பாடல் எழுதுவது இன்னொருவருக்கு வேலை செய்வது மாதிரி. கவிதை அப்படி அல்ல; அது நம் உயிர். நம்முடனே இருக்கும். நம்முடைய வாழ்க்கையை எழுதுவது.' என தெறிப்புச் சொற்கள் கலந்தபடி பேசுகிறார் பாடலாசிரியர் கபிலன்.
பாடலாசிரியராக இருபத்திரண்டு ஆண்டுகள். ஆயிரத்து எழுநூறுக்கும் மேற்பட்ட பாடல்கள். ஆறு கவிதைத் தொகுப்புகள்..! என தாண்டி வந்திருக்கிறார் கபிலன். அவருடன் பேசிய திலிருந்து ..
‘பாரதிதாசன், பாரதியார் வாழ்ந்த புதுச்சேரி மண்ணில் பிறந்தவன் நான். எனது அப்பா நாடகப் பிரியர். என்.எஸ்.கிருஷ்ணன் குழுவில் இருந்தவர். எம்.ஆர்.ராதாவுடன் சேர்ந்து பின்பாட்டு பாடியவர், பாடல் எழுதியவர்.
குடும்பத்தைத் தனியாக விட்டு, ஒரு பறவையைப்போல ஓடிக்கொண்டிருப்பார். வேலைக்காக ஆந்திரா, டெல்லி என சுற்றுவார். கடைசியாக, சென்னை பின்னி மில்லில் வேலைக்குச் சேர்ந்தார். கடிதம் போட்டார். எங்களை சென்னைக்கு வரச்சொல்லி. அம்மா மூன்று குழந்தைகளுடன் சென்னை வந்தார். சென்னை பூக்கடையில் வந்திறங்கியபோது எனக்கு மூன்று வயது. அப்பாவின் வருமானம் பற்றி அம்மாவுக்கு நம்பிக்கை இல்லை. அவரே இட்லி கடை நடத்திச் சம்பாதித்தார். அந்த வருமானம்தான் எங்களை ஆளாக்கியது.
குடிபெயர்ந்து வந்ததால், அண்ணனும் நானும் ஒரே நேரத்தில் மாநகராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தோம். அப்போது, எனக்கு நான்கு வயது இருக்கலாம், ஐந்தரை வயதென்று பொய் சொல்லி சேர்த்துவிட்டார்கள்.
வடசென்னை கன்னிகாபுரத்தில் தான் வீடு என்பதால், அங்கிருந்த மக்களின் வாழ்க்கை, காதல், விளையாட்டு, தொழில், தன்னுணர்வு போன்றவற்றை நெருக்கமாகப் பார்த்து வளர்ந்தேன். அந்த மக்களின் கலாசாரம் என் மூளைக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவானது. அந்தப் பகுதியிலிருந்த இலக்கியவாதிகள், படித்தவர்கள், தி.மு.க.வினர் கூடத்தான் சகவாசம். கவிஞர் சிங்கார சடையப்பன் என்ற தி.மு.க. பேச்சா ளருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் யாப்பு கற்றுக் கொண்டுதான், பன்னிரண்டு வயதில் முதல் கவிதை எழுதினேன். அவரை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் ‘என்ன வெண்பா எழுதின' என்பார். அவர் சிகரெட் புகைக்கக் கூடியவர் என்பதால், அவருக்காக ஒரு கவிதை எழுதியிருந்தேன்.
‘பூட்டிய வீட்டில் புகையிலை குஞ்சுகள்
ஓட்டை வழியே உதிர்ந்தன
ஈட்டும் குரலின் மொழியில் இருமல் முழக்கம்
விரலுக்கிடையில் விரல்--- படித்துக் காட்டியதும் அவருக்கு மகிழ்ச்சி. சித்திரக் கவி, கட்டளை கலித்தொகை, வெண்பா, எண்சீர் விருத்தம், அறுசீர் விருத்தம், அகவல் எல்லாம் எழுதுவேன். எனது உலகம் கவிதையில் லயித்தது. எண்பதுகளின் பின்பகுதியில் இளையராஜா - வைரமுத்து கூட்டணி உச்சத்திலிருந்தது. அந்த சமயத்தில்தான் சினிமா மீதான ஆசை வந்தது..' என்றவரிடம், எப்படி பாஸ்போர்ட் துறை வேலைக்கு சென்றீர்கள் என்று கேட்டோம்.
