எனக்கான கதாபாத்திரம் எழுதப்படும்! - லட்சுமி ப்ரியா

லட்சுமி ப்ரியா
லட்சுமி ப்ரியா
Published on

காலச்சூழலால் கிரிக்கெட்டை கைவிட்டவர், இப்போது தேசிய விருது பெற்ற நடிகை. அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் துணிச்சல்காரி. குறும்படம், டிவி சீரியல், திரைப்படம் என இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பவர். பத்தாண்டு திரை நடிப்பில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடிகை லட்சுமி பிரியாவிடம் பேசியதில் இருந்து.

‘என்னுடைய குழந்தைப் பருவம் ரொம்ப சந்தோஷமானது. முழு சுதந்திரமும் கொடுத்தார்கள். எப்போதும் படிப்பு படிப்பு என்று இருக்க மாட்டேன். விளையாடவும் செய்வேன்.ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, என்னுடைய தமிழ் ஆசிரியர் ஒருவர் என்னை நடிப்பதற்காக மேடை ஏற்றிவிட்டார். அது இன்னும் நினைவில் உள்ளது. நான் நடிப்பதற்கான விதை அன்று போடப்பட்டதுதான்.

ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக் சேர்ந்துவிட்டேன். தொடர்ந்து ஐந்து வருடங்கள் அதைப் பயின்றேன். ஜிம்னாஸ்டிக்கில் மாநில அளவில் நடந்த சப் ஜூனியர் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன். ஸ்கூல் டீம் கேப்டனாக இருந்து நிறையே போட்டிகளில் விளையாடியுள்ளேன். எதாவது ஒரு விளையாட்டில் தீவிரமாக கவனம் செலுத்தலாம் என்று நினைத்துத் தான் கிரிக்கெட்டிற்குள் நுழைந்தேன்.

என்னுடைய அப்பா நிறைய கிரிக்கெட் பார்ப்பார். அவருக்கு அதில் ஆர்வம் அதிகம். அவருடன் சேர்ந்து கிரிக்கெட் பார்த்துத்தான் எனக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. எனக்கு கிரிக்கெட் விளையாட ஆர்வம் என அப்பாவிடம் சொன்னபோது, அவருக்கு ஒரே சந்தோஷம். நானும் அவரும் சேர்ந்து ஒவ்வொரு கிரிக்கெட் கிளப்பாக ஏறி இறங்கி, ஒரு கிளப்பில் சேர்ந்தேன். அந்த சமயத்தில், எந்த கிரிக்கெட் பயிற்சி மையத்திலும் பெண்களுக்கு பயிற்சிக் கொடுக்க மாட்டார்கள். ஏறக்குறைய ஏழு வருடங்கள் கிரிக்கெட் விளையாடினேன். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ‘பி‘ டீம், இந்திய மகளிர் அணியின் உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றேன். தமிழ்நாடு அணியின் துணைக் கேப்டனாகவும், ஜூனியர் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளேன். எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் போது வகுப்பறைக்கே சென்றது கிடையாது. கிரிக்கெட் விளையாடுவேன் அல்லது கல்ச்சுரல்ஸில் கலந்து கொள்வேன். மேடையில் பேசுவதற்கும் நடிப்பதற்கும் ரொம்ப பிடிக்கும்.

நான் கல்லூரி படித்த சமயத்தில் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். அதனால், கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிட்டு வேலைக்கு போகலாம் என முடிவெடுத்தேன்.  முதுகலை மேலாண்மை படித்தேன். அப்போது, எவாம் என்ற நவீன நாடகக் குழு ஒரு பயிற்சிப் பட்டறை ஒன்று அறிவித்திருந்தார்கள். அதில் சேர்ந்தேன். தொடர்ந்து அந்த குழுவுடன் பயணப்படலானேன். பிறகு அங்கேயே வேலைக்கும் சேர்ந்தேன்.

ஒரு முறை நாடகம் ஒன்றிற்காக டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தேன். அங்கு நாடகம் பார்க்க வந்த இயக்குநர் மகிழ் திருமேனி சார் என்னைப் பார்த்திருக்கிறார். யாரிடமோ அவரின் எண்ணைக் கொடுத்து, ‘முன்தினம் பார்த்தேனே' படத்தின் ஆடிசனுக்கு வர சொல்லியிருந்தார். படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. திரைப் படத்தில் நடிப்பது பிடித்திருந்தாலும் சில விஷயங்கள் பிடிக்காமலும் இருந்தது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, மகிழ் திருமேனி சார் என்னை அழைத்து, “உனக்கு நடிப்பு இயல்பாகவே வருகிறது. உனக்குள் அந்தக் கலை இருக்கு. அதை நீ டெவலப் பண்ணிக்கோ' என்றார். அவர் சொன்னது ஒருவித ஊக்கத்தைக் கொடுத்தது.

