“எவ்வளவு வேணாலும் அடிக்கட்டும் என்றார் யோகிபாபு!” - மடோன் அஸ்வின்

“எவ்வளவு வேணாலும் அடிக்கட்டும் என்றார் யோகிபாபு!” - மடோன் அஸ்வின்
Published on

கடின உழைப்பு ஒருவரை எதிர்பார்க்காத உயரத்திற்கும் கொண்டு செல்லும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் இயக்குநர் மடோன் அஸ்வின். ‘தர்மம்' குறும்படத்திற்காகத் தேசிய விருது பெற்றவர், தற்போது ‘மண்டேலா' திரைப்படத்திற்காக  சிறந்த வசனம், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதையும் தட்டிச் சென்றுள்ளார். வாழ்த்து மழையிலும், அடுத்த படத்திற்கான வேலையிலும் மூழ்கியிருந்தவரை சந்தித்துப் பேசினோம்.

 ‘நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் புத்தந்துரை என்ற கடற்கரை கிராமத்தில். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம் அது. அப்பா-அம்மா இருவருமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்பதால், அக்காவை டாக்டருக்கு படிக்க வைத்தார்கள். என்னை சிவில் சர்வீஸ் படிக்க வைக்க விரும்பினார்கள்,' என்றவர், தனது பால்ய நினைவுகளை அசைபோட ஆரம்பித்தார்.

‘ஸ்கூல் படிக்கும் போதே எனக்கு டான்ஸ் ஆடத்தெரியும்.  நானே கற்றுக்கொண்டது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் சென்னை எம்.ஐ.டி-யில் இன்ஜினியரிங் சேர்ந்த பிறகும் டான்ஸ் மீதான ஆர்வம் குறையவில்லை. நண்பர்களுடன் சேர்ந்து டான்ஸ் குழு ஒன்றை ஆரம்பித்தோம். அங்கு தான் முறையாக டான்ஸ் கற்றுக் கொண்டு நிறைய நிகழ்ச்சிகள், போட்டிகளில் கலந்து கொண்டேன். விஜய் டிவி நடத்திய டான்ஸ் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு, காலிறுதி வரை வந்து தோற்றுவிட்டோம்.

கல்லூரி படிக்கும் போது நிர்மல் என்ற நண்பருடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அவன் நிறைய வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பான். அவனுடன் சேர்ந்து பார்த்த படங்கள் தான் எனக்கு சினிமா பற்றிய அறிவை ஏற்படுத்தியது. பிறகு பெங்களூரில் வேலை கிடைத்து அங்குச் சென்றபோதும்,  நிறையப் படங்களைப் பார்த்தேன்.  படத்தின் மீதான ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க நானே  ஒரு ஸ்கிரிப்ட் எழுதினேன். அதை எழுதி முடித்ததும் எனக்குள் ஒரு பெரிய நம்பிக்கை வந்தது.

அச்சமயம், சஞ்சய் நம்பியார் என்பவர் சினிமா கோர்ஸ் ஒன்று எடுத்தார். அதில் சேர்ந்தேன். காலையில் ஆறு மணிக்குத் தொடங்கி ஒன்பது மணிக்கு வகுப்பு முடியும். உடனே பேருந்து பிடித்து பத்து மணிக்கு அலுவலகத்திற்குச் செல்வேன். மாலை வீட்டிற்கு வந்து எஞ்சிய அலுவலக வேலையை முடித்துவிட்டு, பின் சஞ்சய் நம்பியார் கொடுத்த வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் தூங்கச்

செல்வேன். அதுவே நள்ளிரவு ஆகிவிடும். மீண்டும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து, கிளம்பி ஆறு மணிக்கு வகுப்பிற்குச் செல்ல வேண்டியிருக்கும். இரண்டு நிமிடம் தாமதமானால் கூட, வகுப்பிற்குள் சேர்க்கமாட்டார்.

