இரவில் பஸ் ஸ்டாண்ட்; பகலில் வாய்ப்புத் தேடல்...

சொடக்கு மேல சொடக்குப் போட்டவர்
அந்தோணிதாசன்
அந்தோணிதாசன்ஆம்ரே கார்த்திக்
Published on

வண்டியில நெல்லு வரும்',

‘சொடக்கு மேல

சொடக்குப் போடுது, ‘எங்கும் புகழ் துவங்க...' எனப் பல்வேறு அதிரடிப் பாடல்களைப் பாடி தமிழகத்தையே இப்போது தன் கிராமியக் குரலால் கட்டிப் போட்டிருப்பவர் அந்தோணிதாசன்.

சென்னை சாலிகிராமத்தில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மொட்டைமாடியில் வசிப்பவரைச் சந்தித்தோம். ஒரு படுக்கையறை கொண்ட அந்த வீட்டில்தான் நம்மைக் குதூகலப்படுத்தும் அத்தனை பாடல்களின் வரிகளும் எழுதப்பட்டவையாம்.

‘‘எனக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் ரெட்டிப்பாளையம்னு ஒரு கிராமம். அப்பா ஞானமுத்து, நாதஸ்வரக் கலைஞர். அம்மா இந்திரா. கட்டட வேலைக்குப் போவாங்க. ஒரே அக்கா அருள்மேரி. கிராமியக் கலைஞனுக்கே உரிய வறுமையான குடும்பம். இதனால ஆறாவது வரையே என்னால படிக்க முடிஞ்சது, அப்பாவுக்கு அடிக்கடி நெஞ்சுவலி வரும். அம்மாவுக்கு வலிப்பு நோய் வேற. இதனால பத்து வயசுல அப்பா கூட வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். கல்யாணம், இறப்பு, கோயில் நிகழ்ச்சினு எல்லாத்துக்கும் அப்பா கூட போவேன். அப்படி ஒருநாள் கரகாட்டத்துக்குப் போகும் போதுதான் பபூன் வேஷம் போட்டேன். அப்படியே ஆடவும் ஆரம்பிச்சேன். எனக்கு இளையராஜா சார் ரொம்பப் பிடிக்கும். அவரோட பாடல்கள பாடிட்டே இருப்பேன். சின்ன வயசுல வீட்டுக்குப் பக்கத்துல இருந்த சர்ச்ல சினிமா பாடல் டியூன்கள்ல மாத்திப் பாடி கைதட்டு வாங்கினேன். இதையெல்லாம் கரகாட்டத்துலயும் செஞ்சேன். நிறைய பேர் பாராட்டினாங்க.

ஒவ்வொரு மாவட்டமா போய் ஆடும் போது நிறைய கத்துக்கிட்டேன். ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஒருத்தர் நல்லா பாடுவார். இன்னொருத்தர் நல்லா ஆடுவார், சிலர் ‘நச்'னு பேசுவாங்க. நான் இதையெல்லாம் கவனிச்சு ஒரே ஆளா செய்ய ஆரம்பிச்சேன். இதனால, அதிகப் பாராட்டு கிடைச்சது. ஆனா, வருமானம் மட்டும் பெரிசா இல்ல. ஆரம்பத்துல பதினைஞ்சு ரூபாய்தான் கொடுத்தாங்க. அப்புறம், 50 ரூபாய்னு கடைசியா இருநூறு ரூபாய் வாங்கினேன். சில ஊர்கள்ல பணமே கொடுக்காம திருப்பி அனுப்பின சம்பவங்களும் நடந்திருக்கு. காரணமே இல்லாம சண்டை போட்டு எங்கள அனுப்புவாங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கும். வேதனையோடு நகர்ந்து வருவோம். எங்க கஷ்டம் யாருக்கும் தெரியாது, புரியாது. ஒருதடவை திருநெல்வேலி பக்கம் கோயில்விழா. வரேன்னு சொல்லிட்டு எங்களால போக முடியல. என்னை அடிக்கணும்னு அலைஞ்சாங்க. ஆனா, அடுத்தவாரமே நான் நேரடியா போய் நடந்த விஷயத்தைச் சொன்னேன். அதனால, விட்டாங்க. பிறகு, காசு வாங்காம ஒரு நிகழ்ச்சி பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன். ஆனா, நெல்லைதான் என்னை வளர்த்தெடுச்சு'' என்கிறவர், தன் திருமணத்தைப் பற்றி பேச்சைத் திருப்பியதும் உற்சாகமானார்.

