நமக்குத் தெரியும் என்று நினைத்தால், தெரியாதது நிறைய இருக்கிறது என்று சொல்கிறது சினிமா

ஒளிப்பதிவாளர், செழியன்
ஒளிப்பதிவாளர், செழியன்
Published on

நவம்பரில் தொடங்கப்போகும் இயக்குநர் பாலாவின் படப்பிடிப்பு வேலைகளில் இருக்கிறார்  செழியன். ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர். ‘பரதேசி’ படத்திற்காக லண்டன் சர்வதேச ஒளிப்பதிவாளர்கள் விழாவில் கிடைத்த விருது அவருடைய சமீபத்திய சிறந்த அங்கிகாரம். கவிதைகளும், கதைகளும் எழுதுகிற, இலக்கியத்தோடு பரிச்சயமாயிருக்கிற ஒளிப்பதிவாளர் என்பது செழியனின் தனித்த அடையாளம்.  ஓவியத்தில் ஈடுபாடு கொண்டிருக்கிற அவர், குழந்தைகளுக்கான இசைப்பள்ளி தொடங்கியிருப்பது மற்றுமொரு ஆச்சரியம்.

“அம்மாவும் அப்பாவும் பள்ளி ஆசிரியர்கள். அப்பாவுக்கு ஓவியங்கள் வரையவும் அம்மாவுக்கு பாடுவதிலும் விருப்பம் இருந்தது. அதனால் இவை இரண்டும் என்னை அப்படியே தொற்றிக் கொண்டு விட்டன. ஓவியங்கள் வரையச் சொல்லி அப்பா கொடுத்த ஊக்கத்தில் மூக்கு நீண்ட, தொப்பி அணிந்த நேருவை முதன் முதலாக வரைந்தேன். அதன் பின் அப்பா ஆர்வத்தோடு வரைகின்ற சுவரோவியங்களை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.” என்கிற செழியன் இனி உங்களுடன்:

“எங்கள் ஊரான சிவகங்கையில் அமுதா தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் தான் என்னை இங்கு வரை அழைத்து வந்திருக்கிறது. தொடர்ந்து எல்லாப் படங்களுக்கும் என்னை அழைத்துப் போய் என்னை சந்தோசப்படுத்திய அப்பா வேலைக்காக நாட்டரசன் கோட்டைக்குப் போன பிறகு அப்பத்தாவோடு நான் சிவகங்கையிலேயே தங்கினேன். நடுநிசியில் தூரத்தில் இருக்கும் திரைஅரங்கின் காற்று  கொண்டு வருகிற வசனங்களும் அதற்கு கிளம்புகிற விசில் சத்தமும் கேட்டு மறுநாள் அப்பத்தாவை சினிமாவுக்கு அழைத்து போகச் சொல்லிக் கெஞ்சுவேன். எங்கள் ஊரில் பெண்கள் கூட்டம் கூட்டமாய்  போவதென்பது கைகளில் பேப்பரை சுருட்டிக் கொண்டு டைப்ரைட்டிங் வகுப்புகள் போகும்போதும், தண்ணீர் சுமந்து வருகிறபோதும் தான். திரைக்குப் பின்னால் இருந்து நமக்காக நடிகர்கள் நடித்துக் காட்டுகிறார்கள் என்பதை தீவிரமாக நம்பிய அந்த வயதில் இரவு நேரங்களில் எம்ஜியார் படங்களைப் பார்த்து விட்டு கதைகள் பேசிக் கொண்டு வருகிற பெண்கள் கூட்டத்திற்கு மத்தியில் அப்பத்தாவோடு நடந்து வந்தது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. அந்த நடையும், அப்பாவோடு சினிமா பார்த்து வருகிறபோது கிடைக்கிற பரோட்டாவும் தான் சினிமாவுக்கான முதல் ருசியைக் கொடுத்தன.

