''தகுதியோடு வா என்று சொன்னார் கமல்''

நேர்காணல் : சரவணன் ராஜேந்திரன்
சரவணன் ராஜேந்திரன்
சரவணன் ராஜேந்திரன்
Published on

தொண்ணூறுகளில் வெளிவந்த இளையராஜாவின் காதல் பாடல்களையும் அன்றைய சர்க்கஸ் வாழ்க்கையையும் காதலால் இணைத்து ‘மெஹந்தி சர்க்கஸ்' படத்தை இயக்கியிருக்கிறார், சரவணன் ராஜேந்திரன். இயக்குநர் ராஜு முருகனின் அண்ணன்.

ஜோக்கர் படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். மெஹந்தி சர்க்கஸ் திரைக்கதையை அண்ணனும் தம்பியும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். அந்திமழைக்காக அவரை சந்தித்ததிலிருந்து....

"முருகன் நிறைய பயணம் செய்யக் கூடியவர். அப்படிப் பயணிக்கும்போது கத்தி வீசும் சர்க்கஸ் பெண் ஒருவரைப் பார்த்ததாக என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பழைய கேஸட் கடை நடத்துபவரைப் பற்றிய கதை ஒன்றை நான் வைத்திருந்தேன். இரண்டையும் இணைத்து இந்தக் கதையை நாங்கள் இருவரும் உருவாக்கினோம். 90 களில் சர்க்கஸும், கேஸட் கடையும் உச்சத் தில் இருந்தன. ஆனால் அதே காலத்தில் தான் அதன் சரிவும் தொடங்கியது. சர்க்கஸ் நடத்தியவர்கள் கூடாரத்தோடு காலி செய்யப்பட்டு விரட்டப்படும்போது அவர்கள் என்ன செய்வார்கள்? இப்படி வீழ்ச்சியடைந்த தொழிலில் ஈடுபட்டவர்கள் இன்றைக்கு என்ன ஆனார்கள்? இப்படிப் பல தேடல்களையும் சாதிய, வர்க்க வேறுபாடுகளையும் கதைக்குள் வைத்து மக்களிடம் சென்று சேரும் பாலமாக இளையராஜா இசையை வைத்தோம்.

படத்தில் வரும் ஃபாதர் பெண்கள் அணியும் கைக்கடிகாரம் ஒன்றை பத்திரமாக வைத்திருப்பார்.
 சாதி, மதத்தை தாண்டிய மனிதம் என்ற உன்னதத்தை அதன் மூலம் சொல்ல விரும்பினோம்.
அடுத்து இந்த படம் அம்மாவின் காதலை புரிந்து கொண்டு நாயகனைத் தேடி வரும் மகளின் கதை. இப்படி படத்திற்குள் நிறைய விஷயங்களை வெளிப்படையாக வைக்காமல் மக்கள் புரிந்து கொள்ள வைத்தோம். ஆனால், சினிமா விமர்சகர்களால் இந்த விஷயங்களை கவனிக்க முடியவில்லை.

உதவி இயக்குநராக இருந்த காலத்தில் சம்பளம் கிடைக்காது. ஒருவேளை, என்றாவது சம்பளம் என்று ஒன்று வருமானால், உதாரணமாக முப்பதாயிரம் ரூபாய் கிடைக்கும்போது, நமக்கு மூன்று லட்ச ரூபாய் கடன் இருக்கும். நல்ல புத்தகத்தை வாங்க மனம் ஏங்கிக் கிடக்கும். அதை வாங்கப் பணமிருக்காது. நல்ல சினிமா வெளியாகியிருக்கும். அதைப் பார்க்க எங்காவது நூறு ரூபாய் புரட்டிக் கொண்டு கிளம்பும்போது நம்முடைய சக பயணி ஒருவர் ஐம்பது ரூபாய் கிடைக்குமா என்று கேட்பார். சினிமாவை விட நமக்கு அவர் முக்கியம். இப்படி உதவி இயக்குநர் வாழ்க்கை என்பது கடினமான காலகட்டம் தான், எல்லோருக்குமே. அந்த சமயத்தில் வாழ்க்கையை நடத்த வேறு சில வேலைகளும் பார்க்க வேண்டியிருக்கும். சீரியலுக்கு வசனம் எழுதுவோம், பெயர் வராமல். வேறு மொழிகளுக்கு நம்முடைய கதையைக் கொடுக்க வேண்டி வரும். இப்படி சர்வைவலுக்காக சில மாதங்கள் வேறு பக்கம் போகும் போது நம்முடைய சினிமா பணிகளில் பின் தங்கியிருப்போம். பிறகு அதை முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

விருமாண்டி படம் முடிந்தவுடன் எனக்கு பட வாய்ப்பு கிடைத்தது. ஆபீஸ் போட்டாகி விட்டது. நந்தா, பூஜா நடிப்பில் கார்த்திக் ராஜா இசையமைக்க என்று வேலைகளைத் தொடங்கி விட்டோம். படம் கைவிடப்பட்டது. மனசு முழுக்க வலி. ஒரு வாரம் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆபீஸ் போட்டவுடன் நிறைய வாழ்த்துகள் வரும். நம்மை சந்திக்க பலர் வருவார்கள்.  நம்மைச் சுற்றி எப்போதும் பத்துப் பேர் இருப்பார்கள். படம் நின்றுவிட்டது என்றவுடன் அனைவரும் காணாமல் போய்விடுவார்கள், சில நெருங்கிய நண்பர்களைத் தவிர. நாம் தனியாளாக உணர்வோம். முதல் நாள் வரை ராஜாவாக இருந்தவன் மறுநாள் டீக்கு
சிங்கி அடிப்பது மாதிரி.  அந்த வலியைக் கடக்க முதன்முறை மிகச் சிரமமாக இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து இப்படி நடந்தபோது, ஏன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய தவறு என்று எதுவுமில்லை. தயாரிப்பாளர்கள் தரப்பிலும் எந்தத் தவறுமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தள்ளிப்போகிறது என்பதை புரிந்து கொண்டேன். ஐந்தாவது, ஆறாவது முறை நடந்தபோது எனக்குள் புத்தன் ஒருவன் உருவாகிவிட்டான். அடுத்த நாளே சகஜ நிலைமைக்கு திரும்பிவிட்டேன். நம்முடைய நோக்கத்திற்காக பயணிக்கிறோம். பயணத்தை
ரசித்து தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தொடர்வோம். ஒவ்வொரு முயற்சியிலும், சில புதிய நண்பர்களும், புதிய அனுபவங்களும் கிடைக்கின்றன. நம்மை செழுமைப்படுத்திக் கொள்வோம் என்று பயணித்தேன்.