‘‘பதினாறு வயசுல காதல் கல்யாணம் முடிச்சேன். அப்போ ரீத்தாவுக்கு பதினைஞ்சு வயசு. அவங்க அப்பா குளத்தூர் கலியபெருமாள் பெரிய ஆட்டக்காரர். நானெல்லாம் தொழில்முறையா ஆட வந்தவன். ஆனா, அவங்க பரம்பரை ஆட்டக்காரங்க. ஆடும் போது சந்திச்சு காதல் பண்ணி, கல்யாணம் முடிச்சோம். நான் இன்னைக்கு மனுஷனா இருக்குறதுக்குக் காரணம் ரீத்தாதான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்தோணி ரீத்தா கரகாட்டக் குழுவைத் துவங்கி ஒண்ணா ஆட ஆரம்பிச்சோம். இதனால, பணக் கஷ்டம் இல்லாம ஓரளவு தாக்குப் பிடிக்க முடிஞ்சது. எங்க ரெண்டு பேருக்கும் நல்ல பெயரும் கிடைச்சது. குறிப்பா தென்மாவட்டங்கள்ல எங்க ஆட்டத்துக்கு பெரிய வரவேற்பு, கரகாட்டம்னாலே அந்தோணி ரீத்தானு ஆனது.  

நெல்லை மாவட்டத்துல மறைந்த சாதித் தலைவர்கள் பத்தி பாடச்சொல்லி கேட்பாங்க. இதனால, அவங்களப் பத்தி நானே எழுதி பாட ஆரம்பிச்சேன். அப்படிதான் பாடல் எழுதக் கத்துக்கிட்டேன். இதுக்குப் பிறகு ‘ஆத்தோர அஞ்சலையே'னு ஒரு பாடல் கேசட்டை வெளியிட்டேன். இதனால, நாட்டுப்புறப் பாடகர்னு ஒரு இடத்தைப் பிடிச்சேன். இதுக்கிடையே ஒரு பையன், ரெண்டு பொண்ணுனு மூணு குழந்தைங்க பிறந்தாங்க'' என்றவரிடம்  சினிமா பயணம் எப்படி? என்றோம். 

இதுக்குப்பிறகு தர்புகா சிவாவுடன் சேர்ந்து ‘லா பொங்கல்'னு ஒரு இசைக்குழு ஆரம்பிச்சு பாட ஆரம்பிச்சோம். இதுல, சந்தோஷ் நாராயணன் சார், பாடகர் பிரதீப்னு இன்னைக்கு டாப் மோஸ்ட்டா இருக்குற கலைஞர்கள் நிறைய பேர் எனக்கு அறிமுகமானாங்க.

லா பொங்கல்ல இருக்கும் போதே ‘வண்டியில நெல்லு வரும்...' பாடலை பாடியாச்சு. கோக் ஸ்டூடியோ சேனலுக்காக தர்புகா சிவா, உஷா உதூப் மேடம், நான் எல்லோரும் சேர்ந்து அந்தப் பாட்டைப் பாடினோம். உண்மையில இந்தப் பாட்டு இறுதி சடங்கின் போது பாடுற வஞ்சப் புகழ்ச்சி பாடல். தென்மாவட்டங்கள்ல இறந்தவங்களுக்குக் கோடி போடுறதுனு ஒரு சடங்கு இருக்கு. அதுல, இந்தப் பாடலை பாடுவாங்க. அதைக் கொஞ்சம் மாத்தி நான் பாடினேன். ‘கிடாரி' படத்துல வந்ததும்தான் பெரியளவுல ஹிட்டாச்சு.

