கோபத்தால் தயாரிப்பாளர் ஆனேன்!

கோபத்தால் தயாரிப்பாளர் ஆனேன்!
Published on

ஒரு பெரிய தயாரிப்பாளரின் மகன் என்றபோதும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் பல மணி நேரம் காத்திருந்து அர்ஜூனிடம் என்னை உதவி இயக்குநராகச் சேர்த்துவிட்டார் என் அப்பா. நமக்காக இவ்வளவுதூரம் இறங்கி வந்திருக்கிறாரே அவருக்காகவாவது கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என நினைத்தேன் என்று சொன்னவர் விஷால். அதன்பின்பு அவர் கதாநாயகனாகி தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துவிட்டார். அதோடு நில்லாமல், அவர் நடித்த சில படங்களில் ஏற்பட்ட கசப்பு காரணமாக பலரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்திருக்கிறார். ஆம் இப்போது அவரே தயாரிப்பாளராகவும் மாறிவிட்டார். தான் முதன்முறையாகத் தயாரித்திருக்கும் பாண்டியநாடு பட வெளியீட்டு வேலைகளில் பரபரப்பாக இருந்தவரிடம் அந்திமழைக்காகப் பேசினோம்.

நீங்களே தயாரிப்பாளராகவும் இருந்து கொண்டு அஜீத் மற்றும் கார்த்தி படங்கள் வெளிவருகிற நேரத்தில் உங்கள் படத்தையும் வெளியிடத் துணிந்தது எப்படி?

    இந்தப்படத்தின் மீதான நம்பிக்கையே முதல்காரணம். அடுத்து, இதுவரை என் படங்கள் தீபாவளி நேரத்தில் வெளியானதில்லை. அந்தக்குறையைப் போக்கும் விதமாகவும்  எனக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருக்கும் என் குடும்பத்துக்கு நான் கொடுக்கும் தீபாவளிப் பரிசாக இந்தப்படம் இருக்கும் என்பது ஒரு காரணம். இவற்றையெல்லாம் தாண்டி இப்போதெல்லாம் படத்தை எடுப்பதை விட வெளியிடுவதுதான் அதிக சிரமம். இந்தப்படத்தை வெளியிட அன்பு அண்ணன் மற்றும் வேந்தர்மூவிஸ் நிறுவனத்தினர் எனக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். எனவே துணிந்து இறங்கிவிட்டேன்.

ஒரு நடிகராக வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்துவிட்டுப் போகாமல் ஏராளமான தலைவலிகளைக் கொண்ட தயாரிப்பாளர் ஆனது எதனால்?

    நீங்கள் சொல்கிற மாதிரி நான் முடிவெடுத்தால் வருடத்துக்கு நான்கு படங்கள், அவை வெளியாகின்றனவோ இல்லையோ அதுபற்றிக் கவலைப்படாமல் நடித்துக்கொண்டிருக்கலாம். நான் சினிமாவை ஒரு தொழிலாக மட்டும் பார்த்திருந்தால் அப்படிச் செய்திருப்பேன். இந்த சினிமாவை நான் மிகவும் நேசிக்கிறேன். பணம் சம்பாதிப்பதைத் தாண்டி நல்ல படங்களில் நடிக்கவேண்டும்; நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு இருக்கிறேன். அதனால் நான் நடித்த படங்களில் சிக்கல்கள் ஏற்பட்ட நேரத்தில் கடும் கோபத்துக்கு ஆளானேன். அதன் விளைவுதான் நானே தயாரிப்பாளர் ஆனது.

அப்படி என்னதான் நடந்தது?

    நான் நடித்த சமர் படத்தை வெளியிடுகிற நேரத்தில் அந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்கெனவே இருந்த சிக்கல்கள் காரணமாக அந்தப்படம் வெளியாவதில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதேபோல சுந்தர்சி இயக்கத்தில் நான் நடித்திருக்கும் மதகஜராஜா படத்தையும் வெளியிடமுடியவில்லை. அதனால் அந்தப்படத்தை நானே பொறுப்பெடுத்து வெளியிட முடிவுசெய்தேன். அப்போது நான் ஒரு கதாநாயகன் என்பதை மறந்துவிட்டு அவர்கள் கைகாட்டிய இடங்களுக்கெல்லாம் ஓடினேன். அப்படியும் அது நடக்கவில்லை. நான் ஆறேழு மாதங்கள் கஷ்டப்பட்டு தயாரான ஒரு படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவேதான் இனிமேல் நானே படங்களைத் தயாரிப்பது என்கிற முடிவுக்கு வந்தேன்.

இனிமேல் வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க மாட்டீர்களா?

