சென்னை மக்களின் நீண்ட ஏக்கத்திற்கு பிறகு பெய்த மழை என்பதால் அதை ஒன்றும் சொல்ல மனமின்றி நீலாங்-கரையில் உள்ள ஒரு காபி ஷாப்புக்குள் சென்றோம். அங்கே எங்களுக்கு அரை மணி நேரத்திருக்கு முன்பாக வந்து காத்துக் கொண்டிருந்தார் பசுபதி. தாமதத்திற்கான எங்களது வருத்தத்தை ‘டிராபிக், கூடவே மழையும் வந்துருச்சு... நான் நெனச்ச நேரத்த விட சீக்கிரமா தான் வந்துருக்கீங்க’ என்று ஒரு புன்னகையுடன் ஏற்று கொண்டார்.
திரைத்துறையில் பசுபதி தடம் பதித்து 12 ஆண்டுகள் ஆகின்றன. தென் இந்தியாவில் இயக்குனர்கள் சவாலான கதாபாத்திரத்தினை உருவாக்கும்போதே பசுபதியையும் அதற்-குள் இணைத்து கொள்கின்றனர். அடுத்தடுத்த படங்களில், சிரிக்கவும், அழவும், நம்மை உருகவும் வைத்து விடுகிறது இவரது நடிப்பு.
“நிச்சயம் இதற்கு காரணம் கூத்துப்பட்டறையில் நான் எடுத்துக் கொண்ட பயிற்சிதான். என்னுடைய பதினைந்தாவது வயதில் மேற்கத்திய நடனம் ஆட வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே இருந்தது. நடிப்பை பற்றிய எந்த யோசனையும் இல்லை. கூத்து பட்டறையில் சேர்ந்த பிறகு, அங்கு கூத்துக்கான அடவுகள் கற்று தரப்பட்டன. அதில் பல முயற்சிகள் செய்யும் ஆர்வம் ஏற்பட்டது. ஏற்கனவே நடனம் தெரியும் என்பதால் என்னுடைய உடல்மொழி நடிப்போடு சுலபமாக இணைந்து விட்டது” என்கிற பசுபதிக்-குள் ஆழமாக பதிந்திருக்கிறது இயக்குனர் ஆகும் கனவு.
“பல நவீன நாடகங்களை இயக்கி இருப்பதால் சினிமா-வுக்குள் போனால் நிச்சயம் இயக்குனராக வேண்டுமே தவிர நடிகனாக வேண்டாம் என்ற தீர்மானத்தில் தான் இருந்தேன். நடிப்பதற்கு நாடகம். இயக்குவதற்கு சினிமா என்று எனக்கு கொள்கை இருந்தது. இதற்கு காரணம் எனது அப்போதைய மனநிலைதான். நடிக்க வேண்டும் என்றால் பலரிடம் வாய்ப்புக்காக நிற்க வேண்டியிருக்கும். இயக்குனருக்கு இருக்கும் மரியாதையே வேறு. நாம் மற்றவர்களிடம் வேலை வாங்கலாம் என்கிற ஒரே காரணம்தான்” என்று சிரித்து கொள்கிறார்.
பசுபதிக்கு இருக்கும் திறமை அங்கீகரிக்கப்பட வேண்டியது என நினைத்தது நடிகர் நாசர் தான். இயக்குனர் ஆவதற்கு நிறைய போராட வேண்டியிருக்கும். உனது அங்கீகாரத்தை நடிப்பின் மூலம் பெற்றுக்கொண்டு பிறகு நீ விரும்பியதை இயக்கலாம் என்று நாசர் சொன்னதால் தான் நடிக்க வந்ததாக சொல்கிறார் பசுபதி. இன்னும் இவருக்குள் இயக்குனராகும் ஆர்வம் அப்படியே இருக்கிறது. நடிக்க வந்த புதிதில் இவருக்-குள் ஏற்பட்ட சலிப்புகள் ஏராளம். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் தேடி வரும்போது தவிர்க்க முடியாமல் போனதை நினைவு கொள்கிறார்.
“விருமாண்டிக்குப் பிறகு வெள்ளை வேட்டி, சட்டை , தங்க சங்-கிலி, தொண்டை கிழியும் வசனங்கள் என ஒரே மாதிரி-யாக வந்த வாய்ப்பினால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட ஆரம்பித்தது. நாடகங்களில் இந்த பிரச்சனை இல்லை. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்த பின்னர், ஒரு காவலாளி-யாக அதே நாடகத்தில் இன்னொரு நாள் நடிக்க முடியும். சினிமாவில் நமது மீது குத்தப்படுகிற முத்திரையை கழற்றுவது பெரிய சவால். அதை எப்படி எதிர்கொள்வது என்று புரியா மலே இருந்தது. இந்த நேரத்தில் கமல் சார் எனக்கு உதவினார். அவர் தன்னுடைய அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார். இன்று வரை அவர் சொன்னதைத் தான் கடைபிடிக்கிறேன். அவர் சொன்னது இது தான். ‘இயக்குனர்களுடன் நட்பாக பழகுங்கள். இங்கு ஒரு இடைவெளி ஏற்படும்போது மற்ற மாநிலங்களுக்கு சென்று விடுங்கள். அங்கேயும் நட்பு வட்டத்தை உருவாக்குங்-கள். உங்களால் எல்லா விதமாகவும் நடிக்க முடியும் என்று நிரூபிக்கும் வரையில் இந்த போராட்டம் இருக்கும்’ என்றார். நான் கமலிடம் சொன்னேன், எனக்கு தெரிந்த நல்ல நண்பர் நீங்கள் தான். எனக்கு நீங்களே வாய்ப்புத் தர வேண்டும் என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து அவர் என்னிடம் சொன்னது தான் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படம்’.