அப்புறம், சந்தோஷ் நாராயணன் சார், ‘சூது கவ்வும்' படத்துல ‘காசு, பணம், துட்டு,' பாடல்ல கானா பாலா சாரோட நடிக்கவும், பாடவும் வச்சார். அப்போ,  கார்த்திக் சுப்புராஜ் சார் அறிமுகமானார். ஜிகர்தண்டாவுல, ‘பாண்டி நாட்டு கொடியின் மேல..' பாடினேன். இதுக்குப் பிறகு நிறைய வெளிச்சம் என் மேல விழுந்தது'' என்றவர், விறுவிறுப்பாகத் தொடர்ந்தார். அடுத்து, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துல ‘ஊரே காக்க உண்டான சங்கம்...', காக்கிச் சட்டை' படத்துல ‘கட்டிக்கிட்டு...' பாடல்னு அடுத்தடுத்த சிவகார்த்திகேயன் சார் படத்துல பிஸியானேன். இதுவும் நல்ல ஹிட். நிறைய பேரை போய்  சேர்ந்துச்சு. பாராட்டும் நிறைய. இதுவரை 150 பாடல்கள் பாடிட்டேன். இடையில பாலா சார் இயக்கத்துல ‘தாரைத் தப்பட்டை' படத்துலயும் நடிச்சேன். இப்போ, ‘வைரி' படம் மூலமா இசையமைப்பாளராகவும் ஆகிட்டேன். இதுல ரெண்டு பாடல் நானே எழுதி பாடியிருக்கேன். தவிர, தெலுங்குல பத்துப் பாடல், மலையாளத்துல பத்துப் பாடல், கன்னடத்துல 20 பாடல்கள்னு நான்கு மொழிகள்லயும் பாடிட்டு இருக்கேன். கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ் ராஜ்குமார் நடித்த ‘டகரு' படத்துல பாடின பாடல் பயங்கரமா ஹிட்டடிச்சுது. அதிலிருந்து மத்த மொழிகள் வாய்ப்பு. நமக்கு தமிழ் தவிர எந்த மொழியும் தெரியாது. அதனால, எல்லாமே தமிழ்ல எழுதி வச்சுதான் பாடுறேன்'' எனச் சிரித்தபடியே தொடர்ந்தார்.

‘‘இதுக்கிடையில லா பொங்கல்ல இருந்து வெளிவந்து ‘அந்தோணியின் பார்ட்டி'னு ஒரு இசைக்குழுவை தனியா ஆரம்பிச்சேன். பல உலகநாடுகளுக்கும் பயணமானேன். இப்போ, நிறைய கிராமியக் கலைஞர்கள ஊக்கப்படுத்திட்டு வர்றேன். அப்படி வந்தவங்கதான் செந்தில் - ராஜலட்சுமி தம்பதி. ஏன்னா, நான் இங்க வந்தப்போ எனக்கு உதவி செய்ய யாருமே இல்ல. ஆனா, இன்னைக்கு கிராமியக் கலைஞர்களுக்கு உதவ இந்த அந்தோணிதாசன் இருக்கான். என் குடும்பம் தஞ்சாவூர்ல இருக்கு. இந்த வீட்டுல நானும் என் மகன் லெனினும் இருக்கோம். அதனால, இந்த வீட்டுல எந்த கிராமியக் கலைஞர்களும் வந்தா தங்கிக்கலாம். இங்கிருந்து தங்களை மேம்படுத்தி முன்னேறலாம். இப்போ நான் தமிழக நாட்டுப்புற இசைக் கலைப் பெருமன்றம் என்ற அமைப்பின் மாநில தலைவராகவும் இருக்கேன். எங்க நோக்கம் கலையையும், கலைஞர்களையும், அவர்களுக்குள்  உள்ள மனிதநேயத்தையும் வளர்க்கணும் என்பதுதான்,'' என்றார் அந்தோணிதாசன் அழுத்தமான குரலில்!

டிசம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com