டாடா கவின் வென்ற கதை

டாடா கவின் வென்ற கதை
Published on

“எத்தனையோ முறை இத்துறையை விட்டுவிட்டு எங்காவது தொலைதூரத்துக்கு ஓடிவிடலாம் என்று நினைத்-திருக்கிறேன். அப்போதெல்லாம், தொலைக்காட்சிகளில் சிறிய பாத்திரங்களில் தோன்றியபோது கூட விசில் அடித்து உற்சாகப் படுத்திய, இறந்துபோன ஒரு நண்பனின் முகம் நினைவுக்கு வரும். அடுத்த நிமிடமே நம்பிக்கையுடன் எனது போராட்டத்தைத் தொடர்வேன்'' நெகிழ்வுடன் பேசத் தொடங்கு-கிறார் 12 வருட நீண்ட பயணத்துக்குப் பின் ‘டாடா‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதித்திருக்கும் நடிகர் கவின்.

‘‘எனது ஆரம்பகாலக் கனவு பத்திரிகை துறையில் எதையாவது சாதிக்கவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. மீடியாவுக்குள்ளே எல்லாரையும் போல எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் உள்ளே வந்தேன். ஆனால், அதில் பல முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில்தான் முடிந்தன.அந்த தோல்விகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாததால் எத்தனையோ இரவுகளில் அழுதபடியேதான் தூங்கியிருக்கிறேன்.

அப்பா சவுதியில வெல்டிங் வேலை பார்த்துட்டு இருந்தார். நான், அம்மா, அக்கா எல்லாரும் திருச்சியில அப்போ இருந்தோம். ஸ்கூல், காலேஜ்ல ரொம்ப சுமாரா படிக்கற பையன்தான் நான். திருச்சில படிச்சுட்டு இருக்கும்போதே சில சூழ்நிலைகள் காரணமா சென்னை வந்துட்டேன். இங்க பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி சென்னை லயோலா காலேஜ்லதான் படிச்சேன். லயோலா காலேஜ்ல படிச்சாலும் அப்போலாம், மீடியாக்குள்ள வரணுங்கற ஆசையோ எண்ணமோ துளியும் இருந்ததே கிடையாது.

நான் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருக்கும்போது கல்லூரியில் ஹலோ எஃப்.எம். வந்து கல்லூரி மாணவர்களைத் தேர்வு செய்தார்கள். அதில் தேர்வாகி ஞாயிறு மட்டும் பண்ணக்கூடிய 2 மணிநேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அப்போதுதான் மீடியா குறித்தான அறிமுகம் கிடைத்தது. கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம் என்றில்லாமல், ரொம்பவே ஜாலியாகவே அந்த வேலையை செய்தேன். அப்படியான ஒரு ஜாலியான வேலைக்கு சம்பளமும் கொடுக்கிறார்கள் என்பதும் பிடித்திருந்தது. அப்போதுதான் மீடியாவில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக வந்தது. பின்பு நிறைய குறும்படங்களில் நடித்தேன். அந்த குறும்படங்களின் மூலம் இந்தத் துறையில் இருக்கக்கூடிய பலரின் அறிமுகமும் கிடைத்தது. என் கல்லூரியில் பல விஸ்காம் மாணவர்கள் அறிமுகமும் கிடைத்தது' என்றவர் ‘கனா காணும் காலங்களி'ல் காலடி எடுத்து வைத்தது குறித்துப் பேசத்தொடங்கினார்.

‘என் கல்லூரியில் விஸ்காம் மாணவர்கள் அறிமுகம் கிடைத்தது என்று சொன்னேன் இல்லையா? அவர்கள் மூலமாகத்தான் ‘கனா காணும் காலங்கள்' சீரியலுக்கான ஆடிஷன் நடக்கும் விஷயம் தெரிய வந்தது. எடுத்த உடனேயே அங்கு எனக்கு வாய்ப்பு

கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் நான் நடித்த ஒரு குறும்படம் பற்றியும் என் நடிப்பு பற்றியும் பாராட்டி ஆனந்த விகடன் பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதெல்லாம் இப்போது நினைத்தாலும் பெருமையான விஷயம்' என்றவர் அதற்கு பின்பு தன் வாழ்க்கையில் நடந்த ஒரு திருப்புமுனை சம்பவத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘கல்லூரி முடியும் காலக்கட்டம் அது. அப்போது, என் பாட்டி தவறி விட்டார். அதற்காக நாங்கள் ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. அம்மா, அக்கா, டிரைவர் என அவர்களுக்கு சின்ன சின்ன காயங்கள். ஆனால், எனக்கு மட்டும் பலத்த அடி. ஒரு வார காலம் வரை ஐ.சி.யூவில் இருந்தேன். கண் விழித்ததும் முதலில் நான் கேட்டது கண்ணாடியில் என் முகம் பார்க்க வேண்டும் என்பதுதான். முகத்தில் தையல் எல்லாம் போட்டு வேறு ஆளாக மாறியிருந்தேன். இன்னும் பத்து நாட்களில் அக்கா கல்யாணம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மீடியாவில் உள்ளே நுழையும் ஆசையோடு இருந்தவனுக்கு முகம் இப்படி ஆச்சே என்ற அழுகை ஒரு பக்கம். ஆனால், அப்போது டாக்டர்கள் வந்து என்னிடம் சொன்னது, ‘நல்லவேளை நீங்கள் விபத்து நடக்கும்போது முகத்தில் பெரிய அடிபடாதது போல முகத்தை மூடிக் கொண்டீர்கள். இல்லைன்னா முகம், தலையில் பலத்த அடி ஏற்பட்டிருக்கும். அதேபோல அக்கா, அம்மாவை பின்னால் உட்கார வைத்தீர்கள். எல்லாம் நன்மைக்கே' என ஆறுதல் சொன்னார்கள்.

