என் வாழ்க்கையின் ஒரே மெசேஜ் ‘போராடினால் உண்டு பொற்காலம்' என்பதுதான். 2011இல் ‘நுவ்விலா'வில் ஆறு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி ஓரளவு பெயர் பெற்றிருந்தாலும், ‘பெல்லி சூப்புலு', ‘அர்ஜுன் ரெட்டி' படங்கள் வெளியான அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை நான் அடைந்த அவமானங்களுக்கு அளவே இல்லை'
தனது அடுத்த தமிழ், தெலுங்கு ரிலீஸான ‘குஷி' பட புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவை ‘அந்திமழை'க்காக சந்தித்து உரையாடினோம்.
குடும்பத்திற்கு அரை டஜன் ஹீரோக்கள் என்று வாரிசுகளின் ஆதிக்கம் உச்சக்கட்டமாக தலைவிரித்து ஆடும் ஆந்திர சினிமாவில் எவ்வித பின்னணியுமின்றி ஒரு சிறிய கிராமத்திலிருந்து நடிப்புத்துறைக்கு வந்து, இன்று பான் இந்தியா நட்சத் திரமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா.
‘அப்பா தொலைக்காட்சிகளில் தொடர் இயக்க முயன்று படு தோல்வி அடைந்தவர். அதனாலேயே எனக்கு கல்லூரி படிக்கும்போது சினிமாவில் எதையாவது சாதிக்கவேண்டும் என்கிற வெறி. முதல் பட வாய்ப்பான ‘நுவ்விலா'வில் அறிமுகமானது சுலபமாக நடந்துவிட்டது என்றாலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் பெரும் போராட்டம் நடத்தினேன். ஆறு ஹீரோக்களில் ஒருவனாக அறிமுகமான நான் சில படங்களில், ஓரளவு முக்கியமான பாத்திரம் என்று நம்பி நடிக்கப்போய் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகக்கூட ஆக்கப்பட்டேன்.
உங்களுக்கு டைம் சரியாக இல்லாவிட்டால் வாழ்க்கை உங்களை வச்சு செய்யும் என்பார்களே அது போன்ற காலம் அது. ஒரு இயக்குநர், ‘நீயெல்லாம் ஏண்டா நடிக்க வந்தே. பேசாம துபாய்க்குப் போய் ஒட்டகம் மேய்க்கலாமே?' என்றெல்லாம் பாய்ந்திருக்கிறார். அந்நாட்களில் கையில் இரண்டு வேளை ஒழுங்காய் சாப்பிடக்கூட காசு இருக்காது.
இந்த வறுமைக்கதை தொடர்பாக ‘அர்ஜுன் ரெட்டி' ரிலீஸ் சமயத்தில் நான் போட்டிருந்த ட்விட்டர் பதிவு ஒன்று ட்ரெண்டிங் ஆனது. ‘ எனக்கு 25 வயதாக இருந்தபோது நான் கணக்கு வைத்திருந்த ஆந்திரா பேங்கிலிருந்து உங்க கணக்குல ரூ.500 மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கணக்கை முடக்கப்போகிறோம் என்று செய்தி அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்த என் அப்பா, ‘மகனே 30 வயசுக்குள்ள பணம் சம்பாதிச்சு செட்டில் ஆனாதாண்டா வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் இருக்கு' என்றார். இன்று எனது 30வது வயதில் அதை சாதித்திருப்பதில் மகிழ்ச்சி' இதுதான் அந்தப்பதிவு.'
ப்ளாஷ்பேக்கை முடித்துக்கொண்டு நிகழ்காலத்துக்கு வருகிறார் தேவரகொண்டா.
‘சென்னையில் என்னை சந்தித்த அத்தனை பத்திரிகையாளர்களும் ‘அடுத்த நேரடி தமிழ்ப்படம் எப்போது?' என்பதைத்தான் முதல் கேள்வியாகவே கேட்கிறார்கள். இக்கேள்வியை நீங்கள் என் மீது வைத்திருக்கும் பேரன்பு என்று எடுத்துக்கொள்கிறேன். நான் ஏற்கெனவே தமிழில் செய்த ‘நோட்டா' வெற்றி பெற்றிருந்தால் இப்படி ஒரு கேள்விக்கே இடமிருந்திருக்காது. ஆனால் தோற்கிற இடத்தில்தான் நின்று ஜெயித்துக்காட்ட வேண்டும் என்பார்கள். நான் நடிக்க விரும்பும் ஒரு தமிழ் இயக்குநருடன் அடுத்த படம் நடிக்க பேச்சு வார்த்தை துவங்கியிருக்கிறது. மிக விரைவில் எனது அடுத்த நேரடி தமிழ்ப்பட அறிவிப்பு வெளிவரும்.
‘குஷி' விஜய், ஜோதிகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படம். மறுபடியும் அதே டைட்டில் எதற்கு என்கிறார்கள். எவ்வளவோ மாற்றுத்தலைப்புகள் யோசித்தும் எங்களால் இந்தத் தலைப்பை விட்டு வெளியே வரமுடியவில்லை. படம் பார்க்கும்போது நீங்களும் நிச்சயம் அதை உணர்வீர்கள்.
