"எல்லோரும் வியந்து பார்க்கக்கூடிய, ஒரு பிரமிப்பான ஊடகம் என்றால் அது சினிமா தான்... சினிமாவின் மீது அத்தகைய ஈர்ப்பு என்பது எனது தந்தையால் என்னையறியாமலேயே என்னிடம் வந்து சேர்ந்தது,'' என்கிறார் விருமாண்டி. க/பெ.ரணசிங்கம் படத்தின் இயக்குநர். குணச்சித்திர நடிகர் பெரியகருப்புத் தேவர் இவரது தந்தை.
‘‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள கருமாத்தூர் எனும் ஊரில் தான். அங்கு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டேன். எனது அப்பா சினிமாவுக்கு முன்னரே நாடக கலைஞராக இருந்தவர். கட்டபொம்மன் உட்பட ஏறக்குறைய 50 நாடகங்களில் செந்தமிழ் வசனம் பேசி நடித்திருக்கிறார். நடிகர் வாகை சந்திரசேகர் என் அப்பாவின் வளர்ப்புதான். சினிமாவில் பாடகராக வர வேண்டுமென இறுதிவரை முயற்சித்தார். அது முழுமையாக நிறைவேறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ‘பூ' படத்தில் வரும் ‘‘சிவகாசி ரதியே'' பாடலை மட்டும் பாடி, அவரே அதில் நடித்திருப்பார். வீட்டில் எப்போதும் நாடகம், சினிமா, பாடல் இவை குறித்த உரையாடல்கள் மட்டுமே அதிகமாக இருக்கும். இதனால் சிறுவயது முதலே எனக்கும் சினிமா மீதான ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அதில் எந்த துறையில் இயங்கப்போகிறோம் என முடிவெடுக்காமல் இருந்தேன். அந்த சூழலில் அப்பா தான், ‘‘நடிகனாக இருந்து நான் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன், நீ இயக்குநராக வர வேண்டுமென'' வழிநடத்தினார். அவரே அழைத்து சென்று இயக்குநர் செல்வா சாரிடம் என்னை சேர்த்துவிட்டார். ஆனால் நான் இயக்குநரானபோது அதை பார்க்க அப்பா இல்லை,'' என்றவரிடம் க/பெ.ரணசிங்கம் படம் பற்றிக் கேட்டோம்.
‘‘அரியநாச்சி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷை முடிவு செய்து அவரிடம் கதை சொன்னபோதுதான், அவர் ரணசிங்கம் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியிடம் பேசலாம் என்றார். எனக்கு அது தயக்கமாகதான் இருந்தது. அவர் இருக்கும் பிஸியான சூழலில் இதற்கு எப்படி ஒப்புக்கொள்வார் என நினைத்தேன். எனினும் ரணசிங்கம் பாத்திரத்தில் என் மனதில் நான் விஜய் சேதுபதியை வைத்து பார்க்க தொடங்கிவிட்டேன். பின்னர் முயற்சி செய்து அவரிடம் கதை சொல்லி முடித்தபோது என்னை கட்டிப்பிடித்து ‘‘ரொம்ப நல்லா இருக்கு விருமாண்டி, ஆனா நான் இப்போ பண்ணமுடியாது டேட் இல்ல'' என்று கூறிவிட்டார். ஆனால் அவரே மறுநாள் அழைத்து, ரணசிங்கம் பாத்திரத்தில் நான் தான் நடிப்பேன் என கூறினார். அந்த தருணத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர்ந்தேன்.
மண்ணின் வாசம் மாறாமல் ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது என் அப்பாவின் தீரா கனவு. அதனால் எனது படைப்பும் மண்ணை சார்ந்ததாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
சிறந்த கதையை தொடும்பொழுது சிறந்த வசனம் என்பது கண்டிப்பாக தேவைப்படுகின்றது. அது தேவைக்கேற்றதாய் இல்லாமல் உண்மையை ஆணித்தனமாக அறைய வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதன் விளைவாகவே எனது நண்பன் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சண்முகம் முத்துசாமியை இக்கதைக்குள் இழுத்துவந்தேன். அதுவே வசனம் வலிமையானதாக மாறியதற்கு காரணமாக அமைந்தது.
இந்தப் படத்தில் சொன்னமாதிரி ஒருவர் வெளிநாட்டில் இறந்துவிட்டால், இறந்தவரின் உடலை கொண்டுவர அடிப்படை தடையாக இருப்பது அரசாங்கத்தின் நெருங்கமுடியாத வழிமுறைகள் தான். புகழ்வாய்ந்த மக்களுக்கு ஓர் அணுகுமுறை, சாமானிய மக்களுக்கு ஓர் அணுகுமுறை என்று வேறுபட்டு செயல்படும் முறைகள் இருக்கின்றன. நம் மக்களின் நலன் சார்ந்து இயங்கக்கூடிய திடகாத்திரமான அமைப்பாக அரசு சார் நிறுவனங்கள் செயல்படாததே சிக்கலென உணர்கின்றேன்,'' என்கிறார் விருமாண்டி.
நவம்பர், 2020.