இதுவரை ஏழு திரைப்படங்கள். ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற கதைக் களங்கள். வாழ்க்கையின் வீழ்ச்சியைப் பேசுபவை. வசந்தபாலன் தனித்துவமான இயக்குநர். சமீபத்தில் திரையில் வெளியான அநீதி படம் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியாகி ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது. எதார்த்த கதாபாத்திரங்களை வடிவமைக்கும் வசந்தபாலனை அந்திமழைக்காக சந்தித்து விரிவாகப் பேசினோம்.
இலக்கியத்திலிருந்துதான் படைப்பாக்கத் திறன் தொடங்குவதாக நினைக்கிறேன். என்னுடைய பால்யத்தில், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், பாலகுமாரன் போன்றவர்கள் தான் ஆதர்சம். இயக்குநர் ஷங்கரிடம் ‘ஜென்டில்மேன்' திரைப்படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்தபோது பாலகுமாரனை சந்தித்தேன். கடவுளைக் கண்டதுபோல் இருந்தது. அவர் சொல்ல சொல்ல நான் வசனங்களை எழுதியுள்ளேன். இரண்டு நாவல்களை அவர்சொல்ல சொல்ல எழுதியுள்ளேன். காட்சிகளை எப்படி உருவாக்க வேண்டும் என்று, திருச்சி வீதிகளில் அதிகாலை நடை செல்லும்போது கற்றுக் கொடுத்தார். ஒரு விதத்தில் இலக்கிய நுழைவாயிலில் எனக்கு கிடைத்த ஞானத்தகப்பன். சுஜாதாவுடன் சேர்ந்து வேலை பார்த்தது பாக்கியம்.
நானும் எஸ். ராமகிருஷ்ணனும் ஒரே மாவட்டத்துக் காரர்கள். ஒரே நிலத்தையும் ஒரே மக்களையும் சந்தித்தவர்கள். சென்னையில் இருவரின் வீடும் அருகருகே என்பதால், ஊர் மனிதர்கள் போன்று கதை பேசுவோம். என் இரண்டாவது படத்துக்கு ‘வெயில்' என்று தலைப்பு வைப்பதற்கும், ‘வெயிலோடு விளையாடி' பாடல் இடம்பெறுவதற்கும் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘வெயிலைக் கொண்டு வாருங்கள்' சிறுகதை தொகுப்பும் ‘நெடுங்குருதி' நாவலில் வருகிற வெயில் பற்றிய சித்தரிப்புகளும்தான் காரணம்.
ஜெயமோகன் அழுத்தமான, ஆழமான காட்சியை உருவாக்குபவர். என்னுடைய ஆல்பம் படத்தைப் பார்த்துவிட்டு, ‘கழுத்தை அறுத்து சாகும் அளவுக்கு ஒருவனுக்கு துயரம் இருக்கும்போது, அந்த துயரத்தின் கதையை மட்டும்தான் சொல்லவேண்டும்,' என்றார். அவரின் இந்த வார்த்தை தொந்தரவு செய்தது. எழுத்தாளர்களுடன் சேர்ந்து வேலை பார்க்கும் போது குறைந்த தவறுகளுடன் (Minimal Error) கவித்துவமாக ஒரு விஷயத்தை செய்துவிட முடியும் என்று நம்புகிறேன்.
பராலகுமாரன், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சு.வெங்கடேசன், பாக்கியம் சங்கர் என பலருடன் பயணப்பட்டிருக்கிறேன். எழுத்தாளர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது அலாதியானது.
நான் ரசிகனாக சினிமாவுக்குள் நுழையாமல் இலக்கியத்தின் வழியாக நுழைந்ததால் எழுத்தாளர்களுடன் நட்பு பாராட்டுகிறேன்.
சினிமா என்னுடைய கனவு இல்லை. தினமலர் பத்திரிகையில் துணை ஆசிரியராகவோ, புனைவு எழுத்தாளராகவோ இருக்கத்தான் விரும்பினேன். என்னுடைய தாத்தா, திருநெல்வேலியில் உள்ள தினமலர் பதிப்பில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறேன் என்றார்.
இளங்கலை படிப்பு முடித்ததும், ஆங்கிலம் முதுகலை படிக்கச் சொன்னார் அப்பா. அதில் எனக்கு விருப்பம் இல்லை. தினமலரில் வேலைக்குச் சேர்த்துவிட சொன்னால், தாத்தா ஆறு மாதம் ஆகட்டும் என்றார். சினிமாத்துறையில் இருந்த பக்கத்துவீட்டு அண்ணனிடம் சென்று சினிமாவில் சேரவேண்டும் எனக்கேட்டேன். அவர்தான் எடிட்டர் வி.டி. விஜயனிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார். நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு விபத்துதான்.
