அரோல் கொரோலி ஆன அருள் முருகன்!

அரோல் கொரோலி ஆன அருள் முருகன்!
Published on

அரோல் கொரோலி ஐந்து வயதில் வயலின் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவர். அந்த வயலின் அவரை விட உயரமாக இருந்தது. தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் மிஷ்கினின் துப்பறிவாளன் படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கொரோலி. இவர் அறிமுகம் ஆனதும் மிஷ்கினின் பிசாசு படத்தில்தான். ஆறு வார்த்தை பேசினால் அதில் ஐந்து வார்த்தைகள் மிஷ்கினைப் பற்றியதாக இருக்கிறது.

“ எங்க வீட்டில் நான் ஒரே பையன். எனக்கு ஒரு அக்கா. எனக்கு சிறு வயதில் இருந்தே இசை மீது பெரும் காதல். அப்பாதான் என் சிறு வயது இசை ஆர்வத்தை அங்கீகரித்து என்னை ஐந்து வயதில் வயலினும் கீ போர்டும் கற்றுக்கொள்ள அனுப்பினார். கிளாசிக்கல், வெஸ்டன் கிளாசிக்கல் இசையை நான் முறைப்படி கற்றுக்கொண்டேன். +2 முடித்ததும் வீட்டில் நான் இனி படிக்கப் போவதில்லை,   சினிமாவில் இசை அமைப்பாளராகப் போகிறேன் என்று கூறினேன். அப்பா என் முடிவுக்குத் தடையாக இல்லை எனினும் என்னை பிகாம் படிக்க சேர்த்துவிட்டார். பின்னர் சிஏ முடித்துவிட்டு நல்ல சம்பளத்தில் வேலை என வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. மூன்று வருட வேலைக்குப் பிறகு  இசைக்கனவு என்னைத் துரத்த 2012ல் வீட்டுக்குத் தெரியாமல்  வேலையை விட்டேன். தினமும் கிளம்பிப்போய் டெமோ சி.டி. கொடுத்து வாய்ப்பு கேட்டேன். ஆறுதல் வார்த்தைகளை வித விதமாய்ச் சொல்லி அனுப்புவார்களே தவிர வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. கையில் இருந்த சேமிப்பு குறைய ஆரம்பித்தது. வேலைக்கு போய்  ஆகவேண்டிய கட்டாயம் வந்தது. ஆனால் அப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தின் உருவாக்கமும் தரமான இசையமைப்பும் என்னை நிலைகுலைய வைத்தன. என் திறமையை, தகுதியை சுய பரிசீலனை செய்ய வைத்தன. ஒரு படம் இசை அமைத்தாலும் மிஷ்கின் மாதிரியான ஒரு இயக்குநரோடு வேலை செய்ய வேண்டும் மனதுக் குள் உறுதி வந்தது.

மிஷ்கினைச் சந்தித்து இசை அமைக்க வாய்ப்பு கேட்டேன். கொஞ்சம் யோசித்தவர் ஒரு தீம் சொல்லி அதற்கு இசை அமைக்கச் சொல்லி ஒரு மாதம் டைம் கொடுத்தார்.   காது கேட்காத ஒருவன் அருவியில இருந்து கொட்டுற தண்ணீரையும் பறக்கும் பறவைகளையும் பார்த்து ஒரு மியூஸிக் போடணும். காது கேட்காமல் இயற்கையோட அழகை ரசிக்க முடியாத அவனோட வலியை மியூசிக்கா பண்ணணும்னு சொல்லி எனக்கு ஒரு மாசம் டைம் கொடுத்தார். தேனி                                 பக்கத்தில் இருந்த குரங்கனி அருவிக்குப் போனேன். அங்கே இருந்து அந்த அருவியில என்னைக் காது கேட்காதவனா நினைச்சு அந்த உணர்ச்சியை உள்வாங்கிப் பதியவைத்து ஒரு வாரம் உழைச்சு தீம் மியூஸிக் போட்டு மிஷ்கின் சார்கிட்ட கொடுத்தேன். கண்ணை மூடி நான் உருவாக்கின  தீம் மியூசிக்கை கேட்டவர் அசந்துபோய், என்னைக் கட்டிப்பிடிச்சுப் பாராட்டினார். நீதான் என் அடுத்த படத்துக்கு மியூஸிக் டைரக்டர்’னு சொன்னார். அப்படித்தான் நான் பிசாசு’ படத்தின் மியூஸிக் டைரக்டர் ஆனேன். படம் ஆரம்பிச்சு மியூஸிக் பண்ணி முடிச்சு, ஆடியோ ரிலீஸ் சமயத்துலதான் மிஷ்கின் சார் டைரக்‌ஷன்ல, பாலா சார் தயாரிப்புல மியூஸிக் பண்ணியிருக்கேன்னு எங்க வீட்டுல சொன்னேன். அவங்களுக்கு செம      சர்ப்ரைஸ்.

அருள் முருகன் என்ற உங்கள் பெயர் அரோல் கொரோலி ஆனது எப்படி?