எத்தனை வருடங்கள் ஒரே மாதிரியான திரைப்படங்களைப்  பற்றியே பேசிக் கொண்டிருப்பது என்று நினைத்திருந்த நேரத்தில் மதுரை நண்பர்கள் ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ படம் போட்டார்கள். அதன் தாக்கம் குறைவதற்கு முன்பே நண்பர் கோணங்கி ‘பதேர் பாஞ்சாலி’ படத்தைப் போட்டுக் காட்டினார். இப்படியும் சினிமாக்கள் இருக்கின்றன என்று நினைத்திருந்த நேரத்தில் எனக்கென்று உருவான நண்பர் குழுவோடு ஒரு நாடகம் எழுதி இயக்கினேன். அந்தக் குழுவில் அய்யப்ப மாதவன், பேரரசு இருவரும் இருந்தார்கள். நாங்கள் அரங்கேற்றிய சமூக நாடகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. என் தாத்தா உடனே ஒரு முறுக்கு மாலை செய்து கூட்டத்திற்கு நடுவில் என் கழுத்தில் போட்டார். ‘நீங்க எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளுகளே இல்லப்பா’ என சுற்றி இருந்தவர்கள் ஏற்றி விட, அடுத்த நாளே இயக்குநராகும் ஆசையில் பேரரசு சென்னைக்கு பஸ் ஏறிவிட்டான். கொதிக்கும் ஆர்வத்தை அடக்கிக் கொண்டு அவனுக்குப் பின்னால் பதினைந்து வருடங்கள் கழித்து நான் சென்னை வந்தேன்.

அந்த இடைப்பட்ட காலத்தில் நாமே ஏன் ஒரு குறும்படம் இயக்கக்கூடாது என நினைத்து வயதான முறுக்கு விற்கும் வயதான பெரியவரை மையமாக வைத்து ‘சாயல்’ என படத்திற்கு தலைப்பு வைத்து படப்பிடிப்பைத் தொடங்கினோம். அந்தப் படம் நிறைவடைந்திருந்தால் தமிழில் முதலில் வெளிவந்த குறும்படமாக இருந்திருக்கும்.

நன்றாக படித்துக் கொண்டிருந்த நான் அரசாங்க வேலை எதிலாவது சேருவேன் என்று நினைத்திருந்த அப்பாவுக்கும், அம்மாவுக்கும் திடீரென்று நான் சினிமாவில் தான் இருப்பேன் என்று முடிவெடுத்தது திகைப்பைக் கொடுத்திருக்கும். ஆனாலும் அவர்கள் பெரிதாக தடை சொல்லவில்லை. அம்மா மட்டும் ஒரு நிபந்தனைப் போட்டார்,‘எக்காரணத்தைக் கொண்டும் நடிக்கக் கூடாது’ என்றார். நடிக்கும்போது பெண்களிடம் நெருக்கமாக கூட நிற்கவேண்டியிருக்கும் என்பது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது.

ஒரு கட்டுப்பாடான குடும்பத்தில் நகர வாடை அதிகம் படாத ஒரு இடத்தில் இருந்து வருகிற ஒரு இளைஞனுக்கு சினிமா உலகம் எந்த மாதிரியான திகைப்பை எல்லாம் கொடுக்குமோ அதெல்லாம் எனக்கும் குறைவறத் தந்தது. இயக்குநராக வேண்டுமென்கிற விருப்பத்தில் தான் வந்தேன் என்றாலும் இயல்பிலேயே என்னிடம் இருந்த கூச்ச சுபாவத்தினால் கேமராவுக்குப் பின்னால் வேலை செய்யலாம் என முடிவு செய்து விட்டேன். என்னுடைய கூச்ச சுபாவத்தை சரி செய்யத் தான் பள்ளிக்கூட நாட்களில் அப்பா என்னை மேடைப் பேச்சு பேசுவதற்கு வலியுறுத்தினர். தீவிர திமுக அனுதாபியான என்னுடைய அப்பாவின் பெயர் இராமலிங்கம். என்னுடைய முழுப் பெயர் இரா.நெடுஞ்செழியன். என்னை மேடையேற்ற அவர் ஆர்வப்பட்டதற்கு எனது பெயர் பொருத்தமும் காரணமாய் அமைந்துவிட்டது.

அப்பாவுக்குப் பிறகு எனது தயக்கத்தை அடித்து உடைத்தது பி.சி.ஸ்ரீராம் சார் தான். அவரிடம் உதவியாளராக வேலைப் பார்க்கும்போது, ‘சினிமாவில் அமைதியாக இருந்தால் எதுவும் நடக்காது. உரத்துப் பேசினால் தான் வேலை நடக்கும்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு நாள் ‘முகவரி’ படப்பிடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட லைட்டுகள் மாட்டப்பட்டிருந்தன. ‘லைட்ஸ் ஆன்’ சொன்னவுடன் ஒரே சமயத்தில் எரிவதும், ஆஃப் சொன்னதும் அணைவதும் காட்சிக்கு தேவைப்பட்டது. அத்தனைப் பேர் காதிலும் விழும்படி உரத்துக் கத்த வேண்டும். பி.சி சார் அதற்காக என்னை நியமித்தார். அந்த அரங்கமே அமைதியாக இருக்கிறது. இப்போது நான் உரத்துக் கட்டளையிட வேண்டும். நடுங்கிய குரலில் சொன்னேன். சப்தம் போதவில்லை என்று எனக்கே தெரிந்துவிட்டது. ஒரு உந்துதல் பிடித்துத் தள்ள மிக சப்தமாய் கத்தினேன் ‘லைட்ஸ் ஆன்’. என்னுடைய முதல் கட்டளைக் கூப்பாடு கேட்டதும் தலைக்கு மேல் பளிச்சென நூறு பல்புகளும் ஒளிர்ந்தன. மேடையில் நின்று பேசுவது வேறு, நம்மை சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களிடம் வேலை வாங்குவதென்பது வேறு. அந்தத் தயக்கம் அன்று தான் முடிவுக்கு வந்தது.

