இந்த அறிவியல் யாருக்கானது என்றுதான் கேட்கிறேன்

இந்த அறிவியல் யாருக்கானது என்றுதான் கேட்கிறேன்
Published on

திரைத்துறையில் அவ்வப்போது அற்புதங்கள் நிகழும். அதிலொன்று அறம் திரைப்படத்தின் இயக்குநர் கோபியின் கதை. கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு காரணங்களுக்காக செய்தியில் அடிபட்டுக்கொண்டிருந்த கோபி தன்னை அறம் திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பின் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவருடனான ஒரு சந்திப்பில் இருந்து...

நீங்கள் சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்லுங்கள்..

நான் எட்டாவது படிக்கும் போது எங்கள் கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ள ஊரில் பஞ்சாயத்து தொலைக்காட்சியில் ஞாயிற்றுக் கிழமை படம் பார்க்கப்போவோம். சுற்று வட்டாரக் கிராமங்களே படம் பார்க்க அப்போது அங்கு திரண்டிருக்கும். ஞாயிற்றுக் கிழமை படம் பார்க்க மதியம் மூன்று மணிக்கெல்லாம் சென்று இடம் பிடிப்போம்.  அப்படியாகத்தான் நான் எட்டாவது படிக்கும்போது முதன்முதலாக மகேந்திரன் சாரின் ‘நண்டு’ படம் பார்த்தேன். அந்தப்படம் எனக்குள் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. அதுவரை நான் பார்த்த படங்களிலிருந்து அது விலகியிருந்தது அல்லது வேறு மாதிரியாக இருந்தது. அந்தக் கதையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை ஆனால் அதில் ஒரு அசலான வாழ்க்கை இருந்தது. நண்டு படத்தின் பாட்டுப் புத்தகம் வாங்கி அதன் கதையைப் படித்து இயக்குநர் யாரென்று தெரிந்துகொண்டேன். மகேந்திரன். அதன் பிறகு அவரது படங்களை தேடித் தேடிப் பார்த்துண்டு. எனது ரசனையை மேம்படுத்தியதில் மகேந்திரன் சாரின் படங்களுக்கு முக்கிய பங்குண்டு. அவர் படங்கள் ஏற்படுத்திய பாதிப்புதான் நான் சினிமாவுக்கு வர முக்கியமான காரணம். அவருக்கு என் குரு வணக்கம்.

அறம் படத்தில் நயன்தாரா வந்தது எப்படி..

உண்மையில் நான் பல்வேறு தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி சோர்ந்து போயிருந்தேன். கதையில் கமர்சியலாக எதுவும் இல்லையே, இதை எப்படி சினிமாவாக எடுக்க முடியும் என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். இந்தப்படத்தை தயாரிக்கும் பொருட்டுதான் நான் ராஜேஷ் அவர்களிடம் கதை சொல்லப்போனேன். ராஜேஷ் மூலமாகக் கேள்விப்பட்டு, என்னிடம் கதையைக் கேட்ட நயன்தாரா   நடிக்க முன்வந்தார். பின்பு தயாரிப்பது எனவும்  முடிவானது. நயன்தாராவுக்காக கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கதையில் ஒரு கலெக்டர் கதாபாத்திரம்தான் மையக்கதாபாத்திரம். அந்தப் பாத்திரம் பெண்ணாக மாறியது தவிர திரைக்கதையில் என்ன எழுதினோனோ அதையேதான் நான் எடுத்தேன். நான் நினைத்த மாதிரி இந்தப் படத்தை எடுக்க எனக்கு முழுச்சுதந்திரம் கிடைத் தது என்பதுதான் முக்கியம். ஒரு இயக்குநருக்கு வேறெதையும் விட சுதந்திரம் ரொம்ப முக்கியம்.

அறம் உருவான கதையை கொஞ்சம் சொல்லுங்கள்..

 ஒரு கதையை உருவாக்குவது, அதன் கதாபாத்திரங்களை வடிவமைப்பது, கதாபாத்திரங்களின் உரையாடலை வடிவமைத்து ஒரு சுவராஸ்யமான திரைக்கதையாக்குவது இது மூன்றும்தான் ஒரு திரைப்பட உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள். அறம் படத்தில் அது பேசிய எல்லா  உரையாடல்களும், காட்சிகளும் தெளிவாகத் திட்டமிடப்பட்டு படம் பிடிக்கப்பட்டதுதான்.

உதாரணமாக கடைசியில் குழியில் விழுந்துவிட்ட குழந்தையைக் காப்பாற்றும் அந்தச் சிறுவன் கதாபாத்திரம் நீரூக்குள் மூச்சடக்குபவனாக படத்தின் தொடக்கத்திலேயே காட்டப்பட்டுவிடுகிறான். அந்தப் பையனின் அப்பாவும் கபடி வீரர் என்பது சொல்லப் பட்டிருக்கிறது. கபடியும் மூச்சடக்கி விளையாடப்படும் ஒரு பாரம்பரிய தமிழர் விளையாட்டுதான். இப்படி இந்தப் படத்தின் எல்லாக் காட்சிகளும், காட்சிப் பின்புலங்களும் தெளிவாகத் திட்டமிடப்பட்டு படம்பிடிக்கப்பட்டன. ஒரு கதை சினிமாவாக உருவாகத் தேவைப்படும் அத்தனை உழைப்பும் ஒன்று சேர்ந்ததுதான் அறம் திரைப்படம்.