நவீன நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வரும் நடிகர்கள் சில சமயங்களில் யதார்த்தத்தை மீறிய நடிப்பை தருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு உடனடியாக பதில் வருகிறது பசுபதியிடமிருந்து. “நாடகம் என்பது பெரிய வெளி. அதில் சுதந்திரமாக நடிக்கிற நடிகனை, கேமரா முன்னால் நின்று நடிக்க சொல்லும்போது அவனுக்கு அது புதிதாகதானே இருக்கும்? என்னைச் சரி செய்வதற்கு கமல், நாசர் போன்றவர்-கள் இருந்தார்கள். இப்போது வருகிற நடிகர்கள் திறமையில் குறைந்தவர்கள் இல்லை. இயக்குனர்கள் தான் தங்களுக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்க வேண்டும். நாங்கள் நடிகர்கள் தான். எங்களை இயக்கும் பொறுப்பு இயக்குனர்களிடம் தானே இருக்கிறது.”
பேச்சு அவரின் இயற்கை சார்ந்த ஆர்வத்துக்குள் சென்றது. பசுபதியின் மனைவி கட்டடப் பொறியாளர். இன்று அவர் அந்த பணியில் இல்லை. சூழலுக்கு எதிரானதாக இருக்கிறதென தன்னுடைய மனைவி பொறியாளர் பணியை விட்டு முழுநேர விவசாயியாக இருப்பதை பெருமை-யாக பகிர்ந்து கொள்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தானும் தன்னுடைய பண்ணையில் விவசாயம் செய்வதை ஒரு குழந்தைக்கான உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்கிறார். அவரிடம் பேசும்போது இயற்கை வேளாண்மையில் அவருக்கு தெரிந்திருக்கும் நுட்பங்கள் வியப்பைத் தருகின்றன.
“பிறந்து வளர்ந்தது சென்னையாக இருந்தாலும் என்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த தஞ்சாவூரில் தான் என்னுடைய வேர் இருப்பதாக தோன்றும் அதனால் கூட எனக்கு விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டிருக்கும். இதோடு என்னுடைய தொழிலுக்கும் இயற்கையின் ஆதரவு தேவைப்படுகிறது. இயல்பாய் இருப்பதுதான் கலைஞனுக்கு பலம். இயல்பு கெடும்போது இயற்கைக்கு மாறாக நடக்கிறோம். ஒரு கலைஞனாக எனக்குள் ஒரு வெற்றிடத்தை எப்போதும் உருவாக்கி கொள்ள வேண்டி இருக்கிறது. எந்த படத்திலும் நான் நடிக்கப் போகும்போது முன் தயாரிப்புகள் செய்வதில்லை. எப்படி வேண்டுமோ அப்படியே மாறுவதற்கு நான் தயாராக இருப்பேன். ஒன்றரை வருடங்களாக நானும் என் மனைவியும் எங்களுக்-காக ஒரு வீடு வடிவமைக்கிறோம். முடிந்த வரை சூழலைப் பாதிக்காத வீடாக இருக்க வேண்டுமென நினைக்-கிறோம். இதில் எவ்வளவு சிரமங்கள் தெரியுமா? நல்ல கற்-களுக்காக தமிழ்நாடு முழுக்க பயணம் செய்கிறோம். தமிழ்நாட்டில் எந்த குயவர்களிடமும் ஓடுகள் இல்லை. இங்கு சம்பாதிக்க தொடங்கியதுமே தன்னுடைய பாரம்பரிய வீட்டைத் தான் முதலில் இடிக்கிறார்கள். இனி நமது தாத்தா பாட்டி காலத்து வீடுகளை அருங்காட்சியகத்தில் தான் பார்க்க வேண்டும் போல இருக்கிறது” என்கிறார்.
நடனம் கற்றுக்கொண்டு, நவீன நாடகங்கள் மூலம் திரைக்கு வந்து சில ஆண்டுகளில் தன்னுடைய இருப்-பை பலமாக்கி-கொண்ட பசுபதி தன்னுடைய வெற்றிக்-கான காரணமாக சொல்வது ஒன்றைத் தான். “அடிப்படை பிரச்சனைகளுக்கு எப்போதுமே நான் போராடிய-தில்லை. வாழ்வதற்காக உணவு, மற்ற நேரங்களில் நாடகங்-களில் நடிப்பு இப்படித்தான் என் வாழ்க்கையை தீர்மானித்-திருந்தேன். ஆனால் அதைத் தாண்டி என்னை துரத்தியது தேடல் மட்டுமே. இன்னும் ஏதாவது செய் செய் என்று அது துரத்தும்போதெல்லாம் எதையாவது செய்து கொண்டே இருக்கிறேன். தேடல் தீரும் வரை என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்” என்றார் நாம் விடைபெறும்போது.
விதிமுறைகளை அழகாய் மீறுவதினாலேயே நடிப்பு கவர்ச்சி-யையும், யதார்த்தத்தையும் தருகிறது என்பது நடிப்பின் ஒரு இலக்கணம்.. பசுபதியிடம் அந்த அழகான விதிமீறல்கள் ஒவ்வொரு படங்களிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
அக்டோபர், 2012.