கவிஞர் , பாடகர், நடிகர், தயாரிப்பு நிர்வாகி, என்று பல தகுதிகளுடன் சினிமாவில் எதிர் நீச்சல் போட்டு இயக்குநராகி இருக்கிறார், அருண்ராஜா காமராஜ். இயக்கிய முதல் படமான 'கனா' வெற்றிக் களிப்பில் இருந்த அவரிடம் பேசினோம்.
உங்களது இயற்பெயரே இதுதானா ?
சொந்த ஊர் குளித்தலை. கலைஞர் முதன் முதலில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று கோட்டைக்கு வந்தது எங்கள் ஊரிலிருந்துதான் என்பதில் ரொம்ப பெருமை. எனக்கு பெற்றோர் வைத் தது அருண்ராஜா! அப்பாவின் பெயர் காமராஜ் இணைத்து கொண்டேன். அருண்ராஜா என்பது மென்மையாக இருந்தது. காமராஜை என் பெயருக்குள் சேர்த்தபின் ஒரு கம்பீரம் வந்து விட்டது. அப்பாவின் செல்லம் நான். இப்போது என் பெயரை சுருக்கி அருண்ராஜா என்று எழுதினால் கோபித்து கொள்வேன், ஏங்க என் அப்பா பேரை சேர்த்துப் போடலை என்று சண்டை போடுவேன். என் அப்பா, அம்மா மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஒரு அண்ணன் ஆசிரியராகப் பணியாற்றுகிறார், ஒரு அக்கா, நான் கடைக்குட்டி, அவர்கள் குளித்தலையில் இருக்க, நான் மனைவி குழந்தைகளுடன் சென்னை வாசியாகிவிட்டேன்.
குளித்தலையிலிருந்து சென்னை பயணம் ரொம்ப சுகமான பயணம் அல்ல. பாதையென்றால் அதில் மேடுபள்ளம், கல்லும் முள்ளும் உள்ளது தானே... அவற்றை கடந்து வந்தவன், அங்கு தொடங்கிய பயணம் எங்கும் தடை பட்டு நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்க நண்பர்கள் துணையிருந்தார்கள். நான் கஷ்டப்படவே இல்லையா என்று கேட்கலாம், நானும் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். பசியுடன் கிடந்திருக்கிறேன். ‘அருண்ராஜா நீ போன உடனே உனக்கு எல்லாம் கிடைச்சுடாது , கஷ்டப்பட வேண்டியிருக்கும், அதற்கு தயாராக இரு,'' என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டே தான் இந்தப் பயணம் தொடங்கினேன். அதனால் பயமோ, வருத்தமோ, இல்லை, உழைப்பு வெற்றியையே பரிசாக தந்தது. என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் நண்பர்களின் கரம் இருக்கிறது. அவர்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் நானில்லை.
நான் சினிமாவுக்குள் வரக் காரணம் சிவா (சிவக் கார்த்திகேயன்) வின் நட்பு. நான் டைரக்டராகவும் அவரே தான் காரணம். அவர் படம் தயாரித்து என்னை டைரக்டராக்கி இருக்கிறார்.
ஜே.ஜே காலேஜ் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி & இங்கிருந்து தான் சிவா, நான், செந்தில், ஸ்ரீதர் , நவநீதன் என்று இருபது பேரின் நட்பு மலர்ந்தது, ஒன்றாக படித்தோம், பல நண்பர்கள் வெவ்வேறு வேலைகளில் இருக்கிறார்கள் சிலர் சென்னையில் சினிமா , தொலைக்காட்சி, குறும்படங்களில் இருக்கிறார்கள்.
நான் படிப்பு முடிந்ததும் சென்னைக்கு கால் செண்டர் வேலைக்கு வந்துவிட்டேன். ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை. என்னுடைய வேலை கம்ப்யூட்டரில் வைரஸ் வந்தால் அதை ரிமூவ் பண்ணுவது.
அப்போது விஜய் டி.வியில் கலக்கபோவது யாரு வில் சிவா வெற்றி பெற்ற பின், மீடியாவுக்கு வர்றியாடா என்று கூப்பிட்டான். வந்து விட்டேன், சிவா மூலம் அனிருத், ஜி.வி. பிரகாஷ், அட்லி என்று நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும்.
எனக்கு உதவுவது போல் தெரியாமல், செய்கிற வேலைக்கு பணம் கொடுப்பது போல் கௌரவமாக நடத்தும் நண்பர்கள் கிடைத்தார்கள். என் நண்பர்களில் சிலர் 75 குறும்படங்களை பண்ணியிருக்கிறார்கள். ஸ்டோரி டிஸ்கஷனில் அமர்வது, பாட்டு எழுதுவது, என்று எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுத்து அதற்கான சன்மானத்தை முன்னாடியே கொடுத்துவிடுவார்கள். இந்தா கடனா வச்சுக்கோ, பணம் வந்த பிறகு திருப்பிக் கொடு என்று என்னை கடன்காரனாக்கவில்லை. சும்மா இருக்கே இந்தப் பணத்தை செலவுக்கு வெச்சுக்கோ என்று என்னை ஒரு பாரமாக நினைத்து நடத்தவில்லை.
ரூம் வாடகை கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பேன், நண்பர்கள் திடிரென்று வந்து கதவு தட்டுவார்கள். 'மச்சான் இந்த ஷாட் பிலிம்க்கு ஒரு பாட்டு வேண்டும். எழுதிடு' என்றும் 'அந்த விளம்பரப் படத்திற்கு ஒரு வாசகம் எழுதி கொடுடா' என்றும் 'ஒரு ஜிங்கிள்ஸ் எழுதி விடு' என்றும் சொல்லி என் கையில் பணம் திணித்து விட்டு போய்விடுவார்கள்.
நண்பர்களின் குறும்படங்களில் உடன் இருந்து பார்த்த அனுபவம், சினிமா பண்ணும் ஆர்வத்தை ஏற்படுத்தியது, டைரக்ஷன் கற்றுக் கொள்ளலாம் என்று 'கோலமாவு கோகிலா' பட இயக்குநர் நெல்சனிடம் அசிஸ்டெண்ட்டாக சேர்ந்து பணியாற்றினேன். எழுதுவது எப்படி காட்சிப்படுத்தப்படுகிறது, அந்த காட்சிக்கான நடிப்பு எப்படி வெளிப்படுத்தப்படுகிறது என சினிமாவிற்கான எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டால் நல்லது என்று பயிற்சி பெற்றேன்.
அப்புறம் அப்படியே ஒரு அசிஸ்டெண்ட்டாக முடங்கிவிடக் கூடாது என்பதால் பாட்டு எழுதுவது, பாடுவது, நடிப்பது என்று சினிமாவின் பல வேலைகளில் தகுதி படைத்து கொண்டேன். என் வேலைகள் பலருக்கு என் திறமையைக் காண வாய்ப்பானது.
சிவா படம் என்பதால் 'மான் கராத்தே', நண்பர் அட்லி இயக்கிய 'ராஜா ராணி', காத்திருப்போர் பட்டியல், யானும் தீயவன் போன்ற படங்களில் நடித்தேன். மரகத நாணயம் படத்தில் புரொடக்ஷன் எக்ஸ்சிக்யூட்டிவாக வேலைபார்த்தேன், அதில் ஒரு கேரக்டர் இருக்கு நீங்களே செய்து விடுங்கள் என்றார்கள். நடித்தேன். அந்த மரகத நாணயம் படத்தின் அசோசியட் டைரக்டர் பண்ணிய 'நட்புன்னா என்ன தெரியுமா' படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவனாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.இப்படி நடிப்பு வாய்ப்பு டைரக்டர் நண்பர்களின் மூலம் வந்தது. சுமார் 21 படங்களில் நடித்து விட்டேன்.
ஜனவரி, 2019.