முருகன் என்ற நண்பர் அமெரிக்காவில் உள்ளார். அநீதி படத்தின் தயாரிப்பாளருள் ஒருவர். செலவுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவார். அப்பாவும் பணம் அனுப்புவார். வரதராஜன் என்ற நண்பர் இங்கிருக்கும் செலவுகளைப் பார்த்துக் கொள்வார்.
வெயில் படத்துக்குப் பிறகு எனக்கு திருமணமாகிவிட்டது. அதன் பிறகும் கையில் பணம் கிடையாது. இப்போதும் அப்பா பணம் அனுப்புவார். மாமியாரிடம் அடிக்கடி பணம் வாங்குவேன். இன்றும் அதே பண நெருக்கடி தொடர்கிறது. அதனால் நான் கவலைப்படவில்லை. நான் நேசிக்கின்ற சினிமா அற்புதமானது, அழகானது. பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வரவில்லை நான். சினிமா காதலி போன்றவள்!
அப்படி இல்லை. அங்காடித்தெரு, அநீதி மட்டும்தான் தொழிலாளர்களைப் பற்றி நேரடியாக பேசியவை. மற்ற படங்கள் வெவ்வேறு கதைக்களங்களையும் கதைமாந்தர்களையும் கொண்டவை.
அங்காடித்தெரு படம் எடுத்தபோது தி.நகரில் ரெய்டு நடந்தது. பிறகு ஒருகட்டத்தில் துணிக் கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாற்காலி கொடுக்க அரசாங்கம் முடிவெடுத்தது. இப்போது, அநீதி படம் வந்த பிறகு, உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. சினிமாவில் குரலற்றவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
‘கழுத்தை அறுத்து சாகும் அளவுக்கு ஒருவனுக்கு துயரம் இருக்கும்போது, அந்த துயரத்தின் கதையை மட்டும்தான் சொல்லவேண்டும்.' என்று ஜெயமோகன் சொன்னதாகச் சொன்னேன் அல்லவா! அது எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. முதல் படத்தின் தோல்வி கொடுத்த துயரத்தைச் சொல்லலாம் என்று முடிவெடுத்தேன். வெயில் படத்தின் கதையை ஒருவருடம் தனியாக எழுதினேன்.
கதை எழுதி முடித்ததும் இரண்டு யோசனை. தோல்வியுற்றவனின் வாழ்க்கையை படமாக எடுக்க எந்த தயாரிப்பாளர்களும் முன்வரமாட்டார்கள். இருந்தாலும் அதைத்தான் படமாக எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். இல்லையென்றால் ஊருக்கு கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்தேன். அப்பா பலசரக்கு அல்லது எலக்ட்ரீக்கல் கடை வைத்துத் தருவதாக சொன்னார்.
விடா முயற்சியாகத் தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டே இருந்தேன். அப்போது, ‘காதல்' திரைப்படம் வெற்றிபெற்றிருந்தது. ஷங்கர் சாரிடம் கதையைச் சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. இல்லையெனில், ஊருக்குப் போயிருப்பேன்.
அங்காடித்தெரு திரைப்படத்தின் படப்பிடிப்பு இரவு முழுக்க நடந்து அதிகாலை முடிந்தது. காலையில் என் ஒரு வயது மகனுடன் ஒரு மணிநேரம் விளையாடி விட்டு எட்டு மணிக்கு உறங்கச் சென்றேன். நேற்றிரவு எடுத்த காட்சிகளின் சட்டகங்களும் நாளை எடுக்க வேண்டிய காட்சியின் வசனங்களும் இடையறாது மூளையில் ஓடிக்கொண்டிருக்க ஒரு கட்டத்தில் தூங்கிவிட்டேன்.
தொடர்ந்து அலைபேசி அடித்துக் கொண்டிருந்தது. தூக்கத்திலிருந்து எழ முடியவில்லை. தூரத்தில் மகனின் அழுகுரல். மெல்ல விழித்தேன். விழி திறக்க முடியா எரிச்சல். தெரியாத நம்பர்களிலிருந்து பத்து அழைப்புகள். எதற்கு இத்தனை அழைப்புகள்? வியாபார விளம்பர அழைப்புகளா? என்ற குழப்பத்துடன் மெல்ல கண்களை மூடப்போனேன். அலைபேசி கத்தியது. யாரென்று தெரியாமல் தூக்கக் கண்களுடன் உடைந்த குரலுடன் ‘வணக்கம்! சொல்லுங்க சார்‘ என்றேன்.