எந்த நாளில் நான் புத்தகம் வாசிக்காமல், எழுதாமல், படங்கள் பார்க்காமல் இருக்கிறேனோ அந்த நாள் தான் எனக்கு சோர்வான நாள். ஒரு புகைப்படக்காரன் எடுக்கிற முதல் பத்தாயிரம் புகைப்படங்களும் தேவையில்லாதவை. அதற்கு அர்த்தம் வீணானவை என்பதல்ல. ஒருவன் தான் ஈடுபட்டிருக்கும் கலையில் பத்தாயிரம் மணித்துளிகள் ஈடுபட்டிருந்தால் தான்

சிறப்பானவற்றைக் கொடுக்க முடியும் என்று அர்த்தம். நான் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து வந்தாலும் இப்போது தான் நான் தரிசனம் செய்ததை சிறிது தொட்டுவிட்டதாக நினைக்கிறேன். நாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய கலை இது. எனக்குத் தெரியும் என்று நினைத்து ஒரு விஷயத்திற்குள் இறங்கினால், தெரியாதது இன்னும் அதிகம் இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறது சினிமா.

எதையுமே காட்சியாகவே பார்க்கத் தொடங்கிவிட்டால் நல்ல காட்சிகளுக்காக மனம் ஏங்கத் தொடங்கிவிடும். காம்யூவின் ‘அந்நியன்’ நாவல் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு கதாபாத்திரமான மெர்சோ அம்மா இறந்ததற்காக வருகிறான். ஒரு நீண்ட கூடத்தின் நடுவில் சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பெரிய அறையில் ஓரமாக ஒரு அராபியப்பெண் மட்டும் அமர்ந்திருக்கிறாள். மாலை நேர ஒளி சவப்பெட்டியின் மேல் விழுகிறது. அதில் ஒரு கீற்று சவப்பெட்டியில் அடிக்கப்பட்டிருக்கிற ஆணியில் படுகிறது. நிசப்தமான அந்த அறையின் ஜன்னலை இரு ஈக்கள் மோதிக் கொண்டே இருக்கின்றன. இப்படி ஒரு காட்சியை நான் மனதுக்குள் காட்சியாகப் பார்க்கிறேன். எதையுமே நான் காட்சியின் ஊடாகவே ரசிக்க விரும்புகிறேன். சுனாமியின் போது புகைப்படங்கள் எடுக்கச் சென்றிருந்தேன். அதன் அவலங்களை வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்தாகிவிட்டது. வெகு நாட்கள் வரை அந்த சித்திரங்கள் எனக்குள் அழியவே இல்லை. ஒரு நாள் தூக்கத்தில் அறைக்குள் கடல் நீர் வருவது போல் தோன்ற கட்டிலின் மேல் எழுந்து உட்கார்ந்திருந்தேன். கனவு என்று பிடிபடுவதற்கு வெகுநேரமாகி விட்டது. இது தான் ஒரு காட்சியின் தாக்கம். அதனாலேயே எனக்குப் பிடித்த, மனம் ஒன்றி செய்கிற படங்களைக் காட்சிப்படுத்த விரும்புகிறேன்.

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாக சொல்வது கேட்டுப் பழகிய வாக்கியமாக இருந்தாலும், நான் உணர்கிற வார்த்தைகள் இவை. எனது மையமாக அம்மா இருந்தார், அதன் பின் எனக்கு தோழியாய், ஆதரவாய் இருப்பது எனது மனைவி பிரேமா. ஒவ்வொரு படத்திற்கு இடையில் கிடைக்கிற இடைவெளிகளை என்னையும் விட அதிகமாய் சகித்துக் கொண்டிருக்கும் எனது மனைவியின் தோழமைதான் என்னை அதிகம் பயணிக்க வைக்கிறது.”

நவம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com