“கவனித்துதான் கற்றுக்கொண்டேன்!”

“கவனித்துதான் கற்றுக்கொண்டேன்!”
Published on

சினிமாவை நேசித்து, ரசித்துத் தான் இதற்குள் வந்திருக்கின்றேன். சினிமாவிற்குள் வந்தது மிகப் பெரிய வரப்பிரசாதம். அதனால், இதை ஒரு கடமையாகவோ, வேலையாகவோ பார்ப்பதில்லை. ஒவ்வொரு காட்சியையும் ரசித்துத்தான் எடுப்பேன்!'' என்கிற தேனி ஈஸ்வர், அவதானிப்பு மனிதனை எந்தளவிற்கு உயர்த்தும் என்பதற்கு ஓர் அடையாளம். தேடலாலும், தீரா வாசிப்பாலும் எதையும் சாத்தியப்படுத்தலாம் என்பதற்கு ஒரு நிகழ்கால நம்பிக்கை.

‘அழகர்சாமியின் குதிரை', ‘தரமணி', ‘அச்சம் என்பது மடமையடா', ‘மேற்குத் தொடர்ச்சிமலை', ‘பேரன்பு', ‘நாச்சியார்', ‘ஏலே', ‘கர்ணன்', ‘பேச்சிலர்' என நேரெதிர் கதைக்களங்களிலும் தனது ஒளிப்பதிவால் அசத்தி வருபவரான ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரிடம் பேசினோம்.

 ‘‘தேனி தான் சொந்த ஊர், பள்ளிப் படிப்பு எல்லாம் அங்கு தான் படித்தேன். நான் ஃபர்ஸ்ட் ரேங்க் ஸ்டூடண்ட் எல்லாம் இல்லை.. சராசரியாகப் படிக்கக் கூடியவன். போட்டோகிராபி மீதான ஆர்வம், எனக்கு எப்படி வந்ததென்று இதுவரை எனக்கே சரியாகத் தெரியவில்லை. இயல்பாகவே எனக்குள் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்,''என்கிறார், நிதானமாக.

மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வரும் தேனி ஈஸ்வர், தனது ஆரம்பக்கால வாழ்க்கை குறித்துப் பேச ஆரம்பித்தார், ‘‘அப்பா கால்நடை மருத்துவர் என்பதால், எனக்கும் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதேபோல், பைலட் ஆகவேண்டும், சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேண்டும் என்று ஆசைகளும் இருந்தன. இருப்பினும் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் தான் படித்தேன். அதில் பெரிய விருப்பம் இல்லை. அந்த நேரத்தில், வீட்டிலிருந்த  சிறு காமிராவில் நிறைய போட்டோக்களை எடுத்தேன். அதைப் பார்த்த என் மாமா, 'யாஷிகா எலக்ட்ரோ 35' என்ற கேமராவை முதன் முதலாக வாங்கிக் கொடுத்து, சில அடிப்படியான விஷயங்களை மட்டும்

சொல்லிக் கொடுத்தார். அப்போது கேமராவை எப்படி இயக்குவது என்பது பற்றியும், அது எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றிய அறிவியலும் எனக்குத் தெரியாது. இதனால், போட்டோகிராபி தொடர்பாக வரும் மாத இதழ்கள், புத்தகங்கள் என எல்லாவற்றையும் வாங்கிப் படித்து, கம்போசிசன், ஃபிலிம், கேமரா பற்றித் தெரிந்து கொள்ளத் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில், ஃபிலிம் கேமராவுக்கு பதிலாக டிஜிட்டல் கேமராக்கள் வர ஆரம்பித்தது. அப்போது போட்டோகிராபி என்பதே கொஞ்சம் செலவு பிடிப்பதாக இருந்தது. அம்மா, அப்பாவும் மாமாவும் கொஞ்சம் உதவியாக இருந்தனர். இருந்தாலும் அப்பாவிற்கு நான் போட்டோகிராபராக ஆனது பிடிக்கவில்லை!'' என்றவர், வாழ்க்கையின் அடுத்தடுத்த நகர்வுகளை விரிவாகப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.