முகத்தில் டபுள் ஸ்டிக் வைத்துக் கொண்டுதான் அக்கா கல்யாணத்திலே கலந்து கொண்டேன். அதன் பிறகு ஒரு ஐந்தாறு மாதங்கள் கழித்துதான் உடல் பழைய நிலைக்கு சரியானது. பின்பு ‘கனா காணும் காலங்கள்', ‘சரவணன் மீனாட்சி' என அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து எல்லாரும் என்னை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

சீரியல்கள் மூலம் ஓரளவு தெரிந்த முகமாக ஆனவுடன் சினிமா வாய்ப்புகளைத் துரத்த ஆரம்பித்தேன். அப்படி கிடைத்த முதல் வாய்ப்புதான் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா' படம். ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம், படம் முடிஞ்சு கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்கு அது ரிலீஸ் ஆகவே இல்ல. விரக்தியின் எல்லைக்கே போய்ட்டேன்னுதான் சொல்லணும். எனக்கு, சினிமான்னா என்னன்னு தெரியுமா என்று கற்றுக்கொடுத்த படமும் இதுதான்.

மிகவும் நொந்துபோய், ‘அண்ணா எனக்கு மீடியா செட் ஆகும்னு தோணலை. பேசாம ஊருக்கே திரும்பிப் போயிடலாம்னு நினைக்கிறேன். பயமா இருக்கு. திரும்பிப் போயிடட்டா?'

அப்படின்னு ‘கனா காணும் காலங்கள்' டைரக்டர் நெல்சன் அண்ணாட்ட கேட்டேன். அதுக்கு அவர், ‘டேய், முதன் முதல்ல நான் பூஜை போட்ட படம் 2008-ல ‘வேட்டை மன்னன்'. அது என்ன ஆனது அப்படின்னு உனக்கு மட்டுமில்ல இந்த உலகத்துக்கே தெரியும். அதுக்கப்புறம் நான் திரும்ப

சினிமாவுக்கு வர கிட்டத்தட்ட 10 வருஷமாச்சு. அதனால, நம்பிக்கையா மீடியாலயே இயங்கிட்டு இரு. நிச்சயம் நீ நினைச்சது நடக்கும்' அப்படின்னு நம்பிக்கை கொடுத்தார். அவரோட பதில் கொஞ்சம் தெம்பைக் குடுத்திச்சு.

இப்படி நம்பிக்கை இழக்குற சந்தர்ப்பங்கள்ல எல்லாம் எனக்கு எனர்ஜி கொடுக்குற இன்னொரு விசயம் இறந்துபோன என் நண்பன் மணி கண்டனோட நினைவு. நான் சீரியல்கள்ல சின்னச் சின்ன ரோல்கள்ல வர்றப்ப, நான் நடிச்ச குறும்படங்களைப் பாக்குறப்பல்லாம் விசிலடிச்சி ரசிச்சவன் அவன். நீ நல்லா வருவடான்னு சொல்லிக்கிட்டே இருப்பான். மனசு டல்லாகுறப்பல்லாம் அவன் முகம் நினைவுக்கு வரும். உடனேயே நம்பிக்கையோட ஓடத்துவங்குவேன்.

நடிப்பு முயற்சிகள் கைகூடாத ஒரு சந்தர்ப்பத்துல நெல்சன் அண்ணா கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்து வேலை பாக்க ஆரம்பிச்சேன். அவர் கிட்ட தொடர்ந்து வேலை செஞ்சி டைரக்டர் ஆகிடலாம்னு டிராவல் பண்ணிக்கிட்டிருந்த அந்த சமயத்துலதான் திடீர்னு ‘பிக்பாஸ்‘ வாய்ப்பு வந்தது. அது என் வாழ்க்கையில இன்னொரு திருப்புமுனை. எல்லாருக்கும் தெரிஞ்ச முகமா மாறுனேன். அதுக்கப்புறம், ‘லிஃப்ட்'. பெருசா ஓடலைன்னாலும் நாமளும் நடிகன் தாண்டான்னு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்த படம். இப்ப ரிலீஸாகியிருக்குற ‘டாடா' என்னோட 12 வருடக் காத்திருப்புக்கு ஒரு சரியான அர்த்தத்தைக் கொடுத்திருக்கு. ஒரு நல்ல படம் பண்ணுனா இத்தனை திசைகள்ல இருந்து இவ்வளவு அன்பு வந்து சேருமான்னு திகைச்சுப் போயிருக்கேன்.

 எனக்கு கஷ்டம் வந்து சோர்ந்து போற சமயத்துல என்னை நானே தேற்றிக் கொள்ள நினைச்சு பார்க்கறது ரெண்டே ரெண்டு விஷயங்கள்தான். ஒண்ணு டைரக்டர் நெல்சன் அண்ணா

சொன்னது. இன்னொண்ணு, எனக்கு வாழ்க்கையில நடந்த அந்த கார் விபத்து.

அந்த விபத்துல இருந்து உயிர் பிழைச்சி  இருக்கறதே பெரிய விஷயம், எனக்கு வாழ்க்கையில இப்போ நடந்துட்டு இருக்க ஒவ்வொரு விஷயமுமே போனஸ்தான். அதனால, ஜெயிக்கறதுக்கு நம்மாலான முயற்சியை வாழ்க்கையில எடுத்துட்டே இருப்போம்,' என்று புன்னகைக்கிறார் நம்பிக்கையாக.

மார்ச், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com