என் நிலத்தின் மீது கீறல் விழுந்தால் குரல் கொடுப்பேன்!

நேர்காணல் : இயக்குநர் பாரதிராஜா
என் நிலத்தின் மீது கீறல் விழுந்தால் குரல் கொடுப்பேன்!
Published on

தமிழ் சினிமாவில் என்றும் இளைஞரான பாரதிராஜா, விடிகாலைவரை படத் தொகுப்புப் பணிகளில் இருந்தாலும் நம்மை புத்துணர்ச்சியுடன் எதிர்கொண்டார்.

தேனாம்பேட்டையிலுள்ள பாரதிராஜா சர்வதேச திரைப்படப் பயிற்சி பள்ளியில் சந்திப்பு. நீல நிற டீ ஷர்ட்டில் உற்சாகப் பட்டாசாக ‘என் இனிய தமிழ் மக்களே' என்று தொடங்கினார்...

பதினாறு வயதினிலே முதல் ஓம் வரை சினிமாவில் கற்றதும் பெற்றதும்...

 பதினாறு வயதினிலே இயக்கும்போது உள்ளுக்குள் நெருப்பு இருந்தது. இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும்போது எந்த சமரசமும் இல்லாமல் அந்த படத்தை எடுக்க முடிந்தது. அதில் கூட சில பாடல்களை வைத்திருந்தேன். அது என்னுடைய கனவல்ல. என்னுடைய கனவு வேறு. கருப்பு வெள்ளையில் ‘மயில்' என்ற படம் செய்ய விரும்பினேன். பொருளாதார பலவீனங்களால் முடக்கப்பட்ட கிராமப் பெண்ணின் கனவு. பாடல்கள் தவிர நான் பார்த்த கிராம வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்தேன்.  நிழல்கள் படம் வெற்றி அடைந்திருந்தால் என்னுடைய பாதை வேறு மாதிரி இருந்திருக்கும். அதன் பிறகு சில சமரசங்கள் செய்து கொண்டு அலைகள் ஓய்வதில்லை மாதிரி ஜனரஞ்சகமாக படங்கள் கொடுத்தேன். அதற்கடுத்த பரிசோதனை முயற்சியாக காதல் ஓவியம் எடுத்தேன். அதற்கும் மக்கள் ஆதரவில்லை. மக்களைச் சார்ந்து இயங்கவில்லை என்றால் காணாமல் போய்விடுவோம் என்பதால் மக்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அவர்களுடைய வாழ்வியலை சொல்ல முயன்றேன். அவர்களுடன் சமமாக பயணித்ததால் என்னை ஏற்றுக் கொண்டார்கள். மக்களுக்கு சென்று சேராத கலை என்ன கலை, அதனால் பயன் என்ன? என்ற எண்ணம் வந்தது. இதுவரை 50 படங்களைக் கடந்து விட்டேன். ஒரு முறை Gkzu கதையை திரும்ப எடுத்ததில்லை. கடைசியாக அன்னக்கொடி படம் இயக்கும்போது நான் உணர்ந்த விஷயம், பழைய கிராமங்கள் தொலைந்து விட்டது. இது பொருளாதார வளர்ச்சி. வேணாம்னு ஒதுக்க முடியாது. நான் Gkzu கிராமப் படங்கள் எல்லாமே அன்றைய கிராமங்கள், அங்குள்ள மக்களின் வட்டார வழக்கு ஆகியவற்றிற்கான பதிவுகள். ஆனால் அந்த கிராமங்கள் இப்போது இல்லை. அந்த காலத்தில் கிராமங்கள் எப்படி இருந்தது என்பதற்கான பதிவுகளாக என்னுடைய படங்கள் இருக்கிறது. அந்த  வகையில் எனக்கு மகிழ்ச்சிதான்.