இந்தப்படம் செய்ததில் எனக்கு மிகப் பெரும் ஆனந்தம் என்பது சமந்தாவுடன் நடித்ததுதான். நான் கல்லூரி படிக்கும்போதே அவரது தீவிர ரசிகன். இயக்குநர் சிவா நிர்வானா ‘குஷி' கதையை சொல்லி முடித்து ஹீரோயினாக சமந்தாவிடம் தான் பேசப்போகிறோம் என்றவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
படத்தில் அவர் கமிட் ஆகி சுமார் 4 மாதங்களுக்குப் பிறகுதான் அவருக்கு மயோசிடிஸ் என்னும் தசை அழற்சி நோய் இருப்பதே எங்களுக்குத் தெரிந்தது. அதை நாங்கள் துவக்கத்தில் காய்ச்சல், தலைவலிகள் போல் சாதாரணமாகத்தான் நினைத்துக்கொண்டோம். ஒரு கட்டத்தில் அவர், ஒளி வெள்ளங்களுக்கு மத்தியில் ரண வேதனையில் துடித்ததைப் பார்த்ததும் எங்களுக்கு பகீர் என்று ஆகிவிட்டது.
இயக்குநர் சிவாண்ணா எதையும் போல்டாக ஹேண்டில் செய்யத் தெரியாதவர். நான்தான் சமந்தாவிடம் போய், ‘படப்பிடிப்பை இத்தோட நிறுத்திக்கலாம். நீங்க ட்ரீட்மெண்ட் முடிச்சுட்டு குணமாகி வாங்க. அதுவரை நாங்க காத்திருக்கத்தயார். அந்த ட்ரீட்மெண்ட் முடிய 10 வருஷம் ஆனாலும் குஷி டீம் உங்களுக்காக காத்திருக்கும்'னு சொன்னேன்.
ஆனா இதை சமந்தா ஏத்துக்கலை. என் ஒருத்திக்காக இத்தனை பேரோட உழைப்பு பாதியில நிக்கணுமா? நான் படத்தை முழுசா முடிச்சுக் குடுத்துட்டு, தேவையான அளவுக்கு புரமோஷன் வேலைகளையும் பாத்துட்டு அப்புறமா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன்னு அடம் பிடிச்சு முடிச்சுக்குடுத்தாங்க. இந்த மாதிரி ஒரு அர்ப்பணிப்பை வேற யார்கிட்டயாவது பார்க்க முடியுமான்னு எனக்குத் தெரியலை.
‘குஷி'யில சமந்தாவும் நானும் ஜோடியா நடிக்க ஆரம்பிச்சவுடனே எங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்த்து எவ்வளவோ கிசுகிசுக்கள். அதைப் படிச்சு நாங்க ஜோடியா சிரிச்சோம்கிறதைத் தாண்டி அதுல எந்த உண்மையும் இல்லை. இப்போதைக்கு அவங்களோட சிகிச்சை முடிஞ்சு பூரண குணமாகி மறுபடியும் அவங்க சினிமாவுல கலக்கணும்குறதுதான் என்னோட ஒரே பிரார்த்தனை.
அப்புறம் எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போறீங்கன்னு ஒரு அக்கறையான கேள்வியையும் ரொம்ப அதிகமா எதிர்கொள்றேன். அது என் கையில இல்லை. ஒரு நல்ல மனைவி அமைஞ்சு சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையணும்னு எனக்கும் ஒரு சராசரி மனுசனோட ஆசை இருக்கு. ஆனா அது அமையுறப்போதான் அமையும் காத்திருக்கணும்.
இதே ஆர்வத்தோட என்னோட பெற்றோரும், குக்கிராமத்துல இருந்து யூ.எஸ்.ல இருக்கிற சொந்தக்காரங்களும் கூட கொஞ்ச நாளா என்னை நெருக்க ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கு நான் சொன்ன பதில், ‘எல்லாரும் என்னோட செலவுல தடபுடலா ஒரு கல்யாணச் சாப்பாடு சாப்பிடணும்னு ஆசைப்படுறீங்க. அது உடனே நடக்கணும்னா என்னோட அம்மா, அப்பாவோட அறுபதாம் கல்யாணத்தை நடத்திடவேண்டியதுதான்'னு சொல்லியிருக்கேன்.
இன்னொரு சமாசாரத்தையும் இப்பவே தெளிவுபடுத்திடணும்னு நினைக்கிறேன். ‘அர்ஜுன் ரெட்டி' தொடங்கி, தற்செயலா அமைஞ்ச ஒன்றிரண்டு கேரக்டர்களால எனக்கு ஒரு ஆணாதிக்கவாதி முத்திரை குத்தி வச்சிருக்காங்க. ‘குஷி' ட்ரெயிலர்ல வர்ற ‘பெண்கள் மத்தியில எனக்கு ஒரு கெட்ட பேர் இருக்கு'ங்கிற டயலாக்கும் அந்த சர்ச்சைக்கு தீனி போடுற மாதிரி இருக்கு.
ஆனா நான் பெண்களை எவ்வளவு மதிக்கிறேன்னு என்கூட நெருக்கமா பழகுறவங்களுக்குத்தான் தெரியும். ஒரு பிறவி, ஒரு வாழ்க்கை. அப்படிப் படைக்கப்பட்ட வகையில எல்லாரும் சமம். யாரும் யாரையும் ஆதிக்கம் செய்யிறது படைப்புக்கு எதிரானது.
அவங்கவங்க வாழ்க்கைய அவங்கவங்க விரும்பினபடி முழு சுதந்திரத்தோட வாழணும்னு நினைக்கிறவன் நான்' என்று உறுதிபடச் சொல்லி முடிக்கிறார் விஜய்.