அறம் படத்தின் திரைக்கதையை எவ்வாறு கட்டமைத்தீர்கள்?

அறம் படம் இரண்டு எதிரெதிர் கருத்துருவாக்க முரண்பாடுகளால் உருவாக்கப்பட்ட திரைக்கதை என்று சொல்லலாம். குழியில் விழுந்துவிடுகிற குழந்தை, நம் நாட்டின் பலத்தைக் காண்பிக்க விண்ணில் ஏவப்படுகிற ராக்கெட். இந்த முரண்பாட்டை நான் அறிவியலை மறுப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. இந்த வளர்ந்த அறிவியல் யாருக்கானது என்பதுதான் படைப்பாளியாக நான் சொல்ல வந்த விஷயம். எனவே நான் அறிவியலுக்கு எதிரானவன் இல்லை. ஆனால் எது அறிவியல்? யாருக்கான அறிவியல்? என்பதுதான் முக்கியமான கேள்வி. அறிவியல் என்பது மக்கள் மயமாக்கப்பட்டுள்ளதா என்பது அதைவிடவும் முக்கியமான கேள்வி. மக்கள் மயமாக்கப்படாமல் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து மட்டும் அதன் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாக முன்வைக்கப்படும் போது அதை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். சாதாரண மக்களின் அடிப்படை வாழ்க்கைக்கு கொஞ்சமும் பயன்படாத அறிவியல் குறித்து எனக்கு எந்த அக்கறையுமில்லை என்பதுதான் நான் இந்தப்படத்தில் காட்சிகளாக வைத்திருக்கும் ராக்கெட் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

அறம் படத்தின் மூலம் நீங்கள் பேச விரும்பிய அரசியல் என்ன?

நவீன வாழ்க்கை தொழில்நுட்பத்திற்கு மனிதர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறது. ஒருவர் மோட்டார் பைக்கோ அல்லது செல்ஃபோனோ இல்லாமல் வாழ்ந்துவிட முடியும். ஆனால் உலகமயமாக்கல் இதெல்லாம் கட்டாயத் தேவை என்கிற அளவுக்கு நம்மையெல்லாம் கட்டாயப்படுத்தி வைத்துள்ளது. இந்த அரசியலைப் பேசாமல் ஒரு படைப்பு வேறெதைப் பேச முடியும்? இந்தப்படத்தில் குழந்தை குழியில் விழுந்துவிடுவது என்பது ஒரு எளிய குறியீடு அவ்வளவுதான். அதன் பின்னால் பல நூறு கேள்விகள் இருக்கின்றன. ஏன் நிலத்தடி நீர் மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று விட்டது? இதில் விவசாயம், சுற்றுச்சூழல் என நிறைய விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அடிப்படைத் தேவையான தண்ணீர் எப்படி வணிக வளையத்துக்குள் வந்தது? இயற்கையாகக் கிடைக்கும் ஒன்றை விலை கொடுத்து வாங்க வேண்டுமென்றால் இந்த வாழ்க்கை பணம் படைத்தவர்களுக்கானது மட்டும்தானா? என கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். குழியில் விழுந்துவிட்ட குழந்தையை காப்பாற்றுவது என்றால் அது வெறுமனே ஒரு சாகசப் படமாகிவிட்டிருக்கும். ஆனால் அதில் நான் சொல்ல விரும்பிய அரசியல் சேர்ந்தனால் இது எளிய மக்களின் அரசியலைப் பேசும் படமாக மாறியது.

ஒட்டுமொத்தப்படமும் அறிவியலுக்கு எதிரானது என்று எழும் விமர்சனங்களைப் பற்றி..

நான் மீண்டும் சொல்ல விரும்புவது இதுதான். இந்தப்படம் அறிவியலுக்கு எதிரானது அல்ல. இந்தியாவின் வளர்ச்சி பெற்ற அறிவியல் யாருக்கான அறிவியல் என்பதுதான் என் ஆதாரமான கேள்வி. அறம் படம் படம் பேசும் ஆதார பிரச்சினையும் இதுதான். அறிவியல் என்பது ராக்கெட்டும் போலியோ சொட்டு மருந்து மட்டுமே கிடையாது. என் பாட்டனும், முப்பாட்டனும் விதை நெல்லை பல வருடங்களுக்குப் பூச்சி அரிக்காமல் பாதுகாத்தார்களே அதுவும் அறிவியல்தானே? நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். பசுமைப் புரட்சியின் பெயரால் ஒழித்துக்கட்டப்பட்ட பாரம்பரிய விவசாயம் அறிவியலின் பெயரால்தானே ஒழித்துக்கட்டப்பட்டது? பூச்சிக்கொல்லிகளைப் போல ஆபத்தான பிளாஸ்டிக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்புதானே? என் படம்  அறிவியலின் பெயரால் நிகழ்ந்த வன்முறைகளைப் பேசியிருக்கிறது.

படத்தில் குழந்தைகளையும் பெண்களையும் மிக மரியாதையாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள்...

அதற்கு காரணம் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வேலை பார்த்த இயக்கங்கள். மக்களை கூர்ந்து கவனித்தே என் திரைக்கதையின் கச்சாப்பொருளை நான் கண்டடைந்தேன்.  நிஜ வாழ்க்கையில் பெண்கள் எப்போது மரியாதைக்குரியவர்கள்தான். ஆனால் சினிமாதான் பெண்களை சரியாகச் சித்தரிக்கவில்லை.        

டிசம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com