இன்றைக்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. உலக தரத்தில் படங்கள் எடுக்கும்போது நானும் அவர்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது. இப்பொது நான் இயக்கி இருக்கும் ஓம் படம் 60 வயது கிழவனுக்கும் 18 வயது பெண்ணுக்குமிடையேயான கதை. பதினாறு வயதினிலே செய்த பாரதிராஜா தான். முன் நகர்ந்து இங்கே வந்திருக்கிறேன். பின்னடைந்து போய்விடவில்லை. என்னுடைய அடையாளத்தை இழக்காமல் இன்றைய இளைஞர்களோடு போட்டி போட கவித்துவமான படமாக ஓம் படத்தை இயக்கியிருக்கிறேன்.

சினிமா இன்றைக்கு மிகப் பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. ஆனால் நம்முடைய கலாச்சார அடையாளங்களை தொலைத்து விடுவோமோ என்ற சின்ன பயமும் இருக்கிறது. நிழலுலக வாழ்க்கை, நூறு பேர் டான்ஸ் ஆடறது, அதீத வன்முறை என்று ஆங்கில பட பாணியில் இன்றைக்குப் படங்கள் வருகின்றன.

  இது எதனால் நடக்கிறது? சினிமா பார்த்து சினிமா எடுப்பதாலா?

ஆமாம். படிக்கிற வழக்கம் நின்னுபோச்சு. டிவி என்றைக்கு வந்ததோ அன்றிலிருந்து கிராமங்களில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசும் புறணியை டிவி பேசுகிறது. நகரத்திலிருந்தவர்கள் நூலகம் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நூலகத்திற்கே யாரும் போவதில்லை. நாங்களெல்லாம் புத்தகம் படித்து வளந்தவர்கள். தேடித் தேடிப் படிப்போம். அது இப்ப இல்லை. ஈரானியன் படம் பார்த்தேன், ஜாப்பனிஷ் படம் பார்த்தேன் என்கிறார்கள். படிப்பை இன்னொரு சினிமாவின் மூலமே கற்றுக் கொள்கிறார்கள். சினிமா பார்த்து சினிமா எடுக்கிறார்கள். அதனால் அதில் நம்முடைய வாழ்வியல் முறை இல்லை.

பாரதிராஜாவிடமிருந்து கற்று ஏற்கெனவே நிறைய திறமையான இயக்குநர்கள், நடிக, நடிகைகள் வந்திருக்கிறார்கள். இப்போது பாரதிராஜா பிலிம் இன்ஸ்டியூட் தொடங்கியிருக்கிறீர்கள். இரண்டிற்குமான வித்தியாசம் என்ன?

சினிமா மீதான் ஆர்வத்தில் உள்ளே நுழைந்து டபுள் பாசிடிவ் பார்த்து நாலைந்து இயக்குநர்களிடம் வேலை செய்து சினிமாவை கற்றுக் கொண்டேன் நான். கற்றுக் கொண்டால் மட்டும் போதாது. நமக்குள் கற்பனைத்திறன் வேண்டும். அழகை ரசிக்கிறவன் தான் நல்ல கலைஞனாக வர முடியும். கடவுள் அருளால் இயற்கையாகவே எனக்குள் அது இருந்தது. என்னிடம் வேலை செய்தவர்களுக்கு நான் சம்பளம் கொடுத்து 40 க்கும் மேற்பட்ட இயக்குநர்களை உருவாக்கினேன். நிறைய நடிக நடிகைகளை அறிமுகப்படுத்தினேன். இப்போது இன்ஸ்டியூட் ஆரம்பிக்க காரணம் நானே கொஞ்சம் கற்றுக் கொள்ள விரும்பினேன் என்பதே.

முதலில் இதை கிராமத்தில் தான் ஆரம்பிக்க ஆசைப்பட்டேன். என்னைப் போன்ற கனவுள்ள நிறைய இளைஞர்கள் இருப்பார்கள். ஆடு மேய்ப்பவனுக்குள்ளும் ஒரு கலை இருக்கும்.