ஒரு நாள் நான் எழுதிய குறும்படத்திற்கான ஸ்கிரிப்டை அவரிடம் கொடுத்தேன். காவல்துறை விசாரணை தொடர்பான கதை அது. அதைப் படித்தவர், ‘இதுவரை காவல் துறை விசாரணை எதாவது பார்த்திருக்கீயா, கதையை தூக்கி குப்பையில் போடு. உன் வாழ்க்கையில என்ன நடந்ததோ அதை ஸ்கிரிப்டா எழுது' என்றார்.

அப்போதுதான், கணக்கு வாத்தியாரான என்னுடைய அப்பா பணி ஓய்வு பெற்றிருந்தார். அவருடைய வாழ்க்கையை வைத்தே ‘குரு‘ என்ற குறும்படத்தை இயக்கினேன். அதுவே என்னுடைய முதல் குறும்படம். ஜீரோ பட்ஜெட்டில் எடுத்தது.

ஒரு கதை எப்படி இருக்க வேண்டும், அதை எப்படி திரைக்கதையாக மாற்றுவது, நடிகர் தேர்வு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தையும் பற்றிய அடிப்படை புரிதலை எனக்கு உருவாக்கியவர் சஞ்சய் நம்பியார். அவரிடம் கற்றுக் கொண்டதுதான் இன்று வரை எனக்கு பயன்படுகிறது. எனக்கு முன்பாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவரிடம் படித்திருந்தார். சஞ்சய் நம்பியாரிடம் படிக்கும் போது எடுத்த ‘குரு' கதையையே மீண்டும் திருத்தி எழுதி, வேறு நடிகர்களை நடிக்க வைத்து குறும்படமாக எடுத்து நாளைய இயக்குநர்

நிகழ்ச்சிக்கு அனுப்பினேன். அங்கு படம் தேர்வானதைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியுடன் பயணப்படலானேன். அங்குக் கிடைத்த தொடர்புகள், அடுத்தடுத்து குறும்படங்கள் எடுப்பதற்கு உதவியாக இருந்தது.

வேலை பார்ப்பதில் கிடைக்கும் பணத்தை வைத்தே குறும்படங்களை எடுத்ததால் வேலையை விடவில்லை. வார இறுதி நாட்களில் பெங்களூரிலிருந்து சென்னை வந்து, படத்திற்கான வேலைகளைப் பார்ப்பேன். இப்படித்தான் என்னுடைய ஏழு குறும்படங்களையும் எடுத்தேன். இவை எதுவும் அம்மா&அப்பாவிற்குத் தெரியாது. அக்காவிற்கு மட்டும் தெரியும். ‘குரு' முதல்முறையாக நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் நாளன்று தான், அம்மாவிற்கு அழைத்து முழு விஷயத்தையும் கூறினேன். கேட்டவர் ஆச்சரியப்பட்டார். அந்த வாரம் ஒளிபரப்பான குறும்படங்களில் சிறந்த படமாக ‘குரு' தேர்வானது. அந்த சீசனில், என்னுடைய ஏழு குறும்படங்களில் ஐந்து சிறந்த படங்களாகத் தேர்வானது. மேலும் சிறந்த இயக்குநர், சிறந்த கதை போன்ற பட்டங்களையும் வென்றேன்.

நாளைய இயக்குநர் சீசன் முடிந்ததும், பெங்களூர் வேலையை விட்டுவிட்டு, பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அப்போது அவர் எந்தப் படமும் எடுக்கவில்லை என்பதால், அவரிடமிருந்து நின்றுவிட்டேன். அச்சமயத்தில் நான் எடுத்திருந்த ‘தர்மம்' என்ற  குறும்படத்திற்குத் தேசிய விருது கிடைத்தது. அது மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. அதை வைத்தே அடுத்தடுத்த வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தேன்.