10 ஆம் வகுப்பு படிக்கும்போது வேட்டி சட்டை அணிந்துதான் பள்ளிக்குப் போவேன். 'அரசியல்வாதி மாதிரி வந்திருக்க' என்று உடற்பயிற்சி ஆசிரியர் சொல்வார். ஒரு நாள் யார் யாருக்கு என்னென்ன தெரியும் செய்து காட்டுங்கள் என்றார் அவர். நான் உரையாற்றினேன். அன்றைக்கு வந்து கொண்டிருந்த அனைத்து இதழ்களையும் படித்து அதன் மூலம் நான் உருவாக்கிக்கொண்ட அரசியலைப் பேசினேன். சார் என்னைப் பாராட்டினார். எனக்குப் பெருமையாக இருந்தது. கூடவே இதற்காக மேலும் படிக்க ஆரம்பித்தேன். கவிதை, நாவல் என்று வாசிக்க ஆரம்பித்த பின்னர் நிறைய மேடைகளில் பேசத் தொடங்கினேன். திராவிட இயக்க மேடை, கம்யூனிஸ்ட் மேடை, தமிழ் தேசிய மேடை என்று தொடர, அதன் மூலம் கவிஞர் யுகபாரதி பழக்கமானார். அதிலிருந்து கவிதை, சினிமா என்று வந்துவிட்டேன். இவை அனைத்தும் அந்த ஆசிரியரால் நிகழ்ந்த இரசாயன மாற்றம் தான்.

பச்சையப்பன் கல்லூரியில் படித்தபோது நிறைய பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பேன்.
கமலஹாசனின் அம்மா ராஜலட்சுமி நினைவு பேச்சுப் போட்டிக்கும் போனேன். 13 சுற்றுகள் கொண்ட அந்த போட்டியில் வென்று கமல்ஹாசன் கையால் பரிசு வாங்கினேன். முதல் பரிசு ஐயாயிரம் ரூபாய் காசோலை கொடுத்தார்கள். எனக்கு வங்கிக்கணக்கே கிடையாது. அந்தக் காசோலையை பணமாக்கியது சுவராஸ்யமான தனிக் கதை. இதன் தொடர்ச்சியாக கமல் பிறந்த நாளில் மைம் ஒன்றை செய்தோம். இரண்டு நாள் கழித்து கமல் எங்களை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். மைம் பற்றி அதன் தொடக்கம், தாக்கம் குறித்து அவர்
சொன்ன தகவல்கள் அனைத்தும் அதற்கு முன்பாக நான் கேட்டறியாதவை. 'உங்களில் யாருக்காவது அந்த ஆர்வம் இருந்தால், நான் உங்களை பிரான்ஸ் அனுப்புகிறேன்!' என்றார். யாரும் கை உயர்த்தவில்லை. நான் மட்டும் கையைத் தூக்கி
'சினிமா' என்றேன். சினிமாவுக்கு புறவாசல் வழியாக வரக்கூடாது என்றார். அதற்கான அர்த்தம் அன்று எனக்குப் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது,
சினிமா வாய்ப்பு கேட்க வேண்டுமானால் அதற்கான தகுதியோடு வா என்று சொல்லியிருக்கிறார் என்று. கமலின் வார்த்தை என்னை நிறைய யோசிக்க
 வைத்தது. அதன் பிறகு தான் உதவி இயக்குநராவதற்கு என்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.

கவிஞர் நா.முத்துக்குமார், ஒருநாள் 'பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர் வேலை காலியாக இருக்கிறது, நான் உன்னைப் பற்றி சொல்லியிருக்கிறேன், போய்ப்பார்' என்றார். அவரிடம் சேர்ந்துவிட்டேன். சினிமாவை இயல்பான விஷயமாக சொல்லிக் கொடுத்தவர் பாலுமகேந்திரா. முதல் நாள் காபி குடித்து கீழே வைத்தவுடன், நம்முடைய அலுவலகத்தில் நாம் தான் காபி டம்ளரை கழுவி வைக்க வேண்டும். அலுவலக உதவியாளர்கள் உண்டு, ஆனால் நாம் குடித்த டம்ளரை நாம் தான் கழுவ வேண்டும் என்றார். அதே மாதிரி நாம் தவறு செய்தால் பயங்கரமாகத் திட்டினால் மனசு கனமாக வலிக்கும். ஆனால் அப்படி திட்டாமல் அதை பாலுமகேந்திரா சொல்லும் விதத்தில் நாலு நாள் தூக்கம் பறிபோகும். திரும்பவும் அந்தத் தவறை நாம் வாழ்க்கையில் செய்யவே மாட்டோம். அதை அழகாகக் கற்றுக்கொடுத்தவர் பாலுமகேந்திரா''

என்று நினைவுகளைப் பகிர்கிறார் சரவணன் ராஜேந்திரன்.

மே, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com