‘அது முழுக்க தப்பான செய்தின்னு சொல்ல முடியாது!’   தான்யா ரவிச்சந்திரன்

‘அது முழுக்க தப்பான செய்தின்னு சொல்ல முடியாது!’   தான்யா ரவிச்சந்திரன்
Published on

நெ ஞ்சுக்கு நீதி' படத்தில் மிகச்சிறிய ரோல்தான் என்பது தெரிந்தேதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அப்படி ஒப்புக்கொண்டதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது' என்று பொடி வைத்துப் பேசுகிறார் ‘கருப்பன்' படத்து சிகப்பி தான்யா ரவிச்சந்திரன். செல்லம் கொஞ்சுகிற தமிழ் பேசுகிற ஒரிஜினல் அக்மார்க் தமிழ்ப்பொண்ணு.

ஒரு ரெஸ்டாரென்டில், ‘அகிலன்' படத்துக்காக ஜெயம் ரவியுடன் ரொமான்ஸ் பண்ணிக்கொண்டிருந்த வரை உணவு இடைவேளையில் அந்திமழைக்காக சந்தித்தோம். அருகில் அமர்ந்தவுடன் மனசுக்குள் கவிதைகள் கிளைவிடுகின்றன. ‘டேய் கைப்புள்ள வந்த பொழைப்பப் பாருடா' என்று ரெட் சிக்னல் வரவே பேட்டியைத் தொடங்கவேண்டியதாயிற்று.

கே: சினிமாவுக்குள் நுழைந்து ஆறு ஆண்டுகளைத் தொட்டுட்டீங்க. பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது ப்ளஸா மைனஸா?

ப: ரெண்டுமே தான். சினிமாவுக்கு நுழையிறதுக்கு முந்தி நானும் என் சகோதரியும் பல பரத நாட்டிய நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கோம். அதன் மூலமா மிஷ்கின் படத்துக்கு ஆடிஷன் வாய்ப்பு வந்தது. அப்புறம் பரதநாட்டியம் ஆடின அந்தப் பொண்ணு ரவிச்சந்திரனோட பேத்தின்னு தெரிந்தவுடன் அதைக் காரணமா வச்சி சில படங்களுக்கு அப்ரோச் பண்ணினாங்க. என்னோட முதல் ரெண்டு படங்களும் சுமாராப் போனப்ப, அந்த தாத்தாவோட பேத்திங்குறதுக்காக எந்த வாய்ப்பும் வரலை. பன்னீர் சார் டைரக்‌ஷன்ல விஜய் சேதுபதியோட நடிச்ச ‘கருப்பன்' படம் தான் என்னை ஒரு நல்ல நடிகையா இந்த சினிமா உலகத்துக்கு அடையாளம் காட்டிச்சி.

கே: ஆனா கருப்பனுக்கு அப்புறம் பெரிய பிரேக் இருந்ததே... நீங்க சினிமாவை விட்டே ஒதுங்கிட்டதாக் கூட செய்தி இருந்துச்சே?

ப: அது முழுக்க தப்பான செய்தின்னு சொல்ல முடியாது. ‘கருப்பன் ரிலீஸான உடனே எனக்கு மிகப்பெரிய புராஜக்ட்டுகள்ல வாய்ப்புகள் வந்துச்சி. எனக்கும் மறுபடியும் இப்படியெல்லாம் சான்ஸ் கிடைக்குமா அதனால அந்தப் படங்கள்ல நடிக்கணும்னுதான் ஆசை. ஆனா என்னோட பெற்றோர் அப்ப என் நடிப்புக்கு 144 போட்டுட்டாங்க. ‘முதல்ல உன் போஸ்ட் கிராஜுவேட் டிகிரியை முடி... அப்புறம் நடி'ன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க.. வேற வழியில்ல. தாய் சொல்லைத் தட்ட முடியுமா? நல்ல பிள்ளையா காலேஜ் போய் மாஸ்டர் டிகிரியை முடிச்சேன்.

