மகன்-அப்பா நாளைக்கு எனக்கு அஞ்சு ரூபா வேணும்.. ஓணத்துக்கு ஷர்ட் தைக்ககொடுத்துருக்கேன்ல..அத்த வாங்கணும்
அப்பா- ங்கே.... மூணு ரூபாவா... ரண்டு ரூபா எதுக்கு? ஒரு ரூபா இல்லையேடா ...’
“உங்களுக்குப் புரிஞ்சுதுங்களா.. சின்ன வயசுல ஓணம் பண்டிகைக்குப் புது டிரெஸ் தைக்கக் கொடுத்திருந்தாங்களா... அது அரசு பள்ளிக்கூட யூனிபார்ம்தாங்க .. ஊதா நீல நிற தோள்பட்டை வைத்த டிரௌசர், மஞ்சள் மேல்சட்டை. தினமும் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது அந்தத் தையற்கடையில் பாப்பேன். என்னோட ஷர்ட் தச்சு அங்கே போட்டிருக்காங்களான்னு.. அதுக்குதான் காசு கேட்டேன்.. இப்போதும் எனக்குத் தெரியலங்க ஏன் அப்பா அப்படி சொன்னாருன்னு.. காசு இல்லைன்னா, இல்லைப்பான்னு சொல்லியிருக்கலாமே ..அதென்ன? மூணு ரூபாவா... ரண்டு ரூபா எதுக்கு? ஒரு ரூபா இல்லையே ன்னு ... இப்படி.. உங்களுக்குப் புரிஞ்சுதா?”
குழந்தைத்தனமாக இந்தக் கேள்வியைக் கேட்டவர் மலையாள நாட்டுப்புறப் பாடல்களின் சுல்தான் என்று அழைக்கப்படும் கலாபவன் மணி... நூற்றுக்கணக்கான மண்மணம் கொண்ட பாடல்களின் குறுந்தகடுகளை வெளியிட்டுள்ள இவர் இந்தியாவின் மிகச் சிறந்த மிமிக்ரி கலைஞர்களில் ஒருவர்... சிறந்த நடிகர்.
விருதும் மணியும்
‘வாசந்தியும் லக்ஷுமியும் பின்னே ஞானும்’ படத்தில் நடித்ததற்கு அவருக்குத் தேசிய விருது கிடைத்ததாக அறிவிப்பதின் முந்தைய நாள் (இந்தப் படம் காசி என்று பெயரில் தமிழிலும் வந்தது) சாலக்குடியிலுள்ள மணியின் வீட்டுக்கு சென்றுள்ளனர் பத்திரிகையாளர்கள். உடல் நலமில்லாமல் இருந்த இவரது அப்பாவை பிடித்து உட்காரவைத்து பேட்டி எடுத்திருக்கிறார்கள். இவரையும் இவரது மனைவியையும் ஆடைகளை மாற்றி மாற்றி அணிய வைத்து பேட்டி எடுத்துச் சென்றனர். ஆனால் மறுநாள் சிறந்த நடிகருக்கான தேசியவிருது வேறு ஒருவருக்கு அறிவிக்கப்பட்டது. இவருக்கு ஸ்பெஷல் ஜூரி விருது.
செய்திகேட்டு ஏமாற்றத்தில் இவர் மயக்கம் போட்டு விழுந்ததாக ஊரெல்லாம் பரப்பி விட்டார்கள். ஆனால் அதையே ஒரு நகைச்சுவை கலந்த நாட்டுப்புறப் பாடலாக மாற்றி மேடைகள் தோறும் பாடி வந்தார் மணி. அவர் கேட்ட ஒரு கேள்வி.
“அன்று என் உயிரின் இருத்தலுக்காகப் போராடியவன் நான்.. இன்றும் அந்தப் போராட்டத்தில்தான் உள்ளேன். ஆனால் இருத்தலின் காரணம் மாறியிருக்கிறது. என் வாழ்வின் ஒவ்வொரு கடின கணத்தையும் கேலியாக நானே எழுதிப் பாடிவருகிறேன். அதனால் நான் கடந்துவந்த நிமிடங்கள் எனக்கு முன்னே என் பாதைக்கு இருபுறமும் நின்று சிரிக்கின்றன. எது கிடைத்தாலும் எனக்கு போனஸ்தான்..அப்படிப்பட்ட நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன் என்று சொல்லி ஏளனம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில்தான் இந்தப் பாடல். எப்படி ?”
மார்க்சியத் தோழர் கலாபவன் மணி
இதுதான் கலாபவன் மணி.. சாலக்குடி காவல் நிலையம் இவரின் கொடை. அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு நவீன வசதிகளுடனான வார்ட் தொட்டு பள்ளிக்கூடக் கட்டிடங்கள், பஸ் ஸ்டாண்ட் வரை,இப்படி ஏராளமான உதவிகள். கிறிஸ்தவ தேவாலயமாகட்டும் பள்ளிவாசல் ஆக இருக்கட்டும் கோவிலாக இருக்கட்டும் சாலக்குடி என்றால் கலாபவன் மணியின் உழைப்பின் ஒரு விகிதம் அங்கிருக்கும்.