‘‘இரண்டாயிரத்திற்குப் பிறகு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புப் துறை அமைச்சகம் தேசிய அளவில் புகைப்படப் போட்டி ஒன்றை நடத்தியது. அது தான் நான் முதன் முதலாகக் கலந்து கொண்ட போட்டி. அதில் இரண்டாவது பரிசு பெற்றேன். அதனைத் தொடர்ந்து, கொடாக் ஃபிலிம் கம்பெனி தேசிய அளவில் புகைப்படப் போட்டி ஒன்றினை நடத்தியது. அதில் கலந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் வென்றேன். அதேபோல், அப்போது வந்து கொண்டிருந்த இதழில் வளர்ந்து வரும் புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். அதில் நான் எடுத்த புகைப்படங்களும் வெளிவர ஆரம்பித்தன. அதன் பின்னர் சர்வதேச அளவில், ஃபிரான்ஸில் நடைபெற்ற புகைப்படப் போட்டியில் கலந்து கொண்டு இறுதி தேர்வு வரை சென்றேன். மேலும், நிக்கான் போட்டோகிராஃபியும் சிங்கப்பூர் சுற்றுலாத் துறையும் சேர்ந்து நடத்திய போட்டியில், இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட ஏழு புகைப்படக் கலைஞர்களில் நானும் ஒருவன். தேர்வு செய்யப்பட அனைவரும் சேர்ந்து, சிங்கப்பூர் சுற்றுலாத் துறைக்குப் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்தோம். இதற்காக சிங்கப்பூருக்குச் - சென்றேன். அதேபோல் தமிழக சுற்றுலாத் துறைக்கும் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்தேன்.

ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று சென்னைக்கு வந்தபோதே, எனக்குத் திருமணமாகிவிட்டது.

சொந்தத்திலேயே திருமணம் செய்துகொண்டேன். குடும்பம், வருமானம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் சென்னை வந்தபோது, இயக்குநர் கரு.பழனியப்பன் அறையில் தங்கினேன். அவர் தான் எனக்கு அடைக்கலம் கொடுத்தார். வந்த ஓரிரு வருடங்களில் பெரிய அளவுக்குக் கஷ்டம் எதுவும் இல்லை. அதற்குப் பின்னரான வருடங்களில் கொஞ்சம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நண்பர்கள் பாஸ்கர் சக்தியும், ரா.கண்ணனும் ஏற்கெனவே தெரியும் என்பதால், அவர்கள்  உதவிகள் செய்தனர். முக்கியமான விஷயம் என்னவென்றால், கவிஞர் வைரமுத்து எழுதிய, கருவாச்சிகாவியம், கள்ளிக்கட்டு இதிகாசம், மூன்றாம் உலகப்போர், அவரின் சிறுகதை தொகுப்பிற்கான புகைப்படங்கள், அவருக்கான போர்ட்ஃபோலியோவுக்கு எல்லாம் நான் தான் புகைப்படம் எடுத்துக் கொடுத்தேன். அதேநேரத்தில் புகைப்படம் சம்பந்தமாக பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருந்தேன். விகடனில் வந்த என்னுடைய புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, சினிமா தொடர்பான நிறைய வேலைகள் வர ஆரம்பித்தன. அந்த சமயத்தில் பி.சி.ஸ்ரீராம், கே.வி.ஆனந்த், மணிகண்டன், தங்கர்பச்சான் போன்றவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றுவதற்காக முயற்சி செய்து முடியாமல் போய்விட்டது. ஒருகட்டத்தில் எனக்கே ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. நாமே ஒளிப்பதிவாளராகிவிடலாம் என்று.

அப்பொழுதுதான், ‘கற்றது தமிழ்', ‘வெண்ணிலா கபடிக் குழு', ‘சிவப்பதிகாரம்', ‘பாண்டிய நாடு' போன்ற ஆறேழு படங்களுக்கு புரோமோஷன் ஒர்க் செய்துகொடுத்தேன். ‘கற்றது தமிழ்' படத்தின் புரோமோஷன் ஒர்க் அப்போது பயங்கர ரீச். அதைப் பார்த்த பாலுமகேந்திரா சார் அழைத்து, வாழ்த்துக் கூறினார். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. உடனே இயக்குநர் ராம் என்னை அழைத்துச் சென்று பாலுமகேந்திரா சாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்பொழுது என்னுடைய புகைப்படங்களையும் எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தேன். ஒரு பத்துப் பதினைந்து படங்களை மட்டும் நான்கு மணி நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் புகைப்படங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டார். ‘எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம், எதாவது வேண்டுமானாலும் கேட்கலாம்' என்றவர், என்னுடைய மொபைல் நம்பரையும் வாங்கிக் கொண்டார். அதற்குப் பின்னர் நிறைய முறை அவரை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர் நடத்திய ‘கனவுப் பட்டறை'யில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு ஒருமுறை என்னுடைய புகைப்படங்களை அறிமுகப்படுத்தி வைத்து வகுப்பு எடுத்தார். பாலுமகேந்திரா சாருடைய இறுதிக் காலங்களில் அவரை நான் எடுத்த புகைப்படங்கள் தான் இன்று அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வெண்ணிலா  கபடிக் குழு படத்திற்கான புரோமோஷனுக்கு புகைப்படம் ஒன்று எடுத்தேன். அதைப் பார்த்த சுசீந்திரன், ‘அடுத்த படத்தில் நிச்சயம் நீங்கள் தான் ஒளிப்பதிவாளர்' என்றார். இப்படித்தான்  ‘அழகர் சாமியின் குதிரை' திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அப்போதிருந்த ஒளிப்பதிவாளர் சங்கத்தின் நடைமுறை விதிகள் காரணமாக, பாலுமகேந்திரா சாரின் உதவியை நாடவேண்டியதாக இருந்தது. உடனே அவர் ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு சிபாரிசுக் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்தார். அதில், என்னுடைய தொழில்நுட்ப அறிவு, நிறங்கள் குறித்த என்னுடைய பார்வையையும் எழுதியிருந்தார். அதேபோல், சத்யஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சுபமித்ர ராவ் யாரிடமும் பணியாற்றவில்லை என்றும், அவர் ஊரில் ஸ்டுடியோ நடத்திக் கொண்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி எழுதினார். சுபமித்ர ராவுடன் என்னை ஒப்பிட்டும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை சங்கத்திடம் கொடுத்தபோது, என்னை நேர்காணலுக்கு வரச்சொன்னார்கள். நேர்காணலில் கேமரா தொழில்நுட்பம் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அதில் தேர்ச்சி பெற்ற பிறகு ஒளிப்பதிவாளருக்கான அட்டையைக் கொடுத்தனர். அதற்குப் பிறகு தான், ‘அழகர்சாமியின் குதிரை'யில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தேன். யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றவில்லை என்பதால், நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக நிறையப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன்.

