிப்பேன். என்னுடைய வாசிப்பு டி.எம்.எஸ்ஸுக்கு ரொம்ப பிடிக்கும். ஏ.எம்.ராஜா- ஜிக்கி குழுவில் பலபயணங்கள் மறக்கமுடியாதவை. இது நல்ல பயிற்சிக்களமாக இருந்தது.
அதன் பின்னர்தான் சினிமாவுக்கு இசை அமைக்க முயற்சி செய்தோம். ஆர்.செல்வராஜ் மூலமாக பஞ்சுஅருணாசலம் சாரைப் பார்த்து அண்ணன் இளையராஜா பாடிக்காட்டினார். அன்னக்கிளி படம் அப்படித்தான் உருவானது. அது வெற்றித்திலகமாக எங்களுக்கு அமைந்தது.
காலையில் கருமாரி அம்மன் கோயிலில் பூஜை பண்ணிட்டு ஸ்டூடியோவுக்கு வந்தோம். பஞ்சு அருணாசலம் பெரிய விஐபி வசனகர்த்தா. நல்ல கூட்டம். ஏவிஎம் ஆர்.ஆர். ஸ்டூயோவில் ரிக்கார்டிங். இளையராஜா சேர்ல உட்கார்ந்தார். கோவர்த்தன் கண்டக்ட் பண்றாரு.. ஒன், டூ, த்ரீ, ஃபோர்னு சொன்னதும் லைட் ஆஃப் ஆயிடுச்சி. உருப்டாப்லதான், நல்ல சகுனம்னு கமெண்ட் அடிச்சாங்க. நாங்க எல்லாரும் பயந்துட்டோம். அண்ணனும் ஆடிப்போயிட்டார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் கொஞ்சநாள் மத்த இசையமைப்பாளர்களுக்கும் வாசித்துக்கொண்டுதான் இருந்தோம். மெதுவா படங்கள் வர ஆரம்பித்து இசை வெற்றி பெற ஆரம்பித்தபின்னால் நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
நான் பாடலாசிரியராக வந்ததே ஒரு திருப்புமுனை. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் கோலோச்சிய காலத்தில் பாரதிராஜாதான் என்னை 16 வயதினிலே படத்தில் சோளம் விதைக்கையிலே, செந்தூரப்பூவே இரண்டும் எழுத வெச்சாரு.. அப்புறம் அண்ணன் நிறைய ஜாலியான பாட்டெல்லாம் எழுத வாய்ப்புதருவார். முழுப்படத்துக்கும் பாட்டெழுதும் வாய்ப்பும் சிலசமயம் கிடைச்சுது.
கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. பாடல் பதிவின்போது உச்சரிப்பு சரியாக இருக்கிறதா என்று பார்க்க உதவியாளர்கள் செல்வார்கள். நானும் செல்வேன். பாடல்பதிவின்போது ஏதும் மாறுதல் தேவைப்பட்டால் அமரை வைத்து செய்துகொள் என்று கண்ணதாசனே சொல்லும் நிலை வந்தது. இது மகா பெரும் மகிழ்ச்சியான சம்பவம். நான் பாடல்கள் எழுதும் நிலை வந்தபோது அவர் சில பாடல்களை எழுத நானும் சில பாடல்களை ஒரே படத்தில் எழுதி எங்கள் இருவர் பேரும் வெளிவரும். சில படங்களில் அவரைவிட நான் அதிகமாக பாடல்களை எழுதினேன். இதை என்னவென்று சொல்வதென எனக்கே தெரியவில்லை.
அப்பா வெச்சபேர் அமர்சிங். பாட்டெழுத ஆரம்பித்தபோது கங்கை அமரன் என்று வைத்துக்கொண்டேன். அமரிலிருந்து அமரன். கங்கை என்ற சொல் எனக்கு மிகப்பிடிக்கும். அதனால் கங்கை அமரன்.
ரஜினி வந்தபோது ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை.. என்ற பாட்டை எழுதினேன். நாந்தாண்டா என் மனசுக்கு ராஜான்னு அந்த பாட்டு போகும். பொன்னா பூப்பூத்து வைரம் காய்காய்க்கும்னு எழுதினேன். அவரிடம் பின்னாடி ஒருமுறை பேசும்போது நான் சொன்னமாதிரி நடக்குதான்னு கேட்டேன். ஆமா.. என்றார் சந்தோஷமாக. மனசார நாம் வாழ்த்தும்போது அதெல்லாம் நடக்கும். இன்னிக்கு வரைக்கு ரஜினி நல்ல தொடர்பில இருக்காரு.