‘அதற்கு முன்னால், என் வாழ்க்கையின் கல்வி, வாசிப்பு, கருத்தியல் என இன்னொரு உலகமும் திடமாக உருவானது. பாரதி, பாரதிதாசன், சுரதா, நீலமணி, பொன்னிவளவன், முருகசுந்தரம் என்று இருந்த என் வாசிப்பு பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் சேர்ந்ததும் நவீன கவிதைகள் பக்கம் சென்றது. ஞானக்கூத்தன், பிரம்மராஜன், நகுலன், பிரமிள் போன்றவர்களின் கவிதைகள் அறிமுகமாகின. கல்லூரி விடுமுறை நாள்கள் என்றால் பாண்டிச்சேரிக்கு செல்வேன். அங்கு கி.ரா. கே.ஏ.குணசேகரன், பிரபஞ்சன், ரவிக்குமார், பஞ்சாங்கம், பிரேம் ரமேஷ், மாலதி மைத்ரி, அருணன், கோமதி, எதிர் சிவக்குமார், பழமலய், அஸ்வகோஷ் என பலரின் நட்பு கிடைத்தது. எழுத்தில் என்னை அதிகம் பாதித்தவர் ரவிக்குமார் என்றால், பேச்சில் பாதித்தவர் பேராசிரியர் பெரியார்தாசன்.
எம்.பில் படிக்கும்போது வித்தியாசமாக எதாவது ஆய்வு செய்யவேண்டும் என்று நினைத்தேன். வடசென்னை மக்களின் வாழ்வியல், தொழில், விளையாட்டு, வியாபாரம் என எல்லாம் கானா பாட்டில் இருந்ததால், அதிலேயே ஆய்வு செய்யலாம் என்று முடிவெடுத்தேன். வழிகாட்டியாக பேராசிரியர் தங்கராஜ் இருந்தாலும், முழுவதுமாக என்னை வழிநடத்தியவர் பேராசிரியர் வீ.அரசு தான்.
கல்லூரி முடித்ததும் காதல் திருமணம். பெரிய வருமானம் இல்லை. முந்நூறு ரூபாய் மாத வாடகை உள்ள வீட்டிலிருந்தோம். கவி அரங்குகளுக்குச் சென்று வந்த வருமானம்தான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. பிறகு தேர்வு எழுதி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன்,' என்றவர், தன் முதல் பாடல் வாய்ப்பை பற்றிப் பகிர்ந்து கொண்டார்.
‘பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு இயக்குநர் திருப்பதி சாமி வந்திருந்தார். அவர் என் கல்லூரி கால நண்பர். சில நாள்கள் கழித்து, அவரிடமிருந்து அழைப்பு. விஜயகாந்த் நடித்த ‘நரசிம்மா' படத்தில் மூன்று பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார். எழுதிய முதல் பாடல் ‘லாலா நந்த லாலா'. சினிமாவில் பாடல் எழுதிவிட்டோம் என்ற சந்தோஷம் இருந்தாலும் அலுவலக பணி காரணமாக வாய்ப்பு தேடி அலையமுடியவில்லை. இயக்குநர் தரணிதான் என்னை வித்யாசாகரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இவர்கள் இருவரும் என் சினிமா கதவைத் திறந்துவிட்டவர்கள். வித்யாசாகர் மொழி மீது அதிகம் அக்கறை கொண்டவர். ‘உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா'வரிகளுக்கு அவர்தான் டியூன் போட்டு பாடலாக மாற்றினார். அதற்கு ஒருமாதம் ஆனது. பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சுஜாதா என்னை எங்கு பார்த்தாலும், ‘யோவ் அது நல்ல பாட்டுய்யா.. ரொம்ப பிடிக்கும்யா' என்பார். அந்தப் பாடல்தான் என்னை ஷங்கரிடம் அழைத்துச் சென்றது. ‘பாய்ஸ்' படத்தில் நடித்தவர்கள் அனைவரும் புதுமுகம் என்பதால், புதுசா யாரையாவது எழுத வைக்கலாம் என ஷங்கரும், ஏ.ஆர் ரகுமானும் முடிவெடுத்திருக்கிறார்கள். ஷங்கர், ‘உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா' பாட்டைக் கேட்டு என்னை தேர்வு செய்துள்ளார். பாடல் படமாக்கும் விதம் குறித்து சொல்லி, அதற்கேற்ற மாதிரி வரிகளை எழுதிவரச் சொன்னார். நூறு வரிகளுக்கு மேல் எழுதி எடுத்துச் சென்றேன். டியூனுக்கு ஏற்ற வரிகளை ஷங்கர் எடுத்துக் கொண்டார். ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் எழுதியதும் ஒரு நம்பிக்கை வந்தது. ஏறக்குறைய இருநூற்று ஐம்பது பாடல் எழுதிய பிறகுதான் பாஸ்போர்ட் அலுவலக வேலையை விட்டேன்.' என்று முழுநேர திரையுலக பிரவேசத்துக்குள் தன் நினைவுகளை அசைபோட்டார்.
