“பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு வீட்டில் சொன்னால், மாடு மேய்க்கப் போகச் சொல்வாங்க. அதுக்கு பயந்தே, பத்தாவது வரை படிச்சிட்டேன். அதற்குப் பிறகு பன்னிரண்டாம் வகுப்பு திண்டிவனம் வால்டர் ஸ்கூல்ல படிச்சேன். இது தான் என்னுடைய பள்ளிப் படிப்பு'' என்று சொல்லும் ராமலிங்கம், கர்ணன் படத்தின் கலை இயக்குநர். மாரி செல்வராஜின் அற்புதமான குறியீடுகளை திரையில் கொண்டுவந்தவர்.
சென்னை கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவரான ராமலிங்கம், அட்டக்கத்தி, கபாலி, காலா, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஆனால் அவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது.
‘‘விழுப்புரம் மாவட்டம் பேராவூர் தான் என்னுடைய சொந்த ஊர். அங்கே தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். ஆறாவதிலிருந்து எட்டாவது வரை பக்கத்துக் கிராமமான நல்லாவூர்லேயும், ஒன்பதாவதிலிருந்து பத்தாவது வரை பொன்னமனூர் என்ற கிராமத்திலேயும் படித்தேன். இரண்டு ஊருக்கும் 7 கிலோ மீட்டர் தூரம். தினமும் பதினான்கு கிலோ மீட்டர் செருப்பு இல்லாமல் வெறுங்காலோடே பள்ளிக் கூடத்துக்கு நடந்து போய் வருவேன்,'' என்று தனது பால்யகால நினைவுகளை அசைபோட்டவர், தொடர்ந்தார்.
''என்னுடைய குடும்பம் அடிப்படையில் விவசாயக் குடும்பம். அப்பா, அம்மா வயலில் உழைக்கிறதைப் பார்த்தாலே பாவமா இருக்கும். அந்த அளவுக்கு வியர்வை சிந்தி கடுமையா உழைப்பாங்க. அப்பா அம்மாவுக்கு முதல்ல தொடர்ந்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால், வைத்தீஸ்வரன் கோவிலில் யானைக் கட்டிப்போட்டு, வேண்டிக்கொண்ட அடுத்த வருஷத்தில் பிறந்தவன் என்பதால், எனக்கு வீரபத்திரன்னு பெயர் வச்சாங்க. பிறகு ராமலிங்கம் என்ற பெயர் தான் நிலைத்துவிட்டது. நான்காவதாக ஒரு தங்கை, ஐந்தாவதாக ஒரு தம்பி.
என்னுடைய அப்பா தங்கவேல், தெருக்கூத்துக் கலைஞர். பகல் நேரத்தில், வயலில் வேலைப் பார்க்கும் என்னுடைய அப்பாவை, இரவு நேரத்தில் வேஷம் கட்டி, பாட்டுப் பாடி, அடவு போடும் நபராகப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும். அவரிடமிருந்துதான் எனக்குக் கலை உணர்வே வர ஆரம்பித்தது. வெளியூரில் நடக்கும் கூத்துக்கெல்லாம் என்னை அழைத்துச் செல்வார். கூத்து பற்றியும் கூத்துக் கலைஞர்கள் குறித்தும் நுணுக்கமான பல்வேறு விஷயங்களைச் சொல்வார். இதனால், சின்ன வயசிலேயே தெருக்கூத்தைப் பற்றிய பல்வேறு விஷயங்கள் அப்படியே மனதில் பதிவாகிப்போனதுபடம் நல்லா வரைவேன் என்பதால், எல்லோரும் பிளஸ்டூவில் என்னை சயின்ஸ் குரூப் சேரச் சொன்னாங்க. ஆனால் நான், காமர்ஸ் குரூப்ல தான் சேர்ந்தேன்.
ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்ததால், பன்னிரண்டாவதை முடிச்சிட்டு கவின் கலைக் கல்லூரியில் சேரலாமென்று இருந்தேன். சரியான நேரத்தில் அப்ளிகேஷன் போடமுடியாமல் போனதால், அந்த வருஷம் சேர முடியவில்லை. ஒரு வருடத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்து, சென்னையில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ. வரலாறு சேர்ந்தேன். மூன்று வருஷம் படித்து முடித்த உடனேயே, மீண்டும் கவின் கலைக் கல்லூரியில் அப்ளிகேஷன் பேட்டு நுழைவுத் தேர்வு எழுதினேன். தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனதால், அந்த வருடமும் கல்லூரியில் சேரமுடியாமல் போனது. மீண்டும் அடுத்த வருஷம் அப்ளிகேஷன் போட்டு, நுழைவுத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றாலும் சீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பத்தாயிரம் ரூபாய் செலவழித்துத் தான் கல்லூரியில் சீட் வாங்கினேன்.
வகுப்பில் மாணவர்கள் எல்லாம் படம் வரைந்து கொண்டிருப்போம், சும்மா ஒரு பையன் எங்களைப் பார்த்துக்கொண்டு போவான். அவனுக்கு முகத்தில் மீசை கூட இருக்காது. ஆனால் பார்க்க ஒரு பக்குவமான பையன் போல் தெரிவான். ஒருநாள் அந்தப் பையனைக் கூப்பிட்டு 'யார் நீ' என்று கேட்டேன். நானும் உங்கள் வகுப்பு தான் என்றான். அந்தப் பையன் வேறு யாரும் அல்ல, இப்போது இயக்குநராக இருக்கிற பா. ரஞ்சித்!. இப்படித் தான் ரஞ்சித் முதன் முதலாக எனக்கு அறிமுகமானான். ஒருநாள் எல்லோரும் அவங்கங்க வரைந்த ஓவியத்தைக் கண்காட்சியாக வைத்தோம். அதில், ரஞ்சித் வைத்திருந்த ஓவியம் பிடித்திருந்ததால், மீண்டும் ரஞ்சித்திடம் பேசினேன். இப்படி தான் எனக்கும் அவனுக்குமான நட்பு வளர ஆரம்பித்தது.
நான் வளர்ந்த சூழல், ஒன்றை எனக்குக் கற்றுக் கொடுத்தது என்றால், அதை மேலும் விசாலமாக்கியது கவின் கலைக்கல்லூரி தான். கலை, மக்களுக்கானது என்பதை உணர்த்திய இடம் அது. என்னுடைய சீனியர்கள் நட்ராஜ், புருசோத்தமன் போன்றவர்களும், பேராசிரியர் சந்துரு போன்றவர்களும் கற்றுக் கொடுத்தவை ஏராளம். குறிப்பாக சேகுவாரா பெரிய புரட்சியாளர் என்பதையும், வகுப்பறை எப்படி இருக்கக் கூடாது என்பதையும் அங்கு தான் அறிந்து கொண்டேன்.
கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது கலை இயக்குநர் ராஜீவனிடம் கலை உதவி இயக்குநராகச் சேர்வதற்கு நண்பர் ஷியாம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை சந்திக்க அழைத்துச் சென்றார். நண்பர் அறிமுகம் செய்து வைத்த போது நல்ல மரியாதை கொடுத்த தாணு சார் 'ரெண்டு நாள் கழிச்சி வந்து என்னைப் பார்' என்றார். அதன் பின்னர் நான் மட்டும் தாணு சாரை சந்திக்கப் போனபோது, ‘யார் யா நீ...? உன்னை யார் வரச்சொன்னது?' என்ற அளவுக்குப் பேசினார். அது பெரிய மன உளைச்சலைத் தந்தது. நடந்த விஷயத்தை நண்பரிடம் சொன்னேன். அவர் மீண்டும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கிட்ட கூட்டிட்டுப் போனார். அவர் தான் ராஜீவனிடம் உதவி கலை இயக்குநராகச் சேர்வதற்கு சிபாரிசு செய்தார். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்து 'மன்மதன்' படத்தில் வேலை பார்த்தேன். படிப்பு, வேலை என மாறிமாறி இருந்ததால், பிறகு அவரிடமிருந்து நின்றுவிட்டேன்.
