குடும்பப் பாங்கான வேடங்கள் போர் !

குடும்பப் பாங்கான வேடங்கள் போர் !
Published on

சில்க்ஸ்மிதாவைப் போன்ற மயக்கும் கண்களுக்குச் சொந்தக்காரர் பிந்துமாதவி. விளம்பரப்படங்களில் நடிக்கத் தொடங்கி அதன்பின் திரையுலகுக்கு வந்த அவருக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு. அதன்பின் வெப்பம் படத்தின் மூலம் தமிழகத்துக்கு வந்தார். அதற்குப் பிறகு, கிருஷ்ணா ஜோடியாக நடித்த கழுகு,விமல் ஜோடியாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களின் வெற்றி. இப்போது கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார். எழில் இயக்கத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருக்கும் தேசிங்குராஜா படத்தில் இவர்தான் நாயகி. முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப்படத்தில் மிக அழகாக இருந்த அவரிடம் அதையே கேள்வியாக்கி பேட்டியைத் தொடங்கினோம்.

இந்தப்படத்தில் மட்டும் கூடுதல் அழகாக இருக்கிறீர்களே...

 கழுகு படத்தில் கூலித்தொழிலாளி வேடம், கேடி பில்லா கில்லாடி ரங்காவில் திருச்சியில் வசிக்கிற மிடில் கிளாஸ்பெண் வேடம். எனவே இவ்விரண்டு படங்களிலும் எனக்கு மேக்கப்பே இல்லை. கேடிபில்லாவில் கொஞ்சமாக மேக்கப் போட்டுக்கொள்கிறேன் என்று கேட்டேன். அதற்குக்கூட இயக்குநர் பாண்டிராஜ் ஒப்புக்கொள்ளவில்லை.

தேசிங்கு ராஜாவில் எனக்குத் தேவையான அளவு மேக்கப் போட்டிருக்கிறேன். அதனால்தான் எல்லோருக்கும் அப்படித் தெரிகிறது.

தேசிங்குராஜா பற்றி..?

    படத்தில் என் கேரக்டரின் பெயர் தாமரை. குடும்பப்பாங்கான வேடம். படத்தில் விமலைக் காதலிப்பேன். அதில் ஒரு சிக்கல் வரும். அவற்றிலிருந்து எப்படி மீண்டுவருகிறோம் என்பது கதை. இந்தப்படத்தின் இயக்குநர் எழிலுடன் வேலை செய்தது இனிமையான அனுபவம். படப்பிடிப்புத் தளத்தில் அதிர்ந்துகூடப் போசமாட்டார். அவ்வளவு மென்மையானவர். அவருடைய உதவி இயக்குநர்களைக்கூட அவர் திட்டி நான் பார்த்ததில்லை.

விமலுடன் இரண்டாவது படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறீர்கள். உடனே கிசுகிசுக்கள் வந்துவிடுமே?

    ஒரு ஹீரோவுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்தால் இப்படியான கிசுகிசுக்கள் வருமென்று நானும் கேள்விப்பட்டேன். அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் நல்லதொரு படத்தை இழக்க எனக்கு விருப்பமில்லை.

தெலுங்கில் வெற்றி பெற்று தமிழகம் வந்தீர்கள். இங்கு இரண்டுநாயகிகள் இருக்கும் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வது எதனால்?

    இரண்டு நாயகிகள் படமென்றாலும் என்னுடைய வேடம் மற்றும் காட்சிகள் பற்றிக் கேட்டுக்கொண்டுதான் நடிப்பேன். கேடிபில்லாவில் நீங்களே பார்த்திருப்பீர்கள்.எனக்கு உள்ள முக்கியத்துவம் சரியாகவே இருந்தது.இதுமட்டுமின்றி இரண்டு ஹீரோக்கள் இருக்கும் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றால் அதில் தவறேதும் ஏற்பட வாயப்பில்லை. ஒரு ஹீரோ இரண்டு ஹீரோயின்கள் என்றால்தான் ஒருவருக்குக் கூடுதல் இடமும் மற்றவர்க்குக் குறைவான வாய்ப்பும் கிடைக்கும் ஆபத்து இருக்கும்.

வெப்பம் படத்தில் நடித்த நேரத்திலேயே கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டீர்கள். அப்படியிருந்தும் உங்களுக்குக் குடும்பப் பாங்கான வேடங்களே அமைவது பற்றி?

    எனக்கும் தெரியவில்லை. என் இயக்குநர்களிடம், ஹோம்லியான கேரக்டருக்கு என்னை எப்படித் தேர்வு செய்தீர்கள்?எனக்  கேட்கலாம் என்று நினைத் ததுண்டு. ஆனால் கேட்டதில்லை. நான் கவர்ச்சிகரமாகவும் நடிக்கத் தயார்தான். அதற்காக இப்படித்தான் வேண்டும் என்று நானே தேடியலைய முடியாது. அப்படிப்பட்ட வாய்ப்பு வருகிற நேரத்தில் நான் நடிப்பேன். குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துக்கொண்டேயிருந்தாலும் போரடிக்குமே.

தேசிங்குராஜா படத்தையடுத்து நடிக்கும் படங்கள்..?

    விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் புதியபடம். இன்னும் பெயர் வைக்காத அப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்துகொண்டிருக்கிறது.  அதைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ஒரு படத்திலும் எஸ்பிபி.சரண் தயாரிப்பில் ஆதி நாயகனாக நடிக்கும் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன்.

சென்னையிலேயே குடியேறுகிற திட்டம் வைத்திருக்கிறீர்களா?

    நான் கடந்த பல மாதங்களாகவே சென்னையில்தான் இருக்கிறேன். உடனே தயாரிப்பாளர் செலவில் ஹோட்டல் வாசம் என்று நினைக்காதீர்கள். இங்குள்ள ஒரு உறவினர் வீட்டில்தான் இருக்கிறேன். விரைவில் தனியாக ஒரு வீடு எடுத்துவிடவேண்டியதுதான்.

சென்னையில் உங்களுக்கு ஒரு பாய்ப்ரெண்ட் இருப்பதாகச் சொல்கிறார்களே?

அப்படியா? அப்படிச் சொல்கிறவர்களிடம் அவர் யார் என்றும் கேட்டுச்சொல்லுங்களேன். நானும் பார்த்துக் கொள்கிறேன்.  

ஜூலை, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com