 அப்போது, நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் நண்பரான நித்திலன், ‘குரங்கு பொம்மை' திரைப்படத்தை இயக்கும் முயற்சியிலிருந்தார். என்னை படத்திற்கு வசனம் எழுதச்

சொன்னார். நான் எழுதிக் கொடுத்த வசனங்கள் அவருக்குப் பிடித்திருந்தது' என்றவரிடம், தயாரிப்பாளர்களிடம் கதை சொன்ன அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.

‘என்னிடம் நான்கைந்து ஜானரில் கதைகள் இருந்தன. தயாரிப்பாளர்கள் எப்படியான கதைகளை எதிர்பார்க்கிறார்களோ, அதற்கேற்றார் போல் கதைகளைச் சொல்வேன். ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரிடம் த்ரில்லர் படத்திற்கான கதை ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறேன், அவரோ தூங்கிவிட்டார். பின்னர் கண் விழித்தவர் சொல்லுப்பா என்றார்.

இதேபோல், நண்பர் ஒருவர் தயாரிப்பாளர் ஒருவரிடம் அழைத்து சென்றார். தயாரிப்பாளருக்குக் கதையைச் சொன்னேன். கதையைக் கேட்ட தயாரிப்பாளர், ‘கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள்' எனக் கேட்டார். ‘யார் ஜெயிக்கிறதையும் காட்டப்போவதில்லை' என்றேன். அதற்குப் பின்னர் அவர் கதை சொல்லவே விடவில்லை.

கிட்டதட்ட நான்கைந்து வருடங்கள் வாரத்திற்கு இரண்டு முறை கதை சொல்ல செல்வேன். அப்படித்தான் பாலாஜி மோகனுக்கு மண்டேலா படத்தின் ஐடியாவை சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தால், ஒய் நாட் ஸ்டுடியோ தயாரிக்க முன்வந்தார்கள். பிறகு முழுக்கதையும் ஆறு மாதத்தில் எழுதி முடித்தேன். படத்தில் யோகி பாபுவை நடிக்க வைக்கலாம் என்றார் சசிகாந்த் செந்தில். எனக்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. பிறகு, யோகிபாபுக்கான காஸ்டியூம், ஹேர் ஸ்டைல், வசன உச்சரிப்பு என எல்லாவற்றையும் டிசைன் பண்ணிப் பார்த்தோம். அவருக்கு ஏற்றார்போல் கதையில் சின்ன சின்ன மாற்றங்களைச் செய்தோம். பின்னர் யோகிபாபுவிடம் கதை சொல்லச் சென்றேன். எப்போதும் போல் ஜாலியாகவே பேச ஆரம்பித்தவர். படுத்துக் கொண்டே, எனக்கொரு தலையணை கொடுத்துபடுத்துக் கொள்ளச் சொன்னார். வேண்டாம் என சொல்லிவிட்டு, உட்கார்ந்து கொண்டே ஒன்றரை மணி நேரம் கதை சொன்னேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது.

‘நான் யாரையும் அடிக்கப்போறதில்ல.... இந்த படத்துல சண்டையும், டூயட் சாங்கும் இல்ல தானே' என்று மட்டும் கேட்டார்.

‘அண்ணே நீங்க யாரையும் அடிக்கல... உங்களை தான் எல்லோரும் போட்டு அடிப்பாங்க' என்றேன்.

‘அது ஒண்ணும் பிரச்சனை இல்லடா... எவ்வளவு வேண்டுமானாலும் அடிக்கட்டும்' என்றார்.

அப்போது அவர் ரஜினி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் தேதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த இடைவெளியில் கதையை மேலும் மெருகேற்றினேன். படத்திற்கான லொக்கேஷன் மட்டும் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. கடைசியாக இயக்குநர் மாரிசெல்வராஜின் சொந்த ஊரான புளியங்குளத்தை சில நண்பர்கள் பரிந்துரைத்தனர். நடுவில் ஒரு ஆலமரம், அதிலிருந்து பிரியும் இரண்டு ஊர்களுக்கான சாலை என நான் எதிர்பார்த்த லொக்கேஷன் அது. தயாரிப்பு தரப்பிலிருந்து இயக்குநர் மாரிசெல்வராஜுக்கு அழைத்துப் பேசினார்கள். அவரும் உதவி செய்தார். ஊர் மக்களும் படப்பிடிப்பு நடப்பதற்குப் பெரிதும் ஒத்துழைத்தார்கள்.

