இதெல்லாம் உங்க பாட்டா? ஆச்சரியப்பட்டார் என் மனைவி! - இமான்

உலகம் உன்னுடையது
இதெல்லாம் உங்க பாட்டா? ஆச்சரியப்பட்டார் என்  மனைவி! - இமான்
Published on

இசையமைப்பாளர் டி. இமான். மைனா, கும்கி என்று தமிழகத்தில் இழையும் பாடல்களைக் கொண்ட படங்கள் இவரது அடையாளம். எதையுமே தயக்கமின்றி திறந்த மனதுடன் பகிர்ந்து கொள்கிறார் இமான். ‘இந்தப் பேசும் பழக்கம் என் வீட்டில் இருந்து தான் தொடங்கியது. என்னுடைய அப்பா, அம்மாவிற்கு ஒரே பையன் நான். எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. எந்த விஷயத்தையும் என்னுடைய குடும்பத்தில் என்னால் பேச முடியும், ஆலோசிக்க முடியும். அதனாலேயே நண்பர்களைத் தேடி நான் போனதில்லை’ என்கிறார்.

இப்போதையக் காலகட்டத்தில் எந்த மாதிரியான சவால்களை எதிர் கொள்கிறீர்கள் என்று கேட்டதும், ‘இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அது நல்லதுதான். நிறைய நல்ல பாடல்கள் வெளிவருகின்றன. அதற்கு நடுவில் நாமும் பயணப்பட வேண்டியிருக்கிறது. இதை நான் சவாலாக பார்க்கவில்லை. ஆரோக்கியமாகவே நினைக்கிறேன். நான் பாடல் கேட்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் ரஹ்மான் தான் என்னுடைய ஆதர்சம். எப்போதும் அவருடைய பாடல்களையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருப்பேன். அதன் பின் நான் இசை அமைப்பாளராக வேண்டும் என முடிவு செய்தேன். ஆரம்பத்தில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது என்னுடைய நிலைமை. அறுபது, எழுபதுகளின் இசையைக் கேட்கத் தொடங்கினேன். நான் பிரமித்துப் போனது அங்கேதான். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு நம்முடைய மூத்த இசைஅமைப்பாளர்கள் சாதித்து விட்டார்கள். அவர்களிடமிருந்து நாம் வேறுபடுவது தொழில்நுட்பத்தில் மட்டும் தான். நான் புதிதாக இசையில் ஒன்றை செய்து விட்டேன் என்று சொன்னால் அது உண்மை இல்லை..பொய் தான். எதையுமே புதிதாக செய்ய முடியாது. அப்படி சொல்ல ஆரம்பித்தோம் என்றால் நம்முடைய அறிவுக்கு முன்னோர்கள் செய்த ஒன்று எட்டவில்லை என்பது தான் அர்த்தம்’ என்கிறவரின் பேச்சில் முதிர்ச்சி தெரிகிறது.

இமானின் வளர்ச்சிக்கு பின்பு அனைவருக்கும் தெரிந்த ரகசியம் இருக்கிறது. அது அவருடைய அப்பா டேவிட் கிருபாகரதாஸ். அவரைப் பற்றி பேசும்போதெல்லாம் நெகிழ்ந்துவிடுகிறார். ‘என்னுடைய் அப்பா பள்ளிக்கூட வாத்தியார். ஒரு வாத்தியார் தன்னுடைய பையன் நன்றாக படிக்க வேண்டுமென்று தானே நினைப்பார். என்னுடைய அப்பா நான் என்ன விரும்பினேனோ அதைச் செய் என்று சொல்லிவிட்டார். என்னுடைய விருப்பம் இசையில் தான் எனத் தெரிந்ததும் தனது தகுதிக்கு மீறி கடன் வாங்கி என்னை ஊக்குவித்தார். எப்போதும் 60, 70 மாணவர்கள் சுற்றிலும் இருக்க வேண்டுமென நினைப்பவர். ஆசிரியர் தொழிலை அந்தளவுக்கு நேசித்தார். எனக்காகவே அந்த வேலையிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றுக் கொண்டார். எனக்கென்று தனியாக மேனேஜர் வைத்துக் கொள்ளவில்லை. எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் வந்தவன் நான். என்னுடைய குழந்தைகள் எதிர்காலத்தில் இசைத் துறைக்கு வர வேண்டுமென சொன்னால் ஒத்துக் கொள்வேனா என்பது சந்தேகம் தான். ஆனால் என் மேல் நம்பிக்கை வைத்து என்னை இசையமைப்பாளராக்கிய எனக்கு என் அப்பா தான் பெரிய நம்பிக்கை’ என்கிறார்.