இதற்குப் பின் நான் எடுத்த அவதாரம் இசை அமைப்பாளர். மலேசியா வாசுதேவன் கதை வசனம். மலர்களிலே அவள் மல்லிகைன்னு படம். எனக்கு இசை அமைக்கத் தெரியுமான்னு எனக்கே தெரியாது. எங்க அண்ணன்கூட இருந்து பாத்திருப்பதால் ஒரு நம்பிக்கையில் ஒப்புகிட்டேன். பாடல்கள் நல்லா வந்துச்சு. ஆனா அந்த படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி என் இசையில் விடுகதை ஒரு தொடர்கதை ரிலீஸ் ஆச்சு. அப்ப பட்ஜெட் படங்கள் நிறைய வரும். இளையராஜாவுக்கு இளமை ஊஞ்சலாடுகிறது
படத்துக்கு 7000 சம்பளம் கிடைச்சது. எனக்கு 3000, 4000 கிடைச்சிருக்கும். ஏறக்குறைய 200 படங்கள் வரை நான் இசை அமைத்தேன். சுவரில்லாத சித்திரங்கள், மௌனகீதங்கள், நீதிபதி, பௌர்ணமி நிலவில் என்று ஏகப்பட்ட படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். வாழ்வே மாயம் படத்துக்கு இசை அமைத்தது எனக்கு மிகப்பெரிய உச்சம் என்று சொல்லலாம்.
அப்போ பஞ்சு அருணாசலமும் இளையராஜாவும் என்னிடம் ’கோழிகூவுது’ன்னு ஒரு படத்தை இயக்கச்சொன்னாங்க. நானும் தயங்காம ஒத்துகிட்டேன். நான் எப்பவும் அப்படித்தான். எதையும் செய்ய யோசிக்க மாட்டேன். இன்னிக்கு வரைக்கும் அப்படித்தான். எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன்.
பொதுவா ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்குப் போறவங்க பழசுக்கு திரும்ப வரமாட்டாங்க. ஆனால் நான் படம் இயக்க ஆரம்பிக்கற வரைக்கும் எல்லோருக்கும் பாட்டு எழுதிகிட்டிருந்தேன். இசை அமைத்துக் கொடுத்தேன். வெளிநாடுகளுக்குப் போய் இசை நிகழ்ச்சிகள் செய்துகொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சிகளின் இடையில் பேசியதுதான் இன்று தொகுப்பாளராக ஆகக் காரணம்.
எங்களுக்கு அடுத்த தலைமுறைகள் இப்போ வந்திட்டாங்க. என் பையன் வெங்கட்பிரபுவை வெளிநாடு அனுப்பி பிஸினெஸ் மேனேஜ்மெண்ட் படிக்கவெச்சேன். பிரேம் வெளிநாட்டில் இசை படிச்சாரு. அப்புறம் ஒரு சொந்தப்படம் எடுக்க ஆசை வந்தது. எதுக்கு வேற ஆளைப் போடணும்னு வெங்கட்பிரபுவை நடிக்கவெச்சு பூஞ்சோலை என்றொரு படம் எடுத்தேன். அதற்காக வீட்டை அடமானம் வெச்சேன். அந்த படத்தை விற்க முடியலை. கடனுக்கு வீட்டை விற்க வேண்டியதாச்சு. இது என்னுடைய சோதனைக் காலம். ஆனால் அந்த படம் வெளிவரலைன்னாலும் பின்னாடி சென்னை 28 படத்துக்கு கதை சொன்னான். அந்தபடம் நல்லாபோச்சு. அப்படத்துக்கு மேலே ஏறி வாறோம்; நீ ஒதுங்கி நில்லுனு பாட்டு எழுதினேன். அது இன்னிக்கு பலிச்சுடுச்சு. என் வாக்கு பலிக்கும்னு எனக்கு நம்பிக்கை உண்டு.
ஜனவரி, 2015.