குந்தவை நாச்சியார் குரல்

கிருத்திகா நெல்சன்
கிருத்திகா நெல்சன்
Published on

சின்ன வயசில் நான் தீவிரமான வாசகி. ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு புக்... கையில் புக் இல்லைனா சாப்பாடு இறங்காது. அப்பா எழுத்தாளர் என்பதால் எல்லா பத்திரிகைகளும் வீட்டுக்கு வரும். முழுசா படிச்சி டுவேன். அப்பாவோட நாவல் ஒரு நாளைக்கு ரெண்டுமூணுகூட படிச்சிருக்கேன். இன்னைக்கு வாழ்க்கையோட ஓட்டத்தில் புக் படிக்கிறது குறைஞ்சிருக்கு.' எனப் பேசத் தொடங்கும் கிருத்திகா நெல்சன், தன்னுடைய தனித்து வமான திறமையில் சினிமாவில் மிளிர்ந்து வருபவர்.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணிப் பாடகி, பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட கிருத்திகா, வானொலி, தொலைக்காட்சியிலும் ஒரு வலம் வந்தவர். அவருடன் உரையாடினோம்.

சிறுவயதிலிருந்தே இசை மீது ஆர்வம் உடையவர் கிருத்திகா. எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா படித்தவர் அப்போதே, சன் - டிவியின் 'சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிச்சுற்றில் ‘ரன்னர்அப்'பாக வந்தவர்.

‘காலேஜ்ல நான் கோல்ட் மெடல்ங்கிறதால, மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா போக நினைச்சேன். அதற்கான தயாரிப்பில இருந்தப்போ, ஒரு தொலைக்காட்சியில் வேலைக்குச் சேர்ந்தேன். ரெண்டே மாசத்தில தெரிஞ்சிட்டது, படிப்புக்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லைனு. ‘இப்படியிருக்கிறபோது எதுக்கு ஆஸ்திரேலியாவுக்கு போய் படிக்கனும்'னு தோணுச்சு. இடையில, இணையதளம் ஒண்ணுல வேலை செய்தேன்.

முதல் ரெண்டு வேலைகளிலும் கத்துக்கிட்ட அனுபவங்கள்... பெரிய மீடியாவுக்குப் போலாம்னு நினைச்சேன். பிக் எஃப்.எம் - ல ஆர்.ஜே. வாய்ப்பு கிடைச்சது, சேர்ந்தேன். அங்க ‘ரகசிய சிநேகிதி' நிகழ்ச்சி பண்ணினது நான்தான்.

ஒரு நாள் வழக்கம்போல் ப்ரொக்ராம் போய்க் கிட்டிருந்துச்சு... ஒரு கால் வந்தது... லேடி ஒருத்தவங்க பேசினாங்க.

‘அவங்களுக்குத் திருமணமாகி ரெண்டு வயசுல ஒரு குழந்தை. அப்போ, இன்னொரு ஆள்கூட காதல். தன் குழந்தையைக் கணவர் வீட்டில விட்டுட்டு, இரவோடு இரவா காதலனோட வெளில வந்துட்டிருக்காங்க. ரெண்டு வாரம் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திருக்காங்க. ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தால், காதலனைக் காணல. எடுத்துவந்திருந்த நகை பணம் எதுவும் இல்லை. போனவர் வந்துடுவார்னு அந்தம்மா நாலஞ்சு நாள் காத்திட்டிருந்திருக்காங்க. அவர் வரவே இல்லை. மீண்டும் வீட்டுக்கும் போகமுடியாதுனு நினைச்சவங்க, எடுத்த முடிவு, தற்கொலை. ஆனா மன பாரத்தை யாரிட்டயாவது சொல்ல நினைச்சு, எனக்கு கால் பண்ணியிருக்காங்க. எனக்கு அப்போ 21 வயதுதான். ஒரே பதற்றம். என்ன செய்றதுன்னு தெரியவில்லை.

'இந்த முடிவெல்லாம் எடுக்காதீங்க... உங்க கணவர்கிட்டப் பேசுங்க'னு சொன்னேன். நான் பேசினது எதையும் காதுல வாங்காம லைனைக் கட் பண்ணிட்டாங்க. அவர் என்ன ஆனார்னு இன்னைக்குவரைக்கும் எனக்குத் தெரியாது.' என பெருமூச்சு விடுகிறார். பின்னர் பல படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்தவர் மணிரத்னத் திடம் உதவி இயக்குநராகச் சேர்ந்ததை பரவசத் தோடு சொல்கிறார்.

