சிறந்த பேச்சாளராகவும் ஆவணப்பட இயக்குநராகவும் அறியப்பட்டிருக்கும் பாரதி கிருஷ்ணகுமார், இப்போது, என்று தணியும் என்ற திரைப்படத்துடன் வருகிறார். அவரைச் சந்தித்தோம்.
இதுவரை ஆவணப்படங்களை எடுத்து வந்த நீங்கள் இப்போது ஏன் திரைப்படத்தை தெரிவு செய்தீர்கள்?
ஆவணப்படங்களுக்கு இங்கு திரையரங்கும் சந்தையும் இல்லை. இதனால் பார்வையாளர்களும் இல்லை. ஆவணப்படங்களை தேடி வருபவர்களைத் தவிர பரந்துபட்ட மக்களிடத்தில் ஒரே தருணத்தில் ஆவணப்படங்கள் போய்ச் சேர்வதில்லை. கடந்த காலங்களில் நான் எடுத்த, இயக்கிய ஆவணப்படங்களைக் கூட முதன் முறையாக தமிழ்நாட்டில் பெரும்பான்மையான சாதாரண மக்களையும் பார்க்கச் செய்திருக்கிறேன். ஆனாலும் கூட அது சென்றைடையும் எல்லை பெரிதல்ல. திரைப்படங்களின் தன்மைக்கும் ஆவணப்படத்தின் தன்மைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. திரைப்படங்களில் நான் எழுதும் பாத்திரங்களை நான் இயக்குவேன். ஆனால், ஆவணப்படங்களில் அவர்கள் நம்மை இயக்குவார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் ஆவணப்படங்களில் என் மொழி இருக்காது. பாதிக்கப்பட்ட மக்களின் மொழி தான் இருக்கும். சென்றடையும் எல்லைகள் அதிகம் இருக்கிறது என்பதற்காக மட்டும் தான் ஆவணப்படத்தில் இருந்து திரைப்படத்திற்கு வந்திருக்கிறேன். ஆவணப்படங்களின் மீது இருக்கும் என்னுடைய ஈடுபாடும் அதன் வீச்சும் திரைப்படத்தினை எடுப்பதால் மாறாது. மாறப்போவதுமில்லை.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் நீங்கள். ஆனால் அவரிடமிருந்து வெளியேறி ஒரு திரைப்படத்தை இயக்குவதற்குள் பல ஆண்டுகள் ஆகிவிட்டதே?
கவனம் முழுவதும் ஆவணப்படங்களின் பக்கம் போனது தான் காரணம். துவக்கத்தில் திரைப்படங்களை இயக்குவதற்கான சில முயற்சிகளை மேற்கொண்டேன். முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆவணப்படங்களின் பக்கம் போனேன். தொடர்ந்து ஆவணப்படங்களின் பக்கமே காலம் பயணமாகிவிட்டது. திரைப்படங்களுக்கு வந்துவிடவேண்டும் என்கிற விருப்பமும் முயற்சியும் இப்போது தான் கைகூடி இருக்கிறது.
25 ஆண்டுகாலமான மேடைப்பேச்சு மூலம் தமிழ்ச் சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நீங்கள், இந்த மேடைப்பேச்சு வாழ்க்கை சலிக்கவில்லையா ?
ஒரு போதும் இல்லை. சலிப்புற்ற வேலையை செய்தால் தான் நீங்கள் சொல்வது நிகழும். கற்றுக்கொள்வதற்காகவும் கற்றுக் கொடுப்பதற்காகவும் தான் மேடை. மேடை மாபெரும் சவால். “கரணம் தப்பினால் மரணம்” எனும் கவனத்தோடும் ஈடுபாட்டுடனும் 25 ஆண்டுகாலம் தொடர்ந்து பேசுகிறேன் என்றால், என்னுடைய பங்கு மட்டும் காரணம் அல்ல. என்னுடைய குரலுக்கும் சொற்களுக்கும் செவி சாய்த்த தமிழ்ச் சமூகமும் காரணம். ஆண்டுகள் அதிகமாக அதிகமாக சலிப்பை விடவும் பேச்சின் மீதான காதலும் தீவிரமும் பன்மடங்கு பெருகியிருக்கிறது. நான் பேசிமுடித்தவுடன் அரங்கில் கூடியிருந்த ஆயிரம் பேரும் எழுந்து நின்று கைதட்டும் கணத்தை இந்த உலகின் எந்தவொரு அதிகாரமுள்ள அரசமைப்பும் தந்துவிடமுடியாது. அது தான் மக்களின் அங்கீகாரம்.
