"கூத்துக் கலைஞர்களை அழைத்துவா என்றார் இளையராஜா!''

‘ஜமா’ பாரி இளவழகன்
"கூத்துக் கலைஞர்களை அழைத்துவா என்றார் இளையராஜா!''
Published on

தமிழ் சினிமாவின் ரசனையான இயக்குநர்களான பா.ரஞ்சித், லெனின் பாரதி போன்றவர்கள் படம் பார்த்துவிட்டு அற்புதமான கலைப்படைப்பு என்று பாராட்டுகிறார்கள். பத்திரிகையாளர் காட்சி முடிந்ததும் பிரசாத் லேபில் கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆகிறது. படம் ‘ஜமா’. இயக்குநர், நாயகன் பாரி இளவழகன்.

திரையிடல் முடிந்ததும் அவரைச் சந்தித்தோம்.

 “ஜமா திரைப்படம் தெருக்கூத்து கலைஞர்கள் பற்றிய கதை, இன்னும் குறிப்பா சொல்லப்போனா பெண் வேஷம் போடும் ஒருவரின் மனநிலை பற்றியது.

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகொண்டாபட்டுதான் என் சொந்த ஊர். நான் வாழ்ந்த கிராமத்தில் நாங்க தெருக்கூத்து சார்ந்தவங்க. என் உறவினர்கள் இப்போதும் தெருக்கூத்து செய்பவர்கள். சமீபத்தில் வந்துள்ள தெருக்கூத்து சம்பந்தமான கலைப்படைப்புகள், தெருக்கூத்து அழிந்து வரும் கலையாகவும், தெருக்கூத்து கலைஞர்களை மிகவும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்களாகவும் அதன் பொருளாதாரத் தன்மைகளைக் காட்டியிருந்தது எனக்கு நிறைய மனக்கஷ்டத்தை கொடுத்தது. உண்மையில் அப்படி வாழ்க்கைப் பிழைப்புக்கே கஷ்டப்படும் நிலை இல்லை.

இந்தப் படத்தில் நான் பேசியிருப்பது தெருக்கூத்தில் பெண் வேடம் போடுபவர்களின் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் சமூகத்தில் அடையும் கேலிகள் கிண்டல்கள் பற்றி. குறிப்பாக புடவை அணிந்து நடிக்கும் ஆண்களை அந்த ஊர் ஆண்கள் சேலையைப் பிடித்து இழுப்பது முதல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் செய்வதுவரை மிகக் கொடுமையான விஷயங்கள் நடைபெறுகின்றன.

நான் எட்டு வருடங்களுக்கும் மேலாக நடிகராக சிறு சிறு வேடங்களில் நடித்து வந்துள்ளேன். இத்திரைக்கதை எனக்கு நன்கு பரிச்சயமான ஒரு வாழ்க்கையிலிருந்து நான் உருவாக்கிய கதை. இதை நான் நடித்தால் எப்படியிருக்கும் என்ற நோக்கிலேயே எழுதினேன். பின்பு இதை படமாக்கும்போது மிகச் சரியாக என்னால் இவ்வாழ்க்கையை கொண்டு வந்துவிட முடியும் என்று தோன்றியதால் திரைப்படத்தை இயக்கும் பணியையும் சேர்த்துச் செய்தேன்.

இந்த சினிமா முயற்சிகளுக்கு முழு உறுதுணையாக இருந்தவர் என் வகுப்புத் தோழி, என் காதலி, இன்றைய என் மனைவி ரூபிதான்.

எட்டு வருடங்களுக்கும் மேல் காதலித்து மணம் புரிந்துகொண்டோம். சினிமா வாய்ப்பு உடனே கனிந்துவிடாது. பொறுமையாக வாய்ப்பு தேடு என்று என்னை உற்சாகப்படுத்தி வேலைக்குச் சென்று அவரது சம்பளத்தின் பெரும்பகுதியை எனக்குக் கொடுத்தவர் அவர்.

தெருக்கூத்தில் ஆண், ஒரு பெண்ணாக அழகிய புடவை உடுத்தி நடித்தாலும் அவரது நடை, உடை பாவனைகள், உடல் மொழி, பெண் போலவே இருப்பதனால் சமூகத்தினால் அவர்கள் நடத்தப்படும் விதம், தனிப்பட்ட வாழ்க்கை, காதல், திருமணம் என்று அனைத்திலுமே அவர்கள் உளவியல் சிக்கலைச் சந்திக்கிறார்கள். பெண் போல பாவனைகள் இருப்பதால் அவர்களால் எதையும் ஆளுமையாகச் செய்யமுடியாது என்று ஜமாவிலேயே ஒரு எண்ணம் உருவாகிறது. ஜமாவில் பெண் வேடம் போடுபவர்களால் ஜமாவின் வாத்தியாராக ஆகவே முடியாது. பெண் வேடம் போடுபவர்கள் தலைமைத்தகுதி அடைய முடியாது என்கிற நிலையை மாற்ற முயல்பவனாக இக்கதையின் நாயகன் இருக்கிறான்.

 இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது கூழாங்கல் படத்திலேயே ஒரு தரமான கதைக்குரியவர்கள் என்று தங்களை நிறுவிவிட்டார்கள். அவர்களால் இந்தப் படத்தின் உட்கருத்தைப் புரிந்து கொள்வது கடினமேயில்லை. 

ஆண் வேடம் கட்டுவது உடல் ரீதியாகவே சவாலான ஒன்று. சேலையைச் சுற்றி அத்தோடு ஒரு கிரீடத்தையும் சேர்த்துக் கட்டுவார்கள். இந்த அலங்காரத்தை கால்வரை இழுத்துக் கட்டுவார்கள். 18 முடிச்சு போடுவார்கள். இந்த வேடம் கட்டி நிற்பவர் அனுபவமில்லாதவர் என்றால் விரைவிலேயே வாந்தி, மயக்கம் போட்டு கீழே விழுந்துவிடுவார். இந்த வயதில் அந்தச் சிரமத்தையும் தாங்கி சிறப்பாக செய்திருந்தார் நடிகர் சேத்தன். கூத்துப் பயிற்சிக்கு 5 நாள் வந்து வாத்தியாரிடம் முறையாக அடவு முறைகள் எல்லாவற்றையும் சேத்தன் சார் பயின்றார்.

இது தவிர, திரைப்படத்தில் நாங்கள் ஸ்டூடியோவில் பதிவு செய்யாமல் நேரடியாக கூத்து நடைபெறும் போது வரும் நேரலை ஒலிகளையே (Live sound) பயன்படுத்தியிருந்தோம். அப்படி பயன்படுத்தும் போது நடிப்பவர் கூத்தில் உள்ள அனைத்துப் பாடல்களையும் மனப்பாடம் செய்திருப்பதோடு, தாளத்திற்கேற்ப, இசைக்கேற்ப பாடியும் நடிக்க வேண்டும். சேத்தன் சார் அவ்வளவு பாடல்களையும் மனப்பாடம் செய்து பாடி நடித்துக் கொடுத்தார்.

கதையை முடிவு செய்த உடனேயே  இளையராஜா இசையமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று தோன்றியதே தவிர அவரை நெருங்க முடியுமா என்று கூட எண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் வந்தது வரட்டும் என்று அவர் மேனேஜர் எண்ணை வாங்கி தொடர்பு கொண்டேன். வரச்சொன்னார்.

இப்படத்தின் கதையை சுருக்கமாக ஒரு ட்ரெய்லர் போல 8 நிமிடத்திற்கு எடுத்திருந்தேன். அதைப் போட்டுக் காட்டியவுடன் அவருக்கு எல்லாம் தெளிவாக புரிந்துவிட்டது. ஒப்புக்கொண்டார். என் பெயரைக் கூடக் கேட்கவில்லை. எனக்கு முன் அனுபவம் இருக்கிறதா என்று கூடப் பார்க்கவில்லை.

தெருக்கூத்து கலையை அவரைவிடத் தெளிவாக யாரும் புரிந்துவிடமுடியாது.

படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு தெருக்கூத்து வரும். அந்தக் கடைசிக் காட்சியில் பாட்டு இப்படி வரும் என்று யூட்யூப் மற்றும் பல தெருக்கூத்து நிகழ்வுகளில் இருந்து காட்சிகளை எடுத்துச் சென்று தொகுத்து அவருக்கு காட்டினேன். அதைப் பார்த்துவிட்டு ராஜா சார், இதற்கு சினிமாப் பாட்டு போலப் போட்டால் சரியாக வராது. தெருக்கூத்து பாட்டாகவே தான் இருக்க வேண்டும். நீ உன்னோடு தெருக்கூத்து செய்யும் கலைஞர்களையே கூட்டிவா, அவர்களையே வைத்து இந்தப் பாட்டை பாடச் செய்வோம் என்றார்.

அந்தப் பாடலைத் தான் இளையராஜா சாரின் பிறந்தநாளன்று வெளியிட்டோம். தெருக்கூத்து கலைஞர்களை ஸ்டூடியோவில் கூட்டி வந்து பாடவைத்த போது கூட அவர்கள் தெருக்கூத்தில் ஒன்றாக உட்கார்ந்து பாடுவது போலவே இருக்க வைத்து ஒலிப்பதிவை அதற்கேற்றபடி இயல்பாக அமைத்து செய்து கொடுத்தார். எங்கள் ஊர்க்கலைஞர்களிடம் அவர் அன்பாக நடந்துகொண்டார். இசைப்பணிகள் முடிந்தவுடன் வந்திருந்த அத்தனை பேருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தபோது அத்தனை கலைஞர்களும் நெகிழ்ந்துபோனார்கள்..” எனச் சொல்லி முடிக்கிறார் பாரி இளவழகன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com