‘கடல் பட டப்பிங்லதான் அவரை சந்திச்சேன். அந்தப் படத்தில ஏதோ ஒரு சீனுக்கு டப்பிங் பேச சரியா வரல. என்னாச்சுனு கேட்ட மணி சார், “நீ பேசாத... நடி. வர்றது வரட்டும்'னார். அப்போது தான் புரிஞ்சது, நாம் டப்பிங் பேச குரலை மட்டும் பயன்படுத்தலை, உடலையும்தான்னு. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா இருந்த என்னை வாய்ஸ் ஆக்டராக மாத்தினவர் அவர்தான்.

‘காற்று வெளியிடை' படத்தில் டாக்டர் லீலா (அதிதி ராவ்) காதாபாத்திரத்துக்கு நான்தான் டப்பிங். அந்தச் சமயத்தில்தான் எனக்கு தனிப்பட்ட பிரச்னைகள் இருந்தன. எனக்குள் இருந்த கோபம், அழுகை எல்லாவற்றையும் லீலா காதாபாத்திரம் மூலமாக வெளிப்படுத்தினேன். என்னுடைய ரொம்ப ஸ்பெஷலான பெர்ஃபாமன்ஸ்னா, அது 'காற்று வெளியிடை'தான்.

'பொன்னியின் செல்வன்' படத்தில ஸ்கிரிப்ட் உதவி இயக்குநரா இருந்தேன். படப்பிடிப்புத் தளத்தில் மணிசார் கிட்ட வாங்காத திட்டே கிடையாது. கொசுனு திட்டுவார். “ஏன் பின்னாடியே கொசுமாதிரி சுத்துற...ம்பார். தன்னோட உதவி இயக்குநர்கள், ஒவ்வொருத்தருக்கும் என்ன தேவை என்பதை யோசித்து சொல்லிக் கொடுப்பார்.

அந்தப் படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு போய்கிட்டிருந்தது. திடீர்னு, சின்ன வயசில வந்த கால் வலி மீண்டும் வந்துருச்சு. ரெண்டாவது முறையா அறுவைச் சிகிச்சை செய்யணும். மணி சார்ட்ட சொன்னதுக்கு, “படத்தைவிட, உடம்புதான் முக்கியம். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு... ஐ வில் டேக் கேர்'னார். அதோட, நான் சிகிச்சையில இருந்தப்போ, மெசேஜ் பண்ணி நலம் விசாரிப்பார். அவர்கிட்ட அக்கறையும் இருக்கும், ஜாலியும் இருக்கும்.

ஒரு முறை, 'உங்க படத்தில் காமிக்கிற ஹீரோக்கள்... நிஜத்தில் எங்க இருக்காங்க? காமிங்க... எனக்கு வேணும்'னு சொன்னேன். அதுக்கு சிரிச்சுகிட்டே, “நான் பொய்தான் சொல்றேன்... எல்லா ஆம்பளைங்களும் மொக்கைதான்'னு சொன்னார்.

என் மேல எங்க அப்பாவுக்கு இருந்த உரிமை, அக்கறை மணிசார்ட்ட இருந்தது. அவர்ட்ட ஐந்து வருசம் வேலசெஞ்சது மறக்க முடியாது. எப்போவுமே மணி சாரின் உதவி இயக்குநர்தான்.' என பேசும்போது அதிகமாக நெகிழ்ந்தார்.

சிறிது நேரம் அமைதிக்குப் பின்னர், பேச்சைத் தொடர்ந்தார்.

“பொன்னியின் செல்வன் படத்தின்போது, ரகுமான் ஸ்டுடியோவில் இருந்த ஒவ்வொரு நாளும் மறக்க முடியாதது. ‘இசையைவிட்டுவிட்டோமோ'ங்கிற ஏக்கத்தைத் தந்துச்சு.

2006இல் ‘பாரிஜாதம்' படத்திலதான் நான் பாடிய முதல் பாட்டு. பின்னர் வித்யாசாகர் இசையில் ‘1977' படத்தில பாடியிருக்கேன்.

