இரண்டரை லட்ச ரூபாயில் மொத்த படத்தையும் எடுத்தோம்!

மணிகண்டன்
மணிகண்டன்
Published on

கலா படத்தில் ரஜினியின் மகன் லெனினாக வந்தவர் மணிகண்டன். விக்ரம் வேதா பட வசனகர்த்தா, நரை எழுதும் சுயசரிதை என்ற படத்தின் இயக்குநர். மிமிக்ரி கலைஞர் என பல முகம் கொண்ட இவரிடம் பேசியதில் இருந்து....

‘‘நான் சென்னை மந்தைவெளியில் பிறந்து வளர்ந்தவன். அப்பா, அம்மா, தங்கை என அளவான குடும்பம். அம்மாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. உறவினர்கள் வீட்டுக்கு வந்துசென்றபின் அம்மா அவர்களைப்போலவே பேசிக்காட்டுவார். நானும் என் அம்மாவைக் காப்பி அடித்து என் உறவினர்களைப் போலப் பேசிப் பழகினேன். திருமண வீடுகளில் என்னை மேடையேற்றி மிமிக்ரி பண்ணச் சொல்வார்கள். அந்தக் கைத்தட்டல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். +2 முடிக்கும்வரை இப்படித்தான் ஜாலியாக என் பள்ளிப்படிப்பு அமைந்தது. பின்னர் எனக்கு என்ஜினியரிங் சீட் கிடைத்தது. அங்கே இரண்டாம் வருடம் படிக்கும்போது கலக்கப்போவது யாரு சீஸன் - 2 தொடங்கியிருந்தது. மொத்தம் 600 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பெரிய போட்டி அது. அதில் நான் கலந்துகொண்டு பதினோரு நிமிடத்தில் அறுபது குரல்கள் பேசினேன். இரண்டாம் பரிசு பெற்றேன். அது நல்லதொரு அடையாளத்தை எனக்கு பெற்றுத் தந்தது. கல்லூரி கடைசி வருடம் படிக்கும் போதே ரேடியோ ஜாக்கியாக முயற்சி செய்தேன். ஒரு தனியார் எஃப்.எம் ரேடியோவில் சின்ன அளவில் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே ரேடியோவில் இரண்டுவருடம் போனது.

இடையில் நிறைய படங்களுக்கு டப்பிங் பேசினேன். நான் கடவுள் படத்தில் டப்பிங் பேசப் போனேன். பாலா சார் ஸ்டுடியோவில் இருப்பது எனக்கு தெரியாது. அந்தப் படத்தில் போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் ரஜினி சார் மாதிரி பேச என்னை அழைத்திருந்தார்கள். சீக்கிரம் பேசி முடித்தேன். என் குரலைக்கேட்டு பாலா சார் வெளியே வந்தார். ஒரு சின்ன திருத்தம் சொல்லி அப்படி பண்ணமுடியுமா என்று கேட்டார். நான் அவர் சொன்னபடியே பேசினேன். அவருக்கு நான் பேசிய டப்பிங் ரொம்பப் பிடித்திருந்தது. பாராட்டி ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். நான் முதலில் சினிமாவில் அதிகம் சம்பாதித்த பணம் அதுதான். 

டிஸ்கவரி தமிழ் சேனல் தொடங்கப்பட்ட போது அதன் மொழி மாற்று அனிமேஷன் தொடர்களுக்கு நான் டப்பிங் பேசினேன். ஒரு நாள் புறாவுக்கு திருநெல்வேலி பாஷை பேச வேண்டும் எனச் சொன்னார்கள். அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு புறாவுக்கு நெல்லை பாஷை பேசினேன். மிகப்பெரிய பாராட்டும் பணமும் எனக்கு கிடைத்தது.

நாளைய இயக்குநர் சீஸன் - 2 தொடங்கிய போது நண்பர் அருண்ராஜா காமராஜ் அவரது  ‘என் இனிய பொன் நிலாவே' குறும்படத்தில் என்னை நடிக்கவைத்தார். அந்தக் குறும்படத்தில் நான் திக்குவாய் கதாபாத்திரத்தில் நடித்தேன். குறும்படத்துக்கு வசனமும் எழுதினேன். அந்த வருடம் நாளைய இயக்குநர் போட்டிப் பிரிவில் சிறந்த நடிகருக்கான பரிசை அந்தக் குறும்படம் எனக்கு பெற்றுத்தந்தது. இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் சார் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டினார்.  அதன்பிறகு பிட்சா - 2 படத்தில் உதவி இயக்குநராக வேலை செய்தேன்.

ஒருநாள் குறும்படம் ஒன்று எடுக்கவேண்டும் என்று தோன்றியது. இளமையில் வறுமை உள்ள ஒருவனும், முதுமையில் தனிமை உள்ள ஒருவரும் சந்தித்துக்கொள்வதுதான் கதை. பிறகு அதை பெரிதாக எடுக்கலாம் என்று தோன்றியது. என் நண்பன் ராக்கேந்து மௌலியின் அண்ணன் அந்தப்படத்தை தயாரிக்க முன்வந்தார். இரண்டரை லட்ச ரூபாய் பட்ஜெட் கொடுத்தேன். எல்லோரும் சிரித்தார்கள். இந்தப் பணத்தில் எப்படி எடுக்க  முடியும் என்று அவநம்பிக்கை பேசினார்கள். அப்படி எடுத்த படம்தான் ‘நரை எழுதும் சுயசரிதை'. படத்தில் இரண்டு முதன்மைக் கதாபாத்திரங்கள்தான். டெல்லி கணேஷ் சார் பணி ஓய்வு பெற்ற முதியவர் கேரக்டரில் நடித்தார். மற்ற கதாபாத்திரங்களில் ஆதவன், முரளிகிருஷ்ணா, ஷோபனா உள்ளிட்ட நண்பர்கள் நடித்தார்கள்.  நான், ஒளிப்பதிவாளர், டெல்லி கணேஷ் சார், ஒரு உதவியாளர் என மொத்தமே நான்கைந்து நபர்கள்தான் படக்குழு.