 சாணி அள்ளும் பெண்ணுக்கு அழகான குரல் வளமிருக்கும். ஆனால் அவர்களுக்கு எப்படி எங்கே சென்று திறமையை வெளிப்படுத்துவது என்பது தெரியாது. இவர்களுக்காக கிராமத்தில் பணம் செலுத்தி படிக்காமல் பாதி நேரம் வயல் வேலை, பாதி நேரம் சினிமாக்கலை என்பது என் ஆசை. காலம் அனுமதித்தால் அதைத்தான் செய்ய விரும்புகிறேன். சென்னையில் மாணவர்கள் பணம் கட்டி படிப்பதை நினைத்தால் எனக்கு குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு நிர்வாகத்தை நடத்த, சொல்லிக் கொடுப்பவர்களுக்கு சம்பளம் தர பணம் தேவை. இங்கே இவர்கள் தியரியை படித்த பிறகு பிராக்டிக்கலுக்கு நான் வெளியே அழைத்துப் போய்விடுவேன்.

உங்களிடம் பணிபுரியும்போது எதிர்காலத்தில் நிச்சயம் இவர் பெரிய ஆளாக வருவார் என்று யாரையாவது நினைத்தீர்களா?

அப்படி யாரையும் சொல்ல முடியாது. என்னுடைய பெற்றோர்கள் பார்த்த சின்னச்சாமி வேறு. இன்று இங்கிருக்கும் பாரதிராஜா வேறு. ஐந்து பிள்ளைகளில் ஒரு பிள்ளை இப்படி வரும் என்று என்னுடைய பெற்றோர்கள் நினைத்திருப்பார்களா? என்னுடைய சகோதரர்கள் எதிர்பார்த்திருப்பார்களா? அவங்களுக்கே தெரிந்திருக்காது. ஒரு நாள் இந்திய ஜனாதிபதி ஆவோம் என்று அப்துல் கலாம் நினைத்திருப்பாரா? அவருக்குள் இவ்வளவு ஞானம் இருக்குன்னு சின்ன வயசுல யாராலயும் சொல்லியிருக்க முடியாது. இந்த நாட்டின் நாளைய பிரதமர் இந்த ரோட்டில் கூட இன்று சின்ன பையனா சாதாரணமாக போய்க் கொண்டிருக்கலாம். யாருக்குத் தெரியும்? காலமும் பயணமும் தான் அவர்களை வளர்க்கிறது.  என்னிடம் இருந்த அத்தனை பேரும் நல்ல ரைட்டர்ஸ். நம்ம கிட்ட இருக்கும் வரைக்கும் ஒரு பரிமாணத்தில் இருப்பார்கள். வெளியே சென்ற பிறகு வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுவார்கள். நானே ஆச்சர்யப் பட்டிருக்கிறேன். என்னிடம் இருக்கும் போது இந்த திறமையெல்லாம் ஏன் காட்டவில்லை என்று கேட்பதோடு சரி.

கலைமணி, செல்வராஜ், பாக்கியராஜ், மணிவண்ணன் என்று பலரின் கதைகளை நீங்கள் இயக்கியுள்ளீர்கள். இன்று கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று ஒருவரே இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

கதாசிரியன் என்றொரு ஜாதி இருந்தது முன்னாடி. தேவர் பிலிம்ஸில் எட்டு கதாசிரியர்கள் இருந்தார்கள். கலைஞானம், கலைமணி, ஆர்.செல்வராஜ், பாக்கியராஜ் இவர்கள் எல்லாம் என்னுடைய ஆஸ்தான கதாசிரியர்கள். இவர்கள் கதைக்காகவே வாழ்ந்தவர்கள். வாழ்க்கையைப் படித்து, புத்தகம் படித்து, நிறைய சினிமாக்கள் பார்த்து கதாசிரியர்களாக உருவானவர்கள். இன்றைக்கு வருபவர்கள் அவர்களுடைய அனுபவத்தை சுமந்து வந்து ஒரு படத்தை இயக்குகிறார்கள். அவர்கள் வேலைக்கு செல்லும்போது ஏற்பட்ட அனுபவம், அவர்களின் காதல் இவற்றை படமாக்குகிறார்கள். பிரமாதமாக இருக்கிறது. ஆனால் அடுத்து காணாமல் போய்விடுகிறார்கள். வாழ்க்கையை சொல்கிற கதாசிரியர்கள் காணாமல் போய்விட்டார்கள். கலைஞானம் இருக்கிறார். அவர் பார்க்காமல் என்னுடைய படங்களை நான் வெளியிடமாட்டேன்.

