அரசியல் மேடைகளில் கனலாய் ஒலிக்கும் குரல் சித்தன் ஜெயமூர்த்தியினுடையது. இசையில் முனைவர் பட்டம் பெற்றவர். மக்களிசை, நாட்டுப்புற பாடல்கள் என தொடங்கி சினிமாவிலும் கலக்கிக் கொண்டிருப்பவர். அண்மையில் வெளிவந்த ’வாழை’ படத்தில் ‘பாதவத்தி’ பாடலின் மூலம் கண்கலங்க வைத்தவரை அந்திமழைக்காக ஜில்லென்ற ஒரு காலைப்பொழுதில் சந்தித்து உரையாடினோம்.
“சின்ன வயசுலேயே இசை மீதான ஆர்வம் வந்துடுச்சு. பள்ளிக்கூட மேடைகள்ல பாட, பசங்க மாட்டிவிட்டுடுவாங்க. மேடையில பாடும்போது எல்லா டீச்சரும் பசங்களும் கவனிப்பாங்க. ‘ஓ… நாம பாடினா இவ்வளோ பேரு ரசிப்பாங்களா’என்ற உந்துதல் அப்போ ஏற்பட்டுச்சு.
எனக்கு இசை கத்துக்கொடுத்ததே இசைஞானி இளையராஜாதான். அவரோட பாட்டுங்கள கேட்டுக்கிட்டே பாடிக்கிட்டே இருப்பேன்! அப்போ அண்ணன் ஒருத்தரு, பண்ருட்டில இசைக்குழு வச்சிருந்த சிங்கப்பூர் தியாகராஜனிடம் அறிமுகப்படுத்தினாரு. அவர் ‘ரிகர்சல் பாத்தாதான் மேடைல பாட முடியும்னு’கறாரா சொல்லிட்டாரு. அப்போ, பத்தாவது ஃபெயிலாகி அறுவடை வேலைக்கு போயிட்டிருந்தேன். கூலியா அஞ்சுபடி ஆறுபடி நெல்லு தருவாங்க. அதுல ஒருபடியை அவங்ககிட்டயே வித்துட்டு காசு வாங்கிப்பேன். அந்த காசுலதான் பண்ருட்டிக்குப் போய்வருவேன். இப்படி கஷ்டப்பட்டு போய்வந்தாலும் மேட ஏற முடில!
மியூசிக் படிக்கலாம்னு பத்தாவது எழுதி பாஸ் பண்ணேன். சிலரோட அறிமுகத்தால பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பாரதியார் பல்கலைக்கூடத்துல இசைப்பட்டப் படிப்புல சேந்தேன். அங்குதான் சங்கீதம் கத்துக்கிட்டேன். இசை என்னோட மனைவி புரூணாவையும் கொடுத்துச்சு. அவங்க என் வாழ்க்கையில வந்த பிறகுதான் இசைக்குழுவையே தொடங்கினேன். என்னோட வளர்ச்சியில முக்கிய பங்கு அவங்களுத்தான்.” என நெகிழ்வுடன் பேசும் ஜெயமூர்த்தி – புரூணா தம்பதிக்கு இப்போ கெவின், ஷெரின் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
“நா அறுவடை வேலைக்கு போறதப் பார்த்த எங்க ஊர்ல மின்சார துறையில் வேலை பார்த்த
தமிழ்ச்செல்வன் என்பவர், கடிதம் எழுதிக் கொடுத்து கே.ஏ. குணசேகரன் ஐயாவை போய்ப் பார்க்கச் சொன்னார். ‘பலி ஆடுகள்’னு ஒரு நாடகம், அதுல பாடுவதற்கான வாய்ப்பை அவர் கொடுத்தார். என்னை முறைப்படுத்தியவர் அவர். 12 வருஷம் அவர் கூட இருந்திருக்கேன். பிறகு இசையிலேயே தஞ்சை தமிழ்த் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தேன். நான் ஆய்வை முடிப்பதற்கு முக்கிய காரணமே, என்னோட நெறியாளர் கோவிந்தசாமி ஐயாவும் கு. சின்னப்பன் ஐயாவும்தான்.