இயக்குநர் கே. பாலச்சந்தர் சார் ஒரு மேடை நாடகம் இயக்குவதாக இருந்தார். அதில் நடிப்பதற்காக அவரை சென்று சந்தித்தேன். ஆனால், அவர் அந்த நாடகத்தை இயக்கவேயில்லை. பிறகு மூன்று மாதங்கள் கழித்து, என்னை நினைவில் வைத்துக் கொண்டு அழைத்தார். ஒரு தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வைப்பதற்காக. அந்த நேரத்தில், எனக்கு சிரியலில் நடிக்கப் பிடிக்க வில்லை என்றாலும், கே.பி

சாருக்காக அந்த சீரியலில் நடித்தேன். அவர் கேட்டு எப்படி நம்மால் மறுக்க முடியும்?

“நீ ரொம்ப நல்லா நடிக்கிற. ஆனால் எல்லாவாட்டியும் இல்லை. அப்பப்போ நல்லா நடிக்கிற. எல்லா நேரத்திலும் நல்லா நடிக்கணும். அதுக்கு என்ன செய்யணுமோ அதை யோசி' என்றார். அவருக்கு ரொம்ப என்னை பிடிச்சிருந்தது. இதை எப்படி தெரிந்து கொண்டேன் என்றால். மற்ற இயக்குநர்களிடம் நான் நல்லா நடிப்பதாக சொல்லியிருக்கிறார்.

 சுமார் பத்து வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ஆரம்பத்தில் ஏதோ ஒரு ஆசைக்காக நடித்தேன். 2012 - 2013ஆம் ஆண்டிலிருந்து தான் நடிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. முழு நேரமாக இதையே செய்யலாம் என முடிவெடுத்தேன். எதுவுமே தெரியாமல், யாரையுமே தெரியாமல் நானே ஒவ்வொருவரையாகச் சந்தித்து, பேசி தனியொரு ஆளாக இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இத்தனை ஆண்டுகால பயணம் என்பது என்னுடைய தனிப்பட்ட பயணம் தான். இந்த துறையில் யாரும் என்னை கைப்பிடித்துக் கொண்டு போய் வாய்ப்புகள் வாங்கி தந்ததில்லை. எல்லோரும் போல் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் நடிக்க வந்தேன். நாம் அதற்காக வரவில்லை என்பதை சில காலம் கழித்துத்தான் புரிந்து கொண்டேன். நம்முடைய ஆர்வம் என்பது நடிப்பை கற்றுக் கொள்வதுதான். அதை நன்றாக கற்றுக் கொள்வோம் என நினைத்தேன். எனக்குப் பிடித்ததை செய்து கொண்டிருப்பதால், வாழ்க்கை ரொம்ப நல்லாவே போய்கொண்டிருக்கிறது.

வசந்த் சாரின் சிவஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில் நடித்தது மிக நிறைவானது. சிவரஞ்சனி கதாபாத்திரம் விளையாட்டுடன் தொடர்புடையது என்பதால், எனக்கு அது பொருத்தமானதாக இருந்தது. வெவ்வேறு பின்புலங்களைப் பிரதிபலிக்கக் கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். கேட்கும் கதை எதோ ஒரு வகையில் நம்மை ஈர்க்க வேண்டும். நான் தேர்வு செய்யும் கதாபாத்திரம், கதையில் எந்த அளவுக்கு தாக்கம் செலுத்துகிறது? அது சவாலான கதாபாத்திரமா? என்றெல்லாம் பார்த்துத்தான் நடிக்கிறேன். அதுபோன்ற கதாபாத்திரங்கள் கிடைக்கவே செய்கின்றன. அது ஒரு பாக்கியம் தான்.

ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அப்படியான ஒரு படத்தில் இன்னும் நடிக்கவில்லை. ஆனால், என்றைக்காவது அப்படியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கு,' என்றவரிடம்

ஏறக்குறைய நடுத்தர வயதை எட்டிவிட்டீர்கள். இனி எப்படியான கதாபாத்திரத்தில் உங்களை எதிர்பார்க்கலாம்? என்ற கேள்வியைப் போட்டோம்.

நடிப்புக்கும் வயதுக்கும் எந்த சம்மதமும் இல்லை. கதாபாத்திரங்கள் என்பவை எழுதப்படுபவை. அதனால் வயசு என்பது ஒரு பிரச்னையே கிடையாது. எத்தனை வயசானாலும் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கலாம். என்னுடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம் எழுதப்படும். அதில் நான் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உங்கள் அடுத்த படங்கள்?

இணையத் தொடர் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன். இப்போது யோகி பாபு சாருடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்பார்க்கக் கூடிய இரண்டு படங்களில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது நடந்தால் நல்லாருக்கும்.

ஜூன், 2023

logo
Andhimazhai
www.andhimazhai.com