‘வாழ்த்துகள் சார்’ என்றது எதிர்க்குரல்.
'சார்! எதுக்கு சார்?‘ என்றேன் தூக்கம்கலைந்த குரலுடன்.
‘டெல்லியிருந்து சந்தானம் பேசுறேன். உங்க வெயில் படத்துக்கு நேஷனல் அவார்டு கிடைச்சிருக்கு. வாழ்த்துகள்‘ என்று தொலைபேசியைத் துண்டித்தார். எழுந்து முகம் கழுவி, மகனை முத்தமிட்டு, மனைவியை அணைத்து தகவலைச் சொன்னேன். அன்றைய நாள் முழுக்க தொலைபேசியில் மேடையில் நிற்கும் மணமகனைப் போல வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டேயிருந்தேன். இந்த பொன் நாள் வாழ்வில் மீண்டும் திரும்பாதா என்ற ஏக்கத்துடன்!
பிரதியை ரொம்ப நேசித்துவிட்டேன். காவல் கோட்டம் பத்து வருடம் ஆய்வு செய்து எழுதப்பட்ட நாவல். அது தந்த உத்வேகத்திலிருந்து படத்தை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முழு நாவலையும் எனதாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அது தவறு.
நாவலுக்கு உண்மையாக இருந்ததைவிட திரைக்கதைக்கு உண்மையாக இருந்திருக்க வேண்டும். நாவலில் இருக்கின்ற எல்லா சம்பவங்களையும் தகவல்களையும் திரையில் கொண்டுவந்துவிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நாவலுடன் ஒட்டாமல் நாம் ஓர் உலகத்தைக் கட்டமைக்க வேண்டும் என உணர்ந்துகொண்டேன்.
அரவானில் வரிப்புலி (ஆதி), கொம்பூதி (பசுபதி). காவியத்தலைவனில் தலைவன் கோட்டை காளியப்ப பாகவதர் (சித்தார்த்), மேலச்சிவல்பேரி கோமதிநாயகம் பிள்ளை (பிருத்விராஜ்) கதாபாத்திரங்கள் என் வாழ்க்கையில் இல்லாதவர்கள். அவர்களை உருவாக்குவது பெரும் சவாலாக இருந்தது.
வெயில் முருகேசனும் அங்காடித்தெரு லிங்கமும் நான் தான். பிரான்ஸில் வெயில் திரையிடப்பட்டபோது, வயதான பாட்டி ஒருவர் தன் பேத்தியுடன் படம் பார்க்க வந்தார். படம் முடிந்ததும் அழுதுவிட்டார். என்னவென்று கேட்டபோது, சிறு வயதில் அவருடைய மகன் தொலைந்துவிட்டிருக்கிறார். படத்தில் பசுபதியைப் பார்த்தபோது அவரின் மகன் ஞாபகம் வந்துவிட்டதாகச் சொன்னார். முருகேசனும், அந்த பாட்டியின் மகனும் வெவ்வேறு நிலத்தைச் சேர்ந்தவர்கள். நிலம் வெவ்வேறாக இருந்தாலும் உருவாக்கப்படும் கதாபாத்திரங்கள் வலுவாக இருந்தால், அவை எல்லை கடந்தும் காலம் கடந்தும் நேசிக்கப்படும்.
நான் மட்டுமல்ல எல்லோரும் கஷ்டப்பட்டார்கள். மருத்துவமனையே கிடைக்காமல் வேதனையடைந்த பல நோயாளிகளில் நானும் ஒருவன். கொரோனா சிகிச்சைக்காக முதலில் ஒரு சிறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அங்கிருந்து பெரிய மருத்துவமனைக்கு மாற நினைத்தபோது படுக்கையே கிடைக்கவில்லை. நண்பர் வரதராஜ் உதவியால்தான் ஒரு மருத்துவமனையில் படுக்கை கிடைத்தது. நண்பர்களின் உதவியால்தான் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தேன்.