நான்கு வருசத்தில நிறைய பாடினேன். பாடின எல்லாப் பாட்டும் 'ஐட்டம்' பாடலா இருந்ததால, பாடுறதை நிறுத்திட்டேன்.

இசை தொடர்பான சின்ன சின்ன வேலைகள் செய்தேன். தீவிரமா இசையை தொடரவில்லை. அது 2009ஆம் வருசத்தோடு போச்சு.

அந்த இசை ஆர்வமும் வாய்ப்பும் மீண்டும் பொன்னியின் செல்வன் படத்திலதான் வந்தது. அப்போ, கொரோனா வந்தாலும் மியூசிக் கிளாஸ் போக ஆரம்பிச்சேன்' எனும் கிருத்திகா, பாடலாசிரியர் ஆன கதையைச் சொன்னார்.

“பாரிஜாதம் படத்தில் பாடுவதற்கு முன்னரே, இசையமைப்பாளர் தரண் குழுவில இருந்தேன். அந்தக் குழுவின் பாடல்களை நான்தான் எழுது வேன். அப்படி நாலஞ்சு பாட்டு எழுதியிருப்பேன். எனக்கும் பாடல் எழுத வருது என்பதை நான் பெருசா எடுத்துக்கலனு சொல்லலாம்.

பொன்னியின் செல்வன் படத்தில் வேலை பார்த்தப்போ, பாடல் வரிகளைக் கேட்டு வாங்குறது, பாடகர்களுக்கு வரிகளைச் சொல்லிக் கொடுக்கிறதுனு இருந்ததால, டியூனுக்கு நானே டம்மி வரிகள் எழுத ஆரம்பிச்சேன். அப்படி எழுதினதுதான் ‘சொல்' பாடல். பின்னர் 'நித்தம் ஒரு வானம்' படத்தில ஏழு பாடல்களையும் எழுதும் வாய்ப்பு வந்ததுக்கு பிருந்தா மாஸ்டரோட அசிஸ்டெண்ட் லீலாவதிதான் காரணம்,' என்றவரிடம், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆனது எப்படின்னு சொல்லலையே என்று பழசைக் கிளறினோம்.

‘கோ' படத்தில் பியா பாஜ்பாய் - க்கு டப்பிங் பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கக் காரணமே இயக்குநர் கே.வி.ஆனந்த் அண்ணாதான். அவர் எங்க பக்கத்து வீட்டுக்காரர். அவர் படத்துக்கு அப்பா (இரட்டை எழுத்தாளர்கள் சுபா ஜோடியில், சுரேஷ்) எழுது வார். 'உங்க அப்பாவுக்கு வயசாகிடுச்சு...யூத்தா நீ எதாவது சொல்லுமாம்பாரு.

அந்த படத்தில பியாவுக்கு டப்பிங் பேச அப்பாவும் கே.வி.ஆனந்த் அண்ணாவும் ஆர்.ஜே. யாராவது இருக்காங்களானு தேடினாங்க. அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. அப்படியே தொடர்ந்து டப்பிங் பேச ஆரம்பிச்சேன்.

டப்பிங் பேச ஜாலியா இருக்கும். டப்பிங் பேசுற நேரத்தில, அந்த கதாபாத்திரமாவே மாறிடுவோம். ஒவ்வொரு நாளும் டப்பிங்ல ஒவ்வொரு நபரா இருக்கலாம்.

பொன்னியின் செல்வனில் குந்தவைக்கு டப்பிங் பேசுறதுக்கு முன்ன, ஐம்பது படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருப்பேன். அதுவரை என்னை யாருக்கும் தெரியாது. அந்த படம்தான் எனக்கு அடையாளத்தைப் பெரிசா கொடுத்தது...' என டப்பிங்கைப் பற்றி சுருக்கமாகச் சொன்னார்.

இப்போது, சுயாதீன இசை முயற்சியில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பதாகக் கூறியவர், போர், ஹிட்லர் என இரண்டு படங்களில் பாடல் எழுதியிருப்பதாகவும் சொன்னார்.

உலகப் பெண்கள் தினத்துக்கு பாடல் ஒன்று எழுதியிருப்பதாகப் பெருமிதத்தோடு உரையாடலை நிறைவுசெய்தார், கிருத்திகா.

logo
Andhimazhai
www.andhimazhai.com