கலைமணி மறைந்துவிட்டார். கலைஞானம், ஆர். செல்வராஜ் என்று என்னுடன் இருந்த அத்தனை கதாசிரியர்களும் அற்புதமான படைப்பாளிகள். என்னுடைய படங்களில் எங்கெல்லாம் பளிச்சென்று தெரிந்ததோ அங்கெல்லாம் அவர்கள்தான் இருப்பார்கள். ஆனால் பாரதிராஜா என்ற ஆளுமையில் அவர்கள் காணாமல் போய்விட்டார்கள். அத்தகைய வலுவுள்ள கதாசிரியர்கள் இன்று இல்லை. காலம் அவர்களை வரித்து எடுத்துவிட்டது. இன்றைக்கு இருப்பவர்கள் வாழ்க்கையைப் படிக்கவில்லை. சினிமாவில் சினிமா படிக்கிறார்கள். நாங்கள் வாழ்க்கையைப் படித்து அதை சினிமாவாக எடுத்தோம்.

சிவாஜி, கமலஹாசன் இருவரையும் இயக்கி உள்ளீர்கள். இவர்களை ஒப்பிட முடியுமா?

இரண்டுபேருமே சமகாலத்தில் ஓவர் ஆக்டிங் செய்த நடிகர்கள். சிவாஜி மிகப் பெரிய மனிதர். அந்த காலகட்டத்திற்கு அவர் செய்தது சரி. முதல் மரியாதையில் நான் அவரை கொஞ்சம் அமுக்கி வாசித்தேன், இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக. யதார்த்த வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவருடன் போராடி அதைக் கொண்டு வந்தேன். சிவாஜி ஒரு லைப்ரரி மாதிரி. அவர் எல்லாவற்றையும் வைத்திருப்பார். நமக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். கமலும் அதே மாதிரிதான். அவர் ஒரு குட்டி சிவாஜி.

சிவாஜியும் கமலும் நிறைய நடித்ததால்தான் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். அவ்வளவு செய்யவில்லை என்றால் அவர்களிடமிருந்து தமிழ் சினிமா இவ்வளவு எடுத்திருக்க முடியாது. வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசும்போதே சிவாஜி எப்படி பேசியிருப்பார் என்று நினைத்துதான் பேசுகிறோம். இருவரிடமிருந்தும் தமிழ் சினிமா நிறைய கற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் அவர்கள் அதிகமாகச் செய்தது தவறில்லை. கலைஞரின் வசனத்தையும், சிவாஜியின் நடிப்பையும் பார்த்துதான் நான் சினிமாவுக்கே வந்தேன்.

குற்றப்பரம்பரை பற்றிக் கேட்காமல் இருக்கமுடியாதே... சொல்லுங்க எப்ப வரும்?

குற்றப்பரம்பரை பெரிய புராஜக்ட். அதை செய்யும்போது மிகப்பெரிய பொருளாதாரத்தில் செய்ய வேண்டும். நான் எப்போதும் அடக்கமாகவே வாசிச்சவன். குற்றப்பரம்பரை விசாலமாக வாசிக்க வேண்டும். அதற்காக காத்திருக்கிறேன். காலமும் நேரமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறேன். ஓம் படத்தை முடித்துவிட்டு அதைத் தொட வேண்டும். கல்கி எத்தனையோ படைப்புகளை படைத்திருந்தாலும் கல்கி என்றவுடன் பொன்னியின் செல்வன் என்று சொல்கிறோம். அதுபோல பாரதிராஜா என்றால் குற்றப்பரம்பரை என்று சொல்வது மாதிரி செய்ய வேண்டும்.

குற்றப்பரம்பரை தவிர வேறு எதாவது ஒரு கதையை நினைத்து இன்னும் நடக்காமல் இருக்கிறதா?