அப்போதுதான் எனக்குத் தெளிவாகப் புரிந்தது, சினிமாவுக்கு போக வேண்டும் என்று நினைக்கிறவர்கள், சுயமரியாதை இழக்க வேண்டியது இருக்குமென்று. சுயமரியாதை உள்ள ஆளுங்க சினிமாவுல நிச்சயம் இருக்க முடியாது. அப்படி இருக்காங்கன்னா, அவங்களுக்கு ஏற்ற மாதிரியான ஆட்கள் இருக்கவேண்டும். அப்படித் தான் எனக்கு இயக்குநர் ரஞ்சித் அமைந்தார். அவர் இல்லையென்றால் நான் நிச்சயம் கலை இயக்குநராக ஆகியிருக்க முடியாது. நான் தான் அவர், அவர் தான் நான். அதனால் தான் இருவரும் இப்போது வரை சேர்ந்து பயணிக்கிறோம்.
ஒருவழியாகக் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மீண்டும் ராஜீவனிடன் உதவியாளராகச் சேர்ந்த போது, சங்கத்தின் உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிலை வருகிறது. அதற்கு 75 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. என்ன செய்வதென்றே அப்போது தெரியவில்லை. திருமணம் செய்துகொள்ளலாம் என்ற யோசனை தோன்றியது. ஏனென்றால் கல்யாணம் பண்ணிக்கொண்டால் மொய்க் காசு வரும், அதைவைத்து உறுப்பினர் அட்டை வாங்கிவிடலாம் என்று முடிவு செய்தேன்.
பன்னிரண்டாவது படிக்கும் போதே தமிழ்ச்செல்வியைக் காதலிக்கத் தொடங்கினேன். என்னுடைய எல்லாவிதமான முன்னேற்றத்துக்கும் காரணமாக இருந்தவர். சாதாரணப் பெண்களைப் போல் இல்லாமல் என்னை முழு சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தவர். இந்த விஷயத்தை சொல்லி, ஒரு மாதத்துக்குள்ளயே திருமணம் செய்துகொண்டோம். திருமணச் சடங்குகளைவிட மொய்ப்பணத்தை எண்ணுவதில்தான் எனக்கு எண்ணம் முழுக்க இருந்தது.
நானும் தமிழ்ச்செல்வியுமாகச் சேர்ந்து எண்ணினோம். ஆனால், மொய்ப் பணத்தை முழுவதுமாக எண்ணி முடித்தபோது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஏனென்றால், மொத்தமே ஐம்பதாயிரம் ரூபாய்தான் இருந்தது. சங்க உறுப்பினர் தொகைக்கு எழுபத்தைந்தாயிரம் வேண்டும். என்ன செய்வது. கொஞ்சம் தயக்கத்தோடு ஐம்பதாயிரத்தைக் எடுத்துக் கொண்டு போய் சங்கத்தில் கட்டினேன். மீதி பணம் பிறகு கட்டுகிறேன் என்று சொன்னதை, நல்லவேளையாக சங்கத்தில் ஏற்றுக் கொண்டார்கள்.
திருமணம் ஆன கொஞ்சம் நாள் உதவி கலை இயக்குநராக ‘பச்சைக்கிளி முத்துச்சரம்‘ படத்தில் வேலைப் பார்த்தேன். இதற்கிடையே, என்னுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. அதனால், சங்கத்தில் கட்டிய 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எழுதிக் கொடுத்துவிட்டுத் திருப்பி வாங்கிக்கொண்டேன். இருந்தாலும் அப்பாவைக் காப்பாத்த முடியல.