கதை பொட்டல் காட்டில் நடப்பது போலிருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பை மே மாதத்தில் நடத்தினோம். அப்போது எனக்குத் திருமணமாகி ஒரு மாதமே ஆகியிருந்தது. ஒளிப்பதிவாளருக்கோ திருமணமாகி ஏழாவது நாள். கடுமையான வெயிலுடன் புழுதிக் காற்றும் சேர்ந்து அடிக்கும். படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் முகத்தில் கொப்புளம் வந்துவிட்டது. படத்தில் நிறைய லாங் ஷாட் இருக்கும் என்பதால், கேரவானை தூரத்திலேயே நிறுத்திவிடுவோம். சில நேரங்களில் கேரவனுக்கு சென்று வர நேரம் ஆகும் என்பதால் யோகிபாபுவை படப்பிடிப்பு தளத்திலேயே சட்டையை மாற்றிக்கொள்ளச் சொல்வோம். அவரும் மாற்றிக் கொள்வார். அவரைப் போலவே மற்ற நடிகர்களும் ஒத்துழைத்தார்கள். ஊர் மக்களைக் காட்டும் காட்சிகளைப் படமாக்குவதில் தான் பெரும்பாடுபட்டோம். ஒருநாளைக்கு வருபவர்கள் அடுத்த நாளைக்கு வரமாட்டார்கள். நிறையக் காட்சிகளில் ஒரே ஆட்கள் தான் வடக்கூர் பக்கமும், தெக்கூர் பக்கமும் இருப்பார்கள். படத்தின் பட்ஜெட்டும் கொஞ்சம் நெருக்கடியாக இருந்தது.

ஒருநாள் படப்பிடிப்பு தளத்திற்கு என் அம்மா - அப்பா வந்திருந்தனர். நீண்ட நேரம் சூட்டிங்கையே பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா சென்று, ‘ஒரே ஷாட்டையே ரொம்ப நேரம் எடுத்துட்டு இருக்கோம். இதபோய் உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கீங்களேனு'  கேட்டிருக்கிறார்.

‘முப்பது வருஷமா நாங்க பள்ளிக்கூடத்தில் ஒரே பாடத்தைத்தான் திரும்ப திரும்ப எடுத்துட்டு இருக்கோம். எங்களுக்கு இதெல்லாம் போர் அடிக்காதுன்னு' சொல்லியிருக்கிறார்கள். இருவருமே ஆசிரியர்கள் அல்லவா!

ஆனால் கடைசியில் படம் தியேட்டரில் வெளியாகாது என்ற செய்தியை கேட்டதும் அனைவரும் அழுதுவிட்டோம். ப்ரிவியூ ஷோ மட்டுமே தியேட்டரில் திரையிடப்பட்டது. ஷோ பார்த்த பிறகு யோகிபாபு நெகிழ்ந்து அழுதுவிட்டார்.

விஜய் டிவியில் படம் வெளியானது. படம் பார்த்த நிறையப் பேர் வாழ்த்து தெரிவித்தனர். பாரதிராஜா சார் அழைத்து, ‘எந்த ஊர்ரா நீ, ரொம்ப நல்லா பண்ணிருக்க. படத்துக்குள்ள ஒரு வாழ்க்கை இருக்குடா. அது அப்பட்டமா தெரியுதுடா. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படம் பாத்துருக்கேன்டா' என்றார். ஓர் இயக்குநராக நான் மிகவும் மகிழ்ந்த தருணம் அது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து நான் தொடங்கும் படத்துக்கு இந்த மாதம் சூட்டிங்' என்று மகிழ்வுடன் செய்தியை பகிர்ந்து கொண்டவருக்கு  வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

ஆகஸ்ட், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com