  அந்தத் தயாரிப்பாளருக்கு முந்தைய படங்களில் சிக்கல் ஏதும் இல்லாமலிருக்க வேண்டும், என் படம் வெளியாகும் வரை வேறு படங்களைத் தயாரிக்கக்கூடாது என்கிற நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் நடிப்பேன்.

பாண்டியநாடு படம் தயாரிக்கத் திட்டமிட்டது பற்றி..?

    மதுரைப் பின்னணியில் அப்பா மகன் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை இது. அவன் இவன் படத்தில் நடித்ததில் கிடைத்த அனுபவங்கள் இந்த வேடத்தில் நடிக்க எனக்கு உறுதுணையாக இருந்தன. அந்தப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் நான் இந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பேன் என்று சுசீந்திரனும் முடிவு செய்தாராம். சுசீந்திரன் என்னிடம் கதை சொன்தும் இந்தப்படத்தை நாமே தயாரிக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டேன்.

அப்பா வேடத்தில் பாரதிராஜாவை நடிக்க வைத்தது ஏன்? அவரோடு நடித்த அனுபவங்கள்..?

அது சுசீந்திரனின் முடிவு. அவர்தான் என்னிடம் இந்த வேடத்தில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அவர் நடிப்பாரா? என்கிற சந்தேகம எனக்கு இருந்தது. ஆனால் சுசீந்திரன் கதை சொன்னதும் நடிக்க ஒப்புக்கொண்டார். முப்பதுவயதில் ஒருவரை அடிக்க வேண்டும் என்கிற கோபம் வந்தால் அடித்துவிடலாம். எழுபது வயதில் அதே கோபம் மனதில் இருக்கும். உடலில் வலு இருக்காது. அப்போது ஏற்படுகிற வலியை நூறுசதவிதம் வெளிப்படுத்தினார் பாரதிராஜா. அதை அருகிலிருந்து பார்த்து நான் வியந்துபோனேன். இந்தப்படம் எனக்கு சண்டக்கோழி மாதிரி போல அமையும் என்று நம்புகிறேன்.

லட்சுமிமேனன் பற்றி..?

 படத்தில் எங்கள் ஜோடிப்பொருத்தம் சிறப்பாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். திறமையான நடிகை. இந்தப்படம் அவருடைய கேரியரிலும் முக்கியமான படமாக இருக்கும்.

படப்பிடிப்பின் போது பெரும்பாலான நேரம் மரத்தடியிலேயே உட்கார்ந்திருந்தீர்களாம். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்கும்போதும் அப்படியே செய்வீர்களா?

    சினிமாவில் நடிக்கத் தொடங்கிய போது எனக்கு என் அப்பா கொடுத்த முக்கியமான அறிவுரையே, தயாரிப்பாளர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதுதான். அதை அப்படியே கடைப்பிடித்து வருகிறேன். எந்தப்படமாக இருந்தாலும் நான் எளிமையாக நடந்துகொள்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன். நான் எளிமையாக இருந்துகொண்டேனே தவிர இந்தப்படத்தில் ஒரு தயாரிப்பாளராக மற்ற எல்லோருக்கும் உரிய வசதிகளை நிறைவாகச் செய்துகொடுத்தேன். இந்தப்படத்தில் நடிக்க வந்தபோது பாரதிராஜா சார், எதற்கு இவ்வளவு செலவு செய்கிறீர்கள்?என்று கேட்கிற அளவு நடந்துகொண்டேன்.

இயக்குநராவது எப்போது?

    என்னுடைய பயணத்தில் முதலில் இயக்குநர் அடுத்து தயாரிப்பாளர் என்பதுதான் திட்டம். திடீரென தயாரிப்பது முன்னால் வந்துவிட்டது. இயக்குநராவதும் நடக்கும். எப்போதென்று சொல்லத் தெரியவில்லை.

உங்கள் திருமணம் எப்போது?காதல் திருமணமாக இருக்குமா?

 திருமணம் பற்றி இப்போது சிந்திக்கவில்லை. அதற்கான நேரம் வரும்போது நடக்கும். நடிகையைத் திருமணம் செய்யப்போகிறீர்களா? என்று கேட்கிறார்கள். நடிகையைத் திருமணம் செய்தால் என்ன தவறென்று நான் கேட்கிறேன். நான் திருமணம் செய்யப்போகிறவர் நடிகையாகவும் இருக்கலாம்.

உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேறு நடிகர்களை வைத்தும் படம் தயாரிப்பீர்களா?

 அப்படியும் திட்டம் இருக்கிறது. திறமையுள்ள பல இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிற நிறுவனமாக இந்த நிறுவனம் இருக்கும்.

அடுத்து..?

    தீராதவிளையாட்டுப்பிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கவிருக்கிறேன். அந்தப்படத்தையும் எங்கள் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.

நவம்பர், 2013

logo
Andhimazhai
www.andhimazhai.com