நான் சினிமாவில் பாடிய முதல் பாட்டு தவமாய் தவமாய் படத்தில் ’ஆக்காட்டி…ஆக்காட்டி’ பாடல்தான். சேரனிடம் உதவி இயக்குநராக இருந்த நண்பர் மூலமாக கிடைத்த வாய்ப்பு அது. ஆனால், இந்தப் பாட்டு படத்தில் வரல, இதுக்கு அடுத்து கில்லியில் பாடிய ‘கபடி… கபடி’ தீம் மியூஸிக் வந்துடுச்சி. அந்த சமயத்துல முனைவர் பட்ட ஆய்வில் இருந்தால் வாய்ப்புத் தேடி சென்னைக்கு வரமுடியல. வந்த வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்திக்கிட்டேன். 2004 லிருந்து 2014 வரைக்கும் 35 பாட்டுதான் பாடிருப்பேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல ’இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’ பாட்டுதான் திருப்புமுனை. பிறகு இதுவரை 200 படங்களுக்கு மேல பாடிருக்கேன். அதுல வெளியே வந்த படங்கள் என்னமோ 80 படங்கள்தான். சில படங்கள் வந்தாலும், நான் பாடின பாட்டு இருக்காது.
நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் யுகபாரதியோட வரிகள்தான். இவரும் கரு.பழனியப்பனும்தான் என்னை வித்யாசாகரிடம் அறிமுகப்படுத்தினார்கள்.
இளையராஜா மியூசிகலயும் பாட்டு பாடியிருக்கேன். பரதேசி படத்துல ரெண்டு பாட்டு பாடியிருந்தேன். பாலா சாருக்கு பிடிச்சிருந்ததால தாரை தப்பட்டை படத்துல பாடுற வாய்ப்புக் கொடுத்தாரு. ராஜா இசையில பாடுனது பெருமையா இருந்தாலும், ஒருபாட்டுக்கூட படத்துல வரல. இப்போ, ராஜா சார் என்னை மறந்திருப்பாரு; ஆனால் அவரை நான் மறக்க முடியாதுல!”என பரவசத்துடன் பேசும் சித்தன் ஜெயமூர்த்தி பொம்மை நாயகி, வாழை உட்பட ஆறேழு படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். வாழை படத்தில் பாதவத்தி பாடிய அனுபவத்தையும் ஆர்வமாக பகிர்ந்துகொண்டார்.
“வாழை படத்தில் பாடுவதற்கான வாய்ப்பை மாரிசெல்வராஜ் தான் கொடுத்தார். பாதவத்தி பாட்டை கண்ணீரும் கம்பலையுமாகத்தான் பாடினேன். இரண்டு மாதம் கழித்து சாங் புரொமோ படப்பிடிப்புக்காக அழைத்தார்கள். திருநெல்வேலிக்கு போனேன். ஸ்பாட்டில் இருநூறு முந்நூறு பேர் இருந்தார்கள். தலைமுடியை வெட்டி ஒரு மாதிரி மாத்திதான் அந்த புரோமோ எடுத்தாங்க. என்னுடைய இருபது வருச அடையாளமா இருந்த முடியை வெட்டியது எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்!
மறுபடியும் இன்னோரு பத்து நாள் கழிச்சு கூப்பிட்டாங்க. இப்போ பார்த்தா, அதே பாட்டை இண்டோர்ல பாடுற மாதிரி எடுத்தாங்க. முதல்ல பாடுனது வருமா…? இரண்டாவது பாடுனது வருமானு தெரில.. இல்ல நம்ம ராசிப்படி வராமலே போய்டுமான்னும் தெரியல…
படம் ரிலீஸ் ஆன அன்னைக்கு குடும்பத்தோடு படத்துக்கு போனேன். படத்தில் எல்லா பாட்டும் வந்துடுச்சி. என் பாட்டு வருமா… வராதான்னு தெரில. படம் முடியும்போது இயக்குநர் பெயர் உள்ள டைட்டில் கார்டும் போட்டாச்சு. கடைசி வரை பாட்டே வரலை. நானும் சீட்டை விட்டு எழுந்துட்டேன். அப்பதான் அந்த பாட்டு வருது! சந்தோஷ் நாராயணன் கால் பண்ணி பாராட்டினாரு. பாதவத்தி அவரோட இசையில் நான் பாடின இரண்டாவது பாட்டு. பரியேறும் பெருமாள் படத்தில் பாடிய முதல் பாட்டு வெளியே வரல.” என பூரிப்பாக பேசியவரிடம் ‘இசையில் ஜாதி உள்ளதா சொல்றேங்களே…? நீங்க என்ன நினைக்கிறீங்க’ என்றோம்.
“இசையில் சாதி இருக்கு; ஆனால் இல்லை. சில இடங்களில் பார்ப்பாங்க; சில இடங்களில் பாக்க மாட்டாங்க. என்னுடைய குரல் நாட்டுப்புறக் கலைஞரின் குரல் மாதிரியே இருப்பதா சொல்லுவாங்க. என்னைப் பார்த்து ’இதுலாம் உருப்புடுமானு திட்டினவங்கயெல்லாம் இன்னைக்கு புகழுறாங்க!” என நேர்காணலை நிறைவு செய்தார் புதுவை சித்தன் ஜெயமூர்த்தி.