‘மிஷ்கின் நிறைய வாசிக்கக் கூடியவர். ஆரம்பத்திலிருந்தே இருவரும் நண்பர்கள். ஒன்றாக சுற்றியிருக்கிறோம். யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி டியூனுக்கு வாலி பாடல் எழுதியிருந்தார். அந்தப் படத்தில் மிஷ்கின் இணை இயக்குநர். அவர், வாலி எழுதிய பாடல் வரிகளைத் தூக்கிவிட்டு, நான் எழுதிய வரிகளை வைத்துவிட்டார். சங்கர் மகாதேவனும் பாடிவிட்டார். இசையமைப்பாளர் மணிசர்மாவை தவிர எல்லோருக்கும் பாட்டு பிடித்திருந்தது. இருந்தாலும் ‘வாலிசார் என்ன சொல்வாரோ' என்ற பயம் வேற. பாடல் வெளியாகி பயங்கர ஹிட். அந்தப் பாடல் என்னுடைய புகழையும் வருமானத்தையும் உயர்த்தியது. சினிமாவில் பெரிய நட்பு தொடர்கிறது என்றால் அது மிஷ்கினுடன்தான். அவர்தான் இளையராஜாவிடம் அழைத்து சென்றவர்.
அதேபோல், என் மீது அதிகம் அன்பு கொண்டவர் கமல்ஹாசன். சிறு வயதிலிருந்தே அவருடைய ரசிகன் நான். என்னுடைய ‘தெரு ஓவியம்' கவிதை நூலை அவரிடம் கொடுக்க விரும்பினேன். நண்பர் மாதேஷ் மூலமாக அவரைச் சந்தித்து புத்தகத்தைக் கொடுத்தேன். ‘படித்துவிட்டுச் சொல்கிறேன்' என்றார். பிறகு, ஒரு புத்தக வெளியீட்டுக்கு, அவரிடம் தேதி கேட்க சென்றேன். ‘கவிதை நல்லாருக்கே. படித்துவிட்டேன்' என்று பாராட்டினார். புத்தக வெளியீட்டுக்கு அவரே ஒரு தேதியை தேர்வு செய்தார். அந்த சமயத்தில், ‘தெனாலி' படத்தின் படப்பிடிப்பில் கொடைக் கானலில் இருந்தார். புத்தக வெளியீட்டுக்காகத் தனி விமானத்தில் வந்து சேர்ந்தார் கமல். ‘தெனாலி' படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தார். டியூனுக்கு பெரிய பயிற்சி இல்லாததாலும், நேரம் கிடைக்காததாலும் ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த டியூனுக்கு பாடல் எழுத முடியாமல் போனது.
மீண்டும் கமல்ஹாசனிடமிருந்து அழைப்பு, ‘பம்மல் கே சம்பந்தம்' படத்தில் எழுத சொன்னவர், ‘டியூனுக்கெல்லாம் பாட்டெழுதக் கத்துக் கிட்டீங்களா?' என்று கேட்டார். ‘நூறு பாடலுக்கு மேல் எழுதிவிட்டேன் சார்' என்றேன். அப்படித்தான் ‘சகலகல வல்லவனே'பாடலை எழுதினேன். தசாவ தாரம் படத்தில் நடித்தது எதிர்பாராதது. ஆனால் படத்தில் தோன்றியதால் பாடல் வாய்ப்புகள் குறைந்தன. இவர் ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்குத்தான் பாடல் எழுதுவார் என்று நினைத்துக் கொண்டார்கள்,' என்று கொஞ்சம் வருத்தப்பட்டவரிடம் விஜய்க்குப் பாடல் எழுதிய அனுபவம் பற்றிக் கேட்டோம்.