எதிர்மறையாக உள்ளது. இப்படி விமர்சித்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடும் என்று எல்லா ஊடகங்களும் நினைக்கின்றன. விமர்சனத்துக்குப் பதிலாக கதையை எழுதிவிடுகிறார்கள். ஒருசார்பான விமர்சனப் போக்குதான் இங்குள்ளது. அந்த நிலை மாறவேண்டும். விமர்சனம் என்பது கலை. அது ஒரு படிப்பு. படம் பார்க்கும் பார்வையாளர்கள் விமர்சனம் எழுதிவிட முடியாது. விமர்சனம் நுட்பமாக இருந்தால்தான், அடுத்தகட்டத்துக்கு நம்மால் நகர முடியும். எல்லா ஊடகங்களும் பொதுவான விமர்சனத்தைத்தான் எழுதுகின்றன. மட்டையடி விமர்சனங்கள் தான் இங்குள்ளன.
எல்லோருக்கும் அம்மா மீது பேரன்பு இருக்கும். இரண்டு காரணங்களுக்காக அம்மாவின் பெயரை என் பெயருடன் சேர்த்துக் கொண்டேன். என்னுடைய இயற்பெயர் பாலமுருகன். ஒளிப்பதிவாளர் ஒருவரின் பெயர் பாலமுருகன் என்பதாலும், அம்மாவின் மீதான அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் வசந்தா என்ற அம்மாவின் பெயரைச் சேர்த்து வசந்த பாலன் என மாற்றிக் கொண்டேன்.
முதன் முதலில் உங்கள் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் மனைவி என்ன சொன்னார்?
வெயில் திரைப்படம் வெளியான முதல் நாள். அப்போது எனக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. என் மனைவி வெயில் திரைப்படத்தை காண தன் அம்மாவுடன் விருதுநகர் வந்திருந்தார்.
வெயில் வெற்றிபெற்றால் தான் திருமண வாழ்க்கை எந்த சிக்கலும் இல்லாமல் நகரும் என்ற பதட்டம் அவளுக்கு இருந்தது.
விருதுநகரில் வெயில் திரைப்படத்திற்கு ‘முந்தானை முடிச்சு' திரைப்படத்திற்கு திரண்டதைப் போன்ற ஒரு கூட்டம். முதலும் கடைசியுமான காரணம் ‘வெயில்' படப்பிடிப்பு விருதுநகரில் நடந்ததுதான். ஆகவே மக்கள் விருதுநகரை பார்க்கவே திரண்டு வந்தனர். படம் பார்த்து என் மனைவி என்ன சொல்வாள் என்று பதட்டத்திலிருந்தேன். அலைபேசியைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
படம் முடிந்து அண்ணியை பஸ் ஏற்றி விட்டுவிட்டேன் என்று என் தம்பி எனக்கு போன் பண்ணினான்.
இரவு பன்னிரண்டு மணிக்கு பேசினாள். ‘படம் பாத்தியா உனக்கு பிடிச்சிருந்துச்சா' என்று கேட்டேன்.
அவள் அழுதபடி ‘நான் படத்தையே பாக்கலங்க' என்றாள். ‘ஏன்' என்று கேட்டேன்.
‘மக்கள் எப்படி ரசிக்கிறாங்கன்னு கூட்டத்தைத்தான் திரும்பி திரும்பி பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனா படம் நல்லாயிருக்குங்க. தியேட்டர்ல நல்ல கைதட்டு விழுந்துச்சுங்க' என்று கூறினாள்.
‘படம் ஹிட்டு... அட லூசு...' என்றேன்.
அவள் ‘அப்படியாங்க' என்று அழுதாள் சிரித்தாள். அவளின் தவிப்பை புரிந்து கொள்ள முடிந்தது. வெயில் வெற்றி என்று தெரிந்த பிறகு தான் படத்தை முழுதாக பார்த்தாள். இன்றும் என் ஒவ்வொரு படத்திற்கும் அவளுக்கு அதுதான் நிகழ்கிறது.
சமீபத்தில் உங்களைப் பாதித்த எழுத்து? எழுத்தாளர்?
தமிழில் எல்லா எழுத்தாளர்களுடைய படைப்புகளையும் தொடர்ந்து வாசிப்பவன். பாவெல் சக்தியின் நாவல் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில், ஷான் கருப்பசாமியின் ‘தங்கம்' சிறுகதைத் தொகுப்பு, ஜெயமோகனின் நூறு சிறுகதைகள் தொகுப்பை வாசித்தேன்.
ஜெயமோகனின் வெண்முரசுவை எப்போது படமாக்கப் போகிறீர்கள்?
அதெல்லாம் மகாபாரதம். படமாக்க முடியாது. அதற்கு ராஜமௌலிதான். அந்தளவுக்கு பட்ஜெட் நம்மிடம் இல்லை.