 பிசாசு படத்திற்கு நான்தான் இசை அமைப்பாளர் என்று முடிவானதும் ஒரு நாள் எனக்கு வேறு பெயர் வையுங்கள் சார் என்று மிஷ்கினிடம் கேட்டேன். அவரது உதவியாளர்களிடம் ஒரு நல்ல வயலினிஸ்ட் பேரை இணையத்தில் தேடச் சொன்னார். அவரது உதவியாளர் ஒருவர் ஆர்கேஞ்சலா கொரேலின்னு ஒரு இத்தாலிய வயலினிஸ்ட் பெயரைச் சொன்னார். நான் இன்னும் நல்ல பெயராக வேண்டும் என அடம்பிடித்தேன். பல மணிநேரத் தேடுதலுக்குப் பின்பு கொரோலி என்ற பெயரே நன்றாக இருப்பதாகத் தோன்றியது. நான் கொரோலி என்ற பெயரே பிடித்திருக்கிறது என்று சொன்னேன். என் பெயரையும் கொரோலியையும் சேர்த்து அரோல் கொரோலி என்று எழுதிக்காட்டினேன். இப்படித்தான் இந்த அருள்முருகன் அரோல் கொரோலியாக மாறினேன். என்னைப் பொருத்தவரை இந்தப் பெயர் மாற்றம் என்பது என்னுடையை இன்னொரு பிறவி மாதிரிதான். 

துப்பறிவாளன் படத்தில் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் ஆனது எப்படி?

பிசாசு படத்திற்குப் பிறகு நான் பசங்க-2 படத்தில் வேலை செய்தேன். அதன் பிறகு சவரக்கத்தி, அண்ணனுக்கு ஜே என இரண்டு படங்கள் வேலை செய்தேன். இரண்டு படங்களும் இன்னும் ரிலீசாகவில்லை. ஒரு நாள் திடீரென அழைத்து விஷால் சாரின் அலுவலகத்துக்கு வரச் சொன்னார்கள். படத்தின் வேலை செய்பவர்கள் ஒவ்வெருவராக உள்ளே சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு வந்தார்கள். மிஷ்கின் என்னை அழைத்தார். அப்போது படத்தில் ஆறு பாட்டுடா என்றார் என்னிடம். ஆறு ஹிட் சாங்க்ஸ் கொடுத்திடனும்டா என்று என்னிடம் சொன்னார். ஆனால் எனக்கு அப்போதே தெரியும் படத்தில் பாடல்களே இருக்கப் போவதில்லை என்று. 

துப்பறிவாளன் பின்னணி இசைக்காக எவ்வாறு மெனக்கெட்டீர்கள்?

துப்பறிவாளன் படமும் அதன் கதாபாத்திரங்களும் தமிழுக்கு ரொம்பப் புதுசு. விஷீவலாக கதை சொல்லும் மிஷ்கினின் படங்களுக்கு மியூசிக்கல் நேரேட்டிவ் மிக முக்கியம். கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ள, கதாபாத்திரங்களின் மன இயல்பைப் புரிந்துகொள்ள நான் அதிகமும் மிஷ்கின் சாரிடம் நிறைய கேள்விகள் கேட்டேன். அவர் கதாபாத்திரங்கள் குறித்தும் அவர்களின் பயணம் பற்றியும் நிறைய பேசுவார். அதன் பிறகு படத்துக் கான பின்னணி இசையை நான் உருவாக்கினேன். அது எல்லோரையும் போய்ச்சேர்ந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 

விஷால் எப்படி?

விஷால் என்னிடம் மட்டுமல்ல எல்லோரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பழகுவார். பெரிய ஹீரோ என்கிற பந்தாவெல்லாம் கொஞ்சமும் கிடையாது. மனம் சலிப்படையும் போதோ அல்லது ரொம்ப சோர்வாக இருக்கும் போதோ திடீரென ஒரு குறுஞ்செய்தி விஷாலிடம் இருந்து வரும். Cinema is not for weak minded People என்று!  அவ்வளவுதான். எல்லா மனச்  சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அவ்வளவு மன உறுதியான மனிதர் அவர். துப்பறிவாளன் படத்தின் இசைக் கோர்ப்பு பணிகளின் போது பெஃப்சி வேலை நிறுத்தம் வந்தது. ஆனால் படத்தை இன்னும் பத்துநாட்களில் வெளியிட வேண்டும் என்ற சூழ்நிலையில் படத்தின் பாதிக்கும் மேலான இசைப்பணிகளை மாசிடோனியாவில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் செய்தோம். இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான் எனக்கு எல்லா உதவிகளையும் செய்தார். படத்தில் 48 கடிஞுஞிஞு ஆர்கெஸ்ட்டாராவைப் பயன்படுத்தினோம். இசையின் தரத்திற்கு இதெல்லாம்தான் முக்கியமான காரணங்கள். படத்தின் பின்னணி  இசைக்காக  இயக்குநர் மிஷ்கின், செலவைப்பற்றி அதிகம் கவலைப்படாமல் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்த தயாரிப்பாளர் விஷால், வெளிநாட்டில் ஒலிப்பதிவு செய்ய உதவிய சந்தோஷ் நாராயணன் ஆகியோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்று முடிக்கிறார். கொரோலி.  

அக்டோபர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com