தற்காலத் தமிழ் திரைப்படங்களை கவனிக்கிறீர்களா?
பார்த்துக்கொண்டே இருக்கிறேன். புதிய படங்களையும் புதிய முயற்சிகளையும் செய்வதற்கான எல்லா அவசரங்களையும் அவசியங்களையும் கோரிக்கொண்டே இருக்கிறது. ஆறு திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடிய தமிழ் திரைப்படங்களை நூறு திரையரங்குகளில் ஆறு நாட்களுக்கு என்று மாற்றிய வணிகச் சதிக்கு எதிராக மாபெரும் கலகத்தை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. மிகப்பெரும் சிறுதொழிலாக அமைந்திருக்கவேண்டிய திரையுலகத்தை பெருவணிக முதலீட்டுக்கு மாற்றி பெரும்பான்மையான கலைஞர்களையும் படைப்பாளிகளையும் திரையுலகுக்கு வெளியே நிறுத்திய வர்த்தகச் சூதாடிகளுக்கு எதிராக நிறைய செய்யவேண்டியிருக்கிறது. குடும்பத்தோடு சேர்ந்து இருந்து பார்க்க இயலாத திரைப்படங்கள் பெருகிக்கொண்டே போகிறது. அது ஒரு சமூகத்தின் எதிர்கால பண்பாட்டுக் கலாச்சார மதிப்பீடுகளுக்கு எதிரானது.
பெரியாரியம், மார்க்சியம், தலித்தியம் போன்ற கருத்தியல்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் சம நேரத்தில் சாதியமும் தமிழகத்தில் தொடர்கிறதே ?
பெரியாரியம், மார்க்சியம், தலித்தியம் போன்றதன் செயற்பாடுகளின் மூலம் தான் சாதித் தீண்டாமையின் தீங்குகள் இங்கு பெருமளவில் குறைந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் சென்ற நூற்றாண்டில் இருந்ததைப் போன்று மிக கீழ்த்தரமானதாகவும், பைத்தியக்காரத்தனமாகவும், மனிதத் தன்மை அற்றதாகவும் இப்போது நிலைமைகள் இல்லை. எனினும் பெருமாற்றத்தை இப்போதும் செய்ய வேண்டி இருக்கிறது. விடுதலைக்குப் பிறகு, ஒருவேளை இந்த சமூகத்தில் அனைவருக்கும் நாகரிகமான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வாழ்க்கை உருவாக்கப்பட்டிருந்தால் இன்று இருக்கும் சாதித் தீண்டாமைகளும் கொடுமைகளும் இல்லாமல் இருந்திருக்கும். எளிய மக்களுக்கு வழங்கப்படாமல், மறுக்கப்படும் உரிமைகளின் இடுக்குகளுக்குள் தான் ஒரு செத்த எலியைப் போல சாதி இன்னும் நாறிக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்த மட்டில் சாதி உயிரற்ற ஒரு பிணம். இறந்த பிணத்தை நடுவீட்டில் வைத்துப் பாதுகாக்கும் வேலையைச் சிலர் செய்கிறார்கள்.
உங்களின் வெளிவரவிருக்கும் “என்று தணியும்” திரைப்படம் குறித்து?
‘தண்டவாளங்களில்
தூக்குக்கயிறுகளில்
இறுதிக் கடிதங்களில்
கொல்லப்பட்ட பின்னும்
கொன்று ஒழிக்க முடியாத
மாந்தர்களின் கதை.’
உடம்பில் ஓடும் இரத்தத்தை வீதியில் பரவி ஓட விடும் வேலையை சாதி செய்கிறது. ஆதிக்க சாதிகளின் அடக்குமுறைக்கு எதிராக உழைத்து வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் கை கோர்க்கவேண்டிய அவசியத்தை இந்த திரைப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறேன். தீண்டாமையும்,அடக்குமுறைகளும், படுகொலைகளும் அவற்றுக்கான எதிர்வினைகளும் அல்ல படத்திற்கான மையக் கருத்து. அநீதிகளுக்கு எதிரான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமையே இதன் ஆதார சுருதி. அந்த ஒற்றுமை நிகழுமானால் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த எதிர்காலமும் மாறும். அது சிறப்பும் சமத்துவமும் கொண்டதாக இருக்கும்.
மார்ச், 2016.