‘விஜய்க்கு நிறையப் பாடல் எழுதியிருக்கிறேன். ‘மதுர' படத்தில், ‘மச்சான் பேரு மதுர' பாடலில் ‘கையசைத்தால் கடல் அளவுபோல் கூட்டம் வரும்' என்று எழுதியிருந்தேன். அதைக்கேட்ட விஜய், இயக்குநர் மாதேஷிடம் சொல்லி வரிகளை மாற்றச் சொன்னார். ‘கட்டி வெல்லம் என்னைப் பார்த்த கட்டெறும்பு கூட' என எழுதிக் கொடுத்தேன். வேட்டைக்காரன் பாடலின் போது, அழைத்துப் பேசி மோதிரம் போட்டார். விஜய்க்கு ‘வில்லு' படத்துக்கு முன்பு வரை பெண்ணின் அவயங்களை வர்ணித்துத்தான் பாடல் எழுதிக் கொண்டிருந்தேன். அதை ‘வில்லு' படத்தில்தான் மாற்றினேன்.
நான் பெரும்பாலும் என் வீட்டில் அமர்ந்துதான் பாடல் எழுதுவேன். ஏ.ஆர்.ரகுமானுக்கு என்றால், அவரின் ஸ்டுடியோவிலேயே எழுதிவிடுவேன். அவர், வார்த்தைகளுக்கு ஏற்ற மாதிரி டியூனை மாற்றிக் கொள்வார். வித்யாசாகரும் அப்படித்தான்.
காதல் பாடல்களை ரொம்ப எளிதாக எழுதிவிடுவேன். ஆனால், சூழலுக்கான பாடல் எழுதுவதுதான் ரொம்ப கடினம். கில்லி படத்தில் ‘அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு'பாடலுக்கு நிறைய நாள்கள் எடுத்துக் கொண்டேன். மரியான் படத்தில் வந்த, ‘இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால்தான் என்ன'என்ற பாடல்தான் சீக்கிரம் எழுதியது. சில பாடல்களுக்கு டம்மியா சில வார்த்தைகளைப் போடுவேன். அந்த வார்த்தையை எடுத்து பாடலில் வைத்துவிடுவார்கள். ‘தருவீயா தரமாட்டீயா' பாடலில் ‘பம்பரம்தான் விடப்போறேன் உன் பாவாட நாடாவை தருவீயா' என்ற வரியை சும்மா சொன்னேன். அதை அப்படியே பாடலில் வைத்துவிட்டார்கள். அந்தப் பாடலுக்கு என் பெயரை போடவேண்டாம் என்று சொன்னேன். தணிக்கை குழுவில் அந்த வரிகளை மாற்றச் சொல்லிக் கேட்டார்கள். ‘வெயிலில் காத்திருக்கேன்டி... வெள்ளரிக்காய் பிஞ்சு ஒண்ணு தருவீயா‘ என்று எழுதிக் கொடுத்தேன்.ரொம்ப சர்ச்சைக்குள்ளான பாடல் என்றால் ‘கண்ணதாசன் காரைக்குடி'. மார்க்சிய தோழர்கள் நிறையப் பேர் ‘ஏங்க இப்படி எழுதுனீங்க' என்று கேட்டார்கள். பாடல் வெளியானதும், ஒருவர் வழக்குப் தொடுத்து நோட்டீஸ் அனுப்பினார். தயாரிப்பாளர், மிஷ்கின், நானும் சேர்ந்து பதில் நோட்டீஸ் அனுப்பினோம். பிறகு அது என்ன ஆனது என்று தெரியவில்லை. பாடல் என்பது கூட்டு முயற்சி என்பதால், அதற்காக சில விஷயங்களை எழுத வேண்டி இருக்கும். பாடல் எழுதுவது இன்னொருத்தருக்கு வேலை செய்வது மாதிரி; கவிதை அப்படி இல்லை. அது நம் உயிர். நம்முடனே இருக்கும். நம்முடைய வாழ்க்கையை எழுதுவது. பா.ரஞ்சித்தின் படங்களுக்கு என்னுடைய அனுபவங்களைத்தான் எழுதுகிறேன்.
கவிதையும் பாடலும் மட்டுமே என் முழு அடையாளம். சிறுகதையோ, நாவலோ எழுதுவதற்கு விருப்பம் இல்லை; அதை நான் விரும்பவும் இல்லை! வசனம் எழுதவேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது. 96 மாதிரி நல்ல காதல் கதை அமைந்தால் அது நிகழலாம். இப்போது, லால் சலாம் படத்தில் பாடல் எழுதியிருக்கிறேன். ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான் ஆகியோரின் இசையில் 30 படங்களுக்குப் பாடல் எழுதுகிறேன்,' என்று சந்தோஷமாக தனது பேச்சை நிறைவு செய்தார் கபிலன்.