இமானுடைய ஆரம்ப காலப் படங்கள் குறித்த கேள்வி வைக்கும்போது திறந்த மனதுடன் தன்னுடைய தவறுகளை விமர்சனம் செய்கிறார். ‘விசில், தமிழன் படங்கள் இசையமைப்பாளராக எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. ஆனால் அதன் பின் இரண்டு வருட காலம் எந்த இயக்குனரும் என்னை அணுகவில்லை. திரும்பவும் கீ போர்ட் எடுத்துக் கொண்டு அலைய வேண்டி வருமோ என பயம் வந்து விட்டது. அதன் பின் ‘கிரி’ படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. அதில் எல்லாப் பாடல்களுமே வணிக ரீதியாக வெற்றி பெற்ற பாடல்கள். அந்தப் பாடல்கள் பட்டித் தொட்டி வரை சென்றன. அதன் பின் என்னை அணுகிய இயக்குனர்கள் அப்படிப்பட்ட பாடல்களையே என்னிடம் எதிர்பார்த்தனர். எனக்கு மறுக்கத் தெரியவில்லை. நான் வளர்ந்த சூழல் கூட அதற்கு காரணமாக இருக்கலாம். மறுப்பதற்கு எனக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுந்தது. என் மேல் விழுந்த முத்திரையில் இருந்து வெளிவரவேண்டுமெனத் தோன்றிவிட்டது. நான் அந்த நேரத்தில் என்னை இறைவனிடம் ஒப்படைத்து விட்டேன். பிரார்த்தனைகள் தான் என்னை வழிநடத்தின. இப்போது கிடைத்துள்ள வெற்றிகளுக்கு நான் கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்’.

இமானுக்கு இந்திய இசை மேல் தீராத ஆர்வம் இருக்கிறது. மேற்கத்திய இசையில் சிறு வயதிலேயே தேர்ச்சி பெற்ற இவர் , அதே அளவுக்கான முதிர்ச்சியை இந்திய இசையிலும் பெற்றிருக்கிறார். ‘ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கீ போர்டில் இசை அமைக்கும் ஆர்வம் வந்து விட்டது. அப்போது அப்துல் சத்தார் என்பவரிடம் மேற்கத்திய இசை  கற்றுக் கொண்டிருந்தேன். எந்த மெட்டுப் போட்டாலும் அதில் போதாமை இருந்து கொண்டே இருந்தது. அதைத் தாண்டி ஏதோ தேவைப்பட்டது. இந்திய இசை கற்றுக் கொள்ள முடிவு செய்தேன். இப்போதும் என்னுடைய குத்துப் பாடல்களில் கூட இந்திய இசையின் தன்மை அதிகம் இருக்கும். ‘வாடா வாடா பையா’ பாட்டை கேட்டுப் பாருங்கள் அதில் வகுளாபரணம் தெரியும். திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் ‘மதுரை ஜில்லா மச்சக் கன்னி’ பாட்டின் சரணம் கீரவாணி நோட்ஸ் தான்’ எனப் பாடிக் காட்டுகிறார்.