யாருக்கும் ஒழுங்காக சம்பளம் தரவில்லை. இரண்டரை லட்ச ரூபாய்க்குள் மொத்த படத்தையுமே எடுத்து  முடித்தோம். சென்னையில் ஷூட்டிங் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை. அப்படி அனுமதி வாங்கி படம் எடுக்கவும் எங்களிடம் பட்ஜெட் இல்லை. சென்னையில் நிறைய இடங்களில் காமெராவை ஒளித்துவைத்து கொரில்லா முறையில்தான் படம் பிடித்தோம். போஸ்ட் புரடெக்ஷன் பணிகளுக்கு நிறைய நண்பர்கள் உதவினார்கள். படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினோம். பெங்களூர் திரைப்பட விழாவில் போட்டிப்பிரிவில் என்னுடைய படமும், 'திதி' கன்னடத் திரைப்படமும் தேர்வானது. விழாவில் திதி திரைப்படத்திற்கு சிறந்த படம் விருது கிடைத்தது.  பின்னாளில் திதி படத்தை பார்த்தபோது என்னுடைய படம் அதைவிட தரத்தில் பின் தங்கியிருந்ததை உணர்ந்துகொண்டேன்.    

இயக்குநர் நலன்குமாரசாமி தன் ‘காதலும் கடந்து போகும்' படத்தில் விஜய் சேதுபதி சாரின் கார் டிரைவர் கதாபாத்திரம் எனக்குக் கொடுத்தார். ரொம்பச் சின்னக் கதாபாத்திரம்தான். ஆனால் எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. ஷூட்டிங்கின்போது விஜய் சேதுபதி சாருடன் பேச முயற்சித்தேன். முடியவில்லை. நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஒரு ஷாட் இடைவேளையின் போது நல்ல மழை பிடித்துக்கொண்டது. நான் ஒரு தகர ஷெட்டின் கீழ் ஒதுங்கினேன். விஜய் சேதுபதி சாரும் நனைந்தபடி ஓடிவந்து அங்கே ஒதுங்கினார். ஒரு மணி நேரம் மழை விடவில்லை. 'அப்புறம் என்ன போயிட்டிருக்கு' என்று விஜய் சேதுபதி சார் தான் இயல்பாக பேச்சை ஆரம்பித்தார். என்னைப்பற்றிய தகவல்களை விசாரித்தவர், ஸார் என்று கூப்பிடாதே அண்ணா என்று கூப்பிடு என்றார். முன்னணி நடிகனாவதற்கு முன்பு அவர் பட்ட கஷ்டங்களையெல்லாம் சொன்னார். 

மழை நின்றதும் கிளம்பிப் போய்விட்டார்.  இதுதான் அவருடன் கிடைத்த பழக்கம். ஒரு நாள்அவரே அழைத்து புஷ்கர்-காயத்ரி உங்க தொடர்பு எண் கேட்டார்கள். நான் கொடுத்திருக்கிறேன். நீ போய் அவர்களை சந்தித்துவிட்டு வா என்றார். விக்ரம் வேதா படத்தின் ஆரம்ப காலகட்டம் அது. நான் நடிக்கக் கூப்பிடுகிறார்கள் என்று நினைத்துதான் புஷ்கர்-காயத்ரியைச் சந்தித்தேன். திரைக்கதையை என்னிடம் கொடுத்தவர்கள் இந்தப் படத்துக்கு வசனம் எழுதமுடியுமா என்றார்கள். நான் எதோ சுமாராக எழுதுவேன் என்றேன். முதல்ல ஒரு டிராப்ட் எழுதிக்கொடுங்கள் என்று சொன்னார்கள். படத்தின் முதல் பாதிக்கு வசனம் எழுதி முடித்து விக்ரம் வேதா எப்படிப் பேசவேண்டும் என்பதை நான் மாற்றி மாற்றி பேசிக்காட்டினேன். நான் எழுதிய முதல்பாதி வசனமும், கதையை சொல்லிக் காட்டிய விதமும் அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வேடமும் செய்தேன். விக்ரம்&வேதா படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி சார் அழைத்துப் பாராட்டினார். 'சும்மா பேசிப் பார்ப்போம்' என்று யூடியூப் சேனலில் ஒரு வீடியோ தொடரை உருவாக்கி வெளியிட்டேன். நாட்டு நடப்பை கலாய்க்கும் பாணியில் நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட வீடியோ அது. அதைப் பார்த்த இயக்குநர் ரஞ்சித் என்னை அழைத்துப் பேசினார். அதன் பிறகுதான் ரஜினி சாரின் காலா பட வாய்ப்பு. அநதப் படத்தில் எனக்குக் கிடைத்த பாராட்டுகள் எல்லாம் ரஞ்சித் சாருக்கே உரியது.

இனி ஒரு நடிகனாகவும் இயக்குநராகவும் தொடர்ந்து சினிமாவில் பயணிக்க விரும்புகிறேன்'' என முடிக்கிறார் மணிகண்டன்.

ஆகஸ்ட், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com