அப்படி எதுவும் இல்லை. ஆனால் கிராமத்து வாழ்க்கையின் ஈரங்களை இன்னும் சொல்ல வில்லையோ என்ற வருத்தம் உண்டு. விவசாய குடிமக்களைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. ஏழை விவசாயி அவனுடைய குடும்பம், அவனுடைய பொருளாதார சூழலில் பொண்ணை கல்யாணம் செய்து கொடுப்பது அவனுடைய வாழ்க்கை, மரணம் அந்த வாழ்கையில் உள்ள நயம், பாசம் இதைச் சொல்லி இன்னும் கலக்கவில்லை. அழகுணர்ச்சி, ஆற்றங்கரைக் காதல் இப்படியே போயிடுச்சி. ஆற்றங்கரையில் காதல் மட்டுமா இருந்தது? அதைச் சொல்லவில்லை. சொல்லணும். ஆனால் கிராமத்து வாழ்க்கையின் தடயங்கள் அதற்குள் மறையாமல் இருக்கணும்.

என்னுயிர் தோழன் இன்றைய காலத்துக்கு மிகப் பொருத்தமான படம். அது போன்ற ஒரு அரசியல் படத்தை மீண்டும் இயக்கும் எண்ணமிருக்கிறதா?

இப்ப நான் அதை எடுத்தாக் கூட அது பெஸ்ட் படமா இருக்கும். இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு நூத்துக்கு நூறு நிக்கும். ஏற்கெனவே அதை ரீமேக் செய்யச் சொல்லி கேட்டாங்க. ஆனா, நான் ரீமேக் செய்யறதில்ல. நான் துப்பின வெத்தலைய திரும்ப நான் எடுத்து வாயிலப் போடக்கூடாது. வேற மாதிரி அரசியல் படம் செய்யணும்.

என்னுயிர் தோழன் படம் கலைமணி எழுதியது. Mike is ruling the world. எவனவன் சிறந்த பேச்சாளனோ அவன் அதிகாரத்திற்கு வருவான். கம்யூனிஸ்ட் என்றைக்கும் ஆட்சிக்கு வர முடியாது. ஏனென்றால் அவர்களுக்குப் பேசத் தெரியாது. உலக அளவில் ஹிட்லர், முசோலினி, சர்ச்சில் நம்முடைய அண்ணா எல்லாருமே பேச்சின் ஆற்றலால் அதிகாரத்திற்கு வந்தவர்கள்.  அதனால் தான் என்னுயிர் தோழன் படத்தின் டைட்டிலிலேயே மைக்கை வைத்தேன்.  

தமிழ் மொழி, இனம், தமிழர் பண்பாடு சார்ந்த அத்தனை பிரச்னைகளிலும் பாரதிராஜாவின் குரல் ஒலித்திருக்கிறது. உங்களின் அரசியல் என்ன?

நான் அரசியல்வாதி இல்லை. மூன்று முதலமைச்சர் கள் அழைத்தும் விருப்பமில்லை என்று மறுத்துவிட்டவன். என்னுடைய பாதை அழகியல் உணர்வு  சார்ந்தது. நான் சுதந்திரமானவன். இந்த சுதந்திரத்தை இழந்து நான் சுகத்தை அனுபவிக்க மாட்டேன். நானே ராஜா, நானே மந்திரி, நானே பிரஜை. இதிலுள்ள சுதந்திரம் வேறு எங்கும் வராது. நான் ஏன் குரல் கொடுக்கிறேன் என்றால் நான் தமிழர்களால் வளர்ந்தவன். என்னுடைய அம்மா தமிழ் மண்ணில் என்னை பெற்றெடுத்தாள். தமிழ்க்காற்றை நான்சுவாசிக்கிறேன். இந்த மண் தான் என்னை வளர்த்தது. இந்த மக்களுடைய கதையைச் சொல்லித்தான் வளர்ந்திருக்கிறேன். அதனால் என்னுடைய மொழி, மண், இந்த காற்றிற்கு நான் விசுவாசமாக இருக்க வேண்டும். என்னுடைய மண்ணுக்கு கீறல் விழும்போது நான் குரல் கொடுப்பேன். என்னுடைய இனத்துக்கோ, மொழிக்கோ உடன்பாடில்லாத விஷயங்களுக்கு நான் எங்கிருந்தாலும் குரல் கொடுப்பேன்.

அக்டோபர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com