சங்கராபரணம் படம் போல இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திற்கு இசை அமைக்க வேண்டுமென்பது இவருடைய கனவு. ‘ நான் வெகு காலமாக ஒரே மாதிரியான ‘காட்சி’களுக்குத் தான் மெட்டுப் போட்டுக் கொண்டிருந்தேன். கதாநாயகன் திரையில் தோன்றியதும் ஒரு பாடல், ஒரு குத்துப் பாட்டு, காதல் பாடல்கள் ..அவ்வளவு தான். திடீரென்று சுற்றிலும் பார்த்தால் ‘காதல்’, ‘ஆட்டோக்ராப்’ போன்ற படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ‘அட, நாம் எங்கே இருக்கிறோம்’ என்று எனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டேன். அப்போதும் ஜெயித்துக் கொண்டு தான் இருந்தேன். ஆனால் அது ஆரோக்கியமானதாக இல்லை. அந்த நேரத்தில் எனக்கு பெண் பார்த்தார்கள். என் மனைவி மோனிகாவைப் பெண் பார்த்து வந்த பின் ஒருநாள் தொலைபேசியில் என்னை அழைத்து, ‘நீங்கள் இசைஅமைத்த பாடல்களை சீடியில் அனுப்பி வையுங்கள்’ எனக் கேட்டார். நானும் அனுப்பி வைத்தேன். அவர் திரும்பவும் எனக்கு போன் செய்து சில பாடல்களை சொல்லி, ‘இதெல்லாம் நீங்கள் இசை அமைத்த பாடல்களா’ என ஆச்சர்யமாகக் கேட்டார். படங்கள் மக்களிடம் போய் சேரவில்லை என்பதால் பாடல்களும் பிரபலமாகவில்லை. ஆனால் என்னை சந்திக்க வருகிற பலர் சில குறிப்பிட்ட பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பதாக சொல்வார்கள்’ என்ற இமானிடம் மைனா, கும்கிக்கு பிறகான அவரது இசையமைப்புகளைக் கேட்டோம்.

‘மைனா’ படத்திற்கு இசையமைக்கும்போது இந்தளவு வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு படத்திற்கு எந்த மாதிரியான இசை இருந்தால் நன்றாக இருக்குமோ அப்படித்தான் இசையமைத்தேன். பிரபு சாலமனின், உழைப்பு, என்னுடைய பிரார்த்தனை எல்லாம் சேர்ந்து இரண்டு படங்களையும் வெற்றிப் படமாக ஆக்கிவிட்டது. தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது, வரப்போகிற பாடலின் இசையை ஒரு காட்சியின் பின்னணி இசையில் சேர்த்திருந்தேன். அதைக் கண்டுகொண்டு அந்த ஒலியைக் கேட்டதும் கை தட்டினார்கள். இது இளையராஜா அவர்களின் யுத்தி தான். ஏழாவது ரீலில் வரப்போகும் ‘மாங்குயிலே’ பாட்டிற்கு, ஐந்தாவது ரீலில் பின்னணியாக வைப்பார். ரசிகர்களும் தயாராகி விடுவார்கள்’ என சிரிக்கிறார்.

அடுத்து இசை அமைக்கப் போகும் படங்கள் பற்றிக் கேட்டதும், தன்னுடைய கம்ப்யூட்டரில் இருக்கும் பட்டியலை வரிசையாக வாசிக்கத் தொடங்கினார். இமானின் தொடரப்போகும் வளர்ச்சி அதில் தெரிந்தது. கிளம்பும்போது சொன்னார், ‘வெற்று மனதுடன் இசை அமைக்கத் தொடங்கும்போது எந்த புள்ளியில் அந்த பாடலுக்கான இசை தொடங்குகிறது என்பதை நாம் அறிவதில்லை. வெறும் ஆர்மோனியம் வாசித்தால் மட்டும் இசை வசப்படுவதில்லை. இறைவன் கொடுக்கும் வரம் அது. அதை அமைதியாக நாம் உள்வாங்கி கொள்ள வேண்டும் அவ்வளவு தான்’ என்றார் அடக்கத்துடன்.

மார்ச், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com