கே: அந்த கேப்பால பெரிய பட வாய்ப்புகள் பறிபோய் திரும்ப வந்தப்ப மீடியம் பட்ஜெட் படங்கள்தான் வந்துருக்குன்னு வருத்தம் இருக்கா? இப்ப உங்க வீட்டுல முழுமையா சம்மதிச்சுட்டாங்களா?

ப:ஆமா அம்மாவோட முழு சம்மதத்தோடதான் மறுபடியும் நடிக்க வந்துருக்கேன். எனக்கு எப்பவுமே எதிலுமே பேராசை கிடையாது. நமக்கு வரவேண்டியது தன்னால வந்து சேரும்னு திடமா நம்புறவ நான். ‘மாயோன்' படத்துல சிபி சத்யராஜ் கூட நடிச்சதையும், அதர்வா கூட நடிச்சதையும் சின்னப் படங்கள்ல நடிச்சதா நான் பார்க்கலை. அவங்களுக்கான ஒரு காலம் வர்றப்ப அவங்களும் பெரிய ஹீரோதான்.

இப்பப் பாருங்க இந்த ‘அகிலன்' படத்துல ஜெயம் ரவி கூட நடிச்சுக்கிட்டிருக்கேன். அடுத்து மோகன்ராஜா டைரக்‌ஷன்ல சிரஞ்சீவி, சல்மான்கான் நடிக்கிற பான் இந்தியா படத்துல நடிக்கிறேன். இதைவிட பெரிய படம் என்ன வேணும்?

கே: தமிழ்ல உங்களுக்குப் பிடிச்ச நடிகர், நடிகைகள் யார்?

ப: நடிகர்கள்ல என்னோட ஃபேவரிட்ஸ் அஜீத், விஜய். நடிகைகள்ல அல்டிமேட் நயன்தாரா.

கே: உங்களைப் பற்றி வர்ற கிசுகிசுக்களை எப்படி எடுத்துக்கிறீங்க?

ப: இதுவரைக்கும் அப்படி எதுவும் வந்ததா எனக்குத் தெரியலை. அப்படி வந்தா ஸ்போர்டிவ்வா எடுத்துக்கவேண்டியதுதான்.

கே: இப்ப ‘நெஞ்சுக்கு நீதி' படத்துக்கு வருவோம். அந்தப் படத்துல உங்களுக்கு மிகக் குறைவான காட்சிகள்தான் இருந்தது...தெரிஞ்சேதான் நடிக்க ஒத்துக்கிட்டீங்களா?

ப: அந்தப் படத்துக்கு அழைப்பு வர்றதுக்கு முந்தியே, அதனோட ஒரிஜினலான ‘ஆர்டிகல் 15' படத்தை நான் பார்த்துட்டேன். ‘நெஞ்சுக்கு நீதி'க்கு அழைப்பு வந்தப்ப சின்ன கேரக்டர்தான்னு தெரிஞ்சிருந்தாலும் அதுல நடிக்க அவ்வளவு ஆர்வம் காட்டுனேன். காரணம் அந்தப் படம் அழுத்தமா மக்களுக்கு

சொல்ல வரும் மேஸேஜ். சமூக அநீதிக்கு எதிரான ஒரு படத்துல ஒரு சின்ன அங்கமா வந்தாலும் பெருமைதான். இன்னும் சொல்லப்போனா சின்னக் கேரக்டரா இருந்தாலும், ஒரு சில சீன்களே வந்தாலும் ஹீரோவுக்கு இன்ஸ்பிரேசனா இருக்கக்கூடிய அழுத்தமான கேரக்டர் அது.

கே: அப்புறம் உதயநிதியோட நடிச்ச அனுபவம் எப்படி இருந்ததுன்னு கேக்கலைன்னா எடிட்டர் கோவிச்சுக்குவார்?

ப: அவர் ஒரு ஆச்சரியமான மனிதர்னுதான் சொல்லணும். ஒரு பிரபல அரசியல்வாதி, அதுவும் முதல்வரோட மகன்ங்குற அடையாளம் இல்லாம ரொம்ப இயல்பா பழகக்கூடியவர். அவ்வளவுதான்.

ஜூன், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com