முன்னர் விகடனில் வேலை பார்த்த போது, சினிமா தொடர்பான அசைன்மென்டுகளை அதிகம் வாங்குவேன். ஏனெனில் படப்பிடிப்பு நடக்கின்ற இடங்களுக்குச் சென்று, படப்பிடிப்பு எப்படியெல்லாம் நடக்கிறது, கேமராவை எப்படிக் கையாள்கிறார்கள், ட்ரோனை எப்படிக் கையாள்கிறார்கள், அதில் கேமராவை எப்படிப் பொருத்துகிறார்கள் என்பதையெல்லாம் கவனிப்பேன். சொல்லப்போனால், ஏகலைவன் மாதிரி அவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டிருப்பேன். அமீர், பாலா போன்ற நிறைய இயக்குநர்களின் படங்களை ஆரம்பத்தில் வேடிக்கை பார்த்திருக்கிறேன். கவனிப்பது என்பது இயல்பாகவே எனக்குள் இருந்ததால் கவனித்துக் கவனித்துத்தான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.

‘அழகர் சாமியின் குதிரை' திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ‘‘முதல் படம் ஷூட்பண்ற மாதிரி தெரியல, ரொம்ப நல்லா எடுக்குறீங்க'' என்றார், சுசீந்திரன். படத்தின் படப்பிடிப்பு முடிந்து அதனுடைய இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாலுமகேந்திரா, தன்னை என்னுடைய ரசிகன் என்றார். அவர் அப்படிச் சொன்னது, மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. ‘அழகர்சாமியின் குதிரை' வெளிவந்த பிறகு நிறையப் பேர் ஒளிப்பதிவிற்காகப் பாராட்டினார்கள்.

கௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் இடைப்பகுதியிலிருந்து ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பின்னர் அவர் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்' படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்தார். முதல் நாள் படப்பிடிப்பை நான் தான் ஒளிப்பதிவு செய்தேன். பின்னர் அந்த படம் அப்படியே நின்றுவிட்டது.

அதற்குப் பின்னர் இயக்குநர் ராமுடன் சேர்ந்து ‘தரமணி' படத்தில் வேலை பார்த்தேன். இந்த படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் ‘மேற்குத் தொடர்ச்சி மலை' படத்திற்கான வாய்ப்பு வந்தது. அதன்பின்னர் ‘பேரன்பு', ‘நாச்சியார்', ‘பேச்சிலர்', ‘ஏலே', ‘பாவக் கதைகள்', ‘புழு' (மலையாளம்), ‘கர்ணன்' போன்ற படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தரமணி, பேரன்பு திரைப்படத்தைப் பார்த்த பி.சி.ஸ்ரீராம் சார் வெகுவாகப் பாராட்டினார். அப்போது கூடச் சொல்லவில்லை, அவரிடம், உதவி ஒளிப்பதிவாளராகச் சேர்வதற்கு முயன்றேன் என்று. இனி எப்போது சொல்வேன் என்றும் தெரியாது,'' மெலிதாக சிரிக்கிறார் தேனி ஈஸ்வர்.

ஜூலை, 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com