அந்த சமயத்தில் தான் என்னுடைய பையன் செந்தூர் எழிலன் பிறந்தான். அவனுடைய பிறப்பு புதிய வெளிச்சத்தை உண்டாக்கியது. பட வேலைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அனிமேஷன் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்பொழுது மக்கள் தொலைக்காட்சியில் நேதாஜியோட வாழ்க்கை வரலாற்றைப் பேசும் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்து. அதோட கதை நல்லாயிருந்தாலும், காட்சியமைப்பு நன்றாக இல்லை. உடனே மக்கள் தொலைக்காட்சிக்குப் போய், இந்த தொடருக்குப் படங்களை நானே வரைந்து தருகிறேன் என்று கூறினேன். அவர்களும் அந்த வேலையை எனக்குக் கொடுத்தார்கள். அலுவலக வேலை மற்றும் பகுதி நேர வேலைகள் என வாழ்க்கை அப்படியே போய்க்கொண்டிருக்கையில், மீண்டும் சினிமா மீது ஆர்வம் வர, மூன்றாவது முறையாக ராஜீவனிடம் உதவியாளராகச் சேர்வதற்குச் சென்றேன். அப்போது அவர் ‘ஏழாம் அறிவு‘ படத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் வரும் வரலாற்றுப் பின்னணியைப் பேசும் ஆர்ட் ஒர்க்கை நான் தான் செய்தேன். இந்தப் படத்தில் வேலை பார்த்ததற்காக முதல் முறையாக ஏழாயிரம் ரூபாய் செக் கொடுத்தார், ராஜீவன். அதேபோல், இந்தப் படத்திற்கு வேலை பார்ப்பதற்காக, பிறந்த கைக்குழந்தையையும் மனைவியையும் பிரிந்து செல்ல வேண்டிய வருத்தமான சூழலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த சமயத்தில் ரஞ்சித்தின் அட்டக்கத்தி படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னிடம் உறுப்பினர் அட்டை இல்லாமல் போனதால் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பின்னர் 3 லட்சம் ரூபாய் பணம் கட்டி உறுப்பினர் அட்டையைப் பெற்றேன். இதற்கிடையே, என்னுடைய மகள் இயல் இசை பிறந்தாள். அதற்குப் பிறகு ‘கபாலி‘ படத்தின் கலை இயக்குநராக பணிபுரிந்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு எனலாம். ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் நான். அவர் படத்தில் வேலை பார்ப்பேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது. கபாலி வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியோடு பணியாற்றினேன். அதற்கு அடுத்து ‘காலா‘ படத்திற்காகப் பணிபுரிந்தது, மிகப் பெரிய அனுபவத்தையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது.
காலா படத்தின் செட்டில் அம்பேத்கர் மற்றும் தலித்துகள் தொடர்பான போஸ்டர்கள், நிறைய ஒட்டியிருந்தோம். அப்படித்தான் இருக்கும் தாராவி. ஒரு நாள் செட் ஒர்க் நடந்துகொண்டிருந்த இடத்துக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ஒரே மாதிரியான போஸ்டரா இல்லாம, வேற வேற போஸ்டர் ஒட்டுங்க! ‘ என்று சொன்னார். அதற்குப் பிறகு கருணாநிதி, ஜெயலலிதா, பால்தாக்ரே போன்ற தலைவர்களுடைய போஸ்டர்களை ஒட்டினோம். மறுநாள் படப்பிடிப்பின் போது எங்கேயோ இருந்த என்னைப் பார்த்து, கையை அசைத்து சூப்பர்...சூப்பர் என்றார், சூப்பர் ஸ்டார்!
காலா படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியது உச்சமான வாய்ப்பாகச் சொல்வேன்.
அதைப்போலவே பாரதிராஜா படங்கள் மாதிரியான கிராமத்துக் கதைகளில் வேலைபார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. அது, கர்ணன் படம் மூலமாக நிறைவேறியது. மாரிசெல்வராஜ் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் விரும்புகிற அளவுக்கு பல்வேறு விஷயங்களை நுணுக்கமாகச் செய்ய வேண்டியிருந்தது. கர்ணன் படத்தில் வரும் தலையில்லாத புத்தர் சிலையை நான் தான் செய்தேன்.
தற்போது ஆனந்த சங்கர் இயக்கத்தில், ‘எனிமி‘ படத்தில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறேன். படங்களில் வேலை பார்ப்பதையும் தாண்டி, தெருக்கூத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். ‘ரூபகம் தெருக்கூத்து நாடக மன்றம்‘ என்ற குழுவை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். நானும் வேஷம் கட்டி ஆடுவேன். அதேபோல், எழுத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தி வருகிறேன். நீலம் இதழில் என்னுடைய ‘மலையுக சூரன்' கதை வெளியாகியுள்ளது. தற்போது ஒரு நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். தெருக்கூத்து தொடர்பான கதைக் களத்தைக் கொண்ட நாவல் அது” என்றார், உற்சாகமாக.
ஜூன், 2021