நடிகர்கள் வாழ்க்கை ரொம்ப ஜாலியா, ஹேப்பியா இருக்கும்னு நினைச்சேன்

ரித்விகா
ரித்விகா
Published on

அக்மார்க் சென்னைப் பொண்ணு நான்... பெருமையாக ஆரம்பித்தார் ரித்விகா.

 பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை. படிச்சது எஸ்.ஐ.ஈ.டி காலேஜ். படிக்கும் போதே சினிமா, நடிப்பு மேல அதீத ஆர்வம். ஆனால் நடிகர் நடிகைகளுக்கு கிடைக்கிற வரவேற்புகளைப் பார்த்து நடிகர்கள் வாழ்க்கை ரொம்ப ஜாலியா, ஹேப்பியா இருக்கும்னு நினைச்சேன். ஆனால் ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கும் போதும் அதற்கான முயற்சிகள் எடுக்கும் போதும்தான் உண்மை புரிஞ்சது. அதுவரைக்கும் நண்பர்களுடைய ஷார்ட் ஃபிலிம்ஸ், சின்ன கான்செப்ட்கள்ல நடிச்சுட்டு இருந்தேன். அப்போதான் நடிப்புக்கு வாய்ப்புக் கிடைக்கணும்னா கூட சரியான முறையில போட்டோக்கள் எடுத்து ஒவ்வொரு இடத்துலயும் கொடுத்து வைக்கணும்னு தெரிய வந்துச்சு. அப்படிதான் பாலா சாருடைய ‘பரதேசி' படம் எப்படியோ என் போட்டோ பி&ஸ்டூடியோ போயிருக்கு. ஆடிஷன் போனப்போ செலக்ட் ஆகிட்டேன். அதுக்கப்பறம் சில படங்கள் ஆனால் எனக்கு ஒரு தனி அங்கீகாரம் கிடைச்சது ‘மெட்ராஸ்' படத்துக்குதான். 

இங்க நமக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்கக் கூட குறைஞ்சது பத்து படங்கள் நடிச்சிருக்கணும்னு எனக்கு அப்புறம்தான் புரிஞ்சது. அந்தப் படத்துக்கும் ஆடிஷன் போனேன். அடுத்து அப்படியே ‘கபாலி' ரஞ்சித் சாருடைய ஸ்பெஷலே அதான் .. தன்னுடன் இருக்கிற அத்தனை பேரையும் குடும்பம் மாதிரி கூடவே கூட்டிட்டுப் போவாரு. ரஜினி சாரை நான் நேர்ல பார்ப்பேன்னு நினைச்சு கூடப் பார்க்கல. ஆனால் அவர் கூட படத்துல அவருக்கு மகள் மாதிரியான கேரக்டர்ல நடிச்சதெல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு. இதுல சாருடைய சட்டையப் பிடிச்சு, அவரை போடா வாடான்னுலாம் திட்டி டயலாக் வேற. இப்போ யோசிச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது. லன்ச்-க்கு அப்பறம் அந்த சீன் இருக்குன்னு சொல்லிட்டாங்க. அன்னைக்கு நான் லன்ச் சாப்பிடக் கூட இல்லை. சீன் முடிச்ச உடனே அப்படி ஒரு அமைதி. எல்லாரும் கண்கலங்கி நிற்கிறாங்க. அப்பறம் செம பாராட்டு ..  சார் கூட அப்படி பாராட்டினார்,'' உணர்ச்சி பொங்க  சொல்லி முடித்தவரிடம் அடுத்தடுத்தப் படங்கள் குறித்து கேட்டோம்.

‘‘நான் நடிச்ச பல படங்கள் ரிலீஸ் தள்ளிப்போய் இந்த வருஷம்தான் வெளியாகப் போகுது. மேசியா, சிகை, யாவரும் வல்லவரே படத்துல சமுத்திரகனி சார்க்கு ஜோடியா நடிச்சிருக்கேன். இதெல்லாம் பேக் டூ பேக் ரிலீஸ் ஆகும். ஆனால் நானே எதிர்பார்க்காம நடந்த ஒண்ணு ‘எம்.ஜி.ஆர் சார், பையோ பிக்ல நான் ஜானகி அம்மா கேரக்டர்ல நடிக்கிறேன். என் கெரியர்லேயே ரொம்ப முக்கியமான ஒரு படம். எனக்கு அடுத்த ஸ்டெப்னு கூட சொல்வேன். எம்.ஜி.ஆர் ஐயாவைக் கல்யாணம் செய்வதற்கு முன்னாடி ஜானகி அம்மாள் நடிச்ச படங்களை எல்லாம் பார்த்து  அவங்களுடைய உடல்மொழி, கேரக்டர்னு எல்லாத்தையும் கத்துக் கிட்டு இருக்கேன். நிச்சயம் அவங்க அளவுக்கு இல்லைன்னாலும் என்னுடைய பெஸ்ட் நான் கொடுப்பேன்,'' என பூரிப்புக் காட்டினார்.                                                              

பிப்ரவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com