வாழ்வின் ஆரம்பகால வலிகள்தான் தன்னை இன்றும் இயக்கிக் கொண்டிருக்கும் சக்தி. அது தந்த அனுபவங்கள் தன்னை ஒரு மார்க்சிஸ்ட்காரனாக்கியது. இடதுசாரி கட்சியின் சாலக்குடி கிளை மணியின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும் அவரை மக்களின் கலைஞனாக மாற்றவும் மெனக்கெட்டது என்று சொல்லும் மணி இப்போதும் தன்னுள் இருப்பது இடதுசாரி சிந்தனைகள்தான் என்று மார்தட்டி கொள்கிறார்.
அதனால்தான் பிறரின் வேதனைகளும் வாழ்க்கைச்சிக்கல்களும் தமக்கு எளிதாகப் புரிகிறது என்றும் ‘உதவி’ என்று ஒரு வார்த்தையில் எதையும் ஒதுக்கி தான் செயல்படுவதில்லை என்றும் ஈரமான சொற்களில் பேசும் கலாபவன் மணி, ஒரு ஊரில் நன்றாக ஒருவன் வாழ்கிறான் என்றால் அதற்குக் காரணம் அந்த ஊரில் வறுமையில் துடிக்கும் மனிதர்களும்தான். சமூகம் அப்படித்தான் இயங்குகிறது.
“எல்லோருக்கும் வாய்ப்புகள் வரவேண்டும் என்றில்லை. அப்படிவந்தாலும் எல்லோராலும் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. அதனால் அவர்கள் எல்லாம் திறமையற்றவர்கள் என்றோ கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல என்றோ அர்த்தம் இல்லை. அப்போது தேவைப்படுபவர்களுக்குத் தோள் கொடுக்கவேண்டியது வாய்ப்பை பயன்படுத்திப் பொருளாதாரத்தில் சீராக இருப்பவனின் கடமையும் கூட..” என்கிறார்.
பாடகன்
இப்போது ஒரு பன்மொழி நடிகராக இருந்தாலும் நாட்டுப்புறப் பாடல்களும் மிமிக்ரியும்தான் தனக்கு வாழ்வளித் தது என்கிறார் சிரித்துக்கொண்டே. அருமையான செண்டை வாத்திய கலைஞனுமான மணி பாடல்கள் வந்தவழியை இப்படித்தான் ஞாபகப்படுத்தினார்,
“கூலி வேலை முடிந்து வந்து ஓலை கூரை வீட்டில் அப்பா உக்காருவார்.. குளிப்பதற்கு முன் வியர்வை ஆற்ற அவர் தன் சிறு துண்டை எடுத்து முதுகிலும் கழுத்திலும் துடைத்தும் வீசியும் பாடிக்கொண்டிருப்பார். அந்தப் பாடல்கள்தான் அப்பாவின் வியர்வையை ஆற்றி அவருக்கு ஆற்றலைத் தந்தது. நாட்டுப்புறப் பாடல்களின் பாண்டம் அப்படித் திறக்கும் எங்கள் வீட்டில் . குளித்துக்கொண்டிருக்கும்போதும் அது தொடரும்.
இரவு உணவு இல்லையென்றாலும் பாடல்கள் நிறுத்தாமல் ஒழுகும்..அம்மா மண்பாத்திரத்தில் வெறும் தண்ணீரை கொதிக்கவிட்டு ஒரு சிரட்டை உதவியால் கிண்டிக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் எட்டுக் குழந்தைகள் பயங்கரப் பசியுடன் சமையல் முடிய காத்திருப்போம். அப்பாவின் மண்வாசனைப் பாடல்களும் பசியும் அம்மாவின் தாளத்துடனான நேரம் தாண்டிக் கிண்டும் விதமும் எங்களைப் பாதி உறக்கத்திற்கும் பாதிப் பசி மயக்கத்திற்கும் தள்ளிவிடும். நான் சொல்லவந்தது இதொன்றுமல்ல. அப்பாவின் வியர்வையின் மணம் என் பாட்டுகள்..”
கலாபவன் மணி செய்யாத வேலைகளே இல்லை. ஆட்டோ டிரைவர், ஆயுர்வேத மருத்துவருக்குப் மருந்துகள் சேகரித்துகொடுப்பது, மரம் ஏறி கள் இறக்குவது, நதியில் மூழ்கி மணல் வாரி லாரியில் ஏற்றுவது, சிப்பி எடுப்பது, கயிறு பிரிப்பது,கிணறு தோண்டுவது, கல் வெட்டுவது, கட்டிடத்தொழிலாளி,
சாலைப் பணி ,இன்னும் என்னென்னமோ ..?
நடிகன்
முதன்முதலாக விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரனில் ஒரு ஜூனியர் நடிகராக நடித்தார்.“முகம் தெரியாத ஒரு சீனில் எனக்குக் கிடைத்த ஒரு சிறு வேடம். ஆனா அன்னைக்கு விஜயகாந்த் சார் தன்னோட கேமராவால என்னோட சிறு சிறு மிமிக்ரி வித்தைகளையும் சேட்டைகளையும் படம்பிடித்தார். அன்று அதில் நடித்ததற்கு 150 ரூபாவும் வயிறு நிறையச் சாப்பாடும் கிடச்சுது. வேறென்ன வேண்டும் ஒரு ஏழைக் கலைஞனுக்கு ... மறக்கமுடியாத நாட்கள். கனவுகளின் தேரோட்டத்திற்குள் வாழ்ந்த நாட்கள்” என்று சத்தமாகச் சிரிக்கிறார் மணி..
வாழ்க்கையில் நீங்கள் கடினமாகப் போராடிப் பெற்ற ஒரு விஷயம் எது ? என்றேன்.
பெரிதாக சிரித்தவர், “என்னுடைய எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் தான் அது. ஆட்டோ டிரைவராக இருந்தபோது பத்தாம் வகுப்பில் இரண்டு முறை தோற்று விட்டேன். எல்லோரும் கிண்டலடிக்க எனக்கு அப்படி ஒரு பிடிவாதம் வந்தது. ஆஹா அப்படியா .. என்ன பெரிய பொதுத் தேர்வு..ஒரு கை பாத்துடுவோம், அப்படின்னு உறுதிமொழி எடுத்து இரண்டு முறை ஏற்கனவே மாங்கு மாங்குன்னு படிச்சதினாலயும் சில நண்பர்களின் உதவியாலும் மீண்டும் டச் அப் செய்து பரீட்சை எழுதினேன். என்னத்தச் சொல்ல? எனக்கு 600க்கு 500 க்கு மேலேயே மார்க்.
எனக்கே நம்ப முடியல முதல்ல. ஒரு கீழ்சாதி பையன், வறுமையில் திளைப்பவன். வசதிகள் அற்றவன், கூலிவேலை செய்து பிழைப்பவன் இவனுக்கு எப்படி இத்தனை மார்க் கிடைக்கும்? காப்பி அடிச்சிருக்கான் என்று அவர்கள் தீர்மானித்துவிட்டனர். நான் எவ்வளவோ சொல்லியும் எடுபடவில்லை.. இது பெரிய பிரச்சினையாகி இன்று வரைக்கும் என்னுடைய எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழை மாறி மாறி வரும் கேரளா அரசுகள் பத்திரமாக வைத்துள்ளன. இப்போதான் தெரியுது நான் எவ்வளவு பெரிய வி.ஐ.பி என்று.. இப்போதும் சொல்றேங்க. சத்தியமா நான் காப்பி அடிச்சு எழுதலங்க. அது என்னோட ஒரு போராட்டம். அவங்களுக்கு புரியமாட்டேங்குது. ஒருவன் பொருளாதார நிலையில் அடிமட்டத்தில் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு அறிவோ ஞாபகசக்தியோ இருக்கக்கூடாதா ? விசித்திரமான சமூகம்.” இதைக் கூடத் தாளத்தில் நகைச்சுவைப் பாடலாகவும் பாடிக்காட்டினார் மணி .
ஒரு மிமிக்ரியும் ஒரு பாடலும் இலவசம்..
இவர் தமிழில் புஷ்பவனம் குப்புசாமியின் தீவிர ரசிகன். தன் ஆட்டோ டிரைவர் வாழ்க்கையையும் ஆட்டோ ரிக்ஷாவையும் நேசிப்பவர். அன்று அவரின் ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு ஒரு மிமிக்ரியும் ஒரு பாடலும் இலவசம்.. கேட்கும்போது நமக்கு வலிக்கும் ஆனால் மலையாள நாட்டுப் புறப் பாடல்களின்
சுல்தானுக்கு இதெல்லாம் மிகவும் சகஜமான உணர்வு.. அவரின் வாழ்கையோடு தோய்ந்த அந்த ஞாபகங்களில் முளைத்த ஒரு பாடலின் சில வரிகள்:
யாருமாவாத காலத்தில் நானன்று ஓட்டி நடந்த வண்டி
எங்கள் குடும்பத்தின் பட்டினி மாற்றிய தெய்வம் இந்த ஆட்டோ வண்டி
நூறு ரூபாவுக்கு ராப்பகல் பாராமல் ஓடிநடந்த காலம்
கிக்கர் இழுத்து எந்தன் இடுப்பும் கைகளும் தளர்த்திய ஆட்டோ வண்டி
என் நிறம்போல் கறுத்த பேண்டும் அழுக்கு ஜிப்பாவும் துவைத்தும்
ஆட்டோவின் டிக்கியில் வச்சத நினச்சு நான் இன்னிக்கும் அழுதிடுவேன்.
தேய்த்தாலும் மறைத்தாலும் பண்டைய வாழ்க்கை மனதினில் அழிவதில்லை
இந்தச் சாலக்குடிக்காரன் சாலக்குடிநாடு விட்டு எங்கும் போகவில்லை..
மணியிடமிருந்து விடைபெற்று நாட்களாகியும் அந்த மனிதரின் சுய கேலியும், சிரிப்பும் பாடலும் மனதைவிட்டு நீங்காமல் இருக்கின